மின்னல் அதனின் மகனோ – 21 (1)

மின்னல் – 21

              அன்று மதியநேரம் சாப்பிட வந்து சென்றபின் இரவு வர தாமதமாக இருக்கும் என தெரிந்தது அதிரூபனுக்கு.

அதனால் துவாரகாவிற்கு அழைத்து சொல்லிவிடுவோம். சாப்பிட்டுவிட்டு தூங்கட்டும் என நினைத்தான் அதிரூபன்.

அவனின் முகம் அத்தனை தெளிவாய் இருந்தது. இந்த மாலை வேளை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பது அவன் மட்டுமே அறிந்த ஒன்று.

ஆம், அகிலாவை சந்திக்க இருக்கிறான்.

இனியும் தள்ளிபோடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. இனி அவர் மறுப்பதற்கும் எதுவுமில்லை. மறுத்தால் என்ன கூறவேண்டும் என்றும் தெளிவாய் முடிவுசெய்துகொண்டான்.

அனைத்தும் நல்லவிதமாய் நடந்துவிட்டால் துவாரகாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அவளின் முகம் மலர்வதை காணவேண்டும்.

அந்த நிமிடம் அதை அவள் எப்படி அனுபவிக்கிறாள் என பார்க்கவேண்டுமென ஆசைகொண்டான்.

நினைக்கும் போதே உற்சாகம் குமிழிட துவாரகாவிற்கு அழைத்தான். எடுக்கப்படவில்லை.

மீண்டும் அழைத்து அழைத்து பார்த்தவன் வீட்டு எண்ணிற்கும் முயற்சித்து தோற்றவன் செக்யூரிட்டிக்கு அழைக்க,

“ஸார் மேடம் மதியமே ரொம்ப வேகமா கிளம்பி போனாங்க ஸார். ட்ரைவர் இப்ப வந்திடட்டும். கார்ல போங்கன்னு சொன்னதுக்கு கேட்காம இப்ப வந்திடறேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க…” என பதட்டமாய் சொல்ல இவனுக்கு பதறிவிட்டது.

சொல்லாமல் தனியாக இதுவரை எங்கும் சென்றதில்லையே இவள்? என்ன அவசரமோ? மொபைல் வேறு ரீச் ஆகவில்லை. அதுவே ஒரு பதட்டத்தை அவனுள் விதைத்திருந்தது.

“கார் வீட்ல இல்லாம எங்க போச்சு?…” என இரைய,

“ஸார் காரை சர்வீஸ்க்கு விட்டிருந்தான் ட்ரைவர். அதை எடுக்கத்தான் போயிருந்தான். அதுக்குள்ள மேடம் கிளம்பிட்டாங்க…”

“யூ டேமிட், உனக்கு எல்லாம் எதுக்குயா செக்யூரிட்டி போஸ்ட்? என்ன டேஷ்க்கு நீ வேலை பார்க்கற? அதை எனக்கு அப்பவே போன் பண்ணி சொல்லவேண்டியது தானே? யூஸ்லெஸ்…” என கோபமாய் சொல்லிவிட்டு  வேகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவன் கிளம்பும் பொழுதே விஷாலும் அவனுடன் வந்தவன் என்னவென கேட்க ஒன்றுமில்லை என சொன்னாலும் அதிரூபனின் முகத்தில் இருந்த பதட்டத்தில் தானும் அவனுடன் சேர்ந்துகொண்டான்.

அத்தோடு நிற்காமல் சந்தோஷிற்கு இன்று வீட்டில் ஏதாவது ரத்தினசாமி பேசினாரா? என்னவென கேட்குமாறு ஒரு மெசேஜையும் தட்டிவிட்டான்.

ஏனென்றால் அதிரூபன் இந்தளவிற்கு பதட்டம் கொள்வது துவாரகாவின் விஷயத்தில் மட்டுமே.

வேறு விஷயமாக இருந்தால் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அதை கையாண்டிருப்பான் அவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதனாலேயே உடனடியாக சந்தோஷிற்கு தகவலை அனுப்பியவனின் வேண்டுதல் இதில் தன் பெரியப்பாவிற்கு எந்த சம்பந்தமும் இருக்க கூடாது என்பது மட்டும் தான்.

துவாரகாவின் எண்ணிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்துபோன அதிரூபன் வீட்டிற்கு நுழைந்ததும் அங்கே ஹாலில் இருந்த டீப்பாயில் டெலிபோன் அதனிடத்தில் பொருத்தப்படாமல் நிமிர்த்தி வைக்கப்படிருக்க வேகமாய் சென்றான்.

காலர் ஐடியில் கடைசியாக வந்த நம்பரை பார்த்ததும் அவனின் கண்கள் கோபத்தில் சிவந்துபோனது.

“பார்த்தியா உன் பெரியப்பா பண்ணின வேலையை. அவர் தான் கடைசியா போன் பண்ணியிருக்கார். அதுதான் துவா அவசரமா கிளம்பி போயிருக்கா…” என கர்ஜிக்க,

“அண்ணா, இருங்க. எதுக்கு பெரியப்பா கால் பண்ணினாங்கன்னு தெரியாம நாம முடிவுக்கு வரவேண்டாம். அண்ணி வேற விஷயமா கூட போயிருக்கலாம்ல. கொஞ்சம் அவசரப்படாம தேடலாம்…” என விஷால் சொல்ல அவனை பிடித்து தள்ளியவன்,

“இன்னும் என்னடா வேணும் உங்களுக்கு? அவ இருக்கிற நிலைமை தெரியாம பேசிட்டு…” என தலையில் அடித்தவன்,

“இன்னைக்கு அந்த மனுஷனை உண்டில்லைன்னு ஆக்கிடறேன்…” அவனின் ரௌத்திரத்தில் விஷால் பயந்துவிட்டான்.

“அண்ணா…”

“நானும் அமைதியா விலகி இருக்கனும்னு தானே நினைக்கிறேன். இல்லை எங்கையாவது கண்காணாத இடத்துக்கு போய்டனுமா? குடும்பத்தை விட்டு உங்க எல்லாரையும் விட்டு போக மனசில்லாம தானடா இங்கயே உங்க முன்னால உங்க எல்லோரோட மத்தியில வாழ்ந்துட்டு இருக்கேன்…”

அவனின் ஆதங்கம் விஷாலை சுட்டது. அவனும் இதில் என்ன செய்யவென தெரியாமல் திகைத்து நிற்க,

“எங்க போனாளோ? என்ன பன்றாளோ? அவ இன்னும் இந்த ஊருக்கு பழகவே இல்லைடா. அவ போற இடங்களே ரொம்ப கம்மி…” என்றவனின் மூளையில் திடீரென மின்னலடிக்க வேகமாய் தன்னுடைய மொபைலை எடுத்து சிவகாமிக்கு அழைத்தான்.

“சொல்லுங்க ஸார். இன்னைக்கு எத்தனை மணிக்கு வரீங்க?…” எடுத்த எடுப்பில் அவர் விஷயத்திற்கு வர,

“இல்லை சிவகாமி, நான் இன்னைக்கு வரலை. அது வந்து டாக்டர் அஷ்மிதா இன்னைக்கு அங்க வந்திருந்தாங்களா?…” என கேட்க அவனுள்ளம் வந்திருக்கவேண்டும் என ஜபம் செய்ய ஆரம்பித்தது.

“இல்லையே ஸார், போன வாரம் தான் வந்துட்டு போனாங்க. இன்னும் பத்துநாள் கழிச்சு தான் வருவேன்னு சொன்னாங்க…”

“ஓஹ்…” என்றவன்,

“அகிலா அத்தை?…”அவன் இழுக்க,

“இங்கதான் ஸார் இருக்காங்க…”

“இன்னைக்கு வெளியில எங்கையாவது போனாங்களா? இல்லை போன் பண்ணினாங்களா யாருக்கேனும்?…” அவன் சந்தேகமாய் கேட்க,

“நோ ஸார். யாருக்கும் பேசலை, யாரையும் பார்க்கவுமில்லை. இப்போன்னு இல்லை. இங்க வந்ததிலிருந்தே…” என்றவர்,

“ஸார், எனி ப்ராப்ளம்?…” சிவகாமி கேட்க,

“நத்திங். ஓகே, தேங்க் யூ…” என்று வைத்துவிட இப்பொழுது அஷ்மிதாவிற்கு அழைத்தான்.

“சொல்லுடா, என்னவாம் உன் வொய்ப் கால் பண்ணியிருந்தா? நான் பேஷன்ட்ஸ் பார்த்துட்டு இருந்தேன். எடுக்கலை. உன்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணினாளாக்கும்?…” என அவள் கேட்க அதிபனுக்கு தலையே சுற்றியது.

“அஷ்மி, துவா எப்போ உனக்கு கால் பண்ணினா?…”

“என்ன உன் வாய்ஸ்ல இவ்வளோ டென்ஷன்? ஒரு ஒருமணிநேரம் இருக்கும். என்னாச்சுடா?…” சரியாக அவனின் நிலையை அவள் கணிக்க,

“துவா வீட்ல இல்லடா அஷ்மி. எங்க போனான்னு தெரியலை…” என்றதுமே,

“முதல்ல மயில்சாமியை பிடி. துவாவை கண்டுபிடிச்சுடலாம். எனக்கும் டியூட்டி முடியபோகுது. நானும் வரேன். போய் அந்தாளை பாரு நீ. க்விக்…” என அவனை துரிதப்படுத்தியவள் தானும் கிளம்ப ஆரம்பித்தாள்.

இங்கே விஷாலின் மொபைலுக்கு சந்தோஷ் அழைக்க அதிபன் பேசி முடிக்கவும் அதை ஏற்றவன்,

“சொல்லுடா…” என,

“டேய் உன் பெரியப்பா தான் வேலையை பார்த்திருக்காருடா. ஸ்வேதா பண்ணிவச்ச வேலை இது எல்லாம்…” என சந்தோஷ் பொறும,

“வாட்? ஆர் யூ சூர்?…” என விஷால் பயத்துடன் அதிபனை பார்த்துக்கொண்டே கேட்க எழுந்த வந்தவன் விஷாலிடமிருந்து மொபைலை பறித்தான்.

“சந்தோஷ்?…” என மொபைலில் இருந்த பெயரை பார்த்துவிட்டு தன் காதில் பொருத்தியவன்,

“சந்தோஷ், அங்க என்ன நடந்தது?…” என கேட்க,

“அத்தான்…” சந்தோஷ் தயங்க,

“இப்ப சொல்ல போறியா இல்லையா?…”

அவனிடம் கேட்டுக்கொண்டே விஷாலை அழைத்தவன் வேகமாய் காரில் ஏறி விஷாலை ட்ரைவ் பண்ணுமாறு பார்வையில் உணர்த்தினான்.

error: Content is protected !!