மின்னல் அதனின் மகனோ – 7 (1)

மின்னல் – 7

           துவாரகா கழுத்தின் மீது ரத்தினசாமி கை வைக்க சரியாய் தனக்கு பின்னே இழுத்து கொண்டான் அதிரூபன்.

அந்த ஷணம் ரத்தினசாமிக்கு தான் இங்கே எதற்கு வந்திருக்கிறோம்? யார் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கவிருக்கிறது என்று எதுவும் நினைவிலில்லை.

அவர் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் துவாரகா தன் குடும்பத்தின் மத்தியில் தனக்கு முன் தன் மகனுக்கு நெருக்கமாய் நின்றுகொண்டிருந்தது தான்.

அதிலும் மணமகள் கோலத்தில் அவளுடன் அதிரூபன் சேர்ந்து வாங்கிய ஆசிர்வாதம் அவருக்கு நொடியில் அனைத்தையும் விளக்கி அவரை மதம் பிடித்த யானையாக மாற்றியது.

அனைத்தையும் மறந்தார். துவாரகாவை இங்கேயே கொன்றுபோடும் அளவிற்கு ஆத்திரம் பொங்கியது.

“விட்டுவச்சது தப்பால போச்சு…” என்று தன் கையை முறுக்கியவர் மகனை பார்த்து,

“அதிபா, என்ன காரியம் பண்ணிட்டிருக்க?…” மகன் மீதான பாசத்தை துவாரகா மீதான ஆவேசம் அங்கே வென்றுகொண்டிருந்தது.

“பார்த்ததும் நீங்களே கணிச்சிருப்பீங்க இல்லையாப்பா?…” அவன் திருப்பி கேட்க இத்தனை பேர் மத்தியில் பதில் சொல்லாமல் கேள்வியாய் கேட்க வெகுண்டு நின்றார்.

“நீ நகர்ந்து நில்லு அதிபா. இவ இங்க இருக்கிறது சரியில்லை. நீ எடுத்திருக்கிற முடிவும் சரியில்லை. இதுக்கு நான் ஒருக்காலும் ஒத்துக்க முடியாது…”

“இதுதான் என் விருப்பம் ப்பா. என்னால துவாரகாவை விடமுடியாது…”

“இத்தனை பேர் கூடியிருக்கிற சபையில என்னை அவமானப்படுத்தனும்னு முடிவு பண்ணியிருக்கியா? இன்னும் கொஞ்சநேரத்துல சி.எம் வரப்போறாரு. இப்படி என் மானத்தை வாங்கனும்னா காத்துக்கிட்டு இருந்த?…”

கோபம் கரையுடைத்தாலும் குரலை அடக்கியே உறுமினார். வெளியில் கேட்டுவிடாதபடிக்கு ஓரளவு தன்னை கட்டுக்குள் வைத்தே பேசினார்.

“ஒருவேளை இவங்களுக்கு ஆதரவு குடுக்கனும்னு நினைச்சு பரிதாபப்பட்டு வாழ்க்கை குடுக்கனும்னு முடிவு பண்ணுனியாப்பா?…”

அவர் கேட்டதும் ஒருநொடி ஆச்சரியப்பட்டவன் பின் கடகடவென சிரிக்க ஆரம்பித்தான்.

“வாட்? குட் ஜோக் ப்பா. இதிலிருந்தே உங்களோட அறியாமையை என்னால புரிஞ்சுக்க முடியுது…” என்று சொல்லி அடக்கமாட்டாமல் சிரித்தான்.

“அதிபா, என்ன கிண்டலா?…” அரசியலில் பழம்தின்று கொட்டை போட்டவர் என்று பெயர்பெற்ற ரத்தினசாமியால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

‘எனக்கா அறியாமை?’ என்று அவரின் மனம் வெதும்பியது.

“பின்ன என்னப்பா? நீங்க என்ன பேசறீங்கன்னு உங்களுக்கு புரியுதா?…” இன்னமும் நக்கலாகவே பேசியவனை கண்டு கடுப்பானவர்,

“எல்லாம் புரிந்துதான் சொல்றேன். நீ செய்யும் காரியத்திற்கு வேற என்ன அர்த்தம் இருக்க முடியும்?…” என்றவரை இப்பொழுது முழு தீவிரத்தோடு பார்த்தவன்,

“ஒரே அர்த்தம் தான். லவ்…”

“இதை என்னை நம்ப சொல்றியா?…”

“அது உங்க விருப்பம்…” விட்டேற்றியாக பேசியவனை இயலாமையோடு பார்த்தவர்,

“நீ நினைக்கிறது நிச்சயம் சரியா வராது அதிபா. ஒரு அப்பாவா நான் சொல்றதை கேளு…” கிட்டத்தட்ட கெஞ்சவே செய்தார்.

“என்னை பற்றி தெரிந்திருந்தும் நீங்க இப்படி பேசறது தான் ஆச்சரியமா இருக்கு. நான் எடுத்த முடிவை இதுவரை யாருக்காகவும் மாத்தினதில்லை. என்னைக்கும்  மாத்திக்கவும் மாட்டேன்…”

ஸ்திரமாய் சொல்லிவிட்டு பிடிவாதமாய் நின்ற மகனை கவலையோடு பார்த்தார் ரத்தினசாமி.

தன் பின்னால் ஒட்டிக்கொண்டு நின்றிருந்த துவாரகாவை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்தவன்,

“இவளுக்கு பரிதாபப்பட்டு வாழ்க்கை குடுக்கற அளவுக்கு என்ன குறை இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?. நீங்க கோடி கோடியா கொட்டிகுடுத்தாலும் இப்படி ஒருத்தி உங்களுக்கு மருமகளா கிடைக்கமாட்டா. அதுக்குன்னு கொட்டி குடுக்க சொல்லலை. எதுவும் தேவை இல்லை…” என்றவன்,

“துவாரகாவை நான் விரும்பறேன். அவளை தவிர வேற யாரையும் என்னால என் வாழ்க்கைக்குள்ள வரதை அனுமதிக்க முடியாது. உங்க கௌரவத்துக்காக என் வாழ்க்கையை நான் இழக்க முடியாது…” வீம்பாய் சொல்லி நிற்க,

“இதை நீ முதல்லையே சொல்லியிருக்கலாமே அதி. இப்ப அஷ்மிக்கும், அவர் அப்பாவுக்கும் என்ன பதில் சொல்ல? இப்படி கடைசி நேரத்துல பொண்ணு மாறினா பார்க்கிறவங்க, நம்ம சொந்த பந்தம் எல்லாம் என்ன பேசுவாங்க?…”

பத்மினி பதறிக்கொண்டு கேட்க அவரையே கண்ணீருடன் துவாரகா பார்த்திருந்தாள். அன்னபூரணி அருகில் கூட வரவில்லை.

அவர் ஒருபுறம் குனிந்த தலை நிமிராமல் நின்றிருக்க ஸ்வேதாவின் புண்ணியத்தில் விஷால், சந்தோஷ், அர்னவ் என மொத்த குடும்பமும் ஒன்றாக நின்றனர்.

விஷாலை பார்த்ததும் உடல் நடுங்க அதிரூபனை விட்டு விலக முயன்றாள் துவாரகா.

அவளின் கணநேரத்தில் ஒதுக்கத்தை உணர்த்தவன் விடாமல் இறுக்கிப்பிடித்து அவளின் பார்வை சென்ற திக்கில் பார்க்க அங்கே விஷால் நின்றிருந்தான்.

அதுவரை அதிரூபனிடம் இருந்த நிதானம் எங்கோ பறக்க விஷாலை பார்த்த பார்வையில் அவன் எரிந்து சாம்பலாகாதது ஒன்று தான் மிச்சம். அப்படி ஒரு ஜுவாலை.

“மாமா, பயமாயிருக்கு. நெஞ்செல்லாம் அடைக்குது…” என முணங்கியபடி அவனின் தோளில் முகம் புதைக்க அவளை தாயுமானவனாய் தாங்கிகொண்டவன் உச்சியில் உதடு பதித்து நிமிர்ந்தான்.

‘இவளை எப்படி இந்த குடும்பத்தில் இவர்கள் மத்தியில் சந்தோஷமாய் வாழவைக்கபோகிறேனோ?’ என்ற சஞ்சலம் வெகுவாய் ஆட்டிப்படைத்தது.

“ஒண்ணுமில்லடா. நான் தான் பக்கத்திலையே இருக்கேன்ல…” அவளின் முதுகில் தட்டிகொடுத்தவன் மொத்த கவலையையும் ஒதுக்கி வைத்துவிட்டு நிமிர,

“இப்ப இந்த மேடையில எங்க கல்யாணம் நடக்கனும். நடந்தே ஆகனும்…” பிடிவாதமாய் கூற,

“என் ரத்தம் உனக்கே இவ்வளவு தைரியம்னா உன்னை பெத்த எனக்கு எவ்வளவு இருக்கும். அதிபா. இவ இருக்கறதால தான பித்துபிடிச்சு பேசற. இவளே இந்த உலகத்துல இல்லாம பண்ணிட்டா…” என்று வெறிகொண்டு கத்தியவர் விஷால் அர்னவ் புறம் திரும்பி,

“விஷால். கூப்பிடுடா நம்ம பசங்களை. இந்த நாயை இழுத்துட்டு போய் காத்தோட காத்தா கரைச்சுவிட்டுருங்கடா…” என்று சொல்ல விஷாலை மிக தீர்க்கமாய் பார்த்தான் அதிரூபன்.

அவனின் பார்வையின் வேகத்தில் அவர்களை நெருங்கும் துணிச்சல் கொஞ்சமும் வரவில்லை விஷாலிற்கு.

அவனுக்கு தெரிந்துபோனது துவாரகாவை தாங்கள் கடத்தியது அதிரூபனுக்கு தெரிந்துவிட்டது என.

அதிலும் அதிரூபனின் அணைப்பில் இருந்த துவாரகாவின் பயப்பார்வையும் அதைக்கொண்டு அதிரூபன் தன்னை பார்த்த பார்வையும் விஷாலை கொல்லாமல் கொன்றது.

உண்மையில் துவாரகா அன்று பயந்து கெஞ்சியதில் கிடைத்த ஒருவித போதை, இன்று அதே பயந்த பார்வை அமிலத்தில் மூழ்கிய உணர்வை கொடுக்க  செத்துதான் போனான்.

சந்தோஷ் சொல்லும்பொழுதெல்லாம் பெரியப்பாவிற்காக எதுவும் செய்வேன் என மார்தட்டியவன் இப்போது தன் அண்ணனின் முன் விரலையும் அசைக்கமுடியாமல் நின்றுகொண்டிருந்தான்.

“அண்ணே பொறுமையா இருங்க. முதல்ல தம்பிக்கிட்ட சமாதானமா பேசி அஷ்மி கழுத்துல தாலி கட்ட வைப்போம். அதுக்கப்பறம் இந்த பொண்ணை என்ன செய்யலாம்னு யோசிப்போம். இது பிடிவாதம் பிடிக்கிற நேரமில்லைண்ணே…”

சங்கரன் தன்மையாக அவரிடம் எடுத்துக்கூறினாலும் அவருக்கும் துவாரகாவை கண்டு வெறுப்புதான்.

விஷாலிடம் சொன்னதை தானே செய்துவிடுவார் தான். ஆனாலும் அதற்கு இது நேரமல்ல என கணக்கு போட்டார்.

இவர்கள் அனைவரும் பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்த துவாரகாவிற்கு அதிரூபன் ஒருவனே தனக்கு காவல் என்னும் எண்ணம் இன்னும் அதிகமாய் வலுப்பெற்றது.

error: Content is protected !!