மின்னல் அதனின் மகனோ – 4 (2)

“இன்னும் ரெண்டுநாள்ல. இன்விடேஷன் மெயில் பன்றேன் டாக்டர்…” அவரிடம் பேசிவிட்டு மீண்டும் அறைக்கு வர,

“காபி சொல்லு அஷ்மி, ரொம்ப ஹெடேக்கா இருக்கு…” தலையை பிடித்துக்கொண்டு அவன் அமர்ந்துவிட காபிக்கு சொல்லியவள் முகம் கழுவி வரவும் அதிரூபனும் ப்ரெஷாகி வந்தான்.

“அதி, நீ வேணும்னா என் ப்ளாட்க்கு போய் குளிச்சுட்டு வாயேன். நான் இங்க வெய்ட் பன்றேன். எவ்வளோ நேரம் இப்படி அழுக்கு ட்ரெஸ்ல சுத்துவ?…”

அவன் கண்டுகொள்ளாமல் இருக்க அஷ்மிதா விட்டுவிடுவாளா?

“இப்ப தெரியுதுடா, ஏன் அந்த பொண்ணு உன்னை பக்கத்துலையே விடலைன்னு…” கண்ணடித்து சொல்ல அவளை முறைத்தவன்,

“எனக்கு தெரியும். வெட்டியா மொக்கை போடாம காபி என்னாச்சுன்னு பாரு…”

காபி வரவும் இருவரும் குடித்துவிட்டு மீண்டும் துவாரகாவை பார்க்க செல்ல அவள் எழுந்து அமர்ந்திருந்தாள்.

முதலில் அஷ்மிதா மட்டும் வரவும் அவளை கண்டு அமைதியாய் பார்த்தவள் அதிரூபன் பின்னோடு வரவும் வேகமாய் இழுத்து போர்த்தி படுக்க முயன்றாள்.

அத்தனை நேரம் சமாதானம் செய்திருந்த மனதையும் மீறிய கோபம் அதைகண்டு உண்மையில் பொங்கிட அவளை இழுத்து நிறுத்தியவன்,

“உன்னை நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி நடந்துக்கற?…” என்றவனை விடுத்து அஷ்மிதாவை பாவமாய் பார்த்தவள்,

“எனக்கு தூக்கம் வருது. அதான்…”

குரல் நடுங்க சொல்லியும் அவளை விட அவனுக்கு மனமில்லை. ஆனாலும் அவளின் உடல்நிலை கண்டு நிதானித்தவன்,

“சாப்பிட்டு தூங்கு…” என கட்டளையாய் மொழிந்து அஷ்மிதாவை பார்த்தான்.

‘இவளை கவனி’ என்ற  த்வனி  அவனின் பார்வை பாஷையில் ஒளிந்திருக்க அதை கண்டுகொண்டவள் கடுப்பானாள்.

‘இவனுக்கு நிஜமாவே என்னை பார்த்தா எப்படி தெரியுது? ரூம்ல காபின்றான். இங்க டிபன்றான். இல்ல என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்’ மனதிற்குள் பொரிந்தாலும் துவாரகாவிற்காக அவள் செய்தாள்.

சாப்பிடும் நேரம் வெளியே சென்று நின்றுகொண்டான் அதிரூபன். பின்னே மீண்டும் தண்ணீர் குடிக்கமாட்டேன் என பிடிவாதம் பிடித்ததை போல சாப்பிடவும் மாட்டேன் என பிடிவாதம் செய்தால் என்ன செய்வாள் என்று தான்.

உண்டு முடித்து வரவுமே அவன் கேட்ட முதல் கேள்வி.

“இப்போ சென்னைல நீங்க எங்க இருக்கீங்க? சென்னைல தான் இருக்கீங்களா? வீடு எங்க? எந்த ஏரியா? எந்த காலேஜ்? …”

அவள் பதில் சொல்ல கூட நேரம் தராமல் சரமாரியான கேள்விகனைகளால் அவளை துளைத்துக்கொண்டிருந்தான்.

அவளின் புறக்கணிப்பில் அவனின் முகம் கடுகடுவென இருக்க பார்க்கவே அத்தனை பயமாக இருந்தது துவாரகாவிற்கு. அதையும் விட அவனின் கேள்விகள் கொடுத்ததோ உயிர்பயம்.

‘இவங்க குடும்பம் எங்களை விடவே விடாதா?’ நொடிக்கு நொடி உணர்வுகளின் குவியலில் உயிர் பயமே.

இனியும் தாமதிக்க நேரமில்லை என்னும் அவசரம் அவனிடத்தில். அவனிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிடும் அவசியத்தில் அவள்.

இருவரின் இருவேறு எண்ணங்களையும் கவனித்துக்கொண்டு இருந்தாள் அஷ்மிதா பார்வையாளராக.

அதற்குள் சந்தோஷிடமிருந்து கால் வர அஷ்மிதா திட்டிவிட அதிரூபன் பேசி வருவதற்குள் அஷ்மிதா துவாரகாவிடம் மொத்தமாய் கரைந்துபோயிருந்தாள்.

அதிலும் தன் தாய் இருக்குமிடம் சொல்லும் பொழுதில் அதிரூபன் மீண்டும் உள்ளே வந்ததும் துவாரகா பூச்சாண்டிக்கு பயம்கொள்ளும் குழந்தையென வாயை மூடிக்கொண்டு பயப்பார்வை பார்த்ததுமே ரத்தினசாமியின் மீதான கொஞ்ச நஞ்ச மரியாதையும் விண்டுபோனது.

அந்த கோபமனைத்தும் உருமாறி அதிரூபனிடம் பாயத்துடித்தது. துவாரகாவின் மனதினை மனதில் வைத்துக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு அவளுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து உறங்க வைத்து திரும்பினாள்.

இன்னமும் தானும் அவனும் எதுவுமே உண்ணவில்லை என்பது உரைக்க வேகமாய் கேண்டீன் நோக்கி சென்றுவிட மருந்துகளின் உபயத்தில் உறங்கிக்கொண்டிருந்தவளின் முகத்தை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

மீண்டும் உணவுகளுடன் அஷ்மிதா வரும்நேரம் அதிரூபன் மொபைலில் யாருடன் பேசிக்கொண்டிருந்தான் மிக தீவிரமாக.

“ஐ சூர்.  பி.ஆர் ஹாஸ்பிடல் தான். தேடிப்பாருங்க…”

“…..”

“நோ, நோ. என்னால டைம் குடுக்க முடியாது. எனக்கு இப்பவே தெரிஞ்சுக்கனும். ஹாஸ்பிடல் பேர் சொல்லியாச்சு. இதுல உங்களுக்கு என்ன சிரமம்? அவங்க போட்டோவும் பார்வேர்ட் பண்ணிருக்கேன்…” என்றவன்,

“க்விக்கா முடிக்கனும். இது ரொம்ப ரொம்ப ரகசியமா இருக்கட்டும். எக்காரணத்தை கொண்டும் வேற யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாது. என்னை தவிர…”

பேசிமுடித்துவிட்டு அமரவும் அஷ்மிதா அவனுக்கு முன்னால் டீப்பாயை இழுத்துபோட்டு வாங்கியவைகளை பிரித்து வைத்துவிட்டு தனக்கு தேவையானதை உண்ண தொடங்கினாள்.

“இப்ப எதுக்கு இத்தனை வாங்கிட்டு வந்திருக்க? இதுல சாப்பிடுன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம நீபாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்க?…”

“நீ என்ன சாப்பிடற மூட்ல இருக்கன்னு யாருக்கு தெரியும்? எனக்கும் உனக்கும் பிடிச்சதா வாங்கிட்டு வந்துட்டேன். என் வேலை முடிஞ்சது. நீ சாப்பிட்டா என்ன? இல்லைனா எனக்கென்ன? என்னால முடியாதுப்பா…”

அதற்குமேல் சாப்பிட மட்டுமே வாயை திறப்பேன் என்பதை போல உணவில் கவனமாய் இருக்க அவளின் தலையில் வலிக்கும் படி கொட்டியவன் தானும் சாப்பிட ஆரம்பித்தான் துவாரகாவிடம் பார்வையை பதித்தபடி.

“சாப்பாட்டுல கண்ணை வச்சு சாப்பிடு. எதாச்சும் விழுந்துகிடக்க போகுது. எந்த காக்காவும் அவளை தூக்கிட்டு போய்டாது…”

“அதுக்குதான் நீ இருக்கயே. என் ப்ளேட்டை கவனிச்சுக்கோ…” அவனும் சளைக்காமல் பதிலளிக்க,

“எனக்கு வேற வேலை இல்லை போடா…” அவள் வேறுபுறம் திரும்பி சாப்பிட சிறு புன்னகையோடு தானும் உண்டுமுடித்தான்.

“அஷ்மி, ஒரு ஹெல்ப் பண்ணுடா…”

“இவ்வளோ நேரம் அதத்தான பண்ணிட்டு இருக்கேன். இன்னும் என்ன?…” துவாரகாவிற்கு செலைனை மாற்றிக்கொண்டே அவனிடம்பேச,

“பார்த்து அஷ்மி, ஏற்கனவே வலி அவளுக்கு. நீ மாத்தும்போது மெதுவா…” அவனை முடிக்கவிடாமல் திரும்பி முறைத்தவள்,

“என் வேலை இது. நீ எனக்கு சொல்ல தேவையில்லை…” நேற்றிலிருந்து அவன் செய்துகொண்டிருக்கும் அலும்பிலும் துவாரகாவை படுத்தும் விதத்திலும் எரிச்சலில் இருந்தவள் இப்படி அவன் கேட்கவும் இன்னும் காண்டானாள்.

“ஓகே, ஓகே. நீ இன்னைக்கு இங்கயே ஸ்டே பண்ணு. நான் இப்ப கண்டிப்பா போயாகனும். மோஸ்ட்லி நைட் சீக்கிரமே வந்திடுவேன்…” அவனின் அவசரம் புரிந்தவள்,

“ம்ம், ம்ம். ஒரு டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணு வந்திடறேன்…” வேகமாய் வெளியேறியவள் சென்றவேகத்தில் மீண்டும் அறைக்கு வரும்போது குளித்து புதிதாய் வேறு உடை அணிந்திருந்தாள்.

“ஏற்கனவே இன்னைக்கு லீவ் தான் சொல்லியிருந்தேன். என் ட்யூட்டியை வேற டாக்டர்க்கு மாத்தியாச்சு. நேத்து ட்ரெஸ்ல என்னால இருக்க முடியாது. அதான் போய் ப்ரெஷ் ஆகிட்டு வந்தேன்…” என்றவள் தன் கை பையை திறந்து ஒரு சாவியை கொடுத்து,

“இது என் ப்ளாட் கீ. நீயும் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பு…” என சொல்லவும் அவளை அணைத்துக்கொண்டவன்,

“தேங்க்ஸ்டா அஷ்மி…” என்று சொல்லிய நிமிடம் விலகி துவாரகாவின் நெற்றியில் ஷணபொழுதில் இதழொற்றல் ஒன்றையும் நிகழ்த்திவிட்டு பறந்துவிட்டான்.

அதன்பின்னான பொழுதுகள் இறக்கையின்றி கடந்துசெல்ல அஷ்மிதாவிடம் அவ்வப்போது துவாரகாவை பற்றியும் கேட்டறிந்துகொண்டான்.

இரவு ஹாஸ்பிடலுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் பொழுதில் தான் ரத்தினசாமியிடமிருந்து அழைப்பு வர எடுத்தவன்,

“சொல்லுங்கப்பா…”

“அதிபா, அப்பா பேசறேன்ப்பா…” எப்பொழுது அழைத்தாலும் இதை சொல்லாமல் அவர் பேச ஆரம்பிக்கவே மாட்டார்.

error: Content is protected !!