மின்னல் அதனின் மகனோ – 8 (2)

எப்படி தன் வீட்டில் அனைவரின் மத்தியில் இயல்பாய் வளையவருவாள்? என்ற எண்ணம் தலைதூக்க அதிரூபனை பார்த்தாள்.

அவனும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்னும் விதமாய் புன்னகைக்க ஒரு பெருமூச்சுடன் இன்னமும் துவாரகாவிடம் அதிகமாய் பேச்சுகொடுக்க ஆரம்பித்தாள் சந்தியா.

சந்தியாவின் கணவன் ஹர்ஷதிற்கு எதுவும் புரியவில்லை என்றாலும் மனைவியின் அனுசரணை துவாரகாவின் மேல் இருப்பதை கண்டு பொறுமையாக இருந்தான்.

மதிய நேரம் தாண்டவும் தான் ரத்தினசாமிக்கு தன் தங்கையும், மாப்பிள்ளையும் இங்கில்லை என்பது புரியதொடங்கியது.

சங்கரனையும் காணவில்லை. போன் செய்தாலும் யாரும் எடுக்கவில்லை என்றதுமே பதறிப்போனார்.

விஐபிகள் அனைவரும் வந்து சென்றுவிட்டதால் நெருங்கிய சொந்தங்கள் என குறைவானவர்கள் மட்டுமே அங்கிருந்தனர்.

பத்மினியை அழைத்து கேட்க அவருக்கும் எதுவும் தெரியவில்லை. அதில் வெகுண்டு போனவர்,

“என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க? என் தங்கச்சியை காணோம்னு கேட்டா தெரியாதுன்னா கையை விரிக்கிற? புது சொந்தம் வரவும் அந்தளவுக்கு இளக்காரமா போய்ட்டாளா என் தங்கச்சி?…” என ஏகவசனத்தில் பேச பதறிப்போனார் பத்மினி.

“சத்தியமாவே நான் அப்படி நினைக்கலைங்க. நான் வந்தவங்களை கவனிச்சுட்டு இருந்தேன். பூரணி இங்க தான் இருந்தா…” கண்ணீருடன் பத்மினி பேச கொஞ்சமும் இரங்கவில்லை ரத்தினசாமிக்கு.

“வந்தவங்களை கவனிக்க தான் நாங்க இருக்கோம்ல. ஊரே கூடி இருந்தாலும் உன் வேலையே என் தங்கச்சியை கவனிக்கிறது தானே? இங்க நடந்த கூத்துக்கு அவ மனசு எந்தளவுக்கு உடைஞ்சு போய்ருக்கும். அவளை பார்க்கிறதை விட்டுட்டு உனக்கு என்ன வேற வேலை?…”

உண்மையில் பத்மினியும் உடைந்துதான் போனார் அந்த நேரத்தில். இத்தனை வருடமாக அன்னபூரணியை தான் எவ்வாறு கவனித்தோம், அவருக்கு எப்படி முக்கியத்துவம் குடுத்தோம் என்பதை எல்லாம் சடுதியில் மறந்துவிட்டு இப்படி பேசுகிறாரே என வெதும்பியபடி கண்ணீரோடு கணவனை பார்த்தார்.

இவரை பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாமல் தங்கையை தேடி ரத்தினசாமி நகர்ந்துவிட பத்மினியுமே அவரின் பின்னால் ஓடினார் அன்னபூரணியை தேடி. அதற்குள் அர்னவ்விடம் இருந்து போன் வர,

“எங்கடா போய் தொலைஞ்சீங்க? எங்கல்லாம் தேட. உன் அத்தையை காணோம்டா…” என அவனிடம் பாய,

“பெரியப்பா, நீங்க கவலைபடாதீங்க. அத்தையும் மாமாவையும் கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்திருக்கோம். பதட்டபடற அளவுக்கு ஒண்ணுமில்லை. இன்னும் கொஞ்சநேரத்துல நாங்களே வீட்டுக்கு கிளம்பிடுவோம்….” என்றதும்,

“ஓஹ் என்னிடம் சொல்லாம கிளம்பற அளவுக்கு எல்லாரும் பெரியாளாகிட்டீங்க இல்லையா? எந்த ஹாஸ்பிடல்?…”

“இல்லை பெரியப்பா, நாங்க பார்த்துக்கறோம். நீங்க அங்க வந்தவங்களை…”

“நிறுத்தறியா, எந்த ஹாஸ்பிட்டல்ன்னு கேட்டா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லனும். நானும் சங்கரனும் புறப்பட்டு வரோம்…”

“அது வந்து பெரியப்பா, அப்பா இங்கதான் இருக்காங்க…” தயக்கமாய் சொல்ல,

“ஓஹ், இன்னைக்கு இந்த அண்ணன் வேண்டாம போய்ட்டேனா எல்லாருக்கும். இருக்கட்டும்டா. நீங்க அப்படியே இருங்க. ஆனா என்னால அப்படி இருக்க முடியாது. எனக்கு நீங்க எல்லாரும் வேணும்டா. என்ன செய்ய?…”

கண்கலங்க ரத்தினசாமி பேச பேச பத்மினியும் அழுதுவிட்டார். அனைவரும் தன்னை ஒதுக்கிவிட்டதாக மருக தொடங்கிவிட்டார் ரத்தினசாமி.

போனை வைத்துவிட்டு மனைவியை பார்த்தவர்,

“பாரு பத்மி, ஒரு உறவு வருது. ஏத்துக்கங்கன்னு  நீ சொன்ன. ஆனா அதனாலையே இருந்த உறவும் பிரிய ஆரம்பிச்சுடுச்சுமா. என்கிட்ட சொல்லாம ஹாஸ்பிடல் போய்ருக்காங்க. அந்தளவுக்கா என் தங்கச்சிக்கு என் மேல கோவம்? ஆனா அப்படியே விட்டுட முடியுமா? அவ கோபபட்டா படட்டும். அந்த உரிமை அவளுக்கு இருக்கு…” என புலம்ப,

“நீங்க கவலைபடாதீங்க. வாங்க நாம ஹாஸ்பிடல் போவோம்…” என வெளியில் அழைத்துவர ரத்தினசாமி மணமேடையில் தன் மகன் அனைவரிடமும் புன்னகை முகமாக பேசிக்கொண்டிருப்பதை விழி அகற்றாது ஒரு நொடி பார்த்தவர்,

‘அதிபா, என் மகன் அதிபன் முகத்தில் எத்தனை சந்தோஷம்?’ என மனதிற்குள்ளேயே சொல்லிகொண்டவர் பத்மினியிடம் திரும்பி,

“நான் போய்ட்டு வந்திடறேன் பத்மி. நீ இங்க இருமா…” என சொல்ல,

“இருக்கட்டுங்க. அதுதான் அஷ்மிதா அப்பா இருக்காரே. சந்தியாவும், மாப்பிள்ளையும் கூட இருக்காங்க. போய்ட்டு சீக்கிரம் வந்திடலாம். நான் சொல்லிட்டு வந்திடறேன்…”

“இல்ல பத்மி, என்னதான் ராஜாங்கம் இருந்தாலும் பெத்தவங்க நாம இல்லைனா அவன் தனிச்சு போய்டுவான். நானும் என்னனு பார்த்துட்டு வந்திடறேன்…” என்றவரை ஆச்சர்யமாய் பார்க்க,

“இது என் பிள்ளைக்காக மட்டுமே. அவன் முகத்தில இருக்கிற சிரிப்பு எப்பவும் குறையக்கூடாது. அவளை எப்ப எப்படி அவன்ட்ட இருந்து விலக்கி துரத்தி அடிக்கனும்னு எனக்கு தெரியும். எந்த சூழ்நிலையிலையும் அவளை ஒருக்காலும் ஏத்துக்க மாட்டேன். ஆனா இப்ப இந்த நேரத்துல நாம அவனுக்கு இருக்கனும்…”

“குடும்பத்துக்குள்ள வந்த உடனே என் தங்கச்சி வாழ்க்கையில பிரச்சனையை உண்டு பண்ணி அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பின இவளை நான் மன்னிக்கவே மாட்டேன்…” துவாரகாவை வஞ்சத்துடன் பார்த்துக்கொண்டே சென்றுவிட்டார்.

அவரின் பல்வேறு பரிமாணத்தில் பத்மினி தான் திகைத்து நின்றார். அன்னபூரணியின் மேல் அவர் கொண்ட அதிகப்படியான ப்ரியம் ஒன்றே இப்படியெல்லாம் அவரை ஆட்டிப்படைக்கிறது.

ஆனால் தங்கை பாசத்தையும் மிஞ்சும் அளவிற்கு மகன் மேல் உயிரையே வைத்திருப்பவர்.

அவனுக்காகவேணும் கண்டிப்பாக துவாரகாவை ஏற்றுகொள்வார் என நம்பினார் பத்மினி.

துவாரகா மட்டும் அகிலாவின் மகளாக இல்லாம இருந்தால் மகனிற்கு பிடித்த பெண் என்பதாலேயே இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் விட அவளை கொண்டாடியிருப்பார் ரத்தினசாமி.

அதற்குள் எத்தனை எத்தனை அக்னிகுண்டத்தில் துவாரகா மூழ்கி எழ வேண்டுமோ?

மேடைக்கு வந்தவர் அஷ்மிதாவிடம் வந்து நடந்ததை சொல்லிவிட்டு மணமக்களை சாப்பிட அழைத்துசெல்ல சொன்னவர் மற்றவர்களை பார்க்க சென்றார்.

அங்கே இடிந்துபோய் இருந்த விஷாலை சந்தோஷ் தான் தேற்றி வேலைகளில் ஈடுபடுத்தினான்.

அவர்களுக்கும் அன்னபூரணி ஹாஸ்பிடல் சென்ற விஷயம் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

———————————————————-

ஹாஸ்பிடலுக்கு நுழைந்தவர் அன்னபூரணி இருந்த அறைக்குள் நுழைய வேகமாய் அவரை வந்து கட்டிக்கொண்டாள் ஸ்வேதா. அவளை அரவணைத்துக்கொண்டவர்,

“அதான் மாமா வந்துட்டேன்ல. அழக்கூடாது பப்புக்குட்டி. பயப்படாதடா…” என அவளுக்கு சமாதானம் சொன்னாலும் பார்வை தன் தங்கையையே வட்டமிட்டது.

அங்கிருந்த சேரில் சோக சித்திரமென அமர்ந்திருந்தவர் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த வைத்தியநாதனையே பார்த்தபடி இருந்தார்.

அர்னவும் சங்கரனும் ஓரமாக நின்றுகொண்டிருந்தனர். ஸ்வேதாவை அர்னவிடம் ஒப்படைத்துவிட்டு தங்கையை நெருங்கி அவரின் தோளில் கைவைக்க அப்போது தான் ரத்தினசாமியின் வரவை உணர்ந்து பார்த்தார்.

“அண்ணா, என்ன நீ இங்க எப்படி?…” என கேட்டு அண்ணனின் கலங்கிய கண்களை கண்டதும்,

“பயப்பட ஒன்னும் இல்லண்ணா. பிபி கூடிருச்சு. அதுதான் ஹாஸ்பிடல் வந்தோம். இன்னும் அரைமணிநேரத்துல வீட்டுக்கு போய்டலாம்னு சொல்லி இருக்காங்க. கல்யாண வேலைல உன்னை சங்கடப்படுத்த வேண்டாமேன்னு தான் நாங்க கிளம்பினோம்…”

“அப்ப எனக்கு முக்கியமா ஏதாவது வேலை இருக்குனா என்னைவிட்டுட்டு போய்டுவியாம்மா?…” சிறுபிள்ளை போல் கேட்டவரிடம் உடைந்துபோய் அழ ஆரம்பித்தார் அன்னபூரணி.

error: Content is protected !!