“இருந்தாலும் இது ரிஸ்க் இல்லையா? அதுக்கு தான் தேங்க்ஸ். உங்களுக்கான பேமெண்ட் அக்கவுண்ட்ல சேர்த்தாச்சு. நீங்க உடனே கிளம்ப முடியாது. ஏன் எதுக்குன்னு கேள்வி வரும். எனக்கு வேண்டப்பட்டவங்கன்னு சொல்லிருங்க யார் கேட்டாலும்…” அஷ்மிதா அவரிடம் சொல்லியே அனுப்பி வைத்தாள்.
அவர் சென்றதும் உள்ளே வந்து தண்ணீரை எடுத்து மடக்மடக்கென குடித்தவள் அதிரூபனுக்கும் கொடுக்க அவனோ அங்கே கண்ணாடி முன்பு அமர்ந்திருந்த துவாரகாவையே பார்த்து நின்றான்.
அவனின் பார்வையில் கடுப்பான அஷ்மிதா அதிரூபனின் கையில் வலிக்க கிள்ளி வைத்து,
“இந்த ரணகளத்துளையும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதோ? கொன்னுடுவேன் மவனே. நீ ஊத்துற ஜொள்ளுல பேசவேண்டிய டயலாக்ஸ் எல்லாம் மூச்சுக்கு திணறிட்டு இருக்குதுடா. அடங்கு…”
அவனை பிடிபிடியென பிடிக்க அவள் கிள்ளிய கையை நன்றாய் தேய்த்தவன் மீண்டும் துவாரகாவை பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்தாள்.
“இங்க வா…” அவனின் அழைப்பிற்கு மாட்டேன் என தலையை மட்டும் அசைத்தவள் சுவற்றின் ஓரத்தில் சென்று பல்லி போல ஒட்டி நிற்க,
“சுத்தம். இவளை நின்ன இடத்துல இருந்து நகர்த்த முடியலை. இதுல எங்க மணவறை வரைக்கும் கூட்டிட்டு போய் நீ தாலிகட்ட?…” அஷ்மிதா கிண்டலாய் சொல்ல,
“அவளை பத்தி தெரியாதா அஷ்மி?…” வக்காலத்தாய் இவன் பேச,
“தெரிஞ்ச வரைக்கும் போதும்டா சாமி. இதுக்கு மேல நீ தெரிஞ்சுக்க. எனக்கு வேண்டாம்…” என சொல்லி அங்கிருந்த கட்டிலில் சென்று அமர்ந்தவள்,
“போ, போய் பாடம் நடத்து. எனக்கு பொறுமையே இல்லை. அந்த மயில்சாமி வந்து தோகை விரிச்சு ஆடப்போறார். நீ எப்படி சமாளிக்க போறன்னு இங்க நான் டென்ஷன்ல இருக்கேன். உனக்கு ரசனை கேட்குது ரசனை…”
“ஹல்லோ அவர் மயில்சாமி இல்லை. ரத்தினசாமி…” அவளிடம் வாதாடிக்கொண்டே துவாரகாவின் கை பிடித்து அஷ்மிதாவின் அருகில் வந்து நிறுத்தினான்.
“உங்கப்பா என்ன சாமியா இருந்தா எனக்கென்ன? அது உன் பாடு. இப்ப இந்த மேடத்துக்கு சொல்லி வை. மயங்கி விழுந்து உங்க ஆட்டத்துல பிச்சு பிடுங்கி ஓடாம இருந்தா சரி…” நக்கலாய் சொன்னாலும் வேண்டுமென்றே தான் சொல்லி வைத்தாள் அஷ்மிதா.
துவாரகாவின் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்னும் எண்ணத்தை படித்தவளாகிற்றே.
இத்தனை பாடுபட்டு கடைசியில் ரத்தினசாமி மிரட்டி இவளை அனுப்பிவிட்டால் அவள் மீது காதலென கசிந்துருகி நிற்கும் அதிரூபனின் நிலை சொல்வதற்கும் இல்லை.
இப்பொழுது பதமாய் சொல்வதை விட பற்றிக்கொள்ளும் விதமாய் சொல்வதே துவாரகாவை உசுப்பேற்றும் என நினைத்துதான் அப்படி பேசினாள்.
அவள் நினைத்ததை போல அதிரூபனின் கையை தானே சென்று கோர்த்துக்கொண்டவள்,
“டாக்டர், எனக்கு பயம் தான் இவங்க வீட்டில இருக்கிறவங்களை பார்த்து. ஆனா கல்யாணம்னு முடிவு பண்ணின பின்னால இவங்க என் மேல எத்தனை பிரியம் வச்சிருக்காங்கன்னு தெரிஞ்ச பின்னால நான் போகமாட்டேன் டாக்டர். கண்டிப்பா போகமாட்டேன். இவங்க பார்த்துப்பாங்க…”
அவள் பேச பேச அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தவன் தன்னோடு சேர்த்தணைக்க அவனின் தோள் சாய்ந்துகொண்டு அஷ்மிதாவை பார்த்து புன்னகைத்தாள்.
அஷ்மிதாவிற்கும் இதில் சந்தோஷமே. ஆனாலும் துவாரகாவை சீண்டும் ஆவல் தோன்ற,
“எதாச்சும் பேசினியா துவா? காதுல விழவே இல்லையே…” என்று வம்பு செய்ய பாவமாய் பார்த்தவள்,
“உங்களுக்கு கேட்டுச்சு தானே? சத்தமா தான சொன்னேன்?…” அவனின் கை வளைவில் இருந்துகொண்டே முகம் நிமிர்த்தி அவனிடம் கேட்க ஒரு நிமிடம் தடுமாறிதான் போனான் அதிரூபன்.
நேற்று வரை அவளிடம் அவனின் பார்வைகள் மிக நேர்மையாகத்தான் இருந்தது. ஆனால் இந்த நொடி ஏனோ அப்படி பார்க்கமுடியவில்லை.
மையிட்ட விழிகள், மணக்கோலம், அவளின் நெருக்கம் என அத்தனையும் பித்தம்கொள்ள செய்ய கிறங்கிப்போனான்.
புதிதாய் ஒரு பரிபாஷையை அவளுக்கு கற்றுகொடுக்கும் எண்ணம் பிறப்பெடுக்க அவனின் அணைப்பை வலிமையாக்க முயன்றான்.
அவனின் விழிகள் எதுவோ சொல்ல விழைவதை கண்டுகொண்டவள் புருவம் சுருக்கி பார்க்க அதில் மொத்தமாய் மூழ்கவிருந்த நேரம் கதவு தட்டும் ஓசை கேட்க அவனின் உணர்வலைகள் மொத்தமும் அறுந்து விழுந்தன.
அதுவரை அவனின் பார்வை வட்டத்திற்குள் அவளன்றி வேறேதும் இல்லாதிருக்க இப்பொழுது சூழ்நிலை புரிய தன்னைப்போல் இறுக்கம் கொண்டான்.
பார்வையிலும் உடல்மொழியில் எச்சரிக்கை உணர்வு பரவ எதற்கும் தயாரானவன் கைகள் துவாரகாவை அழுத்தமாய் பற்றியது.
“அஷ்மி கதவை திற…” என அவளை அனுப்ப,
“துவா உன்னோட கான்பிட்டேன்ட்ல தான் அதியோட லைஃபே இருக்குடா. சொதப்பிடாத. அதியோட கையை விட்டுடுக்கூடாது. குட் கேர்ள் தான…” என சொல்லி அவளை அணைத்து விடுத்தவள் அதிரூபனின் தோளை தட்டிவிட்டு சென்றாள்.
அவள் கதவின் தாழை விடுவிக்க அதிரூபனின் முதுகின் பின் தன்னை மறைத்துக்கொண்டாள் துவாரகா.
அஷ்மிதாவிற்கு கதவை திறக்கும் அவகாசம் கொடுக்காமல் தாழ் நீங்கியதும் கதவை திறந்துகொண்டு அனைவரும் உள்ளே வந்தனர். கதவின் பின்னே அஷ்மிதா நின்றுகொள்ள ராஜாங்கமும் உள்ளே வந்தார்.
“அதிபா அப்பாவை வர சொன்னியாப்பா? கல்யாணம் முடிஞ்சதும் ஆசிர்வாதம் வாங்கிக்கலாமே?…” என கேட்டுக்கொண்டே ரத்தினசாமி வர உடன் பத்மினி, சங்கரன், அன்னபூரணி, ஸ்வேதா என குடும்பத்தில் பாதி வந்துவிட்டனர்.
பத்மினியுடன் ரத்தினசாமி இணைந்து நிற்க அவர்கள் மேலும் பேச நேரம் கொடுக்காமல் துவாரகாவை இழுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களின் காலின் விழுந்து எழுந்தான்.
“நூறு வருஷம் ரெண்டுபேரும் பேரோட புகழோட எல்லா செல்வங்களும் பெற்று நல்லா இருக்கனும்…” என மனமார வாழ்த்தியவர் அப்பொழுது தான் துவாரகாவையே பார்த்தார்.
மழையில் நனைந்த கோழி குஞ்சென வியர்வை மழையில் வெடவெடத்தபடி பயத்தில் அதிரூபனை ஒட்டிக்கொண்டு குனிந்த தலை நிமிராமல் மனதிற்குள் கடவுள் நாமத்தை சொல்லிக்கொண்டு நின்றவளின் தோற்றம் ரத்தினசாமிக்கு அனைத்தையும் விளங்கவைத்தது.
மற்றவர்களுக்கோ இது பேரதிர்ச்சி. இப்படி ஒரு முடிவுக்கு அதிபன் வருவான் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
அதையும் மீறி துவாரகா குடும்பத்தினரை பற்றிய பேச்சை எடுத்தாலே கொலைவெறியில் துள்ளும் ரத்தினசாமி இப்பொழுது என்ன செய்வார் என்று பயந்தனர்.
“அதிபா…” என சத்தமிட்டவர் துவாரகாவின் கழுத்தில் கை வைக்க போனார். அப்படி ஒரு அரக்கத்தனம் கொட்டிக்கிடந்தது அவரின் முகத்தில். இதுவரை பார்த்திராத வெறித்தனம் கண்களில் ஒளிர்ந்தது.
அதிபனே மிரண்டுபோகும் அளவிற்கு இருந்தது ரத்தினசாமியின் தோரணை.