வீட்டிலிருந்து வெளியில் வந்த விஷால் கார்டனில் நின்றுகொண்டிருந்த சந்தோஷின் முதுகில் படாரென போட்டான்.
“ப்ச், எதுக்குடா அடிக்கிற? ராஸ்கல்…” அவன் கத்த,
“பெரியப்பாக்கிட்ட சொல்லவிடாம நீ எதுக்கு முந்திரிக்கொட்டையாட்டம் கதை சொன்ன? நாம சொல்லியிருந்தா அவரு எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரு? கெடுத்திட்டியே…” விஷால் சொல்ல,
“அங்க உன் பெரியப்பா மட்டுமா இருந்தாங்க? பத்மி அம்மாவும் தானே இருந்தாங்க. நாம பண்ணிட்டு வந்த காரியம் தெரிஞ்சா அவங்க சந்தோஷப்பட்டிருப்பாங்களா?…” என்றதும் அவன் அமைதியாக,
“நம்ம வீட்லயும் வயசுப்பொண்ணு இருக்கு விஷால்…” சந்தோஷ் பொறுமையாய் சொல்ல,
“யாரை யாரோட இணைக்கூட்டுற? கொன்னுடுவேன்டா. நம்ம பாப்புக்குட்டியும் அவளும் ஒண்ணா? நினைக்கவே கேவலமா இருக்கு…”
“யாரோ செஞ்ச வினைக்கு அந்த பொண்ணு ஏன் பொறுப்பாகனும்?. பாவம்டா. மனசாட்சியோட பேசுடா…”
“எனக்கு என் குடும்பத்தோட கௌரவம் தான் முக்கியம். அதை காப்பாத்த என்ன வேணும்னாலும் செய்வேன். பாவம் புண்ணியத்துக்கு இங்க இடமில்லை…” இரக்கமே இல்லாத ராட்சசனாய் விஷால் பேச,
“கௌரவம்ன்றது நாம பார்க்கற பார்வைல தான் இருக்கு. எந்தளவுக்கு கௌரவத்தை பெருசா நினைக்கிறயோ அந்த கௌரவத்தோட வாழற வாழ்க்கைல யாரோட பாவத்தோட சாபமும் இருக்ககூடாதுன்னு நான் நினைக்கிறேன். நமக்கு பின்னால நம்மோட சந்ததிகளோட சாம்ராஜ்யத்துக்கும் எந்த தீங்கும் நடந்திட கூடாது…”
சந்தோஷ் பேச பேச காதிருந்தும் செவிடனாய் விஷால் நிற்க இவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்பதை போல சலிப்பாய் திரும்ப,
“நீ என்ன சொன்னாலும் நான் இப்படித்தான்டா. என்னோட ரோல் மாடலே என் பெரியப்பா தான். அப்படி இருக்கும் போது அவரோட ஆசையை நிறைவேத்தி வைக்கத்தானே நான் நினைப்பேன்…”
“நான் பேசும் போது நீ செவிடாட்டம் இருந்தியே. இதைப்பத்தி நீ பேசறப்பவும் நான் செவிடுதான். போடா…” சந்தோஷ் முறுக்கிக்கொள்ள,
“மறந்தே போய்ட்டேன்…” விஷால் தலையில் அடிக்க,
“என்னடா? என்னாச்சு?…” பதறினான் சந்தோஷ்.
“பெரியப்பா இன்னும் இன்விடேஷன் வைக்க போகலை. அண்ணா வேற இன்னைக்கு அவங்க ப்ரெண்ட்ஸ இன்வைட் பண்ண போகனும்னு சொல்லியிருந்தாங்களே. அண்ணாட்ட இதை சொல்லனுமே…”
வேகமாய் தன்னுடைய மொபைலை எடுத்து அதிரூபனுக்கு அழைப்பு விட அதை பிடுங்கிய சந்தோஷ் அழைப்பை துண்டித்துவிட்டு,
“தூ, நீயெல்லாம் வெளில பேசாத. உன் பெரியப்பாதான் உனக்கு ரோல்மாடல் அப்டி இப்டின்னு வெட்டி பேச்சு தான். ஏன்டா வீட்ல என்ன நடக்குதுன்னு எங்க இருந்தாலும் உன் அண்ணாக்கு தெரியாம இருக்கபோறதில்லை. இதுல நீங்க கால் பண்ணி தகவல் சொல்ற அளவுக்கா இருக்காரு?…”
“ஆமால…” அசடு வழிய,
“போடா, போடா. இந்நேரம் மீட்டிங் தள்ளி வச்சிருக்கிறதும் தெரிஞ்சிருக்கும். அவர் மாமனார் இங்க வரதும் தெரிஞ்சிருக்கும். சி.எம்க்கு இன்விடேஷன் வச்சதும் தானாவே அவருக்கு தகவல் போகப்போகுது. ஓவரா சீன போட்டுட்டு இருக்க…”
விஷாலின் தலையில் அடித்து விளையாட இருவரும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு கார்டனை சுற்றி வந்தனர்.
கேட் திறக்கும் சப்தம் கேட்டு திரும்பி பார்க்க அஷ்மிதாவின் அப்பா வந்து இறங்கினார்.
“வாங்க அங்கிள்…” என்றபடி விஷால் வந்து அவருக்கு கைகுலுக்க சந்தோஷும் அவரை வரவேற்றான்.
ராஜாங்கம். பெயருக்கேற்றார் போல தொழில் வட்டாரத்திலும் ராஜாவே தான். அதனால் தான் தன்னைப்போலவே தொழில் துறையில் ராஜாங்கம் செய்யும் அதிரூபனை அவருக்கு பிடித்துப்போனது.
குடும்ப நண்பர்களாய் இருந்து வந்தவர்கள் இன்று ஒன்றுக்குள் ஒன்றாக போகின்றனர்.
வீட்டில் அனைவரிடமும் பேசிவிட்டு ரத்தினசாமியுடன் அலுவலக அறைக்குள் நுழைந்தவர் அரைமணிநேரம் கடந்தபின் தான் வெளியில் வந்தார்.
“அப்போ நான் புறப்படறேன் சம்பந்தி. வீட்ல பேசிட்டு சொல்லுங்க. நாம தலைவரை பார்க்க போகலாம்…” என சொல்லி அவர்களிடம் விடைபெற மற்றவர்களும் வழியனுப்பிவைத்தனர்.
ரத்தினசாமியின் முகம் தெளிவில்லாமல் இருக்க பத்மினி பிள்ளைகளை பார்க்க அனைவரும் அங்கிருந்து களைந்து சென்றனர்.
“இப்போ சொல்லுங்க, என்ன விஷயம்?…”பத்மினி அவr அருகில் வந்து நிற்க,
“ஏதாவது பிரச்சனையா?…” அவரின் அமைதி கண்டு மீண்டும் தானே கேட்க இல்லையென தலையசைத்தவர்,
“கல்யாணத்தை இன்னும் பத்துநாள்ல வச்சுக்க முடியுமான்னு கேட்கிறார். என்ன சொல்லன்னு தெரியலை…”
“பத்துநாள்ல எப்படி? என்னவாம் திடீர்ன்னு?…”
“எனக்கும் தெரியலை பத்மினி. ஏதோ ஜாதகம், நேரம் காலம்னு சொல்றார்…”
“நல்ல முகூர்த்தநேரமா தானே குறிச்சிருக்கோம். பத்திரிக்கை அடிச்சு குலசாமிக்கிட்ட எல்லாம் வச்சு பொங்கல் வச்சு சாமி கும்பிட்டாச்சு. இப்போ வந்து மாத்தினா?…” என்ற பத்மினி,
“புள்ளைக்கு பேசலாம். அவன் தெளிவா சொல்லுவான்…”
“அதிபன்கிட்ட பேசியாச்சுமா. அவனுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையாம். நமக்கு சம்மதம்னா அவனுக்கும் ஓகே தானாம்…”
ஆம், ரத்தினசாமிக்கு மட்டும் அவரின் மகன் அதிபன். அனைத்திற்கும் அதிபதி அவர் மகன் என்ற பெருமை என்றும் உண்டு அவருக்கு. அதிபன் என்றே வாய் நிறைய அழைத்து அழைத்து பூரிப்பார்.
“நமக்கு பத்துநாள்ல கல்யாணத்தை நடத்துறது பெரியவிஷயமில்லைங்க…”
“ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க நம்மை கண்ட்ரோல் பண்ணக்கூடாது இல்லையா? அவங்க ப்ராப்ளம் அவங்களுக்கு. நமக்கும் நேரம் வேண்டாமா? எதையும் புரிஞ்சுக்காம இப்படி வந்து மாத்தி மாத்தி பேசினா என்ன அர்த்தம்?…”
பத்மினி பேசுவதை அமைதியாய் கேட்டவர் பதில்சொல்லாமல் மௌனம் காக்க,
“நான் இப்போவே குறைச்சு சொல்றேன்னு நினைக்காதீங்க. எங்கேஜ்மென்ட் தனியா வேண்டாம்னு சொன்னதுக்கு அவங்க கேட்கலை. வச்சுட்டாங்க…”
“நிச்சயத்துல இருந்து இருபதுநாள்ல ஒரு முகூர்த்தம் நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு அது சரிப்பட்டு வராதுன்னு சொல்லி அவங்க ஜோசியர்ட்ட பேசி மூணுமாசம் கழிச்சு வர இந்த முகூர்த்தத்தை முடிவு பண்ணினதும் அவங்கதான்…”
“இப்போ அதுவும் வேண்டாம்னு அடிச்ச பத்திரிக்கையை தூக்கிபோட்டுட்டு பத்துநாள்ல கல்யாணம் செய்யலாம்னு சொன்னா என்னதான் நினைச்சிட்டு இருக்காங்க? அந்த பொண்ணுக்காக நான் அமைதியா இருக்கேன். அவ்வளோ தான்…”
பத்மினி பொருமிவிட ரத்தினசாமியின் மொபைல் அடிக்க எடுத்து பார்த்தவர் பத்மினி. ராஜாங்கத்திடமிருந்து தான் அழைப்பு.
“நீங்களே பேசுங்க…” சலித்த குரலில் சொல்ல ஒருவித அழுத்தத்துடன் மனைவியை பார்த்துக்கொண்டே மொபைலை காதில் பொருத்தினார்.
“சம்பந்தி இன்விடேஷன் அடிக்க குடுத்தாச்சு. டிஸைன் உங்க வாட்ஸ் ஆப்க்கு அனுப்பிருக்கேன். ஈவ்னிங் வீட்டுக்கே வந்திரும். சி.எம் அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன். நைட் டின்னருக்கு வீட்டுக்கே வர சொல்லிட்டார். ரெடியா இருங்க…”
தகவல் சொல்வதை போல சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வைத்துவிட ரத்தினசாமிக்கு தான் முட்டிகொள்ளலாம் போல வந்தது.