மின்னல் அதனின் மகனோ – 20 (2)

“ஹ்ம்ம் அது…”

“துவாவை ரிசார்ட்ல வச்சு டார்ச்சர் பண்ணி அனுப்பினதுக்கு பின்னால நீ என்னை பெங்களூர்ல வச்சு பார்த்த. நீயும் சித்தப்பாவும் இன்விடேஷன் கார்ட் குடுக்க வந்தப்ப உன்கிட்ட இந்த கில்டினேஸ் நான் பார்க்கலையே. நார்மலா தானே இருந்த…” சுருக்கென கேட்க தலை குனிந்தான் சந்தோஷ்.

“இப்ப மட்டும் என்ன?…” அதிபனோ அவனை விடுவேனா என்றான்.

“அத்தான், உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலை. பயமாவும் இருந்தது எனக்கு. சொன்னா விஷால், அர்னவ் மாட்டிப்பாங்க…” என்றுவிட்டு நாக்கை கடித்துக்கொள்ள,

“எனக்கு தெரியாம இருந்தா அது உனக்கு பிரச்சனை இல்லை. எனக்கு தெரிஞ்சது தான் இப்ப உன் ப்ராப்ளம் இல்லையா?. அப்போ விஷால், அர்னவ் என்ன தப்பு பண்ணினாலும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவியே தவிர அவனுங்க தப்பை நீ சுட்டிக்காட்டி திருத்த மாட்ட. ஹ்ம்ம்…”

“அத்தான் ப்ளீஸ், அதுக்கு பிராயச்சித்தமா தான் நானெதுவும் வேண்டாமேன்னு ஒதுங்கி இருக்கேன். வீட்ல அம்மா பேசறதே இல்லை. பத்மிம்மா கூட அப்பப்ப தான். சந்தியா மூஞ்சியிலையே முழிக்காதன்னு போய்ட்டா. அஷ்மி…”

“என்ன?…”

“இல்ல அஷ்மிதா, அவங்க எவ்வளவு பிரண்ட்லி? இப்ப பேசறதே இல்லை. அவங்க கூப்பிடற பச்சைக்கிளியை நான் ரொம்ப மிஸ் பன்றேன்…”

“ரொம்ப பீல் பன்ற. இரு அஷ்மிக்கு கூப்பிடறேன்…” என மொபைலை எடுக்க,

“அய்யய்யோ, வேண்டாம். இன்னும் திட்டுவாங்க…” என பதறிக்கொண்டு அவனின் மொபைலை பறித்தவன் பாவமாய் அதிபனை பார்க்க,

“இப்படி மூஞ்சியை வச்சுக்காத. சகிக்கலை…” என்றவாறு காரை தன்னுடைய வீடு இருக்கும் பகுதியில் ஒடித்து வளைக்க,

“அத்தான், என்னை இங்கயே இறக்கி விட்டுடுங்க. நான் டாக்ஸி புக் பண்ணி வீட்டுக்கு போய்டறேன். நாளையில இருந்து ஆபீஸ் வரேன்…”

கை கால் எல்லாம் வேர்க்க ஆரம்பித்தது சந்தோஷிற்கு. அதிரூபனின் வீட்டிற்கு அழைத்து செல்கிறான்? எப்படி துவாரகாவை எதிர்கொள்வது? ஏற்கனவே இங்கு வந்து சென்றவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்த பின் சுனாமி வராத குறைதான்.

அந்தளவிற்கு அவர்களின் குடும்ப அமைதி ஆட்டம் கண்டுவிட்டிருந்தது. இப்போதெல்லாம் சங்கரனுக்கும் ரத்தினசாமிக்கும் கூட வாக்குவாதம் நடு வீட்டிலேயே நடக்க ஆரம்பித்திருந்தது.

அதிபனுக்காக துவாரகாவை விட்டுவிட சொல்லி சங்கரன் பேச எப்படி நீ அதை சொல்லலாம் என ரத்தினசாமி ஆக்ரோஷம் கொள்ள குடும்பமே சங்கரனின் பேச்சுக்கு தலையாட்ட தனியாளாய் தனித்துவிட்ட கோபம் துவாரகாவிடம் சென்றது ரத்தினசாமிக்கு.

இப்படி துவாரகா என்னும் ஒருத்தியால் குடும்பத்தில் இத்தனை கலவரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தது.

அன்னபூரணி அதிபன் வீட்டிற்கு வந்து சென்றபின் ஸ்வேதாவிடமிருந்து மெதுவாய் யாருமறியாமல் பேச்சுக்களை கேட்டு வாங்கியிருந்தான் சந்தோஷ்.

கேட்டதிலிருந்து அப்படி ஒரு மனபாரம். எந்த பிள்ளைக்கும் தாயை ஒருவர் கடிந்து பேசினால் தாளாது தான். ஆனால் இங்கு நியாயத்தின் புறம் தானே நிற்கவேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டவள் பாதிப்பை கொடுத்தவருக்கு கேள்வி எழுப்புகிறாள். அவளின் இழந்துவிட்ட வலி மிகுந்த பிள்ளை பருவத்தின் காயங்களின் சுவடுகளுக்கு இப்பொழு தான் மருந்திட்டு கொண்டிருக்கிறாள்.

இதை தவறு என எவராலும் கூற முடியாதே. தாய் ஒரு புறம், தமக்கை ஒருபுறம். ஆம், துவாரகாவை அவன் என்றோ தன் சகோதரியாக வரித்துவிட்டான் மனதினுள்.

இருதலைக்கொள்ளி எறும்பென தவித்தவனின் மொத்த கோபமும் வைத்தியநாதனிடம் தான் மையம் கொண்டது.

அவனின் நினைவுகள் இப்படி இருக்க அதற்குள் வீட்டிற்கு வந்துவிட்டான் அதிரூபன்.

கார் திறக்கும் ஓசையில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவன் மனதில் அத்தனை தயக்கம்.

துவாரகா தன் வருகையை விரும்புவாளா என்று. இருக்கையில் அழுத்தமாய் அமர்ந்துகொண்டவன்,

“ப்ளீஸ் அத்தான், உங்க பேச்சை மீறுறேன்னு நினைக்காதீங்க. அவங்களுக்கு நான் வரது கண்டிப்பா பிடிக்காது. ஏற்கனவே இங்க நடந்த பிரச்சனைகள் எனக்கு எல்லாமே தெரியும். இன்னும் ஒரு ப்ராப்ளம் எதுக்கு?…”

“சந்தோஷ், இறங்குன்னு சொல்றேன்ல…” அதிபன் அதட்ட,

“அத்தான், தினமும் ஒருத்தர் வந்து பிரச்சனை செய்யறாங்களான்னு கோவப்படப்போறாங்க அவங்க. வேண்டாம்…” தன் மறுப்பை தெரிவித்தபடி அவன் இருக்க,

“அறைஞ்சு பல்லை கழட்டிடுவேன் ராஸ்கல். அப்ப இருந்து அவங்க அவங்கன்னு சொல்லிட்டே இருக்க. அவ யாரு உனக்கு? அக்கான்னு சொன்னா முத்தா உதிர்ந்திடும்? அவங்களாம் அவங்க…” என்றவன் அவனின் கை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அத்தான், அத்தான் என்ற அவனின் கத்தலை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவனை டைனிங் ஹாலிற்கே கூட்டி வந்துவிட அங்கே நின்ற துவாரகாவை பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.

இவனை பார்த்த கணம் கொஞ்சம் திகைப்பை காட்டினாலும் தலை குனிந்தபடி நின்ற அவனை பார்த்துக்கொண்டே,

“சாப்பாடு ரெடி. கை கழுவிட்டு ரெண்டுபேரும் உட்காருங்க. சாப்பிடலாம்…” என்றதும் சந்தோஷின் முகம் இன்னும் தெளியாமல் இருந்தது.

“இல்ல, அத்தான் நான் வீட்ல சாப்பிட்டுக்கறேன். வேண்டாம்…” அவன் மறுக்க,

“பயப்படாதடா. அதெல்லாம் ஓரளவுக்கு நல்லாவே சமைக்கிறா இப்ப. நான் நல்லா தான இருக்கேன்…” என கேலி பேசி அவனை இலகுவாக்க முயல அவனை முறைத்தாள் துவாரகா.

“அவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் சாப்பிட வேண்டாம் போங்க…” என பொருமலுடன் எடுத்து வைத்திருந்த உணவு பாத்திரங்களை மீண்டும் அடுப்படிக்குள் எடுத்து செல்ல போக,

“தெரியாம சொல்லிட்டேன் தெய்வமே. இவனை வேற சாப்பிட கூட்டிட்டு வந்துட்டேன். எடுத்து வை…” என அதிபன் சரண்டர் ஆக அவனை ஆச்சரியமாய் பார்த்துவைத்தான் சந்தோஷ்.

“என்னடா லுக்கு? உட்காரு. இல்லைனா இன்னைக்கு பட்டினி தான். பசிக்குதேன்னு ஹோட்டலுக்கும் போய்டமுடியாது. அதுக்கும் சேர்த்து ஆடிடுவா. மலை இறக்கறது கஷ்டம்…” கிசுகிசுப்பான குரலில் முகமெல்லாம் புன்னகையாக அதிரூபன் சொல்ல அவனையே பார்த்த சந்தோஷ்,

“நீங்க இப்படி பேசி, சிரிச்சு நான் பார்த்ததே இல்லை அத்தான். பேசுவீங்க தான். எல்லாத்துலையும் ஒரு லிமிட் இருக்கும். ஆனா இந்த முகம் எனக்கு புதுசா இருக்கு…”

“ரியலி…” என அதற்கும் அவன் சிரிக்க,

“அவங்களுக்கு என் மேல கோவம் போய்டுச்சா?…” தயக்கமாய் சந்தோஷ் கேட்க அதிரூபன் பார்த்த பார்வையில்,

“ஸாரி, அக்கா அக்காவுக்கு…” என அசடு வழிய,

“ஹ்ம்ம், அது. உன் அக்காட்டையே  கேளேன்…” என சொல்ல ம்ஹூம் என மறுப்பாய் தலையசைத்துவிட்டு அவனுக்கு வைத்த ப்ளேட்டை பார்த்து குனிந்துகொள்ள,

“இப்படி தலையை குனிஞ்சுட்டா நான் என்ன வச்சுருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியுமாம்?…” அதட்டலாய் வந்த துவாரகாவின் குரலில் அவன் நிமிர்ந்து பார்க்க அவனை பார்த்து லேசாய் சிரித்தாள்.

“தேங்க்ஸ்…” என்று துவாரகா சொல்லவும் சந்தோஷின் விழிகள் இரண்டும் கலங்கிப்போயின.

“நான், ஸாரி…” அவன் அதற்கு மேலும் அவளின் முகத்தை பார்க்கமுடியாமல் திரும்பிக்கொள்ள,

“இது உங்களுக்கு தான். ஸ்வீட். நானே செஞ்சேன். கொஞ்சம் சுமாரா இருந்தாலும் சாப்பிடுங்க மிச்சம் வைக்காம…” என்றவள் மீண்டும் கிட்சனிற்குள் வர அங்கே மாலதி மும்மரமாய் பார்த்திரங்களை தேய்த்துக்கொண்டிருந்தாள்.  

error: Content is protected !!