மின்னல் அதனின் மகனோ – 3 (3)

வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து பார்க்க அதில் இன்விடேஷனின் டிஸைனை ராஜாங்கம் அனுப்பியிருக்க அதை கண்டு பத்மினி பொங்கிவிட்டார்.

“பார்த்தீங்களா? இதுக்கு என்ன சொல்றீங்க?…” என கேட்க,

“என்ன சொல்லனும்? இல்ல என்ன சொல்லனும்னு கேட்கறேன். அவர் தான் அப்படி பன்றார்னா நாமளும் எடுத்தோம் கவுத்தோம்னா செய்யமுடியும்?…”

எரிச்சலில் ரத்தினசாமியின் குரலில் கோபத்தின் சூடு ஏறியிருக்க பத்மினி தான் தழைந்துபோகவேண்டியதாகிற்று. அமைதியாய் அவரின் அருகில் அமர,

“இது நம்ம புள்ளையோட கல்யாணம் பத்மினி. எனக்கும் ஏகப்பட்ட கனவும், விருப்பமும் இருக்கு. அவன் கல்யாணத்தை திருவிழா மாதிரி கொண்டாடனும். அதில் எந்த குழறுபடியும் ஏற்படகூடாதுன்னு ரொம்பவே கவனமா இருக்கேன். அதுக்காக சில விஷயங்களை விட்டுகொடுத்து போகலாம்…”

இந்த விட்டுகொடுக்கும் தன்மை அவரிடம் மட்டும் ஏன் தோன்றுவதில்லை இவருக்கு என்ற எண்ணம் சட்டென தலைதூக்கி வாய்வரை வந்துவிட்டது வார்த்தையாக.

ஆனால் அதன்பின் நடக்கும் அபாயங்களை தவிர்ப்பதற்காக வெளிவர தத்தளிக்கும் வார்த்தைகளுக்கு விலங்கிட்டு விடியலை காணவிடாமல் இருளான மனதிற்குள்ளேயே பூட்டிகொண்டார் பத்மினி.

“பொறுமையா போகலாம் பத்மினி. ஒரே பொண்ணோட கல்யாணம். அவரோட மொத்த ஆசைகளையும் இந்த கல்யாணத்துல தான் நிறைவேத்திக்க பார்ப்பாரு. ஒண்ணொன்னையும் செஞ்சு அழகுபார்க்க ஆசைப்படுவார். போட்டும் விடு…”

“நம்ம பையனோட கல்யாணம் சீக்கிரமே நடந்தா அதுவும் நீ ஆசைப்பட்ட மாதிரி சீக்கிரமே நடந்தா சந்தோசம் தானே?. நாள் கம்மினாலும் சிறப்பா செஞ்சிடலாம்…”

“ஹ்ம்ம்…” மனமே இல்லாமல் அமர்ந்திருக்க,

“இன்னும் நம்ம வீட்ல எத்தனை கல்யாணம் நடக்க இருக்கு. நம்ம பசங்க வரிசையா இருக்காங்க. அவங்க எல்லோரோட கல்யாணமும் உன்னோட ஆசைப்படி ஆணைப்படி தான் நடக்கும். சரியா?…”

பத்மினியை மலையிறக்க பேசியவருக்குமே மனத்தாங்கல் இருந்தாலும் காட்டிகொள்ளாமல் பேச பத்மினியும் சம்மதித்தார்.

அடுத்து குடும்பத்தினர் அனைவரையும் வரவைத்து திருமணதேதி மாற்றம் விபரத்தை சொல்லி அனைவரையும் பரபரப்பாக்கினார்.

வரிசையாக போன்கள் செய்து இருந்த இடத்திலேயே வேலைகளை துரிதபடுத்தினார்.

ஏற்கனவே புக் செய்திருந்த மண்டபமும் அந்த தேதியில் கிடைத்துவிட அதன் பின்னான வேலைகள் ஜரூராக நடக்க ஆரம்பித்தது.

——————————————————————–

துவாரகாவின் முன் கை கட்டி அழுத்தமான பார்வையோடு அதிரூபன் அமர்ந்திருக்க அவனின் பார்வையை சந்திக்கவே கூடாதெனும் பிடிவாதத்தில் துவாரகா முகம் திருப்பி இருந்தாள்.

அவளின் மயக்கம் தெளிந்ததிலிருந்து அவனின் புறம் திரும்பவே மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை போல் அவளிருக்க குழந்தைகளை மிரட்டும் பூச்சாண்டி என விரைப்புடன் அவளருகில் ஒரு சேரை இழுத்துப்போட்டு அவன் அமர்ந்திருந்தான்.

இருவரையும் மாறி மாறி பார்த்தபடி இருந்த அஷ்மிதாவிற்கு தான் பிபி எக்கச்சக்கத்திற்கும் எகிறியது.

“டேய் என்னடா இது? நீ போ நான் கேட்டு சொல்றேன். அவளும் பிடிவாதமா இருக்கா. நீ அதைவிட அடமென்ட். படுத்தாதீங்கடா…”

அஷ்மிதாவின் புலம்பல் அங்கே எடுபடவே இல்லை. இருவரும் அசைவேனா பார் என்பதை போல சிலையாய் சமைந்துதான் இருந்தனர்.

“எனக்கு பசிக்குது. நீங்க என்னமோ பண்ணி தொலைங்க. சரியான ஜாடிக்கேத்த மூடி. ஆளப்பாரு…” என்று அறையை விட்டு வெளியேற அவளின் மொபைலும் அடித்தது.

எடுத்து பார்த்தவளுக்கு கோபம் சுறுசுறுவென ஏறியது. மொபைலையே வெறித்தபடி நிற்க மீண்டும் மீண்டும் அந்த அழைப்பு வர அட்டன் செய்தவள்,

“என்ன?…” என்று மொட்டையாக கேட்க சந்தோஷ்க்கே வியப்பாய் இருந்தது.

எப்பொழுது அழைப்பை ஏற்றதும் பச்சைக்கிளி என ஆர்பாட்டமாய் அழைப்பவள் இன்று கடுப்பாய் பேச,

“என்ன மேடம் மூட் அப்செட்ல இருக்கீங்க போல? கல்யாண பொண்ணுக்கு எதுக்கு இவ்வளோ டென்ஷன்?…” என கிண்டலாய் பேச,

“வேண்டாம் பச்சைக்கிளி. என்கிட்ட வாங்கிகட்டாத. செம காண்டுல இருக்கேன். உன்ன பால்டப்பின்னு நினைச்சேன்டா. ஆனா நீ இருக்க பாரு…”

“என்னாச்சு?. நான் என்ன பண்ணினேன்?…” என கேட்க ஒருநொடி துணுக்குற்றவள் பின் சுதாரித்து,

“என்ன என்னாச்சு? ஒண்ணுமே பண்ணலை தான் போ. இப்போ எதுக்கு கால் பண்ணின? கரடி கரடி…” மீண்டும் சண்டையிட,

“ஓஹ் உங்க ஆளு இருக்காரா? அதான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு கோவமா? ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லலாம்னு கால் பண்ணினேன். உங்களவர் சொன்னாரான்னு தெரியலையே…”

“விஷயத்தை சொல்லு வழவழன்னு பேசாம…” என,

“உங்க மேரேஜ் டேட்…”

“ஆமா தெரியும். இப்போ என்ன அதுக்கு?…” அவளின் சிடுசிடுப்பு ஏனென தெரியாமல்,

“இன்னைக்கு நேரமே சரியில்லை. நான் வைக்கிறேன். மேடம் எப்ப ரிலாக்ஸ் ஆவீங்களோ அப்போ பேசுங்க. இப்போ அத்தான்ட்ட குடுங்க…” என்று சொல்ல அஷ்மிதவிற்கு தான் மிகுந்த கஷ்டமாகிற்று.

அவன் மீது எத்தனை மரியாதையும் அன்பும் பாசமும் வைத்திருந்தாள். இப்படி செய்துவிட்டானே என்ற ஆற்றாமையில் பொசுங்கிகொண்டிருந்தாள் அஷ்மிதா.

விடுவிடுவென அறைக்குள் நுழைய இன்னமும் அப்படியே இருந்த அதிரூபனிடம் போனை நீட்ட யார் என்பதை போல பார்க்க பதில் சொல்லாமல் மொபைலை அவனின் கைகளில் திணித்தவள் துவராகவிற்கு ஏறிகொண்டிருக்கும் ட்ரிப்சை சரி செய்வதை போல் திரும்பிகொண்டாள்.

லைனில் சந்தோஷ் இருப்பதை கண்டுகொண்ட அதிரூபன் வேறு வழியின்றி எழுந்து வெளியே செல்ல அதற்காய் காத்திருந்ததை போல துவாரகாவின் அருகே வந்தாள் அஷ்மிதா.

“துவா, இங்க என்னை பாரும்மா…” மென்மையாய் அழைத்ததும் விழி உயர்த்தி நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.

“அம்மாட்ட போகனும். என்னை அனுப்பிடுங்க டாக்டர். இவங்களுக்கு தெரியாம அனுப்பிடுங்க ப்ளீஸ்…”

அதிரூபன் அமர்ந்திருந்த சேரை காட்டி தன்னிடம் யாசகம் கேட்பவளை போல கைக்கூப்பி பார்த்தவளை துயரம் தாளாமல் மார்போடு அணைத்துகொண்டாள் அஷ்மிதா.

“கண்டிப்பா அம்மாவை பார்க்கலாம். அம்மா எங்கன்னு சொல்லு. நான் உன்னை கூட்டிட்டு போறேன்…” சமாதானமாக பேசி அவளிடம் வார்த்தை வாங்க பார்க்க,

“பி.ஆர் ஹாஸ்…” சொல்லிகொண்டிருக்கும் பொழுதே அதிரூபன் வரும் அரவம் தெரிய வாயை இரு கைகளாலும் மூடிக்கொண்டாள் துவாரகா. அவளின் விழிகளில் அப்படி ஒரு உயிர் பயம்.

அவளின் செய்கைகளை செய்வதறியாது பார்த்திருந்த அஷ்மிதாவிற்கு ரத்தினசாமியிடம் நன்றாய் நான்கு கேள்விகள் கேட்டுவிடமாட்டோமா என்று பற்றிக்கொண்டு வந்தது.

அதிரூபன் உள்ளே வந்ததும் துவாரகாவின் நிலையை பார்த்து அவனின் உயிர் ஒருகணம் நின்று துடித்தது. அமைதியாய் வந்து அவள் அருகில் மிக அருகில் அமர்ந்தவன்,

“சொல்லு உன் அம்மா எங்கன்னு சொல்லு…” மொத்த ஆக்ரோஷத்தையும் முகத்தில் தேக்கி அடக்கப்பட்ட குரலில் கேட்க இல்லை என்பதை போல தலையசைத்தவளின் கண்கள் விடாமல் கங்கையை பொழிய அவனோ அங்கிருந்து நகர்வேனா என்று அமர்ந்திருந்தான்.

இதை கண்ட அஷ்மிதாவிற்கு துவாரகாவை காண காண பாவமாக இருந்தது. அதிரூபனை கன்னம்கன்னமாக அறைந்து தள்ளவேண்டும் என்ற வேகம் எழுந்தாலும் வழக்கம் போல,

“ம்ஹூம். இந்த ஜென்மத்துல நீ காதல் மன்னனாகவே முடியாது. தத்தி, தத்தி…” என்றவள்,

“பேஷன்ட் டயர்டாகிட்டாங்க. கொஞ்சநேரம் தூங்கட்டும். நீ படுத்துக்கமா…” என சொல்லி அவனை எழுந்துகொள்ள சொல்ல அசையாமல் அவனிருக்க அவளை காப்பாற்றிவிடும் வேகத்தில்,

“பெட் பெருசு தான். நீ இந்தபக்கமா நகர்ந்து படுத்துக்க. கண்ணை மூடி தூங்கு. அவன் தனியா பேசிட்டிருக்கட்டும்…”

அவனின் காதுபட சொல்லியவள் அங்கிருந்து சென்றுவிட மீண்டும் துவாரகாவின் முகத்தையே பார்க்க ஆரம்பித்தான் அதிரூபன்.

error: Content is protected !!