மின்னல் அதனின் மகனோ – 5 (1)

மின்னல் – 5

                 மண்டபத்திற்கு கிளம்புவதற்கான ஆயத்த வேலைகள் துரிதகதியில் நடைபெற்றுகொண்டிருந்தது.  

அனைத்தும் சரியாக இருக்கிறதா என மேர்பார்வையிட்டுகொண்டிருந்தார் சங்கரன்.

அவரின் கையில் இன்னும் ஒரு வயது நிரம்பாத குழந்தை விஜேஷ். மகள் சந்தியாவின் குழந்தை. தாத்தாவின் தோளில் சமத்தாய் தூங்கிப்போயிருந்தது.

“அப்பா, அவனை குடுங்க, தூங்கிட்டான். நீங்க வேலையை கவனிங்க…” சந்தியா கேட்க,

“அட போம்மா. அஞ்சுமாசம் நிரம்பிருச்சுன்னு உன் மாமியார் வீட்டுக்கு போய்ட்ட. இவனை பார்க்காம தூக்கமே வரலை எனக்கு. இப்பவும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியாவது வந்திருக்கனும். நீ என்னனா நாளைக்கு கல்யாணத்தை வச்சிட்டு நேத்து நைட் தான் வந்த…”

“அப்பா அவர் பிஸ்னஸ்…” என சந்தியா இழுக்க,

“நீ போய் மாப்பிள்ளை எப்ப வருவாருன்னு கேளு. இங்க இருந்து கிளம்பற வரை என் பேரன் என் கூடதான் இருப்பான். போம்மா…” என அனுப்பிவைத்தவர் சோபாவில் அமர்ந்து குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டு போனில் அனைத்தையும் கேட்டு உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார்.

“என்ன பண்ணிட்டிருக்கண்ணே?…” என்றபடி அன்னபூரணி வர எதுவும் புரியாமல் பதட்டமாய் பார்த்தார்.

“பூரணி என்னம்மா?…” பதறி கேட்க,

“குழந்தையை கையிலயும், மடியிலையுமா வச்சிருக்க கூடாதுண்ணே. நீ வேலையை பார்க்காம இப்படி குழந்தையோடவே இருந்தா மத்ததை யாரு கவனிக்க?. மண்டபத்துக்கு வேற கிளம்பனும்…” தங்கையின் அதட்டலில் சிரித்தவர்,

“இப்ப என்ன குட்டிப்பயலை நீயே பார்த்துக்க. நான் மத்ததை கவனிச்சுக்கறேன்…” என்று அவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு எழுந்து சென்றவர் மீண்டும் வந்து அழுத்தமான முத்தமொன்றை குழந்தையின் நெற்றியில் பதித்துவிட்டு,

“என்னை மாதிரியே இருக்கான்ல ராஜா பய…” என சொல்லிக்கொண்டே அவர் நகர்ந்து சென்றதும் சிரித்துக்கொண்டே அன்னபூரணி சந்தியாவின் அறைக்குள் வந்தார்.

அவளோ மொபைலில் யாருக்கோ அழைப்பதும் பின் மெசேஜ் செய்வதுமாக எரிச்சல் முகத்தோடு இருக்க அதை பார்த்து வந்தவர்,

“என்னமா மாப்பிள்ளைக்கா கூப்பிட்டுட்டு இருக்க?…” என கேட்க,

“ஆமா அத்தை. அவர் பிக்கப் பண்ணவே மாட்டேன்றார். மெசேஜ்க்கும் ரிப்ளே இல்லை…” சலிப்பாய் சொல்லியவளின் கன்னம் கிள்ளியவர்,

“அவருக்கு வேலை அதிகமா இருக்கும் போலடா. அதுதான் உன் போன் கூட எடுக்க முடியாம இருக்குமாயிருக்கும். வேலையை முடிச்சா தானே இங்க வந்து ரெண்டுநாளாவது நிம்மதியா இருக்கமுடியும். கண்டிப்பா நைட் வந்துருவார். நீ ஒன்னும் டென்ஷன் ஆகாதே…”

அவளை சமாதானம் செய்தவர் குழந்தையை அங்கிருந்த தொட்டிலில் கிடைத்த அதை பார்த்து புன்னகைத்த சந்தியா,

“அப்பாவும், பெரியப்பாவும் உங்க பேச்சுக்கு மட்டும் தான் கட்டுப்படறாங்க. நான் குட்டிப்பயலை கேட்டதுக்கு அப்படி குதிச்சார் உங்க அண்ணன். இப்ப நிமிஷத்துல நீங்க வாங்கிட்டு வந்துட்டீங்க…”

“போதும், போதும். போய் நகையெல்லாம் எடுத்து வை. இன்னைக்கு போடவேண்டியது தனியா, நாளைக்கு போடவேண்டியது, அப்பறம் அஷ்மிக்கு சீரா குடுக்க வேண்டியது எல்லாம் மேல என் ரூம்ல இருக்கு. தனிதனியா எல்லாம் வேற வேற பாக்ஸ்ல எடுத்து வை. ஸ்வேதா அங்க தான் இருக்கா…”

“நீங்களே எடுத்து வைக்கலாமே அத்தை…” என,

“தனியா நான் எத்தனையை பார்க்க? உனக்கும் புது நகை வந்திருக்குடா. நீ என்னையே செலெக்ட் பண்ண சொல்லிட்ட. அதை பார்த்து எடுத்து வை. போ…”

“சரிங்க அத்தை…” என்றவள் குழந்தையை பார்க்க,

“நான் பார்த்துக்கறேன்…” எனும்பொழுதே குழந்தை சிணுங்க,

“ஹ்ம்ம், அவனுக்கு பசி வந்துடுச்சு போல. சரி நான் போய் எடுத்து வைக்கிறேன். நீ பசி ஆத்திட்டு வா…” என சொல்லி போக,

“நானும் வரேன் அத்தை. தூக்கிட்டு போய்டலாம் இவனை…” என்று குழந்தையையும் எடுத்துக்கொண்டு இருவரும் மேலே சென்றனர்.

“பத்மிம்மா எங்க அத்தை?…”

“அண்ணா ஏதோ டென்ஷனா இருக்காங்க. அண்ணியும் தான். பேசிட்டு இருக்காங்க. அவங்க பேசிட்டு வரட்டும். நாம வேலையை கவனிக்கலாம். இன்னும் ரெண்டுமணிநேரத்துல மண்டபத்துக்கு போய்டனும்…”

பேசிக்கொண்டே அறைக்கு சென்றவர்கள் துணிமணிகள் தனியாக, நகைகள் தனியாக என அனைத்தையும் பிரித்து பத்திரமாக அடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அங்கே ரத்தினசாமி அறையில் நடுங்கிப்போய் அழுதுகொண்டே அமர்ந்திருந்தார் பத்மினி. கணவனை காணவே அத்தனை பயங்கரமாக தெரிந்தது அந்த நிமிடம்.

தன் மீது உயிரையே வைத்திருப்பவர் தான். ஆனாலும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் ராட்சஷனாக உருவெடுத்துவிடுவார்.

இந்த நேரம் இதை பற்றி பேசியிருக்க கூடாதோ என காலம் கடந்த ஞானோதயமாக நினைத்தார்.

எதையும் மறைத்து பழக்கமில்லையே அவருக்கு.

“உனக்கு அவ்வளவு தைரியமா போச்சுல. அப்போ இந்த வீட்ல நான் குடும்ப தலைவன்னு எதுக்கு இருக்கேன்? இந்த தன்னமிஞ்சுனதனம் உனக்கு எங்கிருந்து வந்தது? யார் குடுத்த துணிச்சல்?…”

வெளியில் யாருக்கும் கேட்டுவிட கூடாதென கவனமாக குரல் தாழ்த்தி பேசினாலும் அக்குரலில் இருந்த அனல் வெகுவாய் பத்மினியை சுட்டு பொசுக்கியது.

“நான் வேணும்னு பார்க்க போகலை. ப்ரெண்ட்க்கு மேஜர் ஆபரேஷன் நடந்திருக்கு. அவசரமா பண உதவி தேவைப்பட்டதுன்னு தெரிஞ்சதும் மனசு கேட்காம ஹெல்ப் பண்ணத்தான் போனேன்…”

“போனா போன வேலையை மட்டும் பார்த்திட்டு வரவேண்டியது தானே?…” என கத்தினார்.

என்றைக்குமே ரத்தினசாமி பத்மினிக்கு எந்த எல்லையும் விதிக்கவில்லை. பத்மினி தனக்குத்தானே சில கட்டுபாடுகள் விதித்துகொண்டாலும் உதவி என்று வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லும் பழக்கமே இல்லை. அதற்கு ரத்தினசாமியும் தடை விதித்ததில்லை.

“நீ ஏன் அவளை பார்க்க போன?. அந்த குடும்பத்தோட மூச்சுக்காத்து கூட நம்மை சேர்ந்தவங்க மேல படக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?…”

“இல்லைங்க, அதுக்கில்லை. அவங்க தனியா யாருமில்லாம கஷ்டப்படறாங்க போல. கூட ஹாஸ்பிடல்ல துணைக்கு கூட யாருமில்லாம…”

“அவன் இருப்பான்ல. ஏன் அந்த புள்ளபூச்சி எங்க போய் தொலைஞ்சாளாம்?. அப்படியே தனியா கிடந்தா ரொம்ப நல்லது தான். செத்து ஒழியட்டும். எனக்கு அப்பத்தான் முழு நிம்மதி…”

வார்த்தைகளை தீக்கங்குகளாய் கொட்ட துடித்துபோனார் பத்மினி. மனது கிடந்து அடித்துக்கொண்டிருந்தது.

‘அவர்கள் ஒன்றும் உங்களிடம் பிச்சை ஏந்தி நிற்கவோ? உங்களிடம் பணம் பறிக்கவோ முயலவில்லை. யார் தயவுமின்றி தன்மானத்தோடு வாழ்கின்றனர்’ என கத்தி சொல்லவேண்டும் போல் இருந்தது பத்மினிக்கு.

தான் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளின் எதிரொலி அங்கே பிரதிபலிக்கும் என்பதால் பல்லை கடித்துக்கொண்டு அமைதிகாத்தார்.

தவறே செய்யாமல் எத்தனை இன்னல்களை தாங்கி வாழ்கின்றனர் என்று நன்றாகவே அறிந்தவர்.

அதிலும் பதினாறு வயது சிறுமியாய் தன் வீட்டு வாசலில் வந்து நின்ற அவளை என்றுமே மறக்கமுடியாது அவரால்.

எத்தனை வருடம் கழித்து பார்த்தார். கண்களுக்குள் ஒட்டிக்கொண்ட அவளின் முகம் அவரை உயிரோடு வதைத்தது.

‘ஹைய்யோ கடவுளே, எப்படியாவது அவங்களை காப்பாத்திவிட்டுடு. துவாரகாவையும் அவங்களோட சேர்த்துவச்சிடு. வயசு பொண்ணை இத்தனை நாளா காணலையே? எங்க போய் என்ன சிரமம் அனுபவிக்கிறளோ?’

அவர் மனதில் நினைக்கும் பொழுதே இதயத்தில் சுருக்கென தைத்தது.

‘இவர் எதுவும் செய்திருப்பாரோ?’ என ரத்தினசாமியை ஆழ்ந்து பார்க்க அதை கண்டுகொண்டவரோ,

“நீ என்ன நினைச்சிருப்பன்னு நல்லாவே தெரியும். மொத்தமா முடிக்கனும்னா என்னைக்கோ முடிச்சிருப்பேன். போனா போகுதுன்னு தான் விட்டுவச்சிருக்கேன். அதுவும் உனக்காக தான்…” மிக சாதாரணமாக சொல்லியவர்,

“திரும்பவும் போன இடத்துல பார்த்தேன், வர வழியில பார்த்தேன்னு என் காதுல விழுந்துச்சு அன்னைக்குதான் அவங்களுக்கு கடைசி நாள்…”

கொலைவெறி தாண்டவமாட மிருகத்தின் மொத்த உருவமே அவதாரம் எடுத்ததை போல பத்மினியின் முன்பு அவர் சொல்ல உயிர் அடங்க அசைவற்று அமர்ந்திருந்தார்.

அவரின் அதிர்ச்சியை பொருட்படுத்தாது பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவர் பத்மினியையும் எழுப்பி உள்ளே அனுப்பிவைத்தார். அவரும் வெளியே வர ஒரு டவலை எடுத்து கொடுத்து,

“நாளைக்கு பையனுக்கு கல்யாணம். நீ கனவு கண்ட கல்யாணம். இப்ப போய் ஏன் பத்மி இப்படி பன்ற? இந்த நிமிஷம் நாம சந்தோஷமா இருக்கவேண்டிய நேரம். என்னோட அதிபனுக்கு, நம்மோட ஒரே பிள்ளைக்கு கல்யாணம். அது மட்டும் தான் இப்ப நம்ம மனசு முழுக்க இருக்கனும். புரியுதா?…”

சிறிதுநேரம் முன்பு எத்தனை ஆக்ரோஷமாய் சீறினாரோ இப்பொழுது அவை அத்தனைக்கும் நேர்மாறாய் அன்பை பொழிந்தார் ரத்தினசாமி.

அவரின் கண்களில் அத்தனை காதலும் பாசமும் தான் கனிந்து கிடந்தது. பார்க்க பார்க்க பத்மினியின் கண்கள் பனித்தது.

‘இவர் எப்பொழுதுமே இப்படியே இருக்க கூடாதா?’ என உள்ளம் ஏங்கியது.

“கட்சி ஆபீஸ் வேற போகனும் பத்மிமா. இப்போ கிளம்புனா தான் போய் திரும்ப முடியும். தலைவர் வேற அடுத்த மாதம் நடக்க போற பொதுக்குழு மீட்டிங் பத்தி முக்கியமா பேசனும்னு சொன்னார். கல்யாண வேலைல அதை விட முடியாது. முக்கியமானது…”

அவர் பேசிக்கொண்டே இருக்க அப்பொழுதும் அவர் முகம் பார்த்தபடியே இருந்தார் பத்மினி.

“என்ன பத்மி அப்டி பார்க்க? கிளம்புமா. நேரமாகுதுல. முகத்தை துடைச்சுட்டு வேற புடவையை மாத்திக்க. பிள்ளைங்க கவனிச்சா என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க. விஷாலுக்கு தெரிஞ்சா அந்த ஹாஸ்பிடலுக்கு போய் ரகளையே பண்ணிடுவான். அப்பறம் ட்ரீட்மென்ட் நடுத்தெருவுல தான்…”

error: Content is protected !!