மின்னல் – 4
அதிரூபன் எத்தனை முயன்றும் துவாரகாவிடம் விஷயத்தை வாங்கவே முடியவில்லை.
அஷ்மிதாவிடம் பேசியதில் இருந்து என்னவென ஓரளவு யூகித்து இருந்தவன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டான்.
அவள் கண்விழித்து தன்னை பார்த்த நொடியில் அவள் முகத்தில் தோன்றிய கலவையான உணர்வில் கட்டுண்டு இறுக்கமாக நின்றவன் அவள் முகம் திரும்பியதும் முகம் மென்மையானது.
‘இவளுக்கு பேச பிடிக்கலையாமா?’ மனதிற்குள் நொடித்துக்கொண்டு வெளியில் கண்டுகொள்ளாத பாவனையை முகத்தில் கொண்டுவந்தவன்,
“ஹவ் ஆர் யூ துவாரகா?…” கரகரத்த குரலை செருமிக்கொண்டு கேட்க பதில் சொன்னாளில்லை.
இதை பார்த்துக்கொண்டிருந்த அஷ்மிதாவிற்கு ஐயோ என்றிருந்தது.
‘இதுங்க இம்சை தாங்கமுடியலையே. கண்ணால பார்த்தே கொல்றாங்களே?’ என நொந்துகொண்டவள்,
“ம்க்கும்…” என தொண்டையை கனைக்க அதிரூபன் திரும்பி பார்த்துவிட்டு ஞாபகம் வந்தவனாக,
“துவாரகா இது அஷ்மிதா. டாக்டர்…” என்றதும் அவளை நிமிர்ந்து பார்க்க அவளருகே வந்து புன்னகைத்தாள் அஷ்மிதா.
“ஹாய்…” என சொல்ல பதிலுக்கு தானும்,
“ஹாய்…” என்றவள்,
“நான் வீட்டுக்கு போகனும். அம்மாவ பார்க்கனும்…” அதிரூபனுக்கு கேட்டுவிடாத குரலில் கேட்க அதற்கு புன்னகையோடு தலையசைத்த அஷ்மிதா,
“ஏன் உன்னை காப்பாத்தினவன் பக்கத்துல தானே இருக்கான். கேட்டா மாட்டேனா சொல்வான்?…”
‘இவங்க கார்ல தான் ஏறிவந்தோமா?’ அவனின் முகத்தை திரும்பி பார்த்தவள் மீண்டும் தலையை திருப்பிக்கொள்ள,
“துவாரகா…” மீண்டும் அவனின் அழுத்தமான அழைப்பு காதில் விழுந்தாலும் திரும்பாமல் இருக்க அவளின் கன்னத்தில் விரல் பதித்து வலுக்கட்டாயமாய் திருப்பி தன்னை பார்க்க வைத்து,
“இவங்க டாக்டர் அஷ்மிதா. இன்னும் பத்துநாள்ல எங்களுக்கு மேரேஜ்…” சொல்லியேவிட்டான்.
நொடியில் அவனின் இறுகிய விரல்களுக்குள் அழுந்திக்கிடந்த கன்னங்கள் சூடாக விழிகள் ஷணத்தில் விரிந்து சுருண்டது.
தன் திருமண செய்தியை சொன்னதும் அவள் முகத்தில் சிறு மின்னலென வந்துபோன பாவங்களை வைத்து அறிந்துகொண்டான்.
‘அவளுக்கு இன்னும் என்னை பிடிச்சிருக்கு’ என்றபடி அஷ்மிதாவை பார்க்க அவளோ,
“வாய்ப்பே இல்லை மகனே…” என்று பார்த்து சைகையில் தன் கழுத்தில் தாலிகட்டுவதை போல காண்பித்துவிட்டு,
‘உனக்கு வேறு வழியே இல்லை மீறினால்’ கழுத்தை சீவுவதை போல காண்பித்து நாக்கை ஒருபக்கமாக துருத்தி தலையை சாய்த்து கண்களை சொருகுவதை போல ஆக்ஷன் காண்பிக்க அவளை முறைத்தான்.
அதை எல்லாம் கண்டுகொண்டால் அவள் அஷ்மிதாவாக இருக்கமுடியாதே.
“எஸ், இந்த முரட்டு சிங்கிள்க்கு ஏத்த மாஸ்டர் பீஸ் இந்த அஷ்மிதா தான்…” பெருமையாய் சொல்லியவள்,
“நீயும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரனும் துவாரகா…” என அஷ்மிதாவும் அழைக்க துப்பாக்கியிலிருந்து பாயும் தோட்டாக்களை போல,
“என்னை கூப்பிடாதீங்க. அங்க நான் வரமாட்டேன். நான் வரமாட்டேன். வரவேமாட்டேன். கூப்பிடாதீங்க…” அவனின் கையை தட்டிவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பிக்க திகைத்துபோனாள் அஷ்மிதா.
அதிரூபனுக்கு தெரியும், துவாரகாவின் பதில் இதுவாகத்தான் இருக்கும் என்று. ஆனாலும் அமைதியாக இருந்தான்.
“ஓகே ஓகே கூல் துவா. கூல். நான் இன்வைட் பண்ணலை. போதுமா. ரிலாக்ஸ்…” அங்கிருந்த தண்ணீரை எடுத்துகொடுக்க அதை தட்டிவிட்டாள் துவாரகா.
“வேண்டாம், எனக்கு தண்ணி வேண்டாம். இவங்க இவங்க இருக்காங்க. இங்க இருக்கங்க. நான் தண்ணி குடிக்கமாட்டேன். திரும்ப அங்க தூக்கிட்டு போய்டுவாங்க. அடிப்பாங்க. வலிக்கும். என்னை விட்டுட சொல்லுங்க, நான் வீட்டுக்கு போய்டறேன். அம்மாட்ட போய்டறேன்…”
அஷ்மிதாவின் வயிற்றில் முகம் புதைத்து இடையோடு அணைத்துக்கொண்டு வெடித்து அழ ஆரம்பித்துவிட இப்படி ஒரு கதறலை அவளிடமிருந்து அதிரூபனுமே எதிர்பார்க்கவில்லை.
சிலநொடிகள் கூட அவளின் கண்ணீரை பார்க்கமுடியவில்லை. விஷாலையும், அவனை இப்படி வளர்த்த ரத்தினசாமியையும் நினைக்க நினைக்க ஆத்திரங்கள் அதிகரித்தது.
தான் இருக்கும் இடத்தில் ஒரு வாய் தண்ணீரை குடிக்க அஞ்சும் அளவிற்கு தன் குடும்பத்தினர் இவளை ஆக்கிவிட்டார்களே? என்ன மருகி என்ன பயன்? இவளின் இந்த எண்ணத்தை எப்படி மாற்ற என யோசிக்க கூட முடியவில்லை.
அவளின் அழுகை குரல் மூளையை மழுங்கடித்தது. யோசிக்க கூட முடியாத அளவிற்கு கண்ணிலும் கருத்திலும், நெஞ்சிலும் அவளின் கண்ணீர் முகமே.
அங்கிருக்க முடியாமல் எழுந்து அஷ்மிதாவின் அறைக்கு சென்றுவிட்டான். எத்தனை முயன்றும் சில விஷயங்களை மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் தயாராக இல்லை.
இப்பொழுதே இதற்கு காரணமானவர்களை தண்டித்துவிடலாம். ஆனால் அது நிமிடத்தில் கடந்துவிடகூடிய ஒன்றாக போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாய் இருந்தான்.
ஏற்கனவே எடுத்திருந்த முடிவுதான். ஆனாலும் இப்பொழுது இன்னும் ஸ்திரம்பட்டது.
வெகுநேரம் எப்படி செயல்படுத்துவது என யோசித்து மனதிற்குள்ளேயே சில வரைபடங்கள் வரைந்து ஒத்திகையும் பார்த்துக்கொண்டிருக்க அஷ்மிதா வந்துவிட்டாள்.
“அதி, ஏன் இவ்வளோ ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கற? நான் பார்த்துக்கறேன்னு சொல்லிருக்கேன்ல. அதுக்குள்ள என்ன உனக்கு பொறுமை இல்லாம…”
அவனை கடிந்துகொள்ள அதற்குள் நர்ஸ் வந்து ஹாஸ்பிடல் டீன் அவளை வரச்சொன்னதாக கூற அவளுடன் அதிரூபனும் சென்றான்.
அவனையும் அஷ்மிதாவுடன் கண்டதும் எழுந்து வந்து கை குலுக்கியவர் அவர்களை அமர சொல்லி தானும் அமர்ந்துகொண்டார்.
“ஹவ் ஆர் யூ மிஸ்டர் அதிரூபன்?…” மகிழ்வாய் கேட்டவர்,
“சப்ரைஸ் தான் இன்னைக்கு. ஈவ்னிங் தான் வருவீங்கன்னு அஷ்மிதா சொல்லியிருந்தாங்க. உங்களை நைட் டின்னருக்கு இன்வைட் பண்ணலாமேன்னு நினைச்சிட்டு இருந்தேன்….” டாக்டர் பிரேம் பேச,
“வரவேண்டிய அவசியம் வந்தா வந்துதானே ஆகனும். அதான் வந்துட்டேன்…”
“ஓகே ஓகே, உங்க மேரேஜ் இன்னும் டென் டேய்ஸ்லன்னு ராஜாங்கம் ஸார் காலைல தான் சொன்னார். முதல்ல என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடறேன்…”
மீண்டும் வாழ்த்தை கூறி இருவருக்கும் கைகுலுக்கியவர் மேலும் பொதுவான விஷயங்களையும் அவர்களின் திருமண ஏற்பாடுகள் பற்றியும் கேட்டுகொண்டார்.
அதிரூபன் பேசிக்கொண்டே இருக்க இவன் எப்பொழுது சொல்ல என நினைத்த அஷ்மிதா,
“அங்கிள், உங்ககிட்ட ஒரு சின்ன ஹெல்ப்…” என ஆரம்பிக்க அதிரூபனும் அர்த்தமாய் அவரை பார்த்தான். அதிலேயே புரிந்துகொண்டவர்,
“கண்டிப்பா செய்யறேன்…” என வாக்களிக்க,
“இன்னைக்கு நான் லாஸ்டா அட்டன் பண்ணின பேஷன்ட் பற்றி யாருக்கும் எந்த விவரமும் தெரியகூடாது. அது யாரை சேர்ந்தவங்களா இருந்தாலும்…”
“இது ரொம்ப கான்பிடன்ஷியல்…” அதிரூபனும் சொல்ல யோசனையாய் பிரேம் பார்க்க மேலும் சில விவரங்களை சொல்லிய அஷ்மிதா அவரிடம் சம்மதம் வாங்கிக்கொண்டு தான் விட்டாள்.
“ஓகே அஷ்மிதா, கண்டிப்பா உங்களுக்காக இதை செய்யறேன். என்னைக்கு சென்னை கிளம்பறீங்க?…”