மின்னல் – 22
“மயிலு உன் மருமவ கிடைச்சுட்டா…” என்கிற அஷ்மிதாவின் குரலை இப்பொழுது நன்றாகவே இனம் கண்டுகொண்டார் ரத்தினசாமி.
அதை விட அவள் சொல்லிய செய்தியில் நெஞ்சே வெடித்துவிடும் போல் ஆனது.
விடியற்காலையில் ஒரு நல்ல செய்தியை எதிர்பார்த்து காத்திருக்க இப்படி ஒரு செய்தியை அவர் நினைத்தும் பார்க்கவில்லை.
அஷ்மிதாவிடம் வாய் கொடுத்தால் இன்னமும் ஏதாவது பேசுவாள் என நினைத்து போனை கட் செய்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம்? என யோசிக்க ஆரம்பித்தார்.
வேகமாய் துவாரகாவை தேட சொல்லிய ஆளுக்கு போன் செய்தவர் ஏகவசனத்தில் நல்லவார்த்தைகளை கொண்டு அர்ச்சிக்க ஆரம்பித்தார்.
“அவளை என் பிள்ளை கண்ணுல படாம பார்த்துக்க சொன்னா கோட்டை விட்டுட்டு நிக்கிறேங்களேடா தடியனுங்களா?…”
“….”
“இப்போதைக்கு ஒன்னும் செய்ய வேண்டாம். நானே நேரம் பார்த்து சொல்றேன்…” என பேசி முடித்தவருக்கு ஒருவிதத்தில் திருப்தி முகத்தில் கூடியது.
தான் மிரட்டிய மிரட்டலுக்கு பலன் இருந்திருக்கிறது தானே? அன்று அவள் பேசியது ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் தான்.
அவளுக்காவது துணிச்சல் வருவதாவது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் அவளை பயம்காட்டியே அதிபனை விட்டு ஒரேடியாக விலக வைத்துவிடவேண்டும். என நினைத்தார்.
“என்னையவா எதிர்த்து பேசின? கை ஓங்கின? உன்னை ஒரு ராத்திரிக்கு எப்படி ஓடவிட்டேன். ரத்தினசாமினா சும்மாவா?…” என தன் மீசையை திமிராய் நீவி விட,
“ஆமா கண்டிப்பா நீங்க பெரிய ஆளு தான். ஒத்துக்கிட்டு தான் ஆகனும். நான் ஒத்துக்கறேன். ஆனா இனியும் நீங்க இப்படி செய்ய நான் பார்த்திட்டு இருக்க போறதில்லை…”
அவரின் பின்னால் இருந்து அன்னபூரணியின் குரல் கேட்க தூக்கிவாரி போட எழுந்து திரும்பினார்.
தன் தங்கையின் முகத்திலிருந்தே அனைத்தையும் அவர் கேட்டிருக்கிறார் என்பது புரிந்துபோனது ரத்தினசாமிக்கு.
யாரும் கேட்டுவிட கூடாது என்று தானே தோட்டத்தில் வந்து பேசியது. இதையும் கேட்டுவிட்டாரே என உண்மையில் பயந்துபோய் பார்த்தார் அன்னபூரணியை.
“பூரணிம்மா, நான் வந்து…”
“போதும் அண்ணே, இனியும் உங்களை நம்ப தயாரா இல்லை. ஏதோ என் மேல உள்ள பாசத்துல தான் இதையெல்லாம் பன்றீங்கன்னு நினைச்சேன். ஆனா பெத்த புள்ளையோட எதிர்காலத்தை விட அந்த பொண்ணு மேல உள்ள பகை உங்களுக்கு பெருசா தெரிஞ்சதுனா இதுக்கு பேர் பாசம் இல்லை அண்ணே. வெறி…”
“அப்படி சொல்லாதடா பூரணி. அண்ணா உன்னோட நிம்மதிக்கு தான் இப்படி பண்ணினேன்…” அவரருகில் வர பார்க்க பின்னால் நகர்ந்த அன்னபூரணி,
“எனக்கு சத்தியம் பண்ணுங்க. உங்களை வேற எதைக்கொண்டும் கட்டிவைக்க முடியாது. ம்ம் சத்தியம் பண்ணுறீங்களா? இல்லை அதிபன் சொன்ன மாதிரி நான் கண்காணாம போயிடவா?. நித்தம் நித்தம் துவாவுக்கு நீங்க என்ன குடைச்சல் குடுப்பீங்களோன்னு பயந்து பயந்து இருக்கிறத விட எதுவுமே தெரியாம எங்கையாவது போய் பிச்சை எடுத்து வாழ்ந்துப்பேன்…”
“பூரணிம்மா அப்படியெல்லாம் பேசாதம்மா. எங்கம்மாடா நீ…” அவர் கெஞ்ச,
“சத்தியம் செய்ய முடியுமா? முடியாதா?….” என கேட்டும் அவர் தயங்க,
“அப்போ நான் உங்க எல்லாரையும் விட்டு போனா பரவாயில்லைன்னு நினைக்கறீங்கள? சந்தோஷம். நான் போறேன்…” என்றவர் ரத்தினசாமியின் கையை தட்டிவிட்டு நடக்க வேகமாய் அவரின் முன்னே வந்த ரத்தினசாமி,
“சத்தியம்மா, பூரணிம்மா சத்தியமா இனி அவளை எதுவும் செய்யனும்னு நினைக்கவே மாட்டேன். சத்தியம். சத்தியம். போய்டாதம்மா. சத்தியமா சொல்றேன் பூரணிம்மா. சத்தியமா. சத்தியமா சொல்றேன்…”
அன்னபூரணி சிலையாய் நிற்க அவரின் தலையில் அடித்து நூறு சத்தியம் செய்தார் ரத்தினசாமி.
அவருக்கு தங்கையை விட்டு இருக்கமுடியாது. அவரின் பலவீனம் கொண்டே அன்னபூரணி சரியாய் விலங்கு பூட்டினார்.
இனி துவாரகாவிற்கு தானாக கூட எதுவும் நடந்துவிட விடமாட்டார் ரத்தினசாமி. அப்படி நடந்து அது தன்னால் தானோ என தங்கை நினைத்துவிட்டு தன்னை பிரிந்துவிட்டால்?
குருட்டுத்தனமான பாசம். அதிலும் தங்கையிடம் தன் தாயை காண்பவர். அவரை இழந்து தான் அகிலவேணியை பழி தீர்க்க வேண்டுமா? நிச்சயம் கிடையாது அவருக்கு.
“அண்ணன் தான் சத்தியம் செஞ்சுட்டேன்ல பேசும்மா பூரணிம்மா…” என கெஞ்ச,
“இனி நீங்க நடந்துக்கறதை பொறுத்துதான் உங்ககிட்ட நான் பேசனுமா வேண்டாமான்னு முடிவு பண்ணனும். எனக்கு என் புருஷன் முக்கியம். அவருக்கு அவர் பொண்ணு முக்கியம். அவருக்கு எது விருப்பமோ அதுதான் எனக்கும். பார்த்து நடந்துக்கங்க…” என்றவர் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
தளர்ந்து போய் அமர்ந்துவிட்டார் ரத்தினசாமி. இனி தன் தங்கைக்காக துவாரகாவை சகித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை அறவே வெறுத்து போனார்.
அனைவரும் அந்த குப்பத்தில் உள்ள சிறிய கிளினிக்கில் அமர்ந்திருந்தனர். சிறிய வீடு போல இருந்த அந்த க்ளினிக் மூன்றே அறைகளை கொண்டு இருந்தது. அந்த இடமே மிக குறுக்கலான இடமாக இருந்தது.
துவாரகாவிடமிருந்து போன் வந்ததும் அரக்கபரக்க அங்கே சென்று பார்க்க காபியை குடித்துக்கொண்டிருந்தாள் துவாரகா. பக்கத்தில் ஒரு வயதான அம்மா உடன் இருந்தார்.
வந்ததிலிருந்து இன்னும் அவளிடம் எதுவும் பேசாமல் இருக்க அவளோ கர்மசிரத்தையாக காபியை உறிஞ்சிக்கொண்டிருந்தாள்.
அவளையே வைத்த கண் வாங்காமல் அதிரூபன் பார்த்துக்கொண்டிருக்க அஷ்மிதா கன்னத்தில் கை வைத்து பார்த்தாள் இருவரையும்.
மற்றவர்கள் அங்கிருந்த ஆட்களிடம் துவாரகா எப்படி இங்கு வந்தாள் என விசாரித்துக்கொண்டிருந்தனர்.
மிகவும் பசியில் இருந்திருப்பாள் போலும். வேகமாய் இரண்டு காபியை குடித்து முடித்து கீழே வைத்தவள்,
“ஏன் மாமா? வர இவ்வளோ நேரமா? எப்ப கால் பண்ணினேன்? இப்பதான் வந்திருக்கீங்க…” என உதட்டை பிதுக்க பதில் பேசும் நிலையில் அதிரூபன் இல்லை.
துவாரகாவை பார்த்தது கனவில்லையே என்னும் அச்சத்தில் இருந்து இன்னும் வெளிவராமல் அப்படியே தான் அவளை விழிகளுக்குள் நிரப்பிக்கொண்டிருந்தான்.
எங்கே இமை சிமிட்டினால் கலைந்து சென்றுவிடுவாளோ என்கிற அளவுக்கு அவனுள்ளம் பாதிக்கப்பட்டிருந்தது. இமைக்காது அவளையே பார்த்திருக்க,
“ஏன் மாமா எல்லாரும் வந்திருக்காங்க? என்னாச்சு?…” என கிசுகிசுப்பாக கேட்டவள்,
“நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? நல்லவேளையா அந்தம்மா இன்னொரு அண்ணா எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க. இல்லைனா என்னவாகியிருக்குமோ? பயந்துட்டேன்…” என்று சொல்ல,
“அம்மா தாயே, நீ பயந்தது போதும். எங்களை நல்லா பயங்காட்டிட்ட. ஏன் சொல்லாம கிளம்பின? எதுக்கு கார் கூட எடுத்துக்காம புறப்பட்ட? எங்களை இப்படி சுத்தல்ல விட்டுட்டு நீ பாட்டுக்கு நிம்மதியா இங்க வந்து படுத்துட்ட…”
அஷ்மிதா அவளிடம் கடிந்துகொள்ள அவளின் சத்தம் கேட்டு மற்றவர்களும் அந்த அறைக்குள் வர துவாரகாவிற்கு முகம் விழுந்துவிட்டது.
“இப்ப சொல்ல போறியா இல்லையா துவா?…” அஷ்மி முறைக்க,
“அது சஸ்பென்ஸ் டாக்டர்…” துவாரகா சொல்ல,
“இங்க ஒருத்தன் உயிரை கையில பிடிச்சுட்டு நேத்துல இருந்து ரோடு ரோடா பைத்தியக்காரன் மாதிரி சுத்தியிருக்கான் உன்னை தேடி. மண்ணாங்கட்டி சஸ்பென்ஸ்…” என பொரிய,
“வந்து உங்களுக்கு இன்னும் மூணுநாள்ல பர்த்டே வருதுன்னு நேத்து சாப்பிடறப்ப மாமா சொன்னாங்க. அதான் கிப்ட் வாங்கிட்டு வந்து சப்ரைஸ் பண்ணலாம்னு இருந்தேன்…” என சொல்ல அஷ்மிதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.