மின்னல் அதனின் மகனோ – 3 (1)

மின்னல் – 3

            ரத்தினசாமியின் முகத்தில் இருந்த குழப்பம் கண்டு அவரருகே வந்த பத்மினி,

“இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  ஏன் உங்க முகம் இவ்வளவு குழப்பமா இருக்கு?…” என கேட்க,

“ப்ச், சம்பந்தி கால் பண்ணியிருந்தார் பத்மினி. வீட்டுக்கு வந்து ஏதோ பேசனும்னு சொன்னார்…”

“அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்?…”

“இல்லை. நேரா சி.எம் பார்க்க போறதா தான் ப்ளான். அவரை இன்வைட் செய்யறதா. இவரும் நேரா அங்க தான் வரதா இருந்தார். முதல் பத்திரிக்கையை அவருக்கு வைச்சிட்டு சொந்தகாரங்களுக்கு, கட்சி ஆளுங்களுக்கு வைக்கனும்னு ரெண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு பண்ணினோம்…”

“அதுக்குன்ன? இப்ப அங்க தானே கிளம்பி இருந்தீங்க. ஒருவேளை அவர் இங்க வந்து உங்களோட சேர்ந்தே போகலாம்னு டிஸைட் பண்ணிருப்பாரோ என்னவோ?…” பத்மினி யூகித்தவராக சொல்ல,

“இல்லைமா, அவர் அப்படி சொல்லலை. கல்யாணத்தை பத்தி ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டும். அதைபத்தி பேசத்தான் வரேன். சி.எம் மீட்டிங் ஈவ்னிங் கொஞ்சம் தள்ளிவைக்க சொல்லி அவர் பி.ஏ.ட்ட பேசிட்டாராம். அதுதான் ஏன்னு தெரியலை…”

பத்மினிக்கும் இந்த தகவல் புதிது. கண்டிப்பாக சில நிமிடங்களுக்கு முன்பு தான் வந்திருக்கவேண்டும் இந்த தகவல் என நினைத்தவர்,

“பசங்க வந்துட்டாங்க. ட்ரிப் கேன்சல் ஆகிடுச்சு போல…”

“அப்படியா? நான் பார்க்கலையே?…” என சொல்லியபடி அறையை விட்டு வெளியே வர,

“எல்லாம் ப்ரெஷ் ஆக போய்ருக்கானுங்க. நீங்க வந்து சாப்பிடுங்க. ஸ்வேதா வெய்ட் பண்ணிட்டு இருக்கா…”

பத்மினியோடு பேசிக்கொண்டே டைனிங் ஹால் வந்து அமர லிப்டில் இருந்து வைத்தியநாதனும் அன்னபூரணியும் வந்தனர். வேகமாய் எழுந்தவர்,

“பூரணிம்மா அண்ணனை கூப்பிட்டிருக்க வேண்டியதுதானேமா…” என தன் தங்கையை நோக்கி வேகமாய் வந்தவர் வீல்சேரை தன் கைகளுக்குள் கொண்டுவந்து வைத்தியநாதனை அழைத்துவந்தார்.

ஆம், வைத்தியநாதனின் கால்கள் செயலிழந்து போனது சில மாதங்களுக்கு முன்பு தான்.

“பத்மினி, பூரணிக்கு தட்டை எடுத்து வச்சு பரிமாறு. மாப்பிள்ளைக்கும் வைம்மா…” என்று பூரணியின் அருகில் அமர்ந்துகொள்ள புன்னகை மாறாமல் அவர் சொல்லியதை செய்தவர்,

“உங்களுக்கு பாப்பு ஊத்தப்பம் செய்திட்டிருக்கா. உங்களை வெய்ட் பண்ண சொன்னா…” என சொல்லி தனக்கும் தட்டுவைத்துக்கொண்டு அமர்ந்துவிட,

“மாமா…” என்ற கூவலுடன் ஹாட்பாக்ஸை எடுத்துக்கொண்டு ஓடிவர,

“இவளுக்கு நடக்கவே தெரியாது போல. எப்ப பார்த்தாலும் பறந்துட்டு வரது…” என்று  சொல்லிக்கொண்டே விஷால் வந்து சேர அவனுடன் சந்தோஷும், அர்னவும் வந்தனர்.

“நீ மட்டும் எப்ப பார்த்தாலும் வானரப்படையோட சுத்துற. நான் கேட்டேனா?…” ஸ்வேதா அவனிடம் எகிற,

“பாப்புக்குட்டி ஏன் டென்ஷன் ஆகற? அவனுங்க கிடக்காங்க விடுடா…” அர்னவ் அவளை சமாதானம் செய்ய கேலிப்புன்னகையோடு மற்றவர்கள் பார்த்தனர்.

“மாமா ஆனியன் ஊத்தப்பம் நானே உங்களுக்கு செஞ்சேன்…” ரத்தினசாமியின் தட்டில் வைக்க தங்கை மகளின் அன்பில் அவளுக்கு ஓர் வாய் ஊட்டியவர்,

“நீயும் உட்கார்ந்து சாப்பிட்டு குட்டிமா…” என சொல்லி தன் தங்கையை கவனிக்க ஆரம்பித்தார்.

வழக்கமாக நடக்கும் நிகழ்வு என்றாலும் இன்றைக்கும் ரத்தினசாமி அன்னபூரணி அன்பில் பத்மினி வியந்து தான் நிற்பார்.

இத்தனை வயதாகியும் இவர்களின் பாசம் மாறாததை கண்டு பெருமையாகவும் இருக்கும்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து ஹாலிற்கு வர விஷால் வந்து ரத்தினசாமியின் முன் நிற்க,

“என்னப்பா ஏதாவது பேசனுமா?…”என்றார்.

“ஆமாம் பெரியப்பா. நீங்க இன்னைக்கு இன்விடேஷன் குடுக்க கிளம்பறதா இருந்ததே. நீங்க குடுத்திட்டு வந்துட்டா நாங்களும் எங்க ப்ரெண்ட்ஸ் சர்கிள்ல குடுக்க ஆரம்பிப்போம். பத்மினி அம்மாவும் இங்க உள்ளூர் ரிலேஷன்ஸ் வீட்டுக்கு அழைக்க என்னை வர சொல்லியிருக்காங்க…”

தகவலாய் ஒவ்வொன்றாய் பேசியவனை பார்த்து புன்னகைத்தவர்,

“இதுக்கு எப்போ கிளம்பறேங்கன்னே கேட்டிருக்கலாம் நீ…” என்று சிரிக்க,

“உங்க பிள்ளைங்க உங்கட்ட கேள்வின்னு கேட்டிருவாங்களா என்ன?…” என சொல்லியபடி பத்மினியும் வந்து சேர பெருமையாய் தன் பிள்ளைகளை பார்த்தார் அவர்.

“போகனும்பா. சம்பந்தி இங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டு சேர்ந்து போவோம்னு சொல்லிட்டார். அதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டுருக்கேன்…” என்று சொல்லி,

“நீங்க ஏன் ட்ரிப் கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கீங்க? என்னாச்சு?…” என்றதும் மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க அன்னபூரணி சந்தோஷை பார்க்க அவனோ யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்லை.

விஷாலுக்கு நடந்ததை தன் பெரியப்பாவிடம் பகிர்ந்துகொள்ளும் ஆவல் கிளர்ந்தாலும் அனைவரின் முன்பும் சொல்ல தயக்கமாக இருந்தது.

அதுவும் அவளை கோட்டைவிட்டு விட்டு இப்படி வந்திருக்கிறாயே என கேட்டால் என்ன பதில் சொல்வது என்றும் யோசனையாக இருந்தது.

“என்னடா பதில் சொல்லுங்க. ஏன் இப்டி நிக்கறீங்க?…” அன்னபூரணி அதட்ட,

“மாமா, போன இடத்தில ப்ரெண்ட்ஸ் கூட கொஞ்சம் கைகலப்பாகிடுச்சு. மூட் அப்செட் அதான். விஷால் கிளம்பலாம்னு சொல்லிட்டான்…” சந்தோஷ் சட்டென சொல்லிவிட விஷால் அவனை முறைக்க,

“என்ன உங்கமேல கை வச்சானுங்களா? எவ்வளவு தைரியம் இருக்கனும் அவனுங்களுக்கு. சும்மாவாடா விட்டீங்க? யார் மேல யார் கை வைக்கிறது?…”

அமைதியாய் அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த ரத்தினசாமி அடிதடி என அறிந்ததும் வேங்கையாய் எழுந்துநின்று வேஷ்டியை மடித்துக்கட்ட பத்மினி தான் சமாதானம் செய்யவேண்டியதாகிற்று.

“அவங்க பசங்களுக்குள்ள சண்டை. இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாளைக்கே சேர்ந்துப்பானுங்க. இதை எல்லாம்  பெருசுபடுத்துவீங்களா?…”

ரத்தினசாமியிடம் சொல்லி விஷாலுக்கு கண்ணை காட்ட அவனும் புரிந்துகொண்டதற்கு ஏற்ப,

“ஆமா பெரியப்பா. சின்ன சண்டை தான். நாங்க பார்த்துக்கறோம்…”

“என்னடா சின்ன சண்டை? ஒரு தராதரம் வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் நமக்குன்னு இருக்கிற மரியாதையை எந்த இடத்திலையும் விட்டுகுடுக்க கூடாது. தரமில்லாம தொட்டவன தரையோடு மண்ணாக்காம இப்படி வந்து நிப்பீங்களா?…”

அவரின் கர்ஜனையில் அனைவருமே அமைதியாய் நிற்க சில வினாடிகள் கோபம் மட்டுபடாமல் தன் தொடையில் வேகமாய் அடித்துக்கொள்ள ஸ்வேதா தான் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவர் தண்ணீரை கொடுக்கும் பொழுதே அவளின் கை நடுங்கியதை கண்டு ஒரு பெருமூச்சுடன் வாங்கி குடித்துவிட்டு அவளை தன்னுடன் அமர்த்தி தோளில் சாய்த்துக்கொண்டார்.

“ஏன்டா பாப்புக்குட்டி பயமா இருக்கா மாமாவை பார்த்து?…” என ஆறுதலாய் அவளை வருட பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டிவைக்க தன்னை நினைத்து எரிச்சல்கொண்டார் ரத்தினசாமி.

எங்கிருந்துதான் தனக்கு இத்தனை கோபம் வருகிறதோ? என நினைத்தவர் பத்மினியை பார்த்து,

“பசங்களுக்கு காயம் எதுவும் இருக்கான்னு பாருமா. நம்ம டாக்டரை வர சொல்லிடு…” என்று சொல்லி,

“நீயும் போடா பாப்புக்குட்டி…” அவளையும் அனுப்பிவிட்டு தன் அலுவலக அறைக்குள் நுழைந்துகொண்டார்.

error: Content is protected !!