மின்னல் அதனின் மகனோ – 22 (2)

“அதுதான் மாமாக்கும் தெரியாம கிளம்பிட்டேன். உங்கட்ட சொல்லிட்டார்ன்னா. ஆனா நானே இப்படி ஆகும்னு எதிர்பார்க்கலை டாக்டர். கிளம்பி ஆட்டோல தான் வந்தேன். நீங்க என்னை எப்பவும் கூட்டிட்டு போற மால்க்கு போகலாம்னு. போய்ட்டிருக்கும் போதே ஆட்டோ ரிப்பேர்…”

“வேற ஆட்டோல மாத்திவிட்டாங்க. அதுல ஏறும்போது மொபைல் கீழே விழுந்து நொறுங்கிடுச்சு. அதுவே ஒரு மாதிரி ஆகிடுச்சு எனக்கு. அது என்னவோ சந்துபொந்தா போச்சா. அந்த ஏரியா என்னவோ ஒரு ஸ்மெல். வாமிட் வந்துருச்சு…”

“வாமிட் பண்ணிட்டு தண்ணி வாங்கலாம்னு ஆட்டோ விட்டு இறங்க பார்த்தப்ப ஏதோ லாரி வேகமா மோதுற மாதிரி வந்துச்சு. அவ்வளவு தான். செத்தோம்னு  பயத்துல மயங்கிட்டேன் போல. ஆட்டோ அண்ணா தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க. காலையில தான் முழிச்சேன்…”

பாவமாய் அஷ்மிதாவிடம் சொல்லிக்கொண்டிருக்க அதிரூபன் பார்த்தபடி இருந்தான்.

“உடனே போய் கிப்ட் வாங்கனும்னு என்ன இருக்கு? அப்படி என்ன அவசரம் உனக்கு?…” என அஷ்மிதா கடிய,

“அதி, இவங்க தான் அந்த ஆட்டோ ட்ரைவர் வொய்ப். இவங்க தான் துணைக்கு இருந்திருக்காங்க நம்ம புள்ளைக்கு…” சங்கரன் சொல்ல அவருக்கு நன்றி சொல்ல கூட அவன் வாயை திறக்கவில்லை.

“நீங்க ஒன்னும் நினைக்காதீங்கம்மா. அவன் ரொம்ப பயந்துட்டான். நேத்து இவளை காணோம்னு ரொம்பவே தேடி அலைஞ்சதுல…” அஷ்மிதா அந்தம்மாவிடம் விளக்கம் சொல்ல,

“அட விடும்மா, நான் என்ன நினைக்க போறேன்? இந்த புள்ளை ஆட்டோலையே வாந்தி பண்ணி மயங்கிடுச்சு. எம்வூட்டுக்காரருக்கு என்ன பண்ணன்னு தெரியாம வீட்டாண்ட இத்த இட்டுண்டு வந்துட்டாரு. மயக்கம் வேற தெளியலையா…”

“ரொம்ப ரொம்ப நன்றிங்கம்மா. உங்க உதவியை நாங்க எப்பவுமே மறக்கமாட்டோம்…” என சங்கரன் சொல்ல,

“அட என்னங்கய்யா? போன் நம்பர் தெரிஞ்சிருந்தா நேத்தே தகவல் சொல்லியிருப்போம். வேற எங்கயும் சிக்கிட கூடாதுல. காலம் கெட்டுக்கிடக்கு. அதுதான் இந்த புள்ளையா எழுந்ததும் கேட்டுப்போம்னு இருந்தோம்…” என சொல்ல,

“ஏன் துவா, கிளம்பறப்ப பர்ஸ் எடுத்தியா?…” என அஷ்மி கேட்க,

“ஆமா, ஆனா…” என அவள் யோசிக்க,

“இருக்குதுங்கம்மா. இந்தாங்க…” என அதையும் அந்த பெண்மணி தந்து,

“இதுல அட்ரெஸ் எதுவும் இல்லைங்க. நான் நேத்தே தேடிப்பார்த்துட்டேன். வெறும் காசு மட்டும் தான் இருந்துச்சு…” என கேட்காத தகவலையும் சொல்ல உண்மையில் நெகிழ்ந்தே போனான் அதிரூபன்.

“சித்தப்பா இவங்களுக்கு…” என சொல்ல,

“நான் பார்த்துக்கறேன் அதி…” என்று சொல்லி சங்கரனின் பர்ஸை எடுக்க,

“அட பணம்கிணம் கொடுத்து செஞ்ச உதவிய அசிங்கபடுத்தாதீங்க ஐயா. அந்த புள்ளையை நல்லா பார்த்துக்கங்க போதும். மாசமா இருக்கற பொண்ணு பதவிசா சூதானமா இருக்க வேண்டாமா?…” என சொல்லி அங்கிருந்து கிளம்பியும்விட்டார்.

அவர் சொல்லியதை நம்பமுடியாமல் துவாரகா பார்க்க அதிபனின் முகத்தில் எந்த உணர்வுமே இல்லாமல் இருக்க,

“மாமா?…” உணர்ச்சிவயப்பட்ட குரலில் துவாரகா கட்டிலில் இருந்து இறங்கி நிற்க இருக்கும் இடம் மறந்து அவளை கட்டிக்கொண்டான் அதிபன்.

“செத்துட்டேன்டி. உன்னை பார்க்கற வரைக்கும் நான் நானா இல்லை. முன்ன என்னை விட்டு தள்ளி நின்னு கொன்ன. இப்ப என்னை சோதிச்சு பார்த்து கொல்ற…” என புலம்ப அவனின் பிதற்றல்கள் அனைத்தையும் ஒருவித ஆனந்தத்துடன் தன்னுள் கிரகித்தாள்.

நொடிக்கு நொடி அவனின் அழுத்தம் கூடிக்கொண்டே போக மூச்சுக்கு திணறியவள்,

“மாமா, பாப்பா…” என சொல்லியதும் தான் விட்டான்.

“பேபி இருக்கறதால தப்பிச்ச. இல்லைனா?…” என அவளின் கன்னத்தை கிள்ள,

“இல்லைனா?…” துவாரகாவும் அவனை சீண்ட,

“அட ராமா இந்த கொசுத்தொல்லைங்க தொல்லை தாங்க முடியலை…” என தலையிலடித்துக்கொள்ள அவளை பார்த்து சிரித்தான் அதிரூபன்.

“இந்த சிரிப்பை பார்த்து எத்தனை மணி நேரம் ஆச்சு. அதி உன்னோட இன்னொரு முகத்தை நான் பார்த்துட்டேன்டா…” என கேலி பேசியவள்,

“ஆமா துவா, அதி அப்பா உனக்கு கால் பண்ணினாரே, நீ எதுவும் பேசலையா?…” என அஷ்மி கேட்க,

“பண்ணினார், பண்ணினார். அவர் ஹலோ சொல்லி ஆரம்பிக்கும் போதே குரலை கேட்டு போனை கட் பண்ணாம டீப்பாய்ல வச்சுட்டேன். அவர் பேச்சை யார் கேட்க? தனியா பேசட்டும்னு விட்டுட்டேன்…” அசால்ட்டாய் துவா சொல்ல ஆவென வாயை பிளந்தாள் அஷ்மி.

அதை கேட்டுக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு சட்டென சிரிப்பு வந்துவிட்டது.

“அடப்பாவி மனுஷா மயில்சாமி. உனக்கு இந்த அவமானம் தேவையா? யாருமே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துன. யாரை மிரட்டனும்னு நினைச்சியோ அவ உன் பேச்சை கூட கேட்கலையாம்…” என அஷ்மி புலம்பி சிரிக்க அதிபன் மற்றவர்களை கண்ணை காண்பித்தான்.

சங்கரனுக்குமே சிரிப்புதான். ஆனாலும் மறைத்துக்கொண்டவர் துவாரகாவிடம்,

“இனி தனியா எங்கயும் போகாதம்மா. உடம்பை பார்த்துக்கோ. நீ இல்லைனா எங்களுக்கு எங்க பிள்ளை இல்லை. இதை மனசுல வச்சுக்கோ…” என சொல்லி அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார்.

அவளிடம் அதையும் கூட பதமாய் சொல்ல நினைத்து ஒரு அதட்டலுடன் தான் சொன்னார். அது அவரின் சுபாவம். அன்பு கூட அதட்டலாக தான் வெளிப்படும்.

துவாரகா சங்கரனின் பேச்சை கேட்டாலும் முகத்தில் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை.

அவருக்கு உடல்மொழியில் கூட பதில் தரவில்லை. முகத்தை அவர்கள் இருக்கும் திசையில் கூட திருப்பவில்லை.

“அதி உங்கப்பா செஞ்சது எப்படி இருக்கு தெரியுமா? டேய் செவல தாவுடா தாவுன்ன மாதிரி இருக்கு. என்னவோ தாட்பூட்ன்னு குதிச்சதுல இந்த புள்ளை பயந்து போய் எங்கையாச்சும் போயிருக்கும்னு பில்டப் எல்லாம் குடுத்தாரு. இனி எங்க தாவ? தவக்கத்தான் செய்யனும். தமாசு. தமாசு…”

என்று சொல்லி இன்னும் இன்னும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் அஷ்மிதா.

விஷாலுக்கு அவளின் சிரிப்பை பார்க்கவேண்டும் என்று ஆவல் பிறந்தாலும் பார்வையை அவள் புறம் திருப்பவே பயந்தான்.

ஆனாலும் அனைவருக்குமே அஷ்மியின் கலாயில் அப்படி ஒரு புன்னகை. அத்தனை நேரம் இருந்த அழுத்தம் மறைந்து அதிரூபனும் கூட வாய்விட்டு சிரித்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே இருக்க. கிளம்பலாமா?…” என அர்னவ் கேட்க,

“ஹ்ம்ம் போகலாம் பசங்களா…” என்றவன் துவாரகாவை தன் கைவளைவில் வைத்துக்கொண்டு முன்னே நடக்க விஷால் அங்கு இருந்த செவிலி பெண்ணிடம் துவாரகாவை கவனித்துக்கொண்டதற்கு கணிசமான தொகையை கொடுத்துவிட்டு நன்றி சொல்லி கிளம்பினான்.

அதை பார்த்த துவாரகாவினுள் கசந்த முறுவல். சிறுத்தை தன் புள்ளிகளை என்றும் மாற்றிகொள்வதில்லை என நினைத்தாள்.

இவர்களின் இந்த திடீர் மாற்றம் என்னிடம் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட போவதில்லை என உறுதிகொண்டாள்.

“அதி, நீ என்னோட வந்திரு. உன் காரை உன்னோட பாசமலர்கள் ஓட்டிட்டு வரட்டும்…” என சொல்லி தன் காரை நோக்கி செல்ல அதிபன் பேசும் முன்பே,

“நீங்க கிளம்புங்க அண்ணா. நாங்க வந்திடறோம்…” என விஷால் சொல்லவும் சந்தோஷ் அதிபனின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அதிபனுடன் அஷ்மிதாவின் காரில் ஏறிய துவாரகா முதல்நாள் நடந்ததை கேட்க அஷ்மிதா சுவாரஸியம் குறையாமல் நடந்ததை அவளிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

விழிகள் விரிய அவள் சொல்ல சொல்ல துவாரகாவிற்கு ஆச்சரியம் தாளவில்லை. அதிபன் ரத்தினசாமியின் சட்டையை பற்றிவிட்டானா? என திகைத்துப்போனாள்.

error: Content is protected !!