மின்னல் – 6
வந்ததிலிருந்து போகிறேன் போகிறேன் என்றே சொல்பவள் மீது கோபம் வந்தாலும் அதை காட்டிக்கொள்ள மனம் வரவில்லை.
அவளை இந்த பத்துநாட்களும் பாதுகாத்து சென்னை அழைத்துவந்து பின் இந்த மண்டபத்திற்கு யார் கண்ணிலும் படாமல் அழைத்துவந்து பாதுகாப்பாய் இருக்க வைப்பதற்குள் எத்தனை சிரமம் கொண்டான் என்பது அவனுக்கும், அஷ்மிதாவின் தந்தை ராஜாங்கத்திற்கும் மட்டுமே தெரியும்.
அஷ்மிதா அதற்கு உதவினதோடு மட்டுமல்லாது தன் நெருங்கிய தோழிகளுக்கும் தெரியாமல் தனது பாதுகாப்பு வட்டத்திற்குள் மிக கவனமாக வைத்துக்கொண்டாள்.
இத்தனை சிரமம் மேற்கொண்டு அவளுக்காக பாடுபடுகிறோம், இவள் என்னவென்றால் கிளம்புகிறேன் என சொல்கிறாளே என கவலையோடு அவளை பார்த்தான்.
அவனின் மௌனம் அவளை கொஞ்சம் கலங்கத்தான் செய்தது. எங்கே சரி என்று சொல்லிவிடுவானோ என்ற தவிப்போடு பார்க்க அவள் நிலை புரிந்தும் வாய்திறக்காமல் கல்லென நின்றான்.
“நான் போய்டட்டுமா மாமா?…” வார்த்தை கூட அத்தனை வேகமாக வரவில்லை.
“நான் சரின்னு சொன்னா போய்டுவியா துவா?…” அழுத்தமான குரலில் கேட்க முகம் திருப்பிக்கொண்டவள் வாயே திறக்கவில்லை.
அவனின் கேள்வி தன் காதுகளை எட்டிவிடாதவாறு மனதை திசைதிருப்பியவள் அவனை விட அழுத்தமாய் தன் இதழ்களை பூட்டிக்கொண்டாள்.
மீண்டும் இதை கேட்டால் என்ன செய்வது என யோசித்தவள் சடுதியில் படுக்கையில் சென்று படுத்து பெட்ஷீட்டை இழுத்து போர்த்திக்கொள்ள அதிரூபன் அஷ்மிதா இருவரின் இதழ்களிலும் மெல்லிய புன்னகை அரும்பியது.
துவாரகாவின் அருகே அமர்ந்தவன் அவளின் தலையை மென்மையாய் கோதியவாறு,
“காலைல வரும்போது தயாரா இருக்கனும். முக்கியமா தைரியமா இருக்கனும். உனக்கு நான் எப்பவும் இருப்பேன்னு நம்பனும். நாளைக்கு எது நடந்தாலும் என் கையை மட்டும் நீ விடாம பிடிச்சுக்கனும். அமைதியா இருக்கனும்…”
வரிசையாக சொல்லிக்கொண்டே வந்தவன் கடைசியாக சொன்ன அமைதியில் அவள் அவனை தலை திருப்பி பார்க்க அந்த பார்வையில்,
‘நான் என்றைக்கு உன் குடும்பத்தினரிடம் அமைதியாய் இல்லாது போயிருக்கிறேன்?’ என்ற கேள்வி தொக்கி நிற்க அதில் அவனின் புன்னகை மேலும் விரிந்தது. அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“நான் சொன்ன அமைதி வேற. யார் என்ன பேசினாலும் பயப்படாம உன்னை நீயே குழப்பிக்காம உன் மனசை அமைதியா வச்சுக்கனும்னு அர்த்தம். புரியுதா மிசஸ் அதிரூபன்?…” என குழந்தைக்கு விளக்குவது போல விளக்கி சொல்ல மீண்டும் முகத்தை மூடிகொண்டாள்.
“நான் கிளம்பனும் துவா. நேரமாச்சு. நாளைக்கு முகூர்த்த நேரத்துக்குள்ள எல்லாமே சரியா இருக்கனும். சரி பண்ணனும். அதுக்கு எனக்கு கொஞ்சமாச்சும் ரெஸ்ட் வேணும். பை…”
தன் நிலையை சொல்லி எழுந்துகொள்ள மீண்டும் பெட்ஷீட்டிலிருந்து வெளியே வந்து அவனின் கையை பிடித்துகொண்டவள்,
“ஒரு பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்…” என சொல்லி எழுந்து அமர அவளருகே மீண்டும் அமர்ந்தவன்,
“என்னடா. இன்னும் என்ன உனக்கு?…” வெகுநேரம் அஷ்மிதாவின் அறையில் இருப்பது சரியல்ல என எண்ணிக்கொண்டே கேட்க,
“அம்மா, அம்மாவ பார்க்கனும். கல்யாணம். இத, இத சொல்லனும். என்ன சொல்லுவாங்களோன்னு பயமா இருக்கு. அம்மாக்கு பிடிக்காது…”
இத்திருமணத்தில் விருப்பமும், பயமுமாய் இருமனதோடு போராடிக்கொண்டிருப்பவளை உணர்ந்துகொண்டான்.
கோர்வை இல்லாமல் மூடியிருந்த கதவை பார்த்துக்கொண்டே திணறி திணறி சொல்ல அவளின் கை மீது ஆறுதலாய் தன் கரத்தை வைத்தவன்,
“இனிமே நீ என் பொறுப்பு. உன்னை பார்த்துக்கறதும் பாதுகாக்கறதும் என்னோட கடமை. வெறும் கடமைன்னு மட்டும் இதை ஒதுக்கிட முடியாது துவா. விளக்கமா சொல்லி உனக்கு புரியவைக்க எனக்குதான் நேரமில்லை…” என்றவன்,
“உனக்கு என்னை புரியுதா? என்னை எப்படி சொல்லி புரிய வைக்க?…” என யோசித்தவன் அஷ்மிதாவை பார்த்ததும் அவளிடம் சென்றவன்,
“இவ என்னோட ப்ரெண்ட். எங்க வீட்ல இவள் தான் உனக்கு வரப்போற மனைவின்னு சொல்லி இவளை நிச்சயம் பண்ணிவச்சாங்க…”
“ஆனா எனக்கு அஷ்மிதாவை அந்த ஸ்தானத்துல பார்க்க முடியலை. அந்த நிமிஷம் எனக்கு நீ மட்டும் தான் என் மனைவியா வரனும்னு தோணுச்சு. உன்னை இங்க வச்ச பின்னால கற்பனைன்னு கூட உன்னை தவிர யாரையும் நினைக்க முடியலை. முடியவும் முடியாது…”
துவாரகாவின் கண்களை ஊடுருவியபடி தன் இதயத்தை காட்டி அவன் சொல்ல சொல்ல அதிரூபனின் சொற்கள் ஒவ்வொன்று கல்வெட்டுகளாய் பதிந்தது துவாரகாவினுள்.
புரிந்ததை போல லேசாய் தலையசைத்து இமை தாழ்த்தியவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன்,
“எதையும் நினைச்சு குழப்பிக்காம தூங்கு. நாளை நமக்கான நாள். என் வாழ்க்கைக்குள்ள நீ வரப்போற அந்த நிமிஷதுக்காக, என்னோட ஆயுசுக்கும் ஒன்றா பிணைந்து வாழப்போற போற உனக்காக நான் காத்துக்கிட்டே இருப்பேன். குட்நைட்…”
அவளிடம் சொல்லி எழுந்தவன் கதவருகே செல்ல அங்கே தலையை சாய்த்து பாதி உறக்கத்தில் இருந்தாள் அஷ்மிதா.
“போதும் போதும். ஓவரா பண்ணாம வழியை விடு…” அவளிடம் வம்பு செய்ய,
“ஏன்டா சொல்லமாட்ட? ஒரு பச்சை மண்ணு இருக்கேன்னு கூட பார்க்காம ரொமான்ஸ் பண்ணிட்டு இப்ப வந்து நான் ஓவரா பன்றேன்னு மனசாட்சியே இல்லாம சொல்ற பாரு. ராட்சஷன்…”
“உன்னை யார் பார்க்க சொன்னா?. போய் தூங்கு. காலையில ரெடியாகிட்டு எனக்கு கால் பண்ணு. நானும் போய் தூங்கனும்…” என கிளம்ப,
“அப்ப நாளைக்கு சிறப்பான தரமான சம்பவம் ஒன்னு இருக்கு. ஓகே லெட்ஸ் ஸீ…”
அவனிடம் கண்ணடித்து கிண்டலாய் பேச அவள் தலையில் நறுக்கென கொட்டியவன்,
“என் பொழப்பு உனக்கு சிரிப்பா போச்சு…” என சொல்லி கதவை திறந்துகொண்டு தன்னறைக்கு சென்றான்.
அவன் கிளம்பியதும் கதவை அடைத்துவிட்டு வந்த அஷ்மிதா துவாரகாவின் அருகே படுத்துக்கொண்டாள்.
அவளின் இலகுத்தன்மையை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த துவாரகாவிடம்,
“என்ன பொண்ணே? தூக்கம் வரலையா? நாளைக்கு ஏகப்பட்ட ஸீன் பார்க்கவேண்டி இருக்கு. இப்ப முழிச்சிருந்து அந்நேரம் தூங்கிடாத. இதுதான் சாக்குன்னு என் கழுத்துல தாலி கட்ட வச்சிடாம. தூங்கு…”
அப்போதும் படுக்காமல் அவளை பார்த்தபடி துவாரமா அமர்ந்திருக்கவே சலிப்பாய்,
“தூங்கலையா?…” என கேட்க,
“தூக்கம் வரலை. பய…” என்ற வார்த்தைகளை முடிக்கவிடாமல்,
“பயமா இருக்குன்னு மட்டும் சொல்லிடாத. இந்த பத்துநாள்ல அந்த வார்த்தைகளை கேட்டு கேட்டு உன் பயத்துமேலையே எனக்கு பயம் வந்துட்டு. நான் செத்துட்டேன்…”
“நீங்க தான கேட்டீங்க…”
“தெரியாம கேட்டுட்டேன். பித்த உடம்புமா, தூக்கிப்போட்டுடும். வேணும்னா நாளைக்கு வருவான் உன் ஆளு. அவன்ட்ட அஞ்சுலட்சம் தடவை சொன்னாலும் சலிக்காம கேட்பான். நான் செட் ஆகமாட்டேன் தாயே…”
“அவங்க ரொம்ப நல்லவங்க. ஏன் திட்டிட்டே இருக்கீங்க?…” துவாரகாவும் கேட்க,
“ஆமாமா ரொம்ப நல்லவன் தான். உனக்கு பாடம் எடுக்க எனக்கு நேரமில்லை. எனக்கு தூக்கம் வருதுமா. தூங்கினா தான் நான் நாளைக்கு ப்ரெஷா இருக்க முடியும். ப்ரெஷா இருந்தா தான் உங்க அலப்பறைகளை சமாளிக்க முடியும்…”
பேசிக்கொண்டே துவாரகா அசந்த நேரம் அவளின் கையை பிடித்து இழுத்து படுக்க வைத்தவள் காலை போட்டு தன் கையை கொண்டு எழுந்துவிடாதவாறு வளைத்துக்கொள்ள,
“ஐயோ விடுங்க. நானே படுத்துக்கறேன். உங்க கையை கலை எடுங்க. எனக்கு தூக்கமே வராது…” கெஞ்சாத குறையாக கேட்க,
“ம்ஹூம் நீ சரிப்படமாட்ட. இப்பவே இவ்வளோ கேள்வி கேட்கற. என்னை தூங்கவும் விடமாட்ட…”
“நிஜமாவே சொல்றேன். கையை, காலை எடுங்க ப்ளீஸ். தள்ளி படுங்க…”