அதை கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்குமே கொலை நடுங்கிபோனது. ரத்த தாகம் கொண்ட அத்தனை மிருகங்களின் மொத்த குணமும் அந்த ஒற்றை மனிதரின் உள்ளே இருந்தததை அன்று தான் அனைவருமே உணர்ந்தனர்.
கேட்டுமுடித்த அதிரூபன் அவரிடம் மொபைலை தந்துவிட்டு கைகட்டி அவரை பார்வையால் துளைத்தான்.
“இப்ப சொல்லுங்க, துவா எங்க?…” மீண்டும் அழுத்தமாய் கேட்க,
“அதிபா அப்பா உண்மையா தான்ப்பா சொல்றேன். பாப்புக்குட்டி நடந்ததை சொல்லவும் எனக்கு கோபம். என்ன பண்ணனு தெரியாம அந்த புள்ளைட்ட ஆத்திரம் தீர பேசிட்டேன். அதுக்கப்பறம் தான் எனக்கு உன் ஞாபகமே வந்துச்சு. நான் விட்டுட்டேன்…”
அவனிடம் மன்றாடியவரை நம்பாமல் அனைவருமே பார்க்க அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“அதிபா, அப்பாவை நம்புப்பா. அது நான் பேசின பயத்துல எங்கையாவது போயிருக்கும். கண்டிப்பா கிடைச்சிடும்…” என்று சொன்னலும் அவள் கிடைக்க கூடாது என்றே நினைத்தார்.
அவருக்கு துவாரகாவை காணவில்லை என்றதுமே மகிழ்ச்சி தான். அவளும் கிடைக்க கூடாது.
தன் மகனும் தன்னிடம் வந்துவிடவேண்டும் என்று ஆசைகொண்டார். பேராசை பெரு நஷ்டம்.
“என்ன அதுவா? அவ என் பொண்டாட்டி. நீங்க எது பண்ணலைன்னு சொன்னாலும் அவ போனதுக்கு நீங்க தானே காரணம். என் பொண்டாட்டியை எப்படி கண்டுபிடிக்கன்னு எனக்கு தெரியும். ஆனா உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன்…” என அதிபன் சொல்ல,
“அதிபா. கண்டிப்பா நானும் நம்ம ஆளுங்களை விட்டு தேட சொல்றேன்…” என அவர் அவனின் கையை பிடிக்க,
“உங்க அரசியலை என் வாழ்க்கையில நடத்தறீங்களா? இனி தான் இந்த அதிபன் யாருன்னு பார்க்க போறீங்க. அவளுக்கு ஒண்ணுன்னா உங்களுக்கு முதல் எதிரி நான் தான்…” என்ற கர்ஜனையில்,
“அதிபா….” என ரத்தினசாமி பதற,
“உங்களை இனி நம்ப போறதில்லை. தேடற மாதிரி தேடி அவளை கிடைக்க விடாம கூட நீங்க செய்யலாம்….” அவரின் எண்ணத்தை கணித்தபடி அவன் கூற அவர் முழித்தார்.
“அப்போ இதுதான் உங்களோட நினைப்பு இல்லையா? நான் சரியா தான் சொல்லியிருக்கேன்…” என்றவன் அங்கிருந்து வேகமாக செல்ல,
“இரு அதி, நாங்களும் வரோம்…” என சங்கரன் அவனுடன் வர அவரை அவன் பார்த்த பார்வையில்,
“மருமகளை தேடி கண்டுபிடிக்க வேண்டிய கடமை எனக்கும் இருக்குப்பா. உன் அப்பா மாதிரி உள்ள ஒண்ணு வெளியில ஒண்ணுன்னு நான் கிடையாது. பிடிக்கலைனா பளிச்சுன்னு சொல்லிடுவேன். உனக்கு தெரியும்ல…”
சங்கரன் சொல்லவும் அதிபனின் முகம் கலங்கியது. முதன் முறையாக துவாரகாவை மருமகள் என்கிறார். அதுவும் உணர்ந்து. அதை பார்த்தவரின் மனம் கனத்துவிட்டது.
“நீ எதுக்குய்யா கலங்கற. அதான் உனக்கு இன்னொரு அப்பன் நான் இருக்கேன்ல. என்னை மீறி மருமகளை யார் என்ன பண்ணிடமுடியும்னு பார்த்துடறேன்…” என சங்கரன் தன் வேஷ்டியை மடித்துக்கட்டி,
“டேய் விஷால், எடுடா காரை…” என்று வாசலுக்கு செல்ல அங்கே அஷ்மிதா நின்றுகொண்டிருந்தாள்.
“அதியை கூட்டிட்டு போகத்தான் வந்தேன். தேங்க்ஸ் அங்கிள், நீங்க உண்மையா தான் சொல்றீங்கன்னு நம்பறேன்…” என சொல்ல,
“பொம்பளப்புள்ள நீ இருத்தா, நாங்க போய் பார்த்துட்டு வரோம்…” என சொல்லிவிட்டு செல்ல வேகமாய் அனைவரும் அவர்கள் பின்னே செல்ல ரத்தினசாமி மட்டும் சிலையென நின்றார்.
அவரை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த அஷ்மிதா,
“என்ன மயிலு? உன் மகன் பேசினதுக்கு தும்பப்பூவுல தூக்கு மாட்டிக்கனும்னு நினைக்கிறயோ? கடல்லையே இல்லையாம். அதாம்ப்பா உன் ரோஷத்தை சொன்னேன். அடடா தப்பு தப்பு. அரசியல்வாதிக்கு எங்க இதெல்லாம் இருக்க போகுது…”
அஷ்மிதாவை அப்படி ஒரு முறை முறைத்தார் ரத்தினசாமி. விட்டால் இங்கேயே அவளின் கழுத்தை திருகி போட்டுவிடவேண்டும் என்கிற அளவிற்கு ஆத்திரம் எழுந்தது.
வெளியில் சென்றவர்கள் எந்நேரமும் வீட்டினுள் நுழையலாம் என இருக்க கைமுஷ்டியை மடக்கியபடி பல்லை கடித்தார்.
“சாக சொல்லிட்டேன்னு ரொம்ப ஃபீல் பண்ணாத. நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா நீ சாகறதுல தப்பே இல்லை. செத்துரு. யார் அந்த நாலு பேருன்னு பார்க்கறியா? உன் புள்ளை, உன் மருமக, இன்னும் பத்து மாசத்துல வரப்போற குட்டியும். கூடவே நானும் தான்ப்பா…”
“ஏய் உன்னை என்ன பன்றேன்னு பாரு. இப்ப நேரம் சரியில்லை. அதனால நீ பொழைச்ச…” என்று உறும,
“அப்பப்பா, பயந்துட்டேன். போயா. நேரம் நல்லா இருந்தா மட்டும் செஞ்சிறகிஞ்சிற போற. எனக்கு உன்னை பார்த்தாலே இரிட்டேட் ஆகுது மயில்சாமி…”
அஷ்மிதா கோபத்தை இப்படி வார்த்தைகளால் நக்கலில் காண்பிக்க அவரின் கண்களில் தீப்பொறி பறந்தது.
“ஹலோ ஸ்டமக் பையர் மயிலு. லார்ட் லபக்குதாஸ். இதத்தான் தீப்பொறி திருமுகம்னு சொல்லுவாங்களோ? வச்சுக்க வச்சுக்க. உனக்கு எத்தனை பேர் வேணும்னாலும் வச்சுக்க. இப்ப நான் என் செல்லக்குட்டியை தேட போறேன். கண்டிப்பா கிடைச்சிடுவா. அப்பறமா வந்து உன்னை பொறுமையா கலாய்க்கறேன்…” என சொல்லியவள் மீண்டும் திரும்பி பார்த்து,
“அவளுக்கு எதாச்சும் உன்னால ஆகியிருக்கட்டும். உன்னாலன்னு இல்லை. அதுவாவே ஆகியிருந்தாலும் இருக்கு உனக்கு…” என்ற பேச்சோடு வேகமாய் கிளம்பிவிட்டாள்.
“போ போ, உனக்கும் சேர்த்து சங்கு ஊதறேன்…” என வஞ்சகத்தோடு அஷ்மிதாவை பார்த்தார்.
அஷ்மிதா, ராஜாங்கம் ஒருபுறம் தேட அதிரூபன் விஷால், அர்னவ், சந்தோஷ் சங்கரன் என்று மொத்த சென்னையையும் சல்லைடையாய் சலித்தனர். இரவு கடந்து நள்ளிரவு ஆகிவிட்டது.
அதிபனின் நிலையோ சொல்ல வார்த்தைகள் இல்லை. தேடி சலித்து நடு ரோட்டில் அமர்ந்துவிட்டான்.
அவனின் நிலை பொறுக்காமல் மீண்டும் ரத்தினசாமியை அழைத்தார் சங்கரன்.
“அண்ணே ஏதாவது உங்க வேலைனா சொல்லிடுங்க. நான் உங்க பேர் வராம அதிக்கு தெரியாம அந்த புள்ளையை மீட்டுக்கறேன். நம்ம பையனை பார்க்க முடியலைண்ணே…” என சஞ்சலத்துடன் சொல்ல,
“சங்கரா நீ கூட நம்பலைல. உண்மையை சொல்றேன். என் வேலையா இருந்தா இத்தனை நேரம் அவளை உயிரோட விட்டா வச்சிருப்பேன். என் பையன் என் கையை கட்டிப்போட்டிருக்கான். இல்லைனா…” என சொல்ல,
“நீங்கலாம் திருந்தவே மாட்டீங்க…” ரத்தினசாமியிடம் பேசி பயனில்லை என தெரிந்து எரிச்சலுடன் போனை வைத்தவர்,
“இப்ப என்னய்யா உனக்கு? நீயே இப்படி நினைச்சா, கவலை பட்டா ஆச்சா? முழு வேகத்தோட தேடவேண்டாமா? கிடைச்சிடுவான்னு நம்பி தேடு. கண்டிப்பா கிடைச்சிடுவா…” என சங்கரன் தைரியமூட்ட மீண்டும் ஒரு வேகத்துடன் தேடல் தொடங்கியது.
ஒருவழியாக அனைவரின் பிராத்தனைக்கேற்ப விடியற்காலை துவாரகா இருக்குமிடம் தெரிந்துவிட அனைவருமே அங்கு சென்றுவிட்டனர்.
சென்னையில் ஒரு மூலையில் ஒரு குப்பத்தில் உள்ள சிறிய கிளினிக்கில் துவாரகா அட்மிட் செய்யப்பட்டிருந்தாள்.
ரத்தினசாமிக்கு இருப்புக்கொள்ளவில்லை. அதிரூபன் துவாரகாவை கண்டுபிடித்துவிட்டான் என்ற தகவல் அவர்களை பாலோ செய்யும் ஆள் மூலம் ரத்திரசாமிக்கு கிடைக்க இப்பொழுது மகனிடம் நிலவரம் என்னவென கேட்காமல் விட்டால் சரியாக இருக்காது என நினைத்தார்.
அதற்காக போனால் போகிறது மகனுக்காக துவாரகாவை பற்றி கேட்டு அறிந்துகொள்ளலாம் என அவனுக்கு அழைக்க முதலில் ரிங் முழுவதும் போய் கட் ஆகிவிட மீண்டும் அழைத்தார். இந்த முறை அழைப்பு ஏற்கப்பட்டுவிட,
“அதிபா, அப்பா பேசறேன்பா. அந்த புள்ளை கிடைச்சிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். ராத்திரியெல்லாம் அப்பா தூங்கவே இல்லைப்பா…” என ஆவலாய் பேசினாலும் அவரின் குரலில் துவாரகா கிடைத்ததற்கான பிடித்தமின்மை நன்றாகவே எட்டிப்பார்த்தது.
“ஆகாயம் தீ புடிச்சா நிலா தூங்குமா?…” என்ற அஷ்மி குரல் கேட்க,
“அதிபா?…” என சந்தேகமாய் மீண்டும் அழைக்க,
“மயிலு உன் மருமவ கிடைச்சுட்டா…” என்ற அஷ்மிதாவின் ஆர்ப்பரிப்பு நிறைந்த குரலால் ரத்தினசாமியின் வன்மம் விசிறிவிடப்பட்டது.