மின்னல் அதனின் மகனோ – 21 (2)

“அத்தான், அங்க நடந்த எல்லாத்தையும் காலையில ஸ்வேதா மாமாட்ட சொல்லிட்டா. ஏதோ வேகத்துல உளறிட்டா…”

“அதனால?…”

“அதுதான் மாமா கோவமா அக்காட்ட பேசியிருக்காங்க. அப்ப ஸ்வேதா கூடவே தான் இருந்திருக்கா. இப்பத்தான் நான் அதட்டி கேட்டதும் சொன்னா…” என்று சொல்ல,

“இப்ப அவரு எங்க?…” உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க,

“மதியம் போனவரு வீட்டுக்கு இப்ப தான் வந்தாங்க. ரூம்க்கு போயிருக்காங்க…” என்றதும் இணைப்பை துண்டித்தவன்,

“வீட்டுக்கு போ விஷால்…” என்றவன் ராஜாங்கத்திற்கு அழைத்தான்.

“இப்பதான் அஷ்மி சொன்னா அதி. நான் பார்த்துக்கறேன்…”

“அங்கிள், துவா எனக்கு ரொம்ப முக்கியம். அவ இல்லைனா…” உடைந்த குரலில் அவன் சந்தோஷ் பேசியதையும் சேர்த்து நடந்ததை கூற மறுபுறம் இருந்த ராஜாங்கத்திற்கு அத்தனை வேதனையாக போனது.

எதற்கும் கலங்காதவன் இந்தளவிற்கு உடைந்துவிட்டானே? காதல் எத்தனை மோசமான ஒரு வியாதி? எப்பேர்ப்பட்டவனையும் கோழையாக்கிவிடும் என நினைத்தவர்,

“நாம எந்த நெகட்டிவ் தாட்ஸும் வச்சுக்க வேண்டாம் அதி. துவா கண்டிப்பா சேபா தான் இருப்பா. நீ முதல்ல தைரியமா இரு. உன் அப்பனுக்கு மேல எனக்கு தெரியும். நம்ம பொண்ணுக்கு தப்பா எதுவும் நடந்திருக்காது. துவாவை கண்டிப்பா கண்டுபிடிச்சிடலாம்…” ராஜாங்கம் அவனுக்கு ஆறுதல் கூற,

“நான் இப்ப அவர் வீட்டுக்கு தான் போறேன்…”

“ஓகே, நான் என் சைட் ஆளுங்களை விட்டு தேட சொல்றேன். ரத்தினசாமி என்ன தான் சொல்றார்ன்னு கேட்டு சொல்லு…” என்றவை அழைப்பை துண்டித்துவிட்டு தனக்கு நம்பகமான ஆட்களை முடுக்கிவிட்டார்.

ஏற்கனவே அதற்கான வேலையில் அதிபனும் தன்னுடைய ஆட்களை வைத்து தேடுதலை தொடங்கியிருந்தான். விஷயம் வெளியில் கசியாதவாறு துவாரகாவை தேட ஆரம்பித்திருந்தனர்.

விஷாலும் அர்னவிடம் விஷயத்தை கூறியிருந்தான். அவனும் அவன் நண்பர்களுடன் துவாரகாவை தேட ஆரம்பித்தான்.

ஆனாலும் உள்ளுக்குள் ரத்தினசாமியின் செயலால் அதிபன் என்ன செய்வானோ என்ற பயம் படுத்தி எடுத்தது.

ரத்தினசாமியின் வீடு வந்ததும் புயல் வேகத்தில் காரை விட்டு கீழே இறங்கியவன் கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாய் வேகமாய் உள்ளே நுழைந்து ஹாலில் காபி குடித்துக்கொண்டிருந்த ரத்தினசாமியின் முன்னால் நின்றான்.

கார் வந்த வேகத்திலேயே வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் ஹாலில் வந்து குழுமிவிட்டனர். வைத்தியநாதன் உட்பட.

திடீரென அதிபன் வந்து நின்றதும் ஒருகணம் தன் கண்களையே நம்பமுடியாது பார்த்தவர் வேகமாய் எழுந்துவிட்டார் ரத்தினசாமி.

“அதிபா எத்தனை நாள் ஆச்சுப்பா நீ இந்த வீட்டுக்கு வந்து. அவளோட போனவன், இன்னைக்குத்தான் இங்க வர தெரிஞ்சதா உனக்கு?…”  

ஆர்ப்பாட்டமாய் அவனின் அருகில் நெருங்க தன்னுடைய மொத்த கோபத்தையும் அடக்கியவனாக அமைதியாக அவரை அணுகுவோம் என நினைத்தான். அதற்கேனும் அவர் சொல்லிவிடமாட்டாரா என நினைத்து.

“துவா எங்க?…” என்றான் அதிபன்,

“அவ ஓடிட்டாளா?அதுதான் இங்க வந்தியா? அப்பா சொன்னேன்லப்பா அவ நம்ம குடும்பத்துக்கு சரிப்பட மாட்டான்னு. பாரு. அவளே போய்ட்டா. விட்டது சனியன்னு விட்டுத்தொலை…”

அதிரூபன் வந்திருக்கும் மனநிலை புரியாதவராக மகன் வந்துவிட்டான் என்கிற சந்தோஷத்தில் அவர் பேச,

“என்ன சொன்னீங்க? துவாரகா எங்கன்னு கேட்டா?…” என்றவனை முழுதாய் பேச விடாது,

“போனா போகட்டும்ப்பா. அப்பா உனக்கு நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைக்கிறேன். அவளை எதுக்கு தேடற? எங்குட்டு போய் தொலைஞ்சாளோ? நிம்மதியா இரு. போனவ எங்கையாச்சும் செத்துட்டான்னு சேதி கிடைச்சா இன்னும் நிம்மதி…”

ரத்தினசாமி இன்னும் பேச அதற்கு மேல் பொறுக்காதவன் அவரின் சட்டையை கொத்தாய் பற்றிவிட்டான்.

“ஏய்….” என்றவன் விழிகளில் அத்தனை சினம். வார்த்தையில் அத்தனை சீற்றம்.

“அப்பான்னு பார்த்தா உன் அரசியல் புத்தியை நீ உன் பிள்ளைக்கிட்டையே காண்பிச்சுட்டல. என் வாழ்க்கையை விட உனக்கு உன்னோட பகையும் உன் தங்கச்சியும் தான் பெருசா போய்ட்டாங்க இல்லையா? என்ன மனுஷன்யா நீ? எனக்காகவாவது நீ துவா மேல இருக்கற கோபத்தை விட்டுடுவன்னு நினைச்சேன். ஆனா நீ?…”

செத்தால் நிம்மதி என்கிற வார்த்தையில் தகப்பனுக்கான மரியாதை எல்லாம்  எல்லாம் பறந்திருந்தது.

உடலே ஒரு கணம் தூக்கிப்போட்டது அவர் சொல்லிய அந்த வார்த்தையில். கண்கள் கசிய அவரை பார்த்தவன்,

“வாயும் வயிறுமா என் வாரிசை சுமந்திட்டு இருக்காய்யா. மாசமா இருக்கிற பொண்ணை இன்னும் எத்தனை பாடு படுத்துவ? அவளை என்ன பண்ணின?…” இப்பொழுது குரல் மொத்தமும் கெஞ்சலே விஞ்சியிருந்தது.

என்ன? என அனைவரும் பார்த்திருக்க அவனருகே வந்த பத்மினி,

“அதி…” என அழைத்ததும் அவரை திரும்பியும் பார்க்காதவன்,

“சொல்ல சொல்லுங்கம்மா இந்த மனுஷனை. என்ன பண்ணினாருன்னு. அவளை என்கிட்ட குடுத்துட சொல்லுங்கம்மா. இனி இந்த குடும்பத்தோட உறவே வேண்டாம்னு நாங்க போய்டறோம்…” என கத்த,

“அதி, என்ன பேச்சு இது? நீ எதுக்கு போகனும்?…” என அன்னபூரணி வேகமாய் வர ரத்தினசாமி துவாரகாவிற்கு போன் செய்தது ஸ்வேதாவை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவள் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தாள் தன் தாயை நினைத்து.

அதிபன் தன் தோளில் இருந்த அன்னபூரணியின் கையை வேகமாய் உதறியவன் அவரை பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.

“போதும், இத்தோட உங்க அண்ணனை நிறுத்திட சொல்லுங்க. அவருக்கு இப்ப நான் அவரோட மகனா தெரியலை. அகிலவேணி மருமகனா தான் தெரியறேன். அவங்க பொண்ணோட புருஷனா தெரியறேன். அதுக்காக தான் இப்ப இவ்வளவு வில்லத்தனம் செய்யறார். மகனா நினைச்சிருந்தா துவாரகாவுக்கு கஷ்டம்னா அது எனக்கு வலிக்கும்னு அவருக்கு தோணவே இல்லையே. தங்கச்சிக்கு நியாயம் செய்யனும். அது மட்டும் தான் அவருக்கு…”

அவரை விட்டு விலகி பேசியவன் ரத்தினசாமியை பார்க்க அவர் முகத்தில் அத்தனை வேதனை தன் மகனா தன்னை மரியாதை இல்லாமல் பேசியது என.

இதை அனைத்தையும் விட பத்மினிக்கு துவாரகா தாயாக போவது உள்ளூர அத்தனை மகிழ்வை தந்தது.

“துவா உண்டாகியிருக்காளா?. இதை ஏன் எங்ககிட்ட சொல்லலை அதி?. சொல்லியிருந்தா அவளை நான் என் கண்ணுக்குள்ள வச்சு பத்திரமா பார்த்திருந்திருப்பேனே?…”  என கேட்க,

“அவளுக்கே இன்னும் தெரியாதும்மா. அஷ்மி தான் கண்டுபிடிச்சா. அதை அவளே இன்னும் உணரலை. நாங்க அவளை எப்படி பார்த்திட்டு இருக்கோம்னு தெரியுமா?…” என்றவன்,

“நீங்க துவாக்கிட்ட என்ன பேசினீங்க? சொல்லுங்க. நீங்க பேசின பின்னால தான் துவா வேகமா வெளியில கிளம்பி போனா. இப்ப எங்க இருக்கான்னு தெரியலை. அவ இப்ப எங்கன்னு எனக்கு தெரியனும்…” அடக்கப்பட்ட கோபத்தில் அவன் பல்லை கடித்துக்கொண்டு கேட்க சங்கரன் வந்துவிட்டார் அங்கே.

“அதி, என்ன ஆச்சு?…” என வர,

“இவரோட பாவத்துல உங்களோட பங்கு இன்னும் எவ்வளவு சித்தப்பா? நீங்களாவது உண்மையை சொல்லுங்க…” என்றவன் விஷாலை பார்க்க அவனின் பார்வைக்கான அர்த்தம் புரிந்ததை போல ரத்தினசாமியின் மொபைலை கேட்டான்.

“போன் தாங்க பெரியப்பா. ப்ளீஸ். அண்ணனோட கோவத்தை இன்னும் அதிகமாக்காதீங்க. அண்ணி வேற இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை. இல்லை நீங்களே அவங்களை எங்கையாவது அடைச்சு வச்சு…”

“விஷால்…” என ரத்தினசாமி சீற,

“அண்ணே என்ன பண்ணுனீங்க? இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?…” என சங்கரன் கேட்கவும் சந்தோஷ் தான் அனைத்தையும் சொன்னான். கேட்டதும் தலையில் அடித்துக்கொண்டவர்,

“எத்தனை சொன்னாலும் உங்களுக்கு புரியாதா அண்ணே?…” என்றார்.

“சங்கரா, நான் எதுவும் செய்யலைப்பா…” என தம்பியிடமும்

“அதிபா, அப்பாவை நம்புப்பா. நான் அவளை ஒன்னும் செய்யலைப்பா…” என கெஞ்ச அவரின் மொபைலை கேட்டு அதிபனே கையை நீட்டினான்.

வேறு வழியின்றி அதை அவர் கொடுக்க அதை வாங்கியவன் அவர் பேசிய கால் லிஸ்ட்களை பார்த்துவிட்டு துவாரகாவின் அழைப்பில் பதிந்திருக்கும் ரெக்காடரை ஓடவிட்டான்.

அதில் அவர் பேசியது மொத்தமும் பதிவாகி இருந்தது. கேட்க கேட்க அதிபனின் ரத்தம் சூடேறியது.

அதன் சாராம்சம் துவாரகா ஹலோ என்று மட்டும் தான் பேசியிருந்தாள். அதில் இருந்து ரத்தினசாமியின் மொத்த கொலைவெறியும் வார்த்தைகளாய் அதில் கொடூரமாய் பதிந்திருந்தது.

துவாரகாவை திட்டியதிலிருந்து, தன் தங்கையை அவள் பேசியதற்கு துவாரகாவை ஆள் வைத்து தூக்கிவிட்டு இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டு காணாமல் போய்விட்டதாக கதைகட்டிவிட போவதாய் மிரட்டலில் ஆரம்பித்து இப்பொழுதே அகிலவேணியை கொலை செய்ய போவதாய் பேசியது வரை பதிவாகியிருந்தது.

error: Content is protected !!