வெள்ளத்தில் உயிருக்கு போராடும் நேரத்தில் ஒரு மரத்துண்டு கிடைத்தால் எப்படி பற்றுகோலாய் இருக்குமோ அப்படி ஒரு மனநிலையில் தன்னை உயிர்காக்க வந்தவனாய் அவனை இன்னும் அழுத்தமாய் கட்டிக்கொண்டாள்.
“இத்தனை பேர் இருக்கோம், வெக்கமே இல்லாம அண்ணனை எப்படி கட்டிப்புடிச்சிருக்கா பாருங்கம்மா…” ஸ்வேதா அன்னபூரணியின் காதை கடிக்க அவளின் கையை வலிக்குமாறு கிள்ளி வைத்தான் சந்தோஷ்.
“வாயை மூடு ஸ்வேதா. அவங்க உனக்கும் மூத்தவங்க. வயசுக்கு மீறுன பேச்சு உன்கிட்ட ரொம்ப அதிகமாயிடுச்சு. வாயை மூடிட்டு சின்னபொண்ணா நடந்துக்கோ. இல்ல அடிச்சு முகரையை பேத்திடுவேன் ராஸ்கல்…” என்று கோபமாய் சந்தோஷ் அவளிடம் பேச அதிர்ந்து வாயை கப்பென மூடிக்கொண்டாள் ஸ்வேதா.
அன்னபூரணி மகனை பார்க்க அவனோ அவரின் புறம் திரும்பவும் இல்லை.
“அதிபா, அப்பா சொல்றதை கேளுய்யா. உன் நல்லதுக்குத்தான் சொல்றாங்க. அஷ்மிதா ரொம்ப நல்ல பொண்ணு…” சங்கரன் பேசிக்கொண்டிருக்க,
“கொஞ்சம் நாங்களும் பேசலாமா?…” என்று ராஜாங்கத்தின் குரல் பின்னாலிருந்து கேட்க அனைவருமே அதிர்ந்து போயினர்.
ராஜாங்கம் இங்கே இருப்பார் என எவரும் நினைக்கவில்லை. அவர் வந்ததை கவனிக்கவும் இல்லை. அஷ்மிதாவுடன் முன்னால் வந்து நின்றவர்,
“என்ன பேசிட்டிருக்கீங்க மிஸ்டர் ரத்தினசாமி?…” அவரின் பேச்சில் தெரிந்த ஒட்டாத தன்மையும் மிஸ்டர் ரத்தினசாமி என்ற அழைப்பும் அனைவரையும் பதறச்செய்தது.
அதிரூபன் துவாரகாவை அங்கிருந்த சேரில் அமர்த்தி தண்ணீர் பாட்டிலை திறந்து அவளுக்கு கொடுக்க காதில் புகைவராத குறையாய் அதை கண்ட ரத்தினசாமி அதை தட்டிவிட போனார்.
அதை கண்டுகொண்ட அஷ்மிதா தன் தந்தைக்கு கண்ணை காட்ட ரத்தினசாமியின் கையை பிடித்து இழுத்து நிறுத்திய ராஜாங்கம்,
“என்ன பண்ண போறீங்க? கொஞ்சமாவது மனிதாபிமானம் வேண்டாமா? அந்த பொண்ணு உங்களோட அராஜகத்தால பயந்துபோய் இருக்குது. ஒரு வாய் தண்ணீர் குடிக்க விடாத அளவுக்கு இரக்கமில்லாதவங்களா நீங்க?…” என்றவர்,
“அங்க பாருங்க அந்த பொண்ணை எப்படி பார்த்துக்கறார் உங்க பையன். எந்தளவுக்கு அந்த பொண்ணுமேல காதலா இருக்கார்ன்னு நீங்க முதல்ல தெரிஞ்சுக்கோங்க…”
“இல்லைங்க அவன் ஏதோ விவரமில்லாம…” சங்கரன் ஆரம்பிக்க,
“எதுங்க விவரமில்லை. உலகம் பூரா சக்சஸ்ஃபுல்லா பிஸ்னஸ் பன்ற உங்க பையன் விவரமில்லாதவரா? அப்போ அப்படி விவரமில்லாத பையனை நான் என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் செய்துவைக்க முடியும்?…”
சங்கரனின் கேள்வியை வைத்தே அவரை மடக்கியவர் ரத்தினசாமியிடம் திரும்பினார்.
“உங்க சுயநலத்துக்காக இப்படி இன்னொரு பொண்ணு மேல உயிரா இருக்கிற பையனை நம்ம கௌரவத்துக்காக கட்டாயப்படுத்தி கட்டி வச்சா நாளைக்கு அவங்க வாழ்க்கை என்னாகும்?…”
ராஜாங்கம் இப்படி பேசுவார் என எதிர்பார்க்காத ரத்தினசாமி அதிரூபன் துவாரகாவை விட்டுவிட்டு ராஜாங்கத்திடம் அவரை சமாதானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் பேச ஆரம்பித்தார்.
“சம்பந்தி நான் சொல்றதை கேளுங்க. இப்ப உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகலைன்னா இன்னைக்கு கூடியிருக்கிற ஜனங்க வாய்க்கு வந்தபடி பேசுவாங்க. நான் சொல்றதை விட நீங்க அதிபன்கிட்ட சொன்னா கண்டிப்பா கேட்பான்…”
“என்னன்னு கேட்க சொல்றீங்க? என் பொண்ணை வேண்டாம்னு மணமேடைக்கு வந்த பின்னால சொன்னவர்ட்ட என் பொண்ணுக்கு வாழ்க்கை குடுங்கன்னு கேட்கனுமா நான்? நெவர்…” என்றவர் அதிரூபனை பார்த்து திரும்பி நின்று,
“இன்னைக்கு வந்திருக்கிற உறவுக்காரங்களுக்காக என் பொண்ணுக்கு அவளுக்கு ஒத்துவராத வாழ்க்கையை நான் ஏன் ஏற்படுத்தி குடுக்கனும்? வந்திருக்கிறவங்க இன்னைக்கு பேசிட்டு நாளைக்கு அடுத்த வேற ஒருத்தரை பத்தி பேச போய்டுவாங்க. அதுக்காகவெல்லாம் மேரேஜ் பண்ணுவாங்களா?…”
ரத்தினசாமியிடம் கேட்டுக்கொண்டே அதிரூபனை பார்த்து கண்ணடிக்க எவரும் உணராதவகையில் பார்வையில் மெச்சுதல் காட்டினான் அதிரூபன்.
“சபாஷ் டாடி. பின்றீங்க நீங்க…” என அவருக்கு விழிகளாலே கைகுலுக்கிக்கொண்ட அஷ்மிதா முகத்தை மட்டும் பாவமாய் வைத்துக்கொண்டாள்.
தனக்கும், தன் தந்தைக்கும் இதில் பங்கு கிடையாது, தங்களுக்கு எதுவும் தெரியாது என்ற வரையில் தான் ரத்தினசாமி அடக்கி வாசிப்பார்.
இல்லையென்றால் அவரின் அணுகுமுறையே வேறாக இருக்கும் என்பதால் அதிரூபனின் திட்டம் இப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பது.
ராஜாங்கத்தை பிடிக்காது என்றாலும் அஷ்மிதாவிற்காக இறங்கி வந்து பேசினார் பத்மினி.
“அண்ணே, என் புள்ளைக்கிட்ட நான் பேசறேன். நீங்க கொஞ்சம் தயவு பண்ணுங்க. அஷ்மிதா தான் என் மருமகன்னு நான் முடிவே பண்ணிட்டேன். என்னால எப்படி அவளை விட்டுக்கொடுக்க முடியும்?…” பத்மினி பேச அஷ்மிதா அதிரூபனை பார்த்து புருவம் உயர்த்தி கண்ணடிக்க அவளை முறைத்தவன்,
“அம்மா என்னால அஷ்மியை கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அவ என்னைக்குமே என் ப்ரெண்ட் தான். நாங்க ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்…” என கோபமாய் சொல்ல அவனிடம் திரும்பியவர்,
“இதை உனக்கு அவதான்னு நாங்க பேசினப்பவே சொல்லியிருக்கனும் அதி. உன்னோட காதலை நிறைவேத்திக்க இன்னொரு பொண்ணோட எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அதிகாரத்தை உனக்கு யார் குடுத்தது?…” என்றவர்,
“இத்தனைக்கும் அவ உன்னோட ப்ரெண்ட். இந்த கல்யாணம் நின்னு போய் அதனால அவளோட எதிர்கால பாதிக்கப்பட்டா யார் பொறுப்பாகறது? இத்தனை நாள்ல அந்த பொண்ணுக்கும் உன் மேல ஒரு ஈடுபாடு வந்திருந்தா? பெண் பாவம் பொல்லாதது அதி…”
“அம்மா தப்புதான் நான் அஷ்மிக்கிட்ட சொல்லியிருக்கனும் தான். ஆனா அது துவாரகாவுக்கு ஆபத்தா முடிஞ்சிருக்கும். உங்களுக்கு தெரியாததா? ஒருவேளை சொல்லியிருந்தா சம்மதிச்சிருப்பீங்களா? இல்லை அப்பாட்ட பேசி சம்மதம் வாங்கியிருப்பீங்களா?…”
அவனின் கேள்வியில் இருந்த நியாயம் சுட தலைகுனிந்துகொண்டார். அதற்குமேல் அவனிடம் என்ன பேச அவருக்கு புரியவில்லை.
முகத்தை மூடிக்கொண்டு விசும்ப அஷ்மிதாவிற்கு மனம் கேட்கவில்லை.
“ஆன்ட்டி, இங்க பாருங்க…” என முகம் நிமிர்த்தி அவரின் கண்ணீரை துடைத்தவள்,
“என்னைப்பத்தி கவலைப்படாதீங்க. நான் இதை சந்தோஷமாவே ஏத்துக்கிட்டேன். என் ப்ரெண்ட்டோட சந்தோசம் தான் எனக்கு சந்தோசம். அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு குடுங்க. அதுதான் பெத்தவங்க பிள்ளைங்களுக்கு செய்யற ஆசிர்வாதம்…”
“அதுக்குன்னு எங்கிருந்தாலும் வாழ்கன்னு எல்லாம் பாடமாட்டேன். என் கண்ணுமுன்னால தான வாழப்போறான். கல்யாணம் பண்ணிக்கட்டும். இப்ப அவனுக்கு இன்னொரு கடமையும் சேர்ந்திருக்கு. சீக்கிரமே எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை அவனே பார்த்து முடிச்சு வைப்பான்…” என்றவள்,
“ஆமாம் தானேடா?…” என புன்னகை பொங்க அதிரூபனிடம் கேட்க அவன் அவளை நோக்கி கை நீட்டினான். அவனின் கைபிடித்தவளை தோள் சாய்த்துக்கொண்டவன்,
“தேங்க்யூ டா…” என்று அணைத்துக்கொள்ள அஷ்மிதா துவாரகாவின் கைபற்றிக்கொண்டாள்.
எப்போதடா அவள் தன்னருகில் வருவாள் என காத்திருந்ததை போல அவளின் இடையை கட்டிக்கொண்டாள் துவாரகா.
இதை பார்த்திருந்த ஸ்வேதாவிற்கு அஷ்மிதாவை நினைத்து ஆச்சர்யமாக போனது.
விஷாலும் அர்னவும் அஷ்மிதாவையே பார்த்திருந்தனர். விஷாலுக்கோ ஒரே குற்றவுணர்ச்சி.
‘ஒருவேளை தான் செய்த காரியத்தின் விளைவாக தான் அண்ணன் இப்படி ஒரு முடிவெடுத்திருப்பாரோ? இதனால் அஷ்மிதாவின் வாழ்க்கை போய்விட்டதே?’ என பரிதாபம் கொண்டான் அவள் மேல்.
இதற்குள் ராஜாங்கம் மேலும் ரத்தினசாமியை லாக் செய்ய போனிலேயே ஆவன செய்துவிட்டு வந்துவிட்டார்.
“ரத்தினசாமி, இப்போவாச்சும் உங்க பையனோட ஆசையை பூர்த்தி பண்ணுங்க. பசங்க சந்தோஷமா இருந்தா தானே நமக்கும் மகிழ்ச்சி…”
ராஜாங்கம் என்ன சொன்னாலும் ரத்தினசாமியால் துவாரகாவை தன் மருமகளாக நினைத்தும் பார்க்கமுடியவில்லை.
எப்போது சிக்குவார்கள்? துப்பிவிடலாம் என்று உள்ளம் முழுதும் விஷமாய் தேக்கிவைத்திருக்க அவளை தன் வீட்டினுள் வளையவர விடுவதா?
அஷ்மிதாவை திருமணம் செய்யாவிட்டலும் பரவாயில்லை. இந்த திருமணமே நின்றுவிட்டதென அறிவித்து யார் என்ன பேசினாலும் பரவாயில்லை.
ஆனால் தன் மகன், தன் அதிபன் அவளின் கழுத்தில் தாலி கட்டிவிடகூடாதென உறுதியானார்.
மகன் அருகிலே நிற்பதையே பொறுத்துக்கொள்ள முடியாதவருக்கு வாழ்க்கை முழுவதும் தன் குடும்பத்தில் வந்து வாழ்ந்து தன் வீட்டின் மூத்த மருமகளாய் அதிகாரம் செய்து தங்கள் வம்சத்தை வயிற்றில் சுமந்து தன் சாம்ராஜ்யத்தின் ராணியாக கோலோட்சவிட்டுவிடுவாரா?
“விடமாட்டேன். சம்மதிக்க மாட்டேன். இந்த கல்யாணம் நடக்காது…”
ரத்தினசாமி இப்படித்தான் யோசிப்பார் என எண்ணியிருந்த ராஜாங்கம் ரத்தினசாமி சொன்னதை காதில் வாங்காதவர் போல,
“நீங்க ஏன் தயங்கறீங்கன்னு எனக்கு நல்லாவே புரியுதுங்க. சி.எம்ட்ட என்ன சொல்றதுன்னு தானே? அவர் எதுவும் தவறா நினைச்சுப்பாருன்னு தானே?…”
ராஜாங்கம் கேட்க அதையே காரணமாக சொல்லி இதை தடுத்துவிடலாம் என ரத்தினசாமி நினைக்க அதிலும் மண்ணை அள்ளிக்கொட்டினார் ராஜாங்கம்.
“அவர்க்கிட்ட நானே பேசிட்டேன். அவர்க்கு ரொம்ப சந்தோஷம். இங்க தான் கிளம்பி வந்துட்டு இருக்கார். இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல இருப்பார். என்ன சந்தோஷமா?…” என கேட்க அஷ்மிதாவிற்கு ரத்தினசாமியின் முகம் போகும் போக்கை காண சிரிப்பு பீறிட்டது.
“மாட்னாருடா மயில்சாமி…” என அதிரூபனிடம் சொல்ல அவன் அவளை முறைத்தான்.
“இது ஒன்னை மட்டும் நல்லா கத்துவச்சிருக்க…” என்று திரும்பிக்கொண்டாள்.
“ஆமா மிஸ்டர் ரத்தினசாமி. இங்க நடந்த ஆர்க்யூமென்ட் எதையும் நான் சொல்லலை. நீங்க உங்க பையனோட காதல் விவரம் தெரிஞ்சதும் பெருந்தன்மையா முழு மனசோட அந்த பொண்ணை ஏத்துக்கிட்டதா சொன்னேன். அவருக்கு அவ்வளவு சந்தோசம். நேர்ல வந்து உங்களை பாராட்டனும்னு சொன்னார்…” ராஜாங்கம் சொல்ல தலையில் கைவைக்காத குறைதான்.
என்றைக்குமே ரத்தினசாமிக்கு ஒரு குறையுண்டு. தான் மத்திய அமைச்சராக இருந்தும் தனக்கு கிடைக்காத சில சலுகைகள் தொழிலதிபரான ராஜாங்கத்திற்கு சி.எம்மிடம் கிடைக்கும். அதும் முதலமைச்சரின் உறவினர் ராஜாங்கம் என்பதால் தான்.