ராஜாங்கத்தின் சம்பந்தி என தான் ஆகிவிட்டால் முதலமைச்சருக்கு தான் இன்றியமையாத ஒருத்தராக மாறிவிடவும், ராஜாங்கத்தின் மூலம் சில காரியங்கள் ஆகவேண்டியதாக இருப்பதனாலும் தான் இந்த சம்பந்தத்தையே ஏற்படுத்தியது.
அதிலும் ராஜாங்கத்திற்கு அதிரூபன் மேல் அப்படி ஒரு அபிமானம் உண்டு. ஒன்றும் ஒன்றும் இரண்டல்ல நான்கு என கணக்குப்போட்டவரின் மொத்த திட்டமும் மணல்கோட்டையாய் சரிவதை கண்டு நெஞ்சுவலியே வந்துவிடும் போல ஆனது ரத்தினசாமிக்கு.
இனி இதிலிருந்து திரும்ப முடியாது என்பது மொத்தமாய் புரிந்துவிட நிமிர்ந்து மகனை பார்த்தார்.
அத்தனை கோபத்திற்கு பின்னும் அவனின் முகம் பார்த்ததும் அவரின் பாசம் அவனிடம் மண்டியிட்டது.
‘இந்த பொண்ணை தவிர வேற எந்த பொண்ணை நீ கை காமிச்சிருந்தாலும் கண்டிப்பா அப்பா சந்தோஷமா சம்மதிச்சிருப்பேன்ப்பா அதிபா. என்னால ஏத்துக்கவே முடியலைப்பா. இந்த பொண்ணால நான் உன்னை வெறுத்திட கூடாது அதிபா’
மனதிற்குள் புலம்பியவர் கண்கள் கசிந்துவிடும் போல ஆனது. நொடியில் சுதாரித்துகொண்டவரின் அரசியல் மூளை இன்னொரு கணக்கையும் வேகமாய் போட ராஜாங்கத்தை பார்த்தார்.
ரத்தினசாமி ஏதோ பேச முயல்கிறார் என்பது தெரிய என்னவென பார்த்தார் ராஜாங்கம்.
“சம்பந்தி உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா இன்னொருயோசனை சொல்றேன். உங்க விருப்பம் தான்…” என்ற ரத்தினசாமி,
“ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நிக்க வேண்டாமே. அஷ்மிதாவுக்கு சம்மதம்னா விஷாலுக்கு குடுக்கறேங்களா?…”
அவர் கேட்டதும் அனைவரும் ஸ்தம்பித்து பார்க்க ஏற்கனவே கவலையோடு பார்த்திருந்த விஷால் இன்னும் ஆழமாக அஷ்மிதாவை பார்க்க அவளோ,
‘கண்ணுமுழியை நோண்டிடுவேன்’ என்று மிரட்டலாய் கண்களை உருட்டி மிரட்டி யாருமறியாமல் கையை காண்பிக்க அரண்டுபோனவன்,
“அம்மா பேய்… என திரும்பிக்கொண்டான்.
‘அந்த பயம் இருக்கட்டும்’ என மிதப்பாய் அவனை பார்த்துவிட்டு தன் தந்தையை காண அவரும் அஷ்மிதாவை பார்த்துக்கொண்டே,
“இல்லைங்க. சரிவராது. என்ன தான் இருந்தாலும் அண்ணனுக்கு பேசின பொண்ணை தம்பிக்கு கட்டி வைக்கிறது என் மனசுக்கு சரியாப்படலை. அதோட என் பொண்ணுக்கும் இதுல விருப்பம் இருக்காது. இதை இப்படியே விட்டுடலாம்…” ராஜாங்கம் முடிவாய் சொல்லிவிட அங்கே மறுபேச்சில்லை.
அவருக்கு விஷாலுக்கு கொடுக்க விருப்பமே இல்லை. ஏற்கனவே துவாரகாவிற்கு நடந்ததை அஷ்மிதா சொல்லியிருந்தபடியால் ராஜாங்கத்தின் பார்வையில் விஷாலின் மீது அப்படி ஒரு வெறுப்பு உண்டாகிவிட்டது.
“இப்படியே நின்னுட்டே இருக்கவேண்டாம். போய் ஆகவேண்டியதை பார்ப்போம். சீப் கெஸ்ட் எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. பொண்ணும், மாப்பிள்ளையும் இங்க இருக்கட்டும். நாம போய் வந்தவங்களை கவனிப்போம்…”
ராஜாங்கம் அனைவரையும் துரிதப்படுத்தி அங்கிருந்து கிளப்ப அனைவரும் மனமே இல்லாமல் கலைந்து சென்றனர். அஷ்மிதாவை மட்டும் அங்கே விட்டு சென்றார்.
சிறிதுநேரத்தில் தன் மணப்பெண் கோலத்தை கலைத்துவிட்டு வேறொரு உடையில் மிக சிம்பிளாய் தயாராகி வர எழுந்து சென்று கட்டிகொண்டாள் துவாரகா.
“நீங்க ரொம்ப நல்லவங்க டாக்டர். நீங்க பாவம்…” என மாற்றி மாற்றி சொல்ல,
“ரொம்ப பாவம் பார்க்கறியே? பேசாம நானே அவனை கட்டிக்கட்டுமா?…” என கேட்டதும் தன் வாயை கப்பென மூடியவள் பரிதாபமாக பார்க்க மளுக்கென்று கண்ணீர் துளிகள் விழியோரம் பொங்கிவிட்டது.
அதை பார்த்த அஷ்மிதா,
“அச்சோ கல்யாணப்பொண்ணு நான் என்ன சொன்னாலும் நம்பிடறதா?…” என கண்ணீரை துடைக்க,
“பயந்துட்டேன்…” என துவாரகா சொல்ல,
“ஆத்தா ஆரம்பிச்சுடாத. நீ பயந்துட்டேன்னு ஆரம்பிச்சாலே எனக்கு பயமாகிடுது…” என்று கைக்கூப்பி கிண்டலாய் சொல்ல சிணுங்கினாள் துவாரகா.
“கொஞ்சம் நல்லா தான் சிரியேன். சிரிச்சா அழகா இருப்ப. அப்பத்தான் எனக்கு உன்னை பிடிக்கும்…”
“என்ன நிஜமாவே உங்களுக்கு புடிக்குமா டாக்டர்?…” தலை சாய்த்து வியப்பாய் அவள் கேட்ட பாவனையே அஷ்மிதாவை கொள்ளை கொண்டது. அதிரூபனை விட்டுவைக்குமா?
“ஹ்ம்ம் ரொம்ப பிடிக்கும். எப்ப தெரியுமா?…”
“நான் விளையாட்டுக்கு சொல்றதை எல்லாம் நம்பற நீ அவன் சொன்னதை எதையுமே நம்பமாட்டேன்னு தலைகீழா நிக்கவச்ச பாரு. அப்ப இருந்து அவ்வளோ புடிக்கும். இவன் தான் எல்லாரையும் ஓடவச்சு பார்த்திருக்கேன். இவனையே ட்ரில் வாங்கின பாரு. அப்ப இருந்து நான் உன்னோட பெரிய ஃபேன் ஆகிட்டேன்…”
அஷ்மிதா சொல்ல சொல்ல கூச்சம் தாளாமல் தலைகுனிந்துகொண்டாள் துவாரகா. வெட்கத்தில் துவாரகா கட்டியிருந்த பிங்க் நிற புடவையை ஒத்திருந்தது அவளின் வதனம். கண்ணை திருப்பமுடியாமல் அவளையே பார்த்திருக்க,
“முகூர்த்த நேரம் முடியபோறது, பெண்ணை, மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ…” என்று ஐயர் கதறும் குரல் கேட்க,
“இங்க எல்லாமே உல்டாவா இருக்குடா. மாப்பிள்ளை போய் அதுக்கு பின்னால தான் பொண்ணு போகனும். இங்க அப்படி இல்லை. இன்னைக்கு உங்கப்பாவோட டான்ஸ் பெர்பாமென்ஸ் பார்க்கனும்னு நினைச்சேன்.அதுவும் முடியலை…” என சலித்துக்கொள்ள,
“அதுதான் அந்த சிறப்பான தரமான சம்பவத்தை உங்கப்பா செஞ்சுட்டாரே. அது போதுமே…” என்று அதிரூபன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே சந்தியா வந்துவிட்டாள் அவர்களை அழைத்துசெல்ல. வேறு ஒருவரும் வரவில்லை.
அவளின் முகத்திலிருந்தே நடந்ததை தெரிந்துகொண்டாள் என்பது புரிந்தாலும் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. மிதமான புன்னகையோடே மூவரையும் பார்த்தவள்,
“நேரமாச்சு போகலாம் அண்ணா…” என சொல்லி பொதுவாக பார்த்தாள்.
சந்தியாவிற்கு ஸ்வேதா மூலம் அனைத்தும் சொல்லப்பட்டிருக்க சந்தியாவின் என்னமோ அண்ணன் விருப்பம், அவன் வாழ்க்கை. அவன் தேர்ந்தெடுத்தது தவறாக வாய்ப்பில்லை.
இத்திருமணத்தால் அவன் சந்தோஷமாக இருப்பானென்றால் அது ஒன்றே போதும் என்று சொல்லி ஸ்வேதாவிற்கும் சில பல அட்வைஸ்களை சொல்லி சென்றாள். அப்படி ஒரு மரியாதை சந்தியாவிற்கு அதிரூபன் மேல்.
மணமேடைக்கு அருகில் வந்ததுமே பெண் மாறியதால் கூட்டத்தில் கசகசவென பேச்சுக்கள் கிளம்ப அதை கண்டுகொள்ளாமல் மேடையில் அமரப்போனவன் ஆணியடித்ததை போல நிற்கும் துவாரகாவை திரும்பி பார்த்தான். அவள் பார்த்த திக்கில் திரும்பியவனின் முகம் இறுகியது.
துவாரகாவை இழுத்துக்கொண்டு அங்கே சென்றவன் அன்னபூரணியையும் வைத்தியநாதனையும் பார்த்துவிட்டு,
“துவா இவங்க தான் என்னோட அத்தையும் மாமாவும். இனிமே உனக்கு சித்தப்பா, சித்தி…” என அறிமுகப்படுத்த அவனின் குரலில் இருந்த எள்ளலில் வாய் வரைவந்த வார்த்தை தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது.
‘அப்பா’ என கதறிய மனதை அடக்கியவள் தன் அன்னையின் நினைவில் கண் கலங்கினாள்.
“அத்தை இது துவாரகா. ரூம்லயே பார்த்திருப்பீங்களே. இவளுக்கு அம்மா மட்டும் தான். அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை. அப்பா செத்து பலவருஷம் ஆகிடுச்சு…”
இரக்கமின்றி அவன் சொல்லிய வார்த்தைகளை கேட்டதும் அன்னபூரணி அதிர்ந்து பார்க்க வைத்தியநாதனின் முகமோ சவத்தை ஒத்திருந்தது.
‘அப்படி சொல்லாதப்பா’ என அழவேண்டும் போல இருந்தது அன்னபூரணிக்கு. ஆனாலும் அமைதியாய் கண்ணீர் வடித்தார்.
அவர்களை பார்த்துக்கொண்டே மேடையில் வந்து அமர்ந்தவன் மந்திரங்களை சொல்லிக்கொண்டே துவாரகாவையும் பார்வையால் ஆறுதல் படுத்தினான்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சூழ முதலமைச்சர் வர நடுநடுங்கித்தான் போனாள்.
கை பிடித்து அவளை ஆசுவாசப்படுத்தியவன் முதலமைச்சர் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுக்க புன்னகையோடு அதை வாங்கி துவாரகாவின் கழுத்தில் முடிச்சிட்டான்.
அனைத்தும் நல்லபடியாக முடிந்தது ரத்தினசாமி கண்முன்னே. நடக்க கூடாததெல்லாம் நடந்துவிட தடுக்கமுடியாத இயலாமையில் தன் நெஞ்சு வலிப்பதை போல இருக்க மார்பை பிடித்துக்கொண்டு துவாரகாவை வெறித்தபடி அமர்ந்துவிட்டார் ரத்தினசாமி.