மின்னல் – 9
கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கடந்தும் துவாரகாவை அங்கிருந்து ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியவில்லை. பத்மினி பேசி பேசியே களைத்து ஓய்ந்து போனார்.
அவருக்கு தன் மகனின் எதிர்காலம் இப்பொழுது மிக கவலையாக தான் தெரிந்தது. வீட்டிற்கே வரமாட்டேன் என்பவள் அவனோடும், தங்களோடும் எப்படி ஒருமித்து வாழப்போகிறாள் என எண்ணி கலக்கம் கொண்டார்.
துவாரகாவையே பார்த்துக்கொண்டிருந்தான் அதிரூபன். அதை உணர்ந்தாலும் அவள் நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை. அவனை மட்டுமல்ல யாரையுமே பார்க்க முற்படவில்லை.
அவளுக்கு தெரியும் அவனை பார்த்துவிட்டால் ஏதேனும் சொல்லி தன் மனதை கரைத்து இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததை போல அவன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவான் என்று.
அதற்கு பயந்தே அவனை பார்ப்பதை தவிர்த்தாள். அவளின் எண்ணங்களை சரியாக கண்டுபிடிக்கும் அவள் கணவனுக்கா ஏன் எதற்கு என்று தெரியாமல் போகும்.
அஷ்மிதாவை அழைத்தவன் அவள் காதில் எதுவோ கூற அவளோ முடியாது என மறுக்க அவளை முறைத்து சம்மதிக்க வைத்தான்.
‘யார்க்கிட்ட’ என கெத்தாய் மனைவியை பார்த்தவனின் இதழ்கள் அடக்கப்பட்ட புன்னகையில் லேசாய் நெளிந்தது.
சிறிதுநேரத்தில் வந்த அஷ்மிதாவின் கையில் ஜூஸ் இருக்க அதைகண்ட பத்மினி என்னவென கேட்க ஒன்றுமில்லை என தலையசைத்தவள்,
“துவா, நீ அவன் வீட்டுக்கு போ, போகலை. அது உன் விருப்பம். இப்ப இது நீ டேப்லெட் எடுத்துக்கற டைம். ஏற்கனவே லேட் ஆகிடுச்சு. மார்னிங் கூட போடலை. நானும் மறந்துட்டேன். இந்தா இந்த ஜூஸ் குடிச்சுட்டு டேப்லெட் போட்டுக்கோ…”
துவாரகாவின் அருகில் அமர்ந்து அவளின் கையில் டேப்லட்டை திணித்துவிட்டு தண்ணீர் பாட்டிலை கொடுக்க அதை வாங்கிய துவாரகா அந்த மாத்திரைகளை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன துவா? இன்னும் கைல வச்சுட்டே இருக்க. போடு…”
அஷ்மிதா சொல்ல அவளை சந்தேகமாய் பார்த்த துவாரகா யோசனையோடு அமர்ந்திருந்தாள். இதையெல்லாம் அதிரூபன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.
‘என்னதான் பன்றான்னு பார்ப்போமே’ என்னும் பாவனை தான் அவன் முகத்தில்.
“எனக்கு டேப்லெட் வேண்டாம்…” அங்கிருந்த மேஜையில் அதை வைத்துவிட,
“ஏன்? நீ டெய்லி போடறதுதானே? ஏன் வேண்டாம்?…” அஷ்மிதா கோபமாய் கேட்க,
“எனக்கு பயமா இருக்கு. இது ஸ்லீப்பிங் டேப்லட்னு தோணுது. என்னை தூங்க வச்சுட்டு அங்க தூக்கிட்டு போய்ட்டா…” அசராமல் கூற அஷ்மிதா தான் அசந்துபோனாள்.
“அடிங்க, பச்சப்புள்ள மாதிரி இருந்துட்டு நீ இவ்வளவு யோசிப்பியா? பாவமே அழுது அழுது டயர்ட் ஆகிட்டியேன்னு உனக்கு போய் ஜூஸ் எடுத்துட்டு வந்தேன் பாரு. என்னை சொல்லனும்…”
வேண்டுமென்றே கோபம் கொள்வதை போல பேசி அங்கிருந்து எழுந்துகொண்டு,
“டாட், வாங்க போகலாம். எனக்கு இதெல்லாம் தேவையா?…” என ராஜாங்கத்தையும் அழைத்தவள் அந்த ஜூஸை சந்தியாவின் கையில் கொடுத்துவிட்டு,
“இவளுக்கு இவ்வளோ நேரம் பாட்டுபாடினதுக்கு எனக்குத்தான் தேவை. நீயே பார்த்து குடிமா…” என சொல்லி கிளம்ப அந்த ஜூஸை வேகமாய் வாங்கிக்கொண்டாள் துவாரகா.
“டேப்லட் தான வேண்டாம்னு சொன்னேன். ஜூஸ் வேண்டாம்னு எப்ப சொன்னேன்? நானே குடிக்கிறேன்…” என சொல்ல,
“ஒன்னும் தேவை இல்லை. இதுலயும் எதாச்சும் கலந்திருக்க போறேன்…” என்று முறுக்கிக்கொள்ள,
“அச்சோ, கோச்சுக்கிட்டீங்களா டாக்டர். ஸாரி…” என்றவள் மடமடவென ஜூஸை பருகிவிட்டு அஷ்மிதாவை பார்த்து புன்னகைத்து,
“இப்போ கோவம் இல்லையே…” என கேட்க,
“ஏன் இல்லாம, டேப்லட் எடுத்துக்கல…” என்றதற்கு கெஞ்சுவதை போல முகத்தை சுருக்கி அவளை துவாரகா பார்க்க அவள் அதிபனிடம்,
“சரியான கிரிமினல்டா நீ. மயில்சாமிக்கு தப்பாம பிறந்திருக்க. ஆனாலும் உன் போண்டா டீ(பொண்டாட்டி) உனக்கு மேல இருக்கா. நீ இனி அவளுக்கும் சேர்த்து யோசிக்கனும்…” என்றதற்கும் அவளை முறைக்க,
“என்னை ஏன்டா முறைக்கிற? பாவமே, தெரிஞ்ச பையனாச்சே, இப்படி முறைச்சும், யோசிச்சும் காலம் முழுக்க போய்டுமேன்னு பரிதாபப்பட்டா நீ இன்னும் முறைப்ப…” என்றவள்,
“உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கே மாஸ்டர் ப்ளான் போட்டா அப்பறம்…”
“நீ கொஞ்சம் வாயை மூடேன் அஷ்மி…” சிரித்துக்கொண்டே அவளிடம் பல்லைகடிக்க,
“நைட் உனக்கு முக்கியமான சடங்கு வேற ஏற்பாடு பண்ணனும். என் ஹெல்ப் கண்டிப்பா அங்க தேவைப்படும். வேண்டாம்னா சொல்லு இப்படியே கிளம்பிடறேன்…” என்று வம்பிழுப்பவளை தட்டிவைக்கமுடியாமல் மனைவியை பார்க்க அஷ்மியோ துவாரகாவிடம்,
“போ. கொஞ்சநேரம் தூங்கு. நான் இவங்களை பார்த்துக்கறேன்…” என்றதுமே மீண்டும் விரைப்பாய் நிமிர்ந்து அமர்ந்தவள்,
“தூக்கம் வரலை. நான் உட்கார்ந்தே இருக்கேன்…”
“அப்போ எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருப்ப? மண்டபம் காலி செய்யனுமே…” அஷ்மிதா கேட்டதும் டக்கென அதிரூபனை தான் பார்த்தாள்.
அவனோ இவளை கண்டு புன்னகைக்க இவளின் மனம் தடுமாற ஆரம்பித்தது. அவனோடு சென்றுதான் பாரேன் என ஒரு மனம் சொல்ல, அங்குதான் மிருங்கங்களையும் விட மோசமான மனிதர்கள் வாழ்கின்றனர். அங்கா செல்ல போகிறாய் என இன்னொரு மனமும் வாட்டி எடுத்தது.
அவளின் சஞ்சலம் கண்டு அருகே வந்தமர்ந்தவன் மற்றவர்களை கிளம்ப சொல்லும் பொழுதே கண்ணை சுற்றிக்கொண்டு வந்தது.
உறக்கம் வருவதை போல இருக்க முயன்று விரட்டியவள் அஷ்மிதாவின் கையை பிடித்து நிறுத்தி,
“டாக்டர் நீங்களும் இவங்களோட விட்டுட்டு போகாதீங்க. கூடவே இருங்க…”
சொல்லும் பொழுதே அரைமயக்க நிலைக்கு ஆற்பட்டாள் துவாரகா. அவளின் அநாதரவு போன்ற அழைப்பு அஷ்மிதாவை விட ராஜாங்கத்தையும், பத்மினியையும் பாதித்தது.
‘கவலை இன்றி சந்தோஷமாய் இருக்கவேண்டிய பொண்ணை இப்படி ஒரு சூழ்நிலைக்கு இப்பெண்ணை கொண்டு வந்துவிட்டார்களே, இனி அதிபன் தான் இவளை நன்றாய் பார்த்துக்கொள்ளவேண்டும்’ என ராஜாங்கமும்,
‘அதிபனுடனான தனிமைக்கு கூட அஞ்சும் பெண் எப்படி அவனுக்கு சரிப்பட்டுவருவாள்?’ என பத்மினியும் நினைக்க,
“நான் பார்த்துப்பேன். நீங்க கிளம்புங்க. இன்னும் பைவ் மினிட்ஸ்ல இவளோட வரேன்…” என சொல்லி அவர்களை அனுப்ப,
“டாக்டர், போகாதீங்க…” என்ற புலம்பலோடு முழுதாய் மயங்கி அதிபன் மடியிலேயே சரிந்தாள் துவாரகா. அவளை வாகாய் மடியில் படுக்கவைத்தவன்,
“மிஸஸ் அதிரூபனுக்கும் கொஞ்சம் மூளை வேலை செய்யுதுப்பா. என்ன ஒரு முன்னெச்சரிக்கை…” என்று வாய்விட்டு சிரித்தவன் துவாரகா மேஜையில் வைத்த மாத்திரைகளை பார்த்துவிட்டு,
“ஆனாலும் நீ ரொம்ப யோசிக்கிறடா. வரவேண்டாம்னு நினைச்சு நீ இவ்வளோ யோசிக்கிறப்ப உன்னை வரவைக்க, என்னோட வாழ வைக்க நான் எவ்வளவு யோசிப்பேன். இந்த மாமனை ரொம்ப குறைச்சு எடை போட்டுட்டையே…”
உறங்கிக்கொண்டிருந்தவளின் மூக்கை நிமிண்டியவன் நேரம் போவதை கண்டு கிளம்ப எண்ணி அவளை லேசாய் அசைத்துபார்த்தான்.
கொஞ்சமும் அசையாமல் சீரான உறக்கத்தில் துவாரகா இருக்க ஒரு பெருமூச்சுடன் சந்தியாவை அழைத்தவன்,
“இங்க இருக்கிற திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிடு சந்தியா. டைமாகுது. உன் அண்ணி எழுந்துக்கறதுக்குள்ள எல்லையை தாண்டிடனும்…” என சொல்ல அவனை பார்த்து சிரித்தவள் துவாரகாவை கனிவோடு பார்த்தாள்.
“அண்ணியை சொல்லியும் தப்பில்லையே அண்ணா. அவங்க வேணும்னா பன்றாங்க…” வருத்தத்தோடு சொல்லியவள்,
“ஆனாலும் ப்ளான் பண்ணி பன்றீங்க எல்லாம். உங்களை இப்படி பார்த்ததே இல்லை. ஹேப்பியா இருக்கு எனக்கு…”
“இப்படியே அண்ணனும் தங்கச்சியும் கதை பேசிட்டு இருந்தா உங்களை நாடுகடத்திட போறா உங்க அண்ணி. கிளம்புங்க…” என்றபடி வந்த அஷ்மிதா,
“பேக்கிங்கலாம் நான் அப்பவே முடிச்சுட்டேன். எடுத்துட்டு போகவேண்டியதுதான்…” என சொல்லி அங்கிருந்த பேக் அனைத்தையும் எடுத்துவந்து வெளியே வைக்க சந்தோஷ் வந்து அனைத்தையும் காரில் கொண்டு வைத்தான்.
அஷ்மிதா சந்தோஷிடம் பேசியே பலநாட்கள் ஆகிவிட்டது. அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. பேசவும் முற்படவில்லை.
அவள் அவனை முறைக்கும் அளவிற்கு கூட வைத்துகொள்ளாமல் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் விலகியே சென்றான்.
அதிலும் அவளுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது என இன்றைய நிகழ்வுகளில் புரிந்துகொண்டவன், ஆம் புரிந்துதான்கொண்டான்.
துவாரகா விஷால் தன்னை அழைத்து சென்றதை பற்றி சொல்லிய போது அனைவரின் முகத்திலும் அத்தனை அதிர்ச்சி.
ஆனால் அஷ்மிதா சலனமே இன்றி விஷாலை முறைத்து பார்த்ததை வைத்தே புரிந்துகொண்டான்.
அது அவனை இன்னும் கீழாக தன்னை நினைக்க வைத்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் பேச?
ஒருவேளை நீயா இப்படி பண்ணின என சட்டையை பிடித்து சண்டை பிடித்தால் கூட விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அதை கூட கொடுக்க அஷ்மிதா விரும்பவில்லை என்பதை உணர்ந்து தானே விலகினான்.
அவனை கடுகடுவென பார்த்துக்கொண்டே அஷ்மிதாவும் காரை நோக்கி செல்ல சந்தியா,
“எல்லாரும் கிளம்பியாச்சு அண்ணா. நீங்க தான் வரனும். மத்த வேலைகளை நம்ம ஆளுங்க பார்த்துப்பாங்க. மீடியா ஆளுங்க எல்லாரும் கிளம்பியாச்சு. இல்லை, விஷால் கிளப்பிட்டான். நீங்க வாங்க…”