மின்னல் அதனின் மகனோ – 8 (3)

“ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? பூரணி நம்மை விட்டு எங்க போய்டும். அழாதீங்க அண்ணே…” சங்கரனும் வர,

“நீயும் தானடா என்கிட்ட சொல்லாம வந்துட்ட. அப்ப நான் வேண்டாம்னு தானே அர்த்தம்…” என கேட்க,

“ச்சே ச்சே என்ன பேச்சு இதெல்லாம். இன்னைக்கு நம்ம அதியோட கல்யாணம். ஏற்கனவே நீங்க வருத்தத்துல இருப்பீங்க. அதை வெளியாட்களிடம் காண்பிக்க முடியுமா? வந்தவங்களை கவனிச்சு தானே ஆகனும்…” என்ற பூரணி,

“அதுவும் இல்லாம ஏற்கனவே அதி கோபத்துல இருக்கான். இப்ப இவருக்கு முடியலைன்னு எல்லார்ட்டையும் சொல்லி அதை அவன் இவர் நடிக்கிறார்ன்னு நினைச்சு கோபபட்டுட்டா கஷ்டமாகிடும் அண்ணா. என்னால தாங்கமுடியாது…”

“நீ ஏன்மா அப்படியெல்லாம் நினைக்கிற. நம்ம அதிபன். அப்படி எல்லாம் பேசமாட்டான். உனக்கு தெரியாதா அவனை பத்தி? சின்ன பையன்…”

மகனுக்கு ஏந்துகொண்டு பேசும் தன் அண்ணனை ஆழ்ந்துபார்த்தவர் மனதிற்குள் சிரித்துக்கொண்டார்.

‘துவாரகாவை இவர் நிச்சயம் ஏற்றுகொள்வார். அந்த நம்பிக்கை வந்துவிட்டது.’ என நினைத்துக்கொண்டவர்,

“சரிங்கண்ணா நீங்க மண்டபத்துக்கு கிளம்புங்க. பிள்ளைங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வரனும்ல. நாங்க இங்க இருந்தே வீட்டுக்கு வந்திடறோம். அங்கயும் இங்கயும் இவரை அலைகழிக்க வேண்டாம்னு நினைக்கிறேன்…”

“உனக்கு என்ன தோணுதோ அப்படியே செய்மா. ஆனா எதுவா இருந்தாலும் என்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுமா. நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்…” என்றவர் வைத்தியநாதனை பார்க்க அவர் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தார்.

“சரிமா, பார்த்துக்க. நான் கிளம்பறேன்…” என சொல்லி சங்கரனிடம் பார்த்துக்கொள்ள சொல்லி கிளம்ப,

“மாமா, அண்ணா அவளை கூட்டிட்டு அந்த வீட்டுக்கு தான் வரபோறாங்க. நாங்க, அம்மா…” என ஸ்வேதா சொல்லி அழ,

“யார் வந்தாலும் போனாலும் எந்தங்கச்சிக்கும் அவ குடும்பத்துக்கும் அப்பறம் தான் யாரா இருந்தாலும். எனக்கு நீங்க தான்டா முதல்ல முக்கியம். அந்த பொண்ணை என்ன பண்ணனும்னு நான் பார்த்துப்பேன். நீ கவலைபடாதடா பப்புக்குட்டி…”

அவளை சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதும் ஸ்வேதாவை  திட்டி தீர்த்துவிட்டார் அன்னபூரணி.

“முதல்ல மரியாதை கொடுக்க கத்துக்கோ. அந்த பொண்ணு உன்னை விட வயசுல பெரியவ. அதோட அதியோட மனைவி. நம்ம குடும்பத்து மூத்த மருமக. அதுக்கான மரியாதையும் மதிப்பும் நாம குடுத்து தான் ஆகனும்…” என கண்டிக்க,

“எனக்கு அவளை பிடிக்கலை. பிடிக்காது. அவளை அனுப்பிட்டு அண்ணாவுக்கு வேற பொண்ணை பார்ப்போம்…” திமிராய் பேச அறைந்துவிட்டார் அன்னபூரணி.

“என்ன காரியம் பண்ணிட்ட பூரணிம்மா. சின்ன குழந்தை அவளை போய். துவாரகா நம்ம குடும்பத்துக்கான பொண்ணு இல்லைன்றது ஸ்வேதாவுக்கு மட்டும் இல்லை. எல்லாருக்குமே தெரியும். இதை பப்புக்குட்டி வெளில சொல்லிருச்சு. நாங்க சொல்லலை. அவ்வளோ தான்…” சங்கரன் சொல்ல,

“அப்போ அவளை என்ன பண்ண போறீங்க அண்ணா?…”

“சத்தமில்லாம கிளம்பிட்டா எதாச்சும் செட்டில் பண்ணி அனுப்பிடலாம். இல்லைனா எத்தனை ஆக்ஸிடன்ட் நடக்குது…”

வெகு சாதாரணமாக சங்கரன் பேச அதிர்ந்து பார்த்த பூரணி அர்னவ் ஏதாவது சொல்வான், மறுப்பான் என பார்த்தால் அவனும் அமைதி காக்க கசப்பாய் முறுவலித்தவர்,

“ரொம்ப நல்லா பேசறீங்க அண்ணா. இதையே நம்ம பொண்ணு புகுந்த வீட்ல நம்ம சந்தியாவுக்கு பேசினாங்கனா என்ன செய்வீங்க அண்ணா?. நீயும் இப்படி அமைதியா தான் இருப்பியா அர்னவ்…”

“ம்மா, தெருவுல போற ஒருத்தியும், சந்தியாக்காவும் ஒண்ணா?…” என துடுக்காய் ஸ்வேதா கேட்டு மீண்டும் பளாரென ஒரு அறை வாங்கினாள் பூரணியிடம்.

“சொல்லுங்க அண்ணா, பதில் பேசுங்க…” என கேட்க பதில் பேச முடியாமல் அமைதியாய் நின்றார் சந்தியாவை பெற்ற சங்கரன்.

இதையே கேட்டது வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாவு நிச்சயம். ஆனால் தங்கையாகிற்றே. அர்னவும் கலங்கிப்போனான்.

“நமக்குன்னு வரும்போது சுருக்குன்னு இருக்குல. உயிர்னா எல்லாமே உயிர் தான் அண்ணா. இதுல பேதம் எதுவும் இல்லை.அவளுக்கு கேட்க யாருமில்லைன்னா நினைச்சீங்க…”

“நான் கேட்பேன். என் பொண்ணு அவ. அவளுக்கு நான் இருக்கேன். இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க, என் பொண்ணை அதி வாழ்க்கையை விட்டு விரட்டனும்னு யார் நினைச்சாலும் அடுத்த நிமிஷம் நானும் அங்க இருக்க மாட்டேன்…”

இப்படி ஒரு வார்த்தையை சங்கரன் மட்டுமில்லை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஹாஸ்பிடல் பில் கட்டியாகிற்று என சொல்ல வந்த ரத்தினசாமி கூட ஆடித்தான் போனார் தங்கையின் பேச்சில்.

சத்தமில்லாமல் வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து  சென்றுவிட அன்னபூரணி கணவரின் அருகில் அமர்ந்தார்.

“இவருக்கு ஏன் திடீர்ன்னு பிபி அதிகமாச்சு தெரியுமா?…” என கேட்டவர்,

“கல்யாண பொண்ணா துவா வந்ததனால இல்லை. அதியோட வார்த்தையால. அகிலாக்கா நல்லா இருந்தா நிச்சயம் இந்த கல்யாணத்தை நடத்தவிட்டிருக்க மாட்டாங்க. அதியே நினைச்சிருந்தாலும் கூட அவங்களை மீறி நடத்தியிருக்க முடியாது…”

“அப்படி தடுக்க கூட வரமுடியாத அளவுக்கு அவங்களுக்கு அவங்க உடல்நிலைக்கு என்னவோன்னு நினைச்சு தான் இப்படி ஆனது. ஏற்கனவே குற்ற உணர்ச்சியால செத்துட்டு இருந்தவரை துவாரகா அப்பா உயிரோட இல்லைன்னு அதி சொல்லி அதை தாங்கிக்க முடியாமலும் தான் இப்படி ஆகிடுச்சு…”

“ஆனா துவா அதியோட மனைவியானதுல இவருக்கு எவ்வளவு சந்தோஷம்னு எனக்கு தெரியும். எனக்கு அதுதான் வேணும். கொடுமை படுத்தறேன், கொலை பன்றேன்னு யாராச்சும் கிளம்புனீங்க அன்னைக்கு வேற அன்னபூரணியை நீங்க எல்லாரும் பார்ப்பீங்க…”

“அவ மேல ஒரு தூசு பட்டாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். குடும்பத்துக்குள்ள வரப்போற என் மகளை வரவேற்க எல்லாரும் நல்லவிதமா தயாரா இருங்க. அவ வரனும். அந்த வீட்டுக்கு மருமகளா, எங்களுக்கு மகளா…” என சொல்லியவர் டாக்டரை பார்க்க செல்ல அனைவருமே ஸ்தம்பித்து தான் போயினர்.

————————————————-

அன்னபூரணி அனைவரையும் ஹாஸ்பிட்டலில் தன் பேச்சால் திகைக்க வைத்து, அவர்களின் அடாவடிகளை கட்டிவைத்து துவாரகாவிற்காய் வீட்டில் காத்துக்கொண்டிருக்க துவாரகாவோ அதிரூபனையும் மற்றவர்களையும் தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள்.

“மாட்டேன், அந்த வீட்டுக்கு வரமாட்டேன். என்னை விடுங்க. அம்மாட்ட போறேன். உங்க வீட்டுக்கு வரமாட்டேன்…”

மண்டபத்திலிருந்து வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என பத்மினி சொல்லிய ஷணத்தில் இருந்து அஷ்மிதா இருந்த அறைக்குள் சென்றவள் கதறி அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஹாஸ்பிட்டலில் இருந்து வந்து ரத்தினசாமி அவளையே பார்க்க பார்க்க ஏற்கனவே பயந்து போய் இருந்தவள் ரத்தினசாமியே வந்து வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என சொல்ல அதை கேட்டதில் இருந்து ஆரம்பித்து விட்டாள்.

எங்கே அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்களோ என பயத்தில் அவள் அழ அனைவரும் மிரண்டு தான் போயினர்.

“அங்க யாரும் உன்னை ஒன்னும் பேச மாட்டாங்க துவா. நாங்க எல்லாருமே உன் கூட தான் இருப்போம். நீ ஏன் பயப்படற?…” அஷ்மிதா கேட்க,

“இப்படி பேசித்தான் அன்னைக்கு அப்பாவை பார்க்க வைக்கிறேன்னு சொல்லி இவங்க கூட்டிட்டு போனாங்க என்னை. அதுக்கப்பறம் தான்…”

விஷாலை நிமிர்ந்தும் பாராமல் அவன் இருந்த திசையில் கை காண்பித்து சொல்லி அழ அனைவருக்குமே அது பேரதிர்வு தான். அதிரூபனின் கோபம் தம்பிகளின் மேல் பாய்ந்தது.

‘செத்தேன். இப்படி பொசுக்குன்னு போட்டு குடுத்துட்டாங்களே?’ மெல்ல அதிபனை நிமிர்ந்து பார்த்தவன் அவனின் பார்வை தாங்காமல் நடுங்கியவன் தலைகுனிந்தபடி வெளியேறிவிட்டான்.

அவனறியாமல் மனதினுள் துவாரகாவை மரியாதையாய் மொழிந்தான். அவன் சென்ற பின்பு அவனின் பின்னாலேயே பத்மினி வந்துவிட்டார்.

அவனிடம் விசாரிக்கவென வர ரத்தினசாமி தான் கேட்டுக்கொள்வதாக கூறி பத்மினியை துவாரகாவிடம் அனுப்பிவைத்துவிட்டு விஷாலை தனியாய் அழைத்து சென்றார்.

அங்கே அறையில் பத்மினி, ராஜாங்கம், அஷ்மிதா, சந்தியா, ஹர்ஷத் என அத்தனை பேர் தாங்கியும் சொல்லியதையே திரும்ப திரும்ப சொல்லி அழுது ரத்தமென சிவந்து போனது துவாரகாவின் முகம்.

எத்தனை பேசியும் நம்பாமல் பிடிவாதமாய் இருப்பவளை தேற்ற முடியாமல் பரிதாபமாய் அதிரூபனை பார்த்தனர் அனைவரும்.

அதிரூபனே சமாளிக்க முடியாமல் வாயடைத்து நின்றான்.

“மவனே, அவ வீட்டுக்கு வரமாதிரி தெரியலை. இந்த ஜென்மத்துல நீ கட்ட பிரம்மச்சாரி தான்டா…”

அஷ்மிதா அந்த நேரத்திலும் அவனை கிண்டலாய் பேச அனைவருக்குமே கொஞ்சம் புன்னகை தான் முகத்தில்.

error: Content is protected !!