மின்னல் – 8
அனைத்தும் நடந்து முடிந்தது ரத்தினசாமி கண் முன்னாடியே. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று கற்பனையில் கூட நினைத்திறாதவருக்கு நிஜமாய் நடந்தே முடிந்துவிட்ட இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
துவாரகாவை உற்றுப்பார்த்தார். அவள் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.
முகத்தில் பயத்தையும் தாண்டிய ஒருவித களை திருமணம் முடிந்த புதுப்பெண்ணுக்கே உரிய பூரிப்பு சிறுபுள்ளிபோல் இழைந்துகொண்டிருக்கிறதோ என்னும் வகையில் லேசான வெட்கம் அவள் முகத்தை அழகாக கட்டியது.
பார்க்க பார்க்க நெஞ்சத்தில் நெருப்பள்ளி கொட்டியதை போல உணர்ந்தவர்,
‘சந்தோஷமாவா இருக்க? இன்னைக்கே உன்னை இங்கிருந்து ஓட ஓட விரட்டறேன். நீயா என் பையனை விட்டு அலறி அடிச்சு ஓட வைக்கல நான் ரத்தினசாமி இல்லை.’ என சூளுரைத்துகொண்டவர் ஓரமாக ஒதுங்கி அறைப்பக்கம் வந்து மொபைலை எடுத்தார்.
“ஹலோ, மாணிக்கம். நான்தான்யா பேசறேன். ஹ்ம்ம் ஆமா, இன்னைக்கே முடிச்சிடனும். இன்னும் ஒருமணிநேரத்துல எனக்கு அந்த தகவல் வரனும்…” என பேசி வைத்துவிட்டு திரும்ப அங்கே பத்மினி பேயறைந்த முகத்தோடு நின்றிருந்தார்.
ஒருநிமிடம் அதிர்ந்தாலும் சுதாரித்துக்கொண்ட ரத்தினசாமி அலட்சியமாய் அவரை பார்க்க,
“தப்பு பன்றீங்க நீங்க. வேண்டாம்ங்க. செஞ்ச பாவம் எல்லாம் போதும். நம்ம பையனுக்காக பாருங்க. அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு. அவன் சந்தோஷத்தை தாண்டி நமக்கு வேற என்ன வேணும்?…”
மன்றாடும் குரலில் பத்மனி பேச பேச காதுகொடுத்து கேட்காததை போல வேறெங்கோ பார்த்து நின்றார்.
“நீங்க துவாரகாவை ஏன் உங்க தங்கச்சி புருஷனோட பொண்ணா பார்க்கறீங்க? யாரோ ஒரு தெரியாத பொண்ணா நினைச்சுக்கோங்க…” என சொல்லிய நொடி ரத்தினசாமியின் கை பத்மினியின் குரல்வளையை நெரித்தது.
“ஏற்கனவே கொலகாண்டுல இருக்கேன். யார்க்கு யார் பொண்டாட்டி? அதிபன் கையால தாலி வாங்கிட்டா அவ நம்ம வீட்டு மருமகளா ஆகிடுவாளா? அதுக்கு ஒரு தகுதி வேண்டாம்…” என்றவர்,
“அவ யாராவா இருந்தாலும் அகிலா பெத்த பொண்ணு தானே? அவ தகுதிக்கு என் தங்கச்சி புருஷனோட மகள்ன்னு உரிமையா சொல்ற? எவ்வளவு துணிச்சல் இருக்கனும் உனக்கு…” அவரின் கையிலிருந்து தன்னை போராடி காத்துக்கொண்ட பத்மினி,
“நீங்க என்ன சொன்னாலும் நடந்ததை மாத்த முடியாது. இப்ப அவ நம்ம வீட்டு மருமக. என் பிள்ளைக்கு மனைவி. இதை மாத்த முடியுமா?…”
“மாத்திக்காட்டறேன். இன்னைக்கே அவளே இந்த குடும்பம் வேண்டாம், அதிபன் வேண்டாம்னு கதறிட்டு போறாளா இல்லையான்னு பார்…” அவர் சவாலாய் சொல்ல அவரின் மொபைலும் இசைத்தது.
“சொல்லு மாணிக்கம், பார்த்தாச்சா?…” என கேட்க மறுமுனை,
“ஐயா, மன்னிக்கனும். நம்ம அதிபன் ஐயா அந்தம்மாவை வேற எங்கையோ மாத்திட்டாருபோல. நேத்தே இங்க இருந்து டிசார்ஜ் பண்ணிட்டாங்க…”
“அறிவுகெட்டவனே கதையா சொல்லிட்டு இருங்க. அங்க அவளுக்கு பண்ணையம் பார்த்தவங்களை இழுத்துப்போட்டு நாலு மிதி மிதி. தன்னால உண்மையை சொல்லுவாங்க…” ஆத்திரத்தில் கத்த,
“நீங்க ஒரு சோலி குடுத்து அத முழுசா விசாரிக்காம இருப்பேனாங்க ஐயா. எல்லாம் கேட்டாச்சுங்க. ஒன்னும் தேறலை…” என கைவிரிக்க ரத்தினசாமியின் கோபம் பன்மடங்காய் பெருகியது.
“ஐயா நம்ம அதிபன் ஐயா எங்க அந்தம்மாவை மறைச்சு வச்சுருக்கார்னு கண்டிப்பா தேடி கண்டுபிடிச்சடறேன். நீங்க வெசனப்படாதீங்க…” ரத்தினசாமி கேட்காததற்கும் பதிலளித்து வைத்துவிட சுவற்றில் சாய்ந்து நின்று தலையில் கை வைத்துக்கொண்டார்.
அனைத்தும் பார்த்துக்கொண்டிருந்த பத்மினிக்கு ஆற்றாமையும் சந்தோஷமும் ஒருங்கே பொங்கியது.
அகிலாவை மகன் பாதுகாத்துவிட்டான் என்கிற சந்தோஷமும், மகனை இன்னமும் புரிந்துகொள்ளாமல் இருக்கிறாரே என்கிற ஆற்றாமையும் அவரை பந்தாட ரத்தினசாமியின் முகத்தை பார்த்து,
“ஒரே விஷயம் தான் இப்ப சொல்லனும் உங்கள்ட்ட…” என்றவர் ரத்தினசாமி நிமிர்ந்து என்னவென பார்த்ததும்,
“மினிஸ்டர் வீட்டு கல்யாணம், முதலமைச்சர், முக்கிய பிரமுகர்கள் வருகைன்னு இருக்கிற இத்தனை பெரிய திருமண ஏற்பாட்டில் யார் என்ன பேசுவாங்களோ, குடும்பத்துக்கு கெட்டபெயர் வந்துடுமேன்னு சமரசம் ஆகாம தான் நினைச்சதை பிசகில்லாம நடத்திக்க தெரிஞ்ச உங்க பையன் உங்களோட அடுத்த மூவ் என்னனு தெரியாமலா இருப்பான்…” என சொல்லி,
“யாரை எப்போ எப்படி ஹேண்டில் பண்ணனும்னு அவன் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கான். நடந்த கல்யாணத்தால உங்களோட மொத்த கோவமும் அகிலா பக்கம் தான் திரும்புனு நல்லாவே கெஸ் பண்ணி அவரை காப்பாத்திட்டான். நான் போய் பார்த்ததுக்கே அந்த பேச்சு பேசினீங்க. இப்போ என்ன பண்ண போறீங்க?…”
பத்மினியின் கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை சரியான பாதையில் யோசிக்க வைக்காமல் அவருக்குள் எரிந்துகொண்டிருந்த தீயை வளர்த்துக்கொண்டிருந்தது.
அவருக்கு தெரியவில்லை ராஜாங்கத்தின் வீடுகளில் ஒன்றில் தான் அகிலா பாதுகாப்பாக மருத்துவர்கள் கவனிப்பில் இருக்கிறார் என்பது. ஏனோ ரத்தினசாமிக்கு ராஜாங்கத்தின் மேல் எண்ணம் வரவே இல்லை.
தன் மகன் தான் வேறெங்கேனும் ஒளித்து வைத்திருக்க வேண்டும் என நினைத்து அப்படியே தேட நினைத்திருந்தார்.
“இப்போவாவது கோபத்தை விட்டுட்டு நடந்ததை ஏத்துக்க முயற்சி பண்ணுங்க. பெத்தவங்க பண்ணினதுக்கு அந்த பொண்ணு எந்த வகையிலையும் பாதிக்கப்படகூடாது. நம்ம வீட்லையும் இன்னொரு பொண்ணு இருக்கா. ஸ்வேதா…”
“பத்மினி…” என கத்த,
“உண்மையை சொன்னேங்க. இத்தனை வருஷம் பட்ட கஷ்டத்துக்கு அந்த பொண்ணு இனியாவது நல்லா இருக்கனும். அவ சந்தோஷமா இருந்தா என் பிள்ளையும் சந்தோஷமா இருப்பான்…”
“எப்ப இருந்து மருமக பாசம்? கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் அஷ்மிதா தான் மருமகன்னு கொண்டாடிட்டு இருந்த. இப்ப என்ன புதுசா வந்தவ மேல?…” எள்ளலாய் கேட்க,
“இப்பவும் அஷ்மிதா மேல பாசம் குறையலைங்க. என் பையனை அவ நல்லா புரிஞ்சு வச்சிருக்கா, அவனுக்கும் அவளை பிடிக்கும்ன்னு தான் அவளை மருமகளா கொண்டுவரனும்னு நான் ஆசைப்பட்டேன்…”
“இன்னைக்கு தன் எதிர்காலத்தை பத்தி கவலை இல்லாம என் மகனோட மனசை புரிஞ்சு அவன் சந்தோஷத்துக்காக முகம் மாறாம முழுமனசா அவனோட காதலை ஏத்துக்கிட்டு அந்த பொண்ணோட அவனை சேர்த்து வச்சு பார்க்கறா. ஒரு ப்ரெண்டா அவ இவ்வளவு செய்யும் பொழுது என் பையன் அவன். என் மகன் அவனுக்காக நான் துவாரகாவை ஏத்துக்க மாட்டேனா?…”
பத்மினி பேச பேச அவரையே வெறித்தபடி நின்றிருந்தார் ரத்தினசாமி. மனைவியும் மகன் பக்கம் சேர்ந்துவிட்டாள் என்பதை புரிந்துகொண்டவர்,
“எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கறேன்…” என்று கர்ஜனை குரலில் உறுமிவிட்டு சென்றுவிட பத்மினிக்கு அழுகை வரும் போல் ஆனது.
எங்கே துவாரகாவை துன்புறுத்தி அது அதிபனை பாதிக்குமோ என சஞ்சலம் கொள்ள ஆரம்பித்தார்.
மணமேடைக்கு வந்தவர் தன் மனக்குமுறல்களை வெளிக்காட்டிகொள்ளாமல் வந்தவர்களை வரவேற்று நல்லவிதமாக பேசிக்கொண்டிருந்தார்.
என்னதான் உதட்டில் ஒட்டவைக்கப்பட்ட புன்னகை இருந்தாலும் உள்ளுக்குள் அவரின் நயவஞ்சகம் விழித்தபடியே இருந்தது.
ஒரு அரசியல்வாதியாய் புகைச்சலை காட்டாமல் புன்னகையை கொடுத்து நிற்க அவரின் அனுபவம் நன்றாகவே கைகொடுத்தது.
அது மற்றவர்களுக்கு புரியாவிட்டாலும் அதிபனுக்கும், பத்மினிக்கும் நன்றாகவே புரிந்தது.
நேரம் செல்ல செல்ல கூட்டம் கலைந்து செல்ல கடைசி வரை ரத்தினசாமி மகனின் அருகில் கூட வந்து நிற்கவில்லை.
ஆசீர்வாதம் செய்வதை கூட நாசூக்காய் எவரும் உணராத வண்ணம் தவிர்த்து முக்கியஸ்தர்களை கவனிக்கிறேன் போர்வையில் தன்னை மறைத்துகொண்டார்.
துவாரகாவின் அருகில் அஷ்மிதாவும் சந்தியாவும் மட்டுமே இருந்தனர். சந்தியா கூட ஓரிரு வார்த்தைகள் துவாரகாவிடம் பேசினாள். அவளிடம் கூட பேசவே அத்தனை தயக்கம் காட்டினாள் துவாரகா.
சந்தியா ஏதாவது கேட்டால் அஷ்மிதாவின் முகம் பார்க்க, அதிரூபனின் முகம் பார்க்கவென பார்த்து அவர்கள் தலையசைத்ததும் பதில் சொல்வதுமாய் இருக்க இதை கண்டு சந்தியாவிற்கு கோபம் கூட வரவில்லை. கவலையாய் போயிற்று. தன்னிடம் பேசவே இத்தனை யோசிக்கும் பெண்.