மின்னல் அதனின் மகனோ – 5 (2)

நக்கல் குரலில் மறைமுக மிரட்டலுடன் சொல்லியவர் வாட்ரோபை திறந்து அழகிய பட்டுப்புடவையை தேர்வு செய்தவர்,

“இன்னைக்கு இதை கட்டிட்டு வா பத்மி. நான் கிளம்பறேன். மண்டபத்துக்கு புறப்படும் போது வந்துடுவேன். சேர்ந்தே போகலாம்…” என சொல்லி கன்னம் தட்டியவர் கிளம்பி செல்ல ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தார் பத்மினி.

மனசாட்சியின்றி பேசியவரை ஒன்றும் கேட்கமுடியாமல் மௌனியாக இருந்தவர் ஒரு பெருமூச்சுடன் கிளம்ப ஆரம்பித்தார்.

‘நாய் வாலை நிமிர்த்த முடியாது’ அந்த நொடி அவரின் மனதிற்கு தோன்றியது இது மட்டும் தான்.

துவாரகாவிடம் சென்ற மனதை இழுத்துபிடித்து நிறுத்தியவர் ஆகவேண்டிய வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

மாடிக்கு சென்று அனைத்தும் ரெடியாகிவிட்டதா என பார்க்க போக அங்கே அஷ்மிதாவுடன் அனைவரும் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தனர்.

மொபைலில் வருங்கால மருமகளின் முகம் கண்டதும் மலர்ந்துதான் போனார் பத்மினி.

அவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு அனைத்தையும் எடுத்துவைத்துவிட்டு மண்டபத்திற்கு கிளம்ப கீழே வந்து அமர்ந்துகொண்டனர்.

அதற்குள் மிக நெருங்கிய உறவினர்களும் வீட்டிற்கே வந்துவிட அடுத்த ஒருமணிநேரம் அவர்களை கவனிக்கவென்றே சரியாக சென்றது.

சொன்னதுபோல் ரத்தினசாமி வந்துவிட சாமி கும்பிட்டு கிளம்பலாம் என்ற நேரத்தில் சரியாக அதிரூபனும் வந்துவிட்டான்.

அதிரூபன் நான்குநாட்கள் முன்பே சென்னை வந்துவிட்டானே தவிர வீட்டிற்கு வந்தவுடனே கிளம்பி கெஸ்ட்ஹவுஸ் சென்று தாங்கிக்கொண்டான்.

சம்பிரதாயம் அது இதுவென எந்த கட்டுக்குள்ளும் அவனை நிறுத்தி வைக்கமுடியவில்லை.

நடந்ததை எதையும் காட்டிக்கொள்ளாமல் இருக்க பெரும் சிரமப்படவேண்டியதாக இருக்குமே என்றுதான் இந்த முடிவு.

மொத்த குடும்பம் சொல்லியும் கேளாதவனை ரத்தினசாமியின் முன்பு நிறுத்த அவரோ வழக்கம் போல,

“அதிபா உன் விருப்பம்பா. தாராளமா அங்க தங்கிக்க. உனக்கு துணைக்கு சந்தோஷை அனுப்பி வைக்கிறேன். கல்யாண மாப்பிள்ளை. ஒத்தையா இருக்ககூடாது பாரு…” என மகனிடம் பாசம் வளர்த்தவர்,

“கொஞ்சமாவது எதாச்சும் இருக்கா உனக்கு. தோளுக்கு மீறி வளர்ந்த புள்ளைய சின்னபுள்ளை மாதிரியா நடத்தறது? ஆயிரம் சோலி கழுதை இருக்கும் ஆம்பளைக்கு. ஒன்னோண்ணுத்துக்கும் உங்களுக்கு விளக்கம் குடுத்திட்டிருப்பானா? போங்க போய் ஆகவேண்டியது பாருங்க…”

என்று பத்மினிக்கு அத்தனை வசவுபாடுகள் கிடைத்தது தான் மிச்சம். மகன் என்றால் அப்படி இறங்கி வருவார் ரத்தினசாமி.

அதிரூபனை கண்டதும் சூரியனை கண்ட தாமரையை போல ரத்தினசாமியின் முகம் மலர்ந்துவிட்டது. அவனை அணைத்து விடுத்தவர்,

“அதிபா போய் குளிச்சுட்டு புது துணி மாத்திட்டு வந்துருப்பா. சாமி கும்பிட்டுட்டு நல்லநேரத்துல கிளம்பனும்…” என சொல்லவும் அவரிடம் தலையசைத்துவிட்டு வந்திருக்கும் உறவினர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு மேலே சென்றான்.

சிலநிமிஷங்களில் தயாராகி கீழே வந்தவனை ஆசை பொங்க பார்த்த ரத்தினசாமியை கண்டு அத்தனை வியப்பாக தான் போனது பத்மினிக்கு.

‘இந்த மனுஷன் மகனை கண்டுட்டா மட்டும் பச்சப்பிள்ளையா மாறிடறார். இவர் தான் கொஞ்சம் முன்ன என்னிடம் அத்தனை கோவம் காட்டியவரா?’

‘இது நிஜமா? இல்லை கொலைவெறி பிடித்த அந்த அரக்கத்தனம் நிஜமா? எப்படி ஒரு மனிதருக்குள் இருவேறு முகங்கள்?’ என குழப்பமாய் பார்த்தார்.

“சாமி கும்பிடலாம் அண்ணா…” பூரணி அழைக்க சரி என்றவர் அனைவரையும் கூட்டிக்கொண்டு பூஜையறையில் நிற்க அனைவரும் கை கூப்பி வணங்கி நிற்க அதிபன் மட்டும் சலனமின்றி ரத்தினசாமியை பார்த்தான்.

அவனுக்கு தெரியும், அவர் தன் மேல் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பு. ஆனாலும் ஏனோ அதை நினைத்து பெருமிதம் கொள்ளமுடியவில்லை.

சில நொடிகள் அமைதியாக பார்த்திருந்தவன் அவர் கண்திறக்கும் நேரம் முகம் திருப்பி கை கூப்பி கடவுளை வணங்க ஆரம்பித்தான். எதையும் கேட்கும் மனநிலை இல்லை அவனுக்கு.

தனக்கு தேவையானதை தானே நிச்சயம் செய்துகொள்ளும் வல்லமை கொண்டிருந்தான். ஆனாலும் அதற்கும் கடவுளின் ஆசிர்வாதம், அனுகிரகம் வேண்டுமே! அதற்கு நின்றான்.

தனக்கு துணை நின்றால் மட்டும் போதுமானது. அனைத்தையும் நடத்திக்கொள்வேன் இப்படித்தான் வேண்டிக்கொண்டிருந்தான். ஆனால் ஒன்றை மறந்துவிட்டிருந்தான்.

நினைக்க வைப்பதும் அவனே. நிகழ்த்துவதும் அவனே. வேண்டாமென்றால் நிராகரித்துவிடுவதும் அவனே. அவனன்றி உலகில் அணுவும் அசையாது என்பது.

நடந்தவை அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. அவனுக்கென விதிக்கப்பட்டவை.

ரத்தினசாமியின் வாரிசாக ஜனித்ததும் அவனின் செயல். துவாரகாவை நினைக்க வைத்ததும், அவளை இக்கட்டான தருணத்தில் காப்பாற்ற வைத்ததும் அவனின் செயல்.

இனி நடக்கவிருப்பதும் கூட ஏற்கனவே அவனால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான்.

பூஜை முடிந்து அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு வந்து சேர அங்கே ஏற்கனவே இன்னும் சில உறவினர்கள் கூடியிருந்தனர். அதிரூபன் இறங்கியதும் அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்.

விஷாலுக்கும் அர்னவுக்கும் நிற்கவும் நேரமில்லை. சந்தோஷிற்கு மட்டும் அதிரூபனோடே இருக்கவேண்டிய உத்தரவு. அவனுக்கு தேவையானதை கவனிக்க.

ப்ரனேஷ் தன் தம்பியோடு அப்பொழுதே வந்துவிட்டான். அவனோடு இன்னும் சில ப்ரெண்ட்ஸ் கூட.

அனைவரையும் வரவேற்று கவனிக்கும் பொறுப்பும் சந்தோஷை சேர்ந்தது. மாலை மயங்கும் நேரம் மணப்பெண் அலங்காரத்தில் அஷ்மிதா வந்து சேர ரிசப்ஷன் ஆரம்பித்தது.

நிச்சயதார்த்தம் ஏற்கனவே முடிந்துவிட்டதால் முதல்நாள் எந்த சம்பிரதாயமும் இல்லை அவர்களுக்கு.

எனவே இளைஞர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமின்றி அவ்விடமே அல்லோலபட்டது.

அமைச்சர் வீட்டு திருமணம் என்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகம் இருந்தது.

கட்சி பிரமுகர்கள் தொழில்துறை நண்பர்கள் என அனைவரின் வருகை மண்டபத்தையே திக்குமுக்காட செய்தது.

அனைத்தையும் அசராமல் சமாளித்தார் ரத்தினசாமி. உடன் அவரின் தம்பி சங்கரனும்.

பத்மினியும், அன்னபூரணியும் தான் கொஞ்சம் மலைத்துபோயினர். ரிசப்ஷனுக்கே இவ்வளவு கூட்டம். நாளை திருமணத்திற்கு இன்னும் அதிகமாக தான் இருக்கும்.

அதிலும் முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், பிரபலங்கள் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சி.

RAS க்ரூப்ஸ் இல்ல திருமணம் என்றால் சாதாரணம் இல்லையே.

மகள் சந்தியாவின் திருமணமும் பிரமாண்டம் தான். குறையில்லை. ஆனாலும் அதிரூபன் திருமணம் இன்னும் பிரமாண்டமாக இருந்தது.

அஷ்மிதாவிற்கு தான் வயிற்றில் புளியை கரைத்தது. அதிரூபன் தான் அவளை சமாதானம் செய்தான்.

அவளின் பயமெல்லாம் வேறு. ரத்தினசாமியை கண்டு துளியும் பயமில்லை. முன்பு போல் இயல்பாய் அவரிடம் பேசிடவும் இல்லை. அவரும் திருமண களைப்பில் மருமகள் இருக்கிறாள் என்று விட்டுவிட்டார்.

இத்தனை வேலைகளுக்கும் நடுவில் அந்த ஹாஸ்பிடலுக்கு ஆள் அனுப்பி சூழ்நிலையை அறிந்துகொண்டார்.

எதிலும் கண்காணிப்போடு இருக்கவேண்டும் என்பதால் மட்டுமே இந்த விசாரணையும்.

அவரின் கண்ணை மறைத்து எதுவும் நடந்துவிடகூடாதே என்பதால் உண்டான முன்னெச்சரிக்கை.

ஹாஸ்பிடலில் இருந்து வந்த தகவலோ அவரின் மனதில் அத்தனை உவகையை தந்தது. இனி வெகுநாட்கள் தாங்கபோவது இல்லை. போய் தொலையட்டும் என்பதுதான் அவரின் எண்ணம்.

அதனாலேயே அவரின் முகம் இன்னமும் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது. வந்தவர்களை இன்முகமாக வரவேற்று நன்றாக கவனித்து அனுப்பினார்.

ஒருவழியாக ரிசப்ஷன் முடிந்து மண்டபமே காலியாக அதிரூபன் உட்பட அனைவரும் உறங்க சென்றனர்.

மறுநாள் விரைவாக எழுந்து தயாராக வேண்டும் என்பதால் அனைவரும் உறங்க சென்றுவிட அதன்பின் மெதுவாய் அஷ்மிதாவின் அறைக்கு சென்றான் அதிரூபன்.

ஏற்கனவே அவளுக்கு போன் செய்து சொல்லிவிட்டதால் அவளும் அவனுக்காய் காத்திருந்தாள். லேசாக கதவை தட்டவும் உடனே திறந்தவள் அவன் வந்ததும் பூட்டிக்கொண்டாள்.

அங்கே கட்டிலில் பயத்துடன் அமர்ந்திருந்தவளை கண்டதும் தான் நிம்மதியானது அவனுக்கு.

“மாமா…” என்ற அழைப்புடன் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தவளை அணைத்துகொண்டவன் ஆறுதலாய் வருடினான்.

“துவா, பயந்துட்டியாடா?…” மென்மையாய் கேட்க,

“ஹ்ம்ம்…” என தலையை மட்டும் அசைத்தவள் அவனிடமிருந்து விலகி,

“இப்பவும் வேண்டாம் மாமா. பயமாயிருக்கு. நான் அம்மாட்ட போய்டறேன். யாரும் பார்த்துடாம என்னை கொண்டுபோய் விட்டுடுங்க மாமா. நான் தான் உங்களை மாமான்னு கூப்பிட்டுட்டேனே?…”

அந்த ஏசியின் குளுமையிலும் பயத்தில் வியர்த்து உடையெல்லாம் நனைந்திருக்க அவளின் மனநிலை உணர்ந்தான்.

இந்த சிறிதுநேர இடைவெளியில் யாரும் பார்த்துவிடுவார்களோ என எத்தனை பயந்திருப்பாள் என்பதை உணர்ந்துகொண்டவன் அவனிடம் டீல் பேசியவளை இமைக்காமல் பார்த்தான்.

“அப்போ நான் வேண்டாமா?. என்னை பிடிக்காதா?..” என கேட்கவும் திடுக்கிட்டவள் வேகமாய்,

“இல்லை, இல்லை, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனா இது லவ்… லவ்.. எல்லாம் இல்லை…” விழி தாழ்த்தி தயக்கமாய் சொல்லியவளை கண்டு புன்னகைத்தவன்,

“அப்போ என்ன?…” என கேட்க,

“தெரியலை. உங்களை பிடிக்கும். ஆனாலும் எனக்கு உங்க மேலையும் கொஞ்சம் பயம் தான்…” உண்மையை சொல்லிவிட சத்தியமாய் அவன் முகம் மாறுவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

இருவரையும் கண்ட அஷ்மிதாவிற்கு தான் பாவமாக போனது. எப்படி இது சாத்தியப்படும் என பார்த்திருந்தாள்.

எதற்கும் அஞ்சாத அவன்…

அச்சமே உருவான அவள் …

error: Content is protected !!