மின்னல் அதனின் மகனோ – 9 (2)

அவன் கேட்காத தகவலையும் கூறி அவனை ஆசுவாசப்படுத்த ஒரு புன்னகையோடு மடியில் இருந்தவளை தன் கைகளில் ஏந்திகொண்டான்.

“வீட்டு வாசப்படி மிதிக்கமாட்டேன்னு சொன்னா உன் அண்ணி. அது படியே இப்ப வாசல்ல கால் வைக்காம வீட்டுக்குள்ள போக போறா…” என சிரிக்க,

“அண்ணா நீங்க இருக்கீங்களே?…” என்ற சந்தியா,

“அண்ணி எழுந்துக்க போறாங்க…” என சொல்லவும்,

“ஆமா, வா போகலாம்…” துவாரகாவை கைகளில் அள்ளிக்கொண்டு வந்தவனை கண்ட ரத்தினசாமி,

“இதெல்லாம் இவனுக்கு தேவையா? இப்படி விருப்பமில்லாத பொண்ணை எதுக்கு வீட்டுக்கு வர சொல்லி கட்டாயபடுத்தனும்? விட்டது சனியன்னு தலைமுழுகாம…”

பத்மினியிடம் எரிச்சலாய் பேச அவர் அமைதியாக திரும்பி பார்த்துவிட்டு தொண்டையை கனைத்து,

“இதை அப்படியே உங்க பூரணிட்ட சொல்லிடுங்க. அவங்க பதில் சொல்லுவாங்க…” என பேச அதிர்ந்து பார்த்தார் ரத்தினசாமி.

பத்மினியிடம் அன்னபூரணி பேசியது எல்லாவற்றையும் ஏற்கனவே ஒன்றுவிடாமல் அர்னவ் கூறியிருந்தான்.

“அதி, பார்த்து கீழே…” என பத்மினி மகனிடம் போக அவனோ ரத்தினசாமியின் அருகே நெருங்கியவன்,

“எனக்கு இதுதான் தேவை. அவளுக்கு என்மேல விருப்பம்தான். அது எனக்கு நல்லாவே தெரியும். வீட்டுக்கு வரத்தான் விருப்பமில்லை. உங்களுக்கும் விருப்பம் இல்லைனா சொல்லிடுங்க, நாங்க தனிக்குடித்தனம் இப்பவே இப்படியே கிளம்பிடறோம்…”

இப்படி சொல்வான் என எதிர்பார்க்காத ரத்தினசாமியின் முகம் விளக்கெண்ணை குடித்ததை போல மாற மகனை முறைத்தால் கூட அதற்கும் ஏதாவது பேசுவான் என எண்ணி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

மனைவியோடு காரில் அமர்ந்தவன் அனைவரும் காரில் ஏறிவிட்டனரா என பார்த்துவிட்டு ரத்தினசாமி வராததை கண்டுகொண்டு தன் மொபைலில் அவரை அழைத்தான்.

விஷாலிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர் மகனின் அழைப்பை பார்த்த உடனேயே,

“அதிபா, அப்பா பேசறேன்பா…” வழக்கம் போல சொல்லிவிட்டு நாக்கை கடித்தார். அதற்குள் அதை கேட்டுவிட்டவனின் முகமே லேசாய் கனிந்தது.

‘இவருக்கு என் மீதான அன்பு மட்டும் மாறவே மாறாது’ என நினைத்துகொண்டவன்,

“நாங்க நம்ம வீட்டுக்கு வரப்போ நீங்களும் அங்க இருக்கனும். எங்க கூடவே கிளம்பி வாங்கப்பா…”

“இல்லப்பா அதிபா, இங்க வேலைகள் நிறைய இருக்கு…” பிடித்தமின்மையை வேலை இருக்கிறது என காரணம் காட்டி தவிர்க்க நினைக்க,

“அதை விஷால் பார்த்துப்பான். கூடவே சித்தப்பாவும் வந்துடுவாங்க. நீங்க கிளம்புங்க…” என்று சொல்லி வைத்துவிட கோபப்படக்கூட நேரமில்லாமல் விஷாலிடம் சொல்லிவிட்டு வேகமாய் வந்தவர் அதிரூபனுக்கு முன்னால் இருந்த காரில் ஏறிக்கொண்டார்.

அதில் ராஜாங்கமும், அஷ்மிதாவும் இருக்க ஒரு நொடி இறங்கிவிடலாமா என கூட யோசித்து பின் தான் ஏன் இறங்க வேண்டும்? என்ற இறுமாப்போடு சட்டமாய் அமர்ந்துகொண்டார்.

அவரின் தோரணையே ராஜாங்கத்திடம் மௌனமொழி பேசியது.

‘உன் தொழிலில் நீ ராஜாவானால் என் அரசியல் வட்டத்தில் நான் ராஜா. உன்னை விட எதிலும் நான் சளைத்தவன் இல்லை’ என்பதாக பொருள் பட அதை புரிந்துகொண்ட ராஜாங்கம் மெல்லிய புன்னகையோடு ரத்தினசாமியிடம் பேச ஆரம்பித்தார்.

தான் பெண் கேட்டு மறுத்துவிட்ட கோபம் ரத்தினசாமிக்கு இருந்தாலும் ஏனோ அவர் பேசும்பொழுது தவிர்க்க முடியவில்லை.

பேச்சுக்கள் குடும்பத்தை பற்றியோ, இன்றைய திருமணம் பற்றியோ இல்லாமல் பொதுவானதாக இருக்க ரத்தினசாமியின் இறுக்கம் கூட கொஞ்சம் தளர்ந்தது. பேசிக்கொண்டே வர வர வீடும் வந்துவிட்டது.

அடித்துப்போட்டதை போல உறங்கிய மனைவியை கவலையாக பார்த்தவன் மீண்டும் கைகளில் ஏந்திக்கொண்டு வாசலுக்கு வந்து நின்றான். சந்தியா ஆலம் சுற்ற வந்து நிற்க பத்மினி,

“இப்படியே எப்படிப்பா ஆரத்தி எடுக்க?…”

“ஏன்மா? எடுத்தா என்ன? இவளை நான் இப்போதைக்கு இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகனும். அவ்வளவு தான். வேற எதையும் யோசிக்கிற நிலையில் நான் இல்லை. இப்போ எடுக்கறீங்களா இல்லையா?…”

எந்த நிமிடம் முழித்துகொள்வாளோ? வாசலில் வைத்து வரமாட்டேன் என சத்தியாகிரகம் செய்ய ஆரம்பித்துவிடுவாளோ என உள்ளுக்குள் பயந்துதான் இருந்தான்.

அதையெல்லாம் வெளியில் காண்பித்துவிட முடியுமா? இவர்கள் இத்தனை கேட்டால் பொறுமையிழந்து எதையாவது தானே சொல்லிவிடுவோம் என அஞ்சி அடக்கி வாசித்தான்.

“என்ன தம்பி ரொம்ப திணறுற போலவே? எம்புட்டு முக்கினாலும் முனங்கினாலும் அனுபவிச்சு தான் ஆகனும். கெத்து காண்பி. இல்ல வெத்துவேட்டுன்னு போய்டுவாங்க…”

அதிபனின் காதில் அஷ்மிதா சரியாக ராங் டைமில் என்ட்ரியை பதிவு செய்ய அவளை முறைத்தவன்,

“அடிங்க…” என பொங்க,

“டேய் பார்த்து பார்த்து, பொண்டாட்டியை கீழ போட்டுடாத. பொத்துசுரக்காய் விழுந்து சிதறுனா சல்லிக்கும் தேறாது தம்பி…” என லந்து செய்ய,

“அஷ்மி…” ராஜாங்கம் அழைத்ததும் அமைதியாக நின்றாலும் அவளின் கண்கள் கேலியில் சிரித்துக்கொண்டே இருந்தது தன் நண்பனை பார்த்து.

“அம்மா, இன்னும் எவ்வளவு நேரம் தான் யோசிப்பீங்க. சாஸ்திரம் சம்பிரதாயம் பார்த்து இவ எழுந்ததும் தான் எங்களை உள்ள கூப்பிடனும்னா அது இந்த ஜென்மத்துல நடக்காது…”

அடக்கப்பட்ட கடுப்பில் அதிரூபன் சொல்ல பதறிக்கொண்டு வந்ததோ ரத்தினசாமி.

“அதுதான் அதிபன் சொல்றான்ல. எடேன். எல்லாமே நம்ம விருப்பப்படியா நடந்திருக்கு. இதுமட்டும் என்ன உனக்கு?…”

மகனிடம் காண்பிக்க முடியாத கோபத்தை மனைவியிடம் அவர் காண்பிக்க அதிரூபன் பார்த்த பார்வையில் வேகமாய் உள்ளே சென்றுவிட்டார்.

அவருக்கு அவர் கவலை. பத்மினி யோசிக்க யோசிக்க பொறுமையிழந்து மகன் அவளோடு தனியே சென்றுவிட்டால் துவாரகாவிற்கு அவள் இஷ்டப்படி கணவன் நடக்கிறான் என்கிற அகம்பாவம் தலைவிரிக்கும். தங்கள் மீதான பயம் அற்றுபோகும்.

அதன்பின் கொஞ்சமும் தங்களை கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்றுவிடுவாள். அவள் கை ஓங்க ஆரம்பித்தால் அகிலாவை சொல்லவே வேண்டாம்.

சும்மாவே அத்தனை திமிர். இதில் என் மகன் அவர்கள் கைக்குள் என்றால் கேட்கவா வேண்டும். அதற்கு ஒருபோதும் இடம் தரக்கூடாது என நினைத்தார்.

அதையும் மீறிய விஷயம் தன்னால் தன் மகன் அதிபன் முகம் பாராமல் அவனின் குரல் கேட்காமல் இருக்க முடியாது.

அவனை பிரிந்து வாழ்வதை நினைக்கவே பயந்தார் சூட்சமமும், நயவஞ்சகமும் நிறைந்த பெரிய அரசியல்வாதி.

ரத்தினசாமி பேசிவிட்டு போனதும் இவர்களுக்கு சந்தியாவை வைத்து ஆரத்தி சுற்றியவர் மகனின் மார்பில் சுகமாய் தஞ்சம்புகுந்து தூக்கத்தில் லயித்திருக்கும் மருமகளுக்கு நெற்றியில் திலகமிட்டு உள்ளே அழைத்து சென்றார்.

அங்கே அன்னபூரணி அமர்ந்திருக்க இவர்களை காணப்பிடிக்காமல் ஸ்வேதா முகத்தை வெடுக்கென திருப்பிக்கொள்ள ரத்தினசாமி தன் தங்கையின் அருகில் அவரின் கையை பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

அதிபனோ வேகமாய் தனதறைக்கு மாடி ஏறி சென்றவன் முதலில் அவளை படுக்கையில் படுக்க வைத்தான்.

அதன்பின்னே கையை நன்றாக உதறியவன் தனது ஷர்ட் பட்டன்கள் இரண்டை கழட்டி பின்னே தூக்கிவிட்டு தானும் கால் நீட்டி கட்டிலில் அமர்ந்துகொண்டான்.

அவனுக்கும் ஓய்வை கேட்டது அவனின் உடல். ஆனால் ஓய்வெடுக்க முடியாமல் சிவந்த விழிகளோடு விழித்துகிடந்தான். அரைமணிநேரம் சென்று கதவு தட்டப்பட,

“அம்மா டோர் ஓபன்ல தான் இருக்கு. உள்ள வாங்க…” கதவை திறந்துகொண்டு வந்ததோ சந்தியாவும், அஷ்மிதாவும்.

“ஏன் நாங்கலாம் உன் ரூம்க்கு வரக்கூடாதா? ரொம்பத்தான் பன்ற. உன் கல்யாணத்துக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்கேன். என்னை ஒரு வார்த்தை வான்னு கூப்பிட்டியா நீ?…”

வழக்கம்போல தன் லூட்டியை அவிழ்த்துவிட அவளை சந்தியா வியப்பாய் பார்த்தாள்.

“நீங்க ஹெல்ப் பண்ணுணீங்களா?…” என கேட்க,

‘அவசரப்பட்டுட்டியே அஷ்மி. முந்திரிகொட்டை முந்திரிக்கொட்டை’ என தன்னையே திட்டிக்கொண்ட அஷ்மிதா,

“அதான் உன் அண்ணன் இவளை தான் கட்டிப்பேன்னு சொல்றப்போ அழுது கலாட்டா பண்ணாம அமைதியா விட்டுகொடுத்தேன் பாரு. அத சொன்னேன்…” என சமாளித்து ஹிஹிஹி என சிரித்துவைக்க அதிரூபனும் கடகடவென சிரித்துவிட்டான்.

“நீயெல்லாம் ஒரு டாக்டர்ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க…”

“உன்னை யாருடா நம்ப சொன்னா? இந்த பயந்தாங்கொள்ளிய எழுப்பி விடு. நாள் முழுக்க டாக்டர், டாக்டர்ன்னு சொல்லியே உன் மண்டையில் நல்லா ஏத்திவிடுவா…” என்றதும் குறும்பு தலைதூக்க அவளை பார்த்தவன்,

“எழுப்பிடவா? நிஜமாவே?…” இரு புருவத்தை தூக்கி அடக்கப்பட்ட சிரிப்போடு கேட்க,

“ஆனாலும் உனக்கு ரொம்பத்தான் துணிச்சல். என் வீக்னஸ் வச்சே என்னை லாக் பன்றியா? நான் கோவமா கிளம்பறேன். இன்னைக்கு நீயே அனுபவி…”

“ஓகே கிளம்பு…” அதிரூபன் சொல்லியே விட,

“சத்தியமா சொல்றியாடா? என் ஹெல்ப் உனக்கு வேண்டாமா?…” பாவம் போல கேட்க அவளின் தலையில் தட்டியவன்,

“வேண்டவே வேண்டாம். டேப்லெட் இல்லாமலே என் பொண்டாட்டியை சமாளிக்க எனக்கு தெரியும்…” மிதப்பாய் சொல்ல,

“ஓவரா பன்றியே. சரியில்லை. என் செல்லாக்குட்டி எழுந்துக்கட்டும். அப்பறம் இருக்கு உனக்கு. அஷ்மின்னு கதறிட்டு நீ போன் பண்ணத்தான் போற…” என்றவள்,

“நல்லா சந்தோஷமா இருந்து தொலை…” என முறுக்கிக்கொண்டு கிளம்பிவிட,

“அவங்க கோவமா போறாங்க அண்ணா. ராஜாங்கம் அங்கிள் வீட்டுக்கு கிளம்பறாங்க. உங்கட்ட சொல்லிட்டு போகத்தான் அஷ்மி வந்தாங்க…” சந்தியா கவலையாய் பார்க்க,

“அவளுக்கு என் மேல கோவமே வராது. அவ பாஷைல என்னை வாழ்த்திட்டு தான் போறா…” என்றவன்,

“நான் ப்ரெஷ் ஆகிட்டு கீழே வரேன்னு சொல்லிடு சந்தியா…”

“இல்லை அண்ணா, நீங்க ரெஸ்ட் எடுக்கனுமாம். அம்மா சொன்னாங்க. அண்ணி சார்பா அவங்களே விளக்கையும் ஏத்திட்டாங்க. இந்த குங்குமத்தை அண்ணிக்கு வச்சிவிடுவீங்களாம். அப்படியே இந்த ஜுஸ், ஸ்நாக்ஸ் உங்களுக்கு…”

தான் கொண்டுவந்ததை டீப்பாயில் வைத்துவிட்டு செல்லவும் அதிரூபன் முகம் கழுவ மட்டும் தோன்றாமல் குளித்துவிட்டு வேறுடைக்கு மாறி வந்தான். மணியை பார்க்க அது ஐந்தரையை காட்டியது.

துவாரகாவிடம் லேசாக அசைவுகள் தெரிய அவளருகே அமர்ந்தவன்,

“துவா…” என அழைக்க கஷ்டப்பட்டு கண்களை திறந்தவளுக்கு விழிகள் அப்படி எரிந்தது.

“கண்ணெல்லாம் எரியுது மாமா…” கண்களை கசக்கிக்கொண்டே எழுந்து அமர்ந்தவள் அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள்.

அவளின் பார்வையும், முகமாறுதலும் அதிரூபனுக்குள் கிலியை பரப்பியது.

“இது உங்க வீடா?…” சந்தேகமாய் கணவனை கேட்க பதில் சொல்லாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அதிரூபன்.

error: Content is protected !!