அஷ்மிதாவிற்கு குதூகலமாய் போனது துவாரகாவின் பேச்சும் செயலும். கொஞ்சம் குறும்பு தலைதூக்க,
“இன்னைக்கு என்னை தள்ளி படுக்க சொல்ற, நாளைக்கு என்ன பண்ணுவியாம்? நானும் பார்க்கத்தான போறேன்…” நமுட்டு சிரிப்புடன் சொல்ல புரியாமல் பார்த்த துவாரகா,
“என்ன சொல்றீங்க…” என கேட்டுக்கொண்டே சுவற்றை ஒட்டி படுத்துக்கொள்ள,
“இன்னைக்கு இது போதும். மிச்சத்தை மிச்சமில்லாம நாளைக்கு அவன் சொல்லுவான்…” என கண்ணடித்து சொல்லிய விதமே துவாரகாவிற்கு ஏடாகூடமாய் இருக்க அதற்குமேல் வாயை திறக்காமல் உறங்க முற்பட்டாள்.
அதிரூபனும், துவாரகாவும் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருக்க அஷ்மிதாவோ நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டிருந்தாள்.
துவாரகாவின் அம்மாவின் தேடல் அதிரூபனுக்கு உண்மையில் கலக்கத்தை கொடுத்தது.
நாளை அவர் வந்து அழைத்தால் இவள் சென்றுவிடுவாளா? என்ற எண்ணமும் தோன்றாமலில்லை.
செல்லத்தான் விட்டுவிடுவாயா? என துவாரகாவே கேட்பது போன்ற பிரம்மை தோன்ற, ‘இல்லை இல்லை தன்னால் அது இயலாது’ என ஸ்திரமான எண்ணம் வலுக்க அதற்குமேலும் விழித்திருக்க முடியாமல் தூக்கத்தை விடாமல் துரத்தி பிடித்து இழுத்து வந்து உறங்கினான்.
காலை பரபரப்பாய் விடிய அஷ்மிதாவின் அறை வேகமாய் தட்டப்பட சோம்பலாய் கண் திறந்தவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.
நேற்றுவரை யாரும் இங்கு வராமல் சமாளித்தாகிற்று. இப்பொழுது அலங்காரம் செய்ய, சொந்தபந்தங்கள் பெண்ணை பார்க்க என மாறி மாறி யாராவது வந்துகொண்டே இருப்பார்களே?
வேகமாய் அருகில் திரும்பி பார்க்க அங்கே துவாரகா இல்லை. அதிர்ந்தேபோனாள்.
“பயந்தாங்கொள்ளி உலகமெல்லாம் பயம்னு சொல்லி பெட்டிபடுக்கையை கட்டிட்டாளோ? இப்படி மாட்டிவிட்டுட்டு போய்ட்டாளே?…” என வாய்விட்டு புலம்ப அவளுக்கு பின்னால் இருக்கும் உள் அறையிலிருந்து,
“டாக்டர், நான் இங்க இருக்கேன்…” மிக மெல்லியதாய் அவளின் குரல்.
“ஹப்பாடா தப்பிச்சேன்…” என நெஞ்சில் கை வைத்துக்கொண்டவள் அவளை கதவை பூட்டிக்கொள்ளுமாறு சொல்லி தன் கதவை திறக்க சென்றவள் துவாரகாவின் கதவு பூட்டப்படும் சத்தம் கேட்டபின் தான் கதவையே திறந்தாள்.
அங்கே சந்தியா, அன்னபூரணி, ஸ்வேதா மேலும் இரண்டுபெண்கள் நிற்க அவர்களை உள்ளே அழைக்கலாமா வேண்டாமா என யோசிக்க,
“இப்பதான் எழுந்தியாமா?…” என கேட்டுக்கொண்டே அன்னபூரணி உள்ளே வர அஷ்மிதா தான் பின்னே செல்லவேண்டியதானது.
“சரி, நீ குளிச்சுட்டு புடவை கட்டிட்டு வா. ப்யூட்டீஷியன்ஸ் வந்தாச்சு. உன்னை ரெடி பண்ணனுமே. நாங்க வெய்ட் பன்றோம்…” என்றதும் திருதிருத்தவள்,
“ஆன்ட்டி நான் குளிச்சுட்டு வந்ததும் கூப்பிடட்டுமா? எனக்கு கூச்சமா இருக்கும்…” என சொல்ல அதற்கு சந்தியா,
“அண்ணி…” என எதுவோ கிண்டலாய் சொல்லவர அவளின் வாயை பொத்தியவள்,
“தயவுபண்ணி வாயை திறக்காம கிண்டல் பேசாம இருங்க. கல்யாணம் முடியவும் எல்லா கிண்டல் பேச்சையும் வச்சுக்கலாம்…”
முன்னெச்சரிக்கையாய் சொல்ல அதை கண்டு சிரித்த அன்னபூரணி பியூட்டீஷியன் பெண்களை வெளியே அனுப்பிவிட்டு,
“நீ குளிச்சுட்டு புடவை கட்டிட்டு சொல்லு. ஆமா உன்னுடைய ட்ரெஸ் எல்லாம் வந்திருச்சா?…”
“ஓ, அதை நேத்து அதி குடுத்திட்டான் ஆன்ட்டி…” என்றது ஸ்வேதாவிற்கு கோபம் வந்துவிட்டது.
“இன்னும் அண்ணாவுக்கு ரெஸ்பெக்ட் குடுக்காம பேசிட்டு இருக்கீங்க?…” என்று படபடக்க உண்மையில் எரிச்சலான அஷ்மிதா,
“இன்னைக்கு நேத்து புதுசா கூப்பிடலையே. திடீர்ன்னு மாறிடுமா? அவனுக்கு எப்ப ரெஸ்பெக்ட் குடுக்கனும்னு எனக்கு தெரியும் குட்டிப்பொண்ணே. போய் வந்தவங்களை கவனிங்க…”
கத்தரித்ததை போல பேச சந்தியாவிற்கும் அன்னபூரணிக்கும் முகமே வாடிவிட்டது. அஷ்மிதாவிற்கு தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல்,
“ஓகே ஆன்ட்டி. நான் குளிக்கனும். சேரி கட்டிட்டு வந்து கூப்பிடறேன் உங்களை…”
நீங்கள் கிளம்புங்கள் என சொல்லாமல் சொல்ல இவர்கள் கிளம்பும் நேரம் பத்மினி நகைபெட்டியுடன் உள்ளே வந்தார்.
“என்ன இன்னும் பேசிட்டே இருக்கீங்க?…” என கேட்டதும் ஸ்வேதா நடந்ததை சொல்ல அவள் தலையில் செல்லமாய் கொட்டியவர்,
“அஷ்மி இப்படி பேசறது உன் அண்ணனுக்கு பிடிக்கலைனா அவன் சொல்லபோறான். பிடிச்சா அப்படியே கூப்பிட்டுட்டு போகட்டும். இதெல்லாம் ஒரு விஷயமா?…” என சிரித்தவர்,
“அஷ்மி, உன் ஜ்வெல்ஸ் செட்ஸ் கூட இதையும் போட்டுக்க. மறந்திடாம…” என்று சொல்லி அவள் கையில் கொடுத்தவர் துவாரகா இருந்த அறையை கண்டுவிட்டு,
“உனக்கு வேண்டிய பொண்ணு வரதா சொன்னியே. வந்தாச்சா?…” என்று கேட்டதும் ஆமாமென தலையை ஆட்டியவள்,
“எர்லி மார்னிங் தான் வந்தா ஆன்ட்டி. தூங்கறா. டிஸ்டர்ப் செய்யவேண்டாம். நான் ரெடியாகிட்டு அவளை கூப்பிட்டுக்கறேன்…”
“ஓகேமா…” என்றவர் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேற வேகமாய் கதவை தாழிட்டவள் அதிரூபனுக்கு அழைத்தாள்.
“ராஸ்கல், இன்னும் தூங்கிட்டா இருக்க? இங்க நான் டென்ஷன்ல இருக்கேன். உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நேத்து கூட இவ்வளவு டென்ஷன் இல்லை. இப்ப மாத்தி மாத்தி எல்லாரும் வராங்க…” என கத்த,
“ஹேய்ய்ய் கூல், கூல் அஷ்மி. நீ குளிச்சாச்சா? துவா எழுந்தாச்சா?…”
“அவ எழுந்துட்டா…” என நடந்ததை சொல்ல,
“ஓகே நான் அந்த லேடியை அனுப்பி வைக்கிறேன். துவாவை ரெடிபண்ண. நீயும் ரெடி ஆகிட்டு எனக்கு கால் பண்ணு. வெய்ட் பன்றேன்…” என்று சொல்லி வைத்துவிட இன்னும் படபடப்பு குறையவேயில்லை அஷ்மிதாவிற்கு.
அடுத்த ஐந்துநிமிடங்களில் அதிரூபன் அனுப்பிய பெண்மணி வந்து சேர அஷ்மிதாவிற்கும் அவரை நன்றாக தெரியுமென்பதால் கேள்வியின்றி உள்ளே விட்டவள் மீண்டும் கதவை சாற்றிகொண்டாள்.
சிறிதுநேரத்தில் தானும் குளித்து புடவை கட்டிய பின்பே அன்னபூரணிக்கு அழைத்தவள் தன்னை அலங்கரிக்கும் பெண்களை அனுப்பிவைக்க கேட்க அவரும் சந்தியாவுடன் அவர்களை அனுப்பிவைத்தார்.
அதன்பின்னான நேரங்கள் மணப்பெண் அஷ்மிதா தான் என நினைத்து நெருங்கிய சொந்தங்களில் சிலர் வந்து, வந்து பார்த்து சென்றனர்.
துவாரகாவை அலங்கரிக்க வந்த பெண் தன் வேலை முடிந்தது என அஷ்மிதாவிற்கு மெசேஜ் ஒன்றை உள்ளிருந்தே அனுப்ப அதிரூபனுக்கு அதை பார்வேர்ட் செய்துவிட்டு அவனுக்காய் காத்திருந்தாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அவள் அறைக்குள் நுழைந்தவன் மற்றவர்களை வெளியே அனுப்ப,
“என்னடா இது மணமேடைக்கு போகாம இங்க வந்துட்ட?…” பத்மினி அவனின் பின்னாலே வந்து கேட்க,
“ம்மா, அப்பாவை வர சொல்லுங்க…” என்றதும் புரியாமல் பார்த்தவர்,
“இப்ப எதுக்குப்பா?…” என கேட்க அன்னபூரணி,
“அண்ணி அவங்க ரெண்டுபேரும் மேடைக்கு போறதுக்கு முன்னால அண்ணன்ட்ட, உங்கட்ட ஆசிர்வாதம் வாங்கறதுக்கா இருக்கும். இருங்க நான் போய் அனுப்பி வைக்கிறேன்…”
அவர் சொல்லி கிளம்ப அதற்குள் ஸ்வேதா வந்து சந்தியாவின் கணவன் வந்துவிட்டதாய் சொல்ல,
“இருப்பா உங்கப்பா வரதுக்குள்ள வந்திடறேன். மாப்பிள்ளையை வரவேற்கனும். வா சந்தியா…”
அவனிடம் சொல்லிவிட்டு சந்தியாவை அழைத்துக்கொண்டு பத்மினி செல்ல அங்கிருந்த சிலரையும் அஷ்மிதாவிடம் பேசவேண்டும் என சொல்லி வெளியே அனுப்ப அவர்களும் கிண்டலாய் சிரித்துக்கொண்டே கிளம்பினர்.
கதவை அடைத்துவிட்டு துவாரகா இருந்த அறைக்கதவை தட்ட யார் என கேட்ட பின் தான் கதவை திறந்தார் அந்த பெண்மணி.
“தேங்க் யு சோ மச் மேடம்…” அஷ்மிதா நன்றியாய் அவரிடம் கூற அதை ஆமோதிப்பதை போல அதிரூபனும் புன்னகைத்தான்.
“இது எனக்கு பெரிய ஆஃபர். நான் தான் தேங்க்ஸ் சொல்லனும்…”