“நீங்க போகலையா?…” என துவாரகா கேட்க,
“அம்மா, எங்கம்மா?…” ஒன்றும் அறியாதவள் போல கேட்க,
“அதுதான் உங்க பாஸ்க்கு இன்பார்ம் பண்ண. காலையில இருந்து வந்துட்டேன். இது சாப்பிட்டாங்க. இதோ கிளம்பிட்டாங்க. இது செய்யறாங்க. இப்டின்னு வந்ததுல இருந்து தகவல் சொல்லிட்டே இருக்கீங்களா. டயர்ட்ல இதை மறந்திட போறீங்களோன்னு தான் ஞாபகப்படுத்தறேன்…” என,
“அது வந்துங்கம்மா…” என பிடிபட்டதில் திக்கி திணற,
“போய் அவங்களோட பையன் இங்க சாப்பிட வந்திருக்காங்கன்னு சொல்லுங்க. என் கையால அவனுக்கு நான் பரிமாறினேன்னு சொல்லுங்க. ஹ்ம்ம் போங்க…” என்றவள் ஒரு முறைப்புடன் சென்றுவிட மாலதிக்கு குழப்பமாகியது.
“இவங்க இப்ப என்ன செய்ய சொல்றாங்க என்னை? பூரணி அம்மாகிட்ட சொல்லுன்னு சொல்றாங்களா? நீ சொன்னதை கண்டுபிடிச்சுட்டேன். இனி இப்படி பண்ணாதன்னு சொல்றாங்களா? குழப்பமா இருக்கே…” என வாய்விட்டு புலம்பியபடி தன் வேலையை தொடர்ந்தாள். ஆனாலும் செவிகள் இரண்டையும் டைனிங்ஹாலில் வைத்தபடி.
“சாப்பிடுடா. நானுமே உனக்கு தேங்க்ஸ் சொல்லத்தான் உன்னை வரவழைச்சேன். இந்த வீட்டுக்கு வந்த மறுநாளே உன்னை பார்த்து பேசனும்னு இருந்தேன். நீ என்னடான்னா ஆபீஸ்க்கே வரலை. அவ்வளவு நல்லவனாடா நீ?…” என சிரிக்க,
“மாமா, சாப்பிடும் போது என்ன பேச்சு? பேசாம சாப்பிடுங்க. அவங்களையும் சாப்பிட விடுங்க…” என அதிபனை கண்டித்தவள் சந்தோஷிற்கு தேவையானதை பார்த்து பரிமாறினாள்.
அவனுக்குத்தான் ஒரு வாய் சாப்பாடு கூட தொண்டையில் இறங்கவில்லை. முள்மேல் அமர்ந்திருக்கும் அவஸ்தை அவனுக்கு.
“இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன்? சாப்பிடுங்க…” என துவாரகா சொல்ல தலை குனிந்திருந்தவன்,
“ஸாரிங்க. சத்தியமா ஸாரி. அன்னைக்கு நான் முதல்லையே அத்தானுக்கு இன்பார்ம் பண்ணியிருக்கனும். ஆனா என் மொபைலை புடுங்கிட்டானுங்க. என்னால வேற ஒன்னும் பண்ண முடியலை. நான் அவனுங்களோட வந்திருந்தா அப்பவே உங்களை காப்பாத்தி இருப்பேன்…”
“ரிஸார்ட் வரவரை விட்டிருக்க மாட்டேன். உங்களை கூட்டிட்டு வந்துட்டானுங்க. எனக்கு ரொம்ப ஷாக் தான். ஆனா அப்போதைக்கு உங்களை சேவ் பண்ணனும்னு தான் எனக்கு தோணுச்சு. அதுக்கு பின்னால நீங்க எங்க எப்படி இருக்கீங்கன்னு தேட ட்ரை பண்ணினேன். முடியலை…”
“அதுக்கப்பறமாவது அத்தான்கிட்ட சொல்லியிருக்கனும். ஆனா விஷால், அர்னவை என்னால விட்டுகொடுக்க முடியாதே? எப்படி காட்டிக்கொடுப்பேன்?…”
“அதான் சொல்லலை. அன்னைக்கு உங்க மேரேஜ்க்கு ரெண்டுநாள் முன்ன அஷ்மிதா வீட்லயே நான் உங்களை பார்த்துட்டேன். ஆனாலும் யார்க்கிட்டையுமே சொல்லலை. என்கிட்ட ஏன் கோவமா இருக்காங்கன்னும் எனக்கு அப்போ கொஞ்சம் புரிஞ்சது…”
சந்தோஷ் சொல்லியது அவர்கள் இருவருக்குமே அதிர்ச்சி தான். துவாரகாவை அஷ்மிதா வீட்டில் பார்த்தும் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறானே என வியப்பாய் இருந்தது.
“ஆனா கல்யாணபொண்ணா நீங்க வந்தது மத்தவங்களுக்கு எப்படியோ எனக்கு உண்மையிலையே அவ்வளவு சந்தோஷம். என் கூட பிறந்தவங்களுக்கே கல்யாணம்ன்ற மாதிரி நான் ஃபீல் பண்ணினேன்…”
சந்தோஷ் பேச பேச குறுக்கிடாமல் இருவரும் கேட்டுக்கொண்டிருந்தாலும் மீண்டும் பழைய விஷயங்கள் கிளறப்பட ஏனோ அப்படி ஒரு உணர்ச்சி வளையத்தினுள் மூவரும் ஆட்பட்டிருந்தனர்.
இதை அனைத்தையும் மாலதியும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். இப்பொழுதே அன்னபூரணிக்கு இதை சொல்லிவிடவேண்டுமென்ற வேகம் அவளுள்.
ஆனால் இப்பொழுதே மொபைலை எடுத்துக்கொண்டு சென்றால் துவாரகாவிடம் மாட்டிக்கொள்வோம் என்று இருந்துவிட்டாள்.
“தேங்க்ஸ்…” என்ற துவாரகாவின் வார்த்தையில் அவளை நிமிர்ந்து பார்க்க,
“உண்மையில நீங்க இல்லைனா கண்டிப்பா என் நிலைமை என்னன்னு எனக்கு தெரியலை. அதுவுமில்லாம கரெக்ட்டா அந்த நேரத்துக்கு நீங்க என்னை போகவிட்டது தான் கடவுள் செயல்ன்னு நினைக்கிறேன். இல்லைனா நான் மாமா கார்ல ஏறியிருக்க மாட்டேன். அதுக்கும் தேங்க்ஸ்…”
துவாரகா அவனிடம் நன்றி சொல்ல அதை இன்னமும் ஏற்றுகொள்ள முடியாமல் தவித்தவன்,
“எந்த நிலைமைக்கும் போயிருக்காது. நான் விட்டிருக்க மாட்டேன். அன்னைக்கு உங்களை வெளில தப்பிக்க விட்டதும் உடனே வந்து சென்னைக்கு கூட்டிட்டு வந்திடலாம்னு தான் பார்த்தேன். ஆனா நீங்க அதுக்குள்ள போய்ட்டீங்க…”
“போதும் சந்தோஷ். இப்ப சாப்பிடு…” அதிபன் சொல்ல,
“என்னால சாப்பிட முடியலை அத்தான். இன்னமும் என்னை நினச்சு எனக்கே அசிங்கமா இருக்கு. இது எப்பவும் என்னை விட்டு போகவே போகாது…” என கண்ணீர் விட அவனை பார்த்தபடி அமர்ந்திருந்தவளுக்கு அவனிடம் எந்த சமாதானமும் சொல்ல தோன்றவில்லை.
அவன் அவளை காப்பாற்றினான் தான். அதற்காய் அவனோடு உறவு கொண்டாடவும் விரும்பவில்லை. அதனாலேயே இந்த எல்லையிலேயே நின்றுகொண்டாள்.
அதிரூபனுக்கு ஏதோ இந்தளவிளாவது துவாரகா சந்தோஷை பார்க்கிறாளே என நிம்மதியானான்.
அதன்பின் பேசிக்கொண்டே சந்தோஷை சாப்பிடவைத்த பின்னரே அங்கிருந்து அவனுடனே கிளம்பி அலுவலகம் வந்துவிட்டான்.
நாட்கள் அதுபோக்கில் நகர்ந்துகொண்டிருக்க மாதங்கள் இரண்டு கடந்துவிட்டது. ரத்தினசாமி அதன் பின்னும் அதிபனிடம் எதுவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
அதிபா, அதிபா என அவ்வப்போது அப்பா நான் இருக்கிறேன் என வந்து நின்று முகத்தை காண்பித்து எதையாவது தத்து பித்துவென பேசி செல்வார்.
இவரா அரசியலில் வெற்றிகரமாக கோலூற்றுகிறார்? என சந்தேகமே வந்துவிட்டது. கூடவே புன்னகையும்.
மற்றவர்கள் அவ்வப்போது பேசினாலும் வீட்டிற்கு வந்து போவது இல்லை. ஆனால் இங்கு நடக்கும் அத்தனையும் தெரியும் அவர்களுக்கு.
அதுவும் இவர்கள் இருவருக்கும் தெரியும். ஆனாலும் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவர்.
பத்மினியும் சந்தியாவும் மட்டுமே நேரில் வந்து செல்வர். சந்தியாவுடன், அவளின் குழந்தையுடனும் ஏனோ கொஞ்சம் ஒட்டுதல் தான் துவாரகாவிற்கு.
அதை சாக்காய் வைத்தே சந்தியாவுடன் பத்மினியும் வந்துவிடுவார். ஒரே மருமகளாகிற்றே.
தள்ளி நிற்க மனமில்லை. அன்னபூரணியை அவள் பேசியதில் கோபம் தான். ஆனாலும் இப்பொழுது பெரிதாக நினைப்பதில்லை.
என்னதான் வாழ்க்கை அதன் போக்கில் போனாலும் துவாரகாவும் அதிரூபனும் பெயரளவில் இருக்கிறார்களே தவிர அவர்களுக்குள் ஒரு பனித்திரை இன்னமும் தான் இருந்து வருகிறது.
சிரிப்பு, கேலி, கிண்டல், அன்பு, நேசம், காதல், அரவணைப்பு, அன்னியோனியம் எதற்கும் குறைவில்லை.
ஆனாலும் இருவரையும் எதுவோ தடுத்தது. தங்களுக்குள் இன்னமும் சரியாகவில்லை என அதிரூபனுமே நினைத்தான். அதனாலேயே துவாரகாவை நெருங்கவில்லை.
அவனின் எண்ணம் புரிந்தும் துவாரகாவும் விலகியே இருந்தாள். அகிலாவின் புறக்கணிப்பு இன்னமும் கரையானாய் அரித்துக்கொண்டிருந்தது.
அதன் பொருட்டு அவனோடு ஒன்ற அவளுக்கு விருப்பமில்லை. அனைத்தும் சரியாகட்டும். அதிரூபன் சரிபண்ணிவிடுவான் என நம்பினாள்.
அகிலா எங்கிருக்கிறார்? என்ன, ஏதுவென தெரிந்தாலும் என்று அவரை நேரில் பார்க்கவென ஆவலாய் இருக்க அதிரூபன் தான் அதையும் தடுத்து வைத்திருந்தான்.
அதிரூபன் அகிலவேணியை சந்திக்க சரியான நாளை யோசித்துக்கொண்டிருந்தான். அன்றைய நாள் தனக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்க போகிறது. அதற்கு அவன் தன்னையே தயார் செய்யவேண்டிய அவசியம்.
ஆனால் அந்த நாள் அவனுக்கு எத்தனை வலியை தரப்போகிறது என அப்போது அவனுக்கு தெரியவில்லை.
தெருத்தெருவாய் பைத்தியக்காரனை போல அலைய வைக்க போகிறது என்றும் அவன் அறியவில்லை.
அந்த நாளும் விரைவில் வந்தது. அவனின் வாழ்வே அஸ்தமித்துவிட்டதை போல ஒரு வலியை முதன்முதலில் உணர்ந்தது அன்று தான்.
அர்த்த ராத்திரியில் இதோ நடுரோட்டில் தரையில் கசங்கிய உடையுடன் தளர்ந்துபோய் அமர்ந்திருந்தான்.
அவன் முன் பதட்டமான முகத்துடன் விஷால், அர்னவ், சந்தோஷ், சங்கரன் என நின்றுகொண்டிருந்தனர்.