மின்னல் அதனின் மகனோ – 20 (1)

மின்னல் – 20

           வந்த செய்தியை கேட்ட பின்புதான் அதிரூபனுக்கு தூக்கமே வந்தது. ஒரு வழியாக நினைத்ததை முடித்துவிட்ட உற்சாகம் வேறு அவனுக்கு அத்தனை நிறைவை தந்தது.

படுக்கைக்கு வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த துவாரகாவை ஒரு சில நொடிகள் பார்த்திருந்துவிட்டு அவளருகே பட்டும் படாமல் படுத்தான் கனத்த மனதோடு.

அவனுள் இன்னமும் துவாரகா சொல்லிய வார்த்தைகள் ஆழமான கோடிழைத்து சென்றிருந்தது. அதனாலேயே அவளை நெருங்க அவன் முனையவில்லை.

அத்தனை உற்சாகமும் அந்த நிமிடம் காணாமல் போய்விட்டது போலொரு கருநிழல் எழுந்து அவனை சூழ்ந்தது.

கண்ணை மூடிக்கொண்டு உறக்கத்திற்குள் செல்ல நினைத்து ஒருவழியாய் அதில் ஜெயம் கண்டான்.

மறுநாள் ரத்தினசாமியை அலுவலகத்தில் வைத்தே சந்தித்தவன் தன்னுடைய முடிவை எந்த காரணத்தை கொண்டும் மாற்றிக்கொள்ள முடியாதென்று ஸ்திரமாக மறுக்க அதன் எதிர்த்தாக்கம் ரத்தினசாமிக்கு வேறு வகையாக இருந்தது.

பேசி பேசி அவனை இன்னமும் கோபமாக்காமல் அங்கிருந்து தளர்ந்த நடையுடன் வெளியில் சென்றார்.

உணர்வின்றி அவரை பார்த்தவன் ராஜாங்கத்திற்கு அழைத்து நடந்ததை  பகிர்ந்துகொண்டான்.

இப்போது மட்டுமில்லை, முன்பிருந்தே ராஜாங்கத்தின் பங்கு அவன் வாழ்க்கையில் ஏராளம்.

அகிலாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை அவனாகவே ஓரளவு உணர்ந்துகொண்டாலும் அதை தெளிவுபடுத்தியது ராஜாங்கமே.

அவர் இன்றுவரை அவனுக்கு உறுதுணையாய் இருந்து வருவது என்பது மிக மிக ஆச்சர்யமே.

ஒரு ஆசானை போல, வழிகாட்டியை போல, இன்னொரு தகப்பனை போல என இன்னும் எத்தனை வேண்டுமென்றாலும் அவருக்கு புகழாரம் சூட்டுவான் அதிரூபன்.

“அண்ணா பெரியப்பா வந்துட்டு போனாங்க…” அர்னவ் வந்து கேட்க,

“தெரிந்து என்ன பண்ண போற?…”

ரத்தினசாமியிடம் பேசி பேசி அந்த எரிச்சல் இன்னமும் குறையாமல் அவனுள் மண்டிக்கிடக்க அதை தம்பியிடமும் காட்டிவிட்டான்.

“ஸாரி அண்ணா, இனிமே கேட்கலை…” அவன் அங்கிருந்து நகர,

“சந்தோஷ் ஏன் ஆபீஸ் வரதே இல்லை? அவனை பார்த்தும் நாளாச்சு?…” அர்னவின் வாடிய முகம் பார்த்து மனம் கனிந்தவன் கேட்க, அதிரூபன் மேலும் பேசிவிட்ட சந்தோஷத்தில்,

“அப்பாவோட லாரி ஆபீஸ் போறான் அண்ணா. இனி இங்க வரலைன்னு சொன்னான்…” என்றதும் புருவத்தை சுருக்கிய அதிபன்,

“ஓஹோ, இப்போலாம் எந்த முடிவுனாலும் நீங்களே எடுத்துக்கறது போல? வரான், வரலை. அவனோட இஷ்டம். அதை இன்பார்ம் செய்யனுமா இல்லையா?…”

“அண்ணா, அவன்…” என அர்னவ் தயங்க தன் மொபைலை எடுத்து விஷாலிற்கு அழைத்து இங்கு வர சொல்லியவன் அவன் வந்ததும்,

“இதுதான் நீ ஆபீஸை பார்த்துக்கற லட்சணமா? என்ன பண்ணிட்டு இருக்க நீ? சந்தோஷ் இத்தனை நாள் வரலைன்னு நானா கேட்ட பின்னால தான் இவன் சொல்றான். இதை நீ என் நாலேட்ஜ்க்கே எடுத்துட்டு வரலை…”

“ஐயோ அண்ணா, நான்…” விஷால் பதற,

“நான் ஆபீஸ்ல என்னோட ஷேர் இன்கம்மை தான் எனக்கு வேண்டாம்னு சொன்னேன். இந்த ஆபிஸ் வேண்டாம்னு சொல்லலையே. இல்லை இதைத்தான் எதிர்பார்க்கறீங்களா?…” என இன்னும் கடினமாக முகத்தை வைத்துக்கொண்டு அதிபன் பேச அர்னவிற்கும், விஷாலிற்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

“ஸாரி அண்ணா. நாங்க அப்படி நினைக்கலை. நீங்களா கேட்கறதுகுள்ள அவன்ட்ட பேசி இங்க கூட்டிட்டு வந்திடனும்னு தான் இருந்தோம்…”

“அதாவது இதுக்கு முன்ன என்கிட்ட மறைச்சது மாதிரி இதையும் மறைச்சிடனும்னு நினைச்சிருக்கீங்க. குட்…” என்றவன் மேஜையை இரண்டு தட்டு தட்டிவிட்டு உதட்டை கடித்த வண்ணம் சேரில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.

“அண்ணா ப்ளீஸ், நாங்க அப்படியெல்லாம் நினைக்கவே இல்லை. நீங்க இல்லைனா எங்களுக்கும் எதுவுமே இல்லை…”

விஷாலின் மன்றாடும் குரலில் கொஞ்சமும் முக இறுக்கம் மட்டுபடாமல் கண்களை மூடிக்கொண்டு. மீசையை நீவியபடி சேரில் இங்குமங்குமாய் சுழல,

“நான் சந்தோஷை வர சொல்றேன் அண்ணா. அவனுக்கு நீங்க வீட்டை விட்டு போனதுல அவ்வளவு வருத்தம். அதுதான் இங்க வரதே இல்லை. உங்களோட இந்த முடிவுக்கு நாங்களும் ஒரு காரணம் தானே. எங்கட்ட கூட அவன் சரியா பேசறதே இல்லை…” அர்னவ் பேச,

“இன்னும் கொஞ்சநேரத்துல அவன் இங்க வந்திடுவான். நான் மெசேஜ் பண்ணிட்டேன் அண்ணா…” விஷால் சொல்ல அதிரூபன் பேசவே இல்லை.

சில நிமிடங்கள் அங்கேயே நின்றுபார்த்து அவன் பேசாது போக இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்.

அடுத்த நாற்பது நிமிடங்களில் சந்தோஷ் வேகமாய் அங்கு வந்துவிட அறையின் வாசலிலேயே நின்ற விஷால் அவனை பிடிபிடியென பிடித்துவிட்டான்.

“போதும்டா, ஏற்கனவே மாமாவும் திட்டித்தான் இங்க அனுப்பினாங்க. நீங்களுமா?…” என்றவனின் குரலில் எரிச்சலே மிகுந்திருக்க,

“முதல்ல உள்ள போய் அண்ணாட்ட பேசு. அதுக்கு பின்னால உன்னை பேசிக்கறேன்…” என அவனை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அறைக்குள் நுழைந்தவன் அதிரூபனை பார்க்க அவன் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தான் மதிய உணவிற்காக.

“அத்தான்…” என்ற குரலில் நிமிர்ந்தவன் வா என்பதை போல தலையை மட்டும் அசைக்க,

“ஸாரி அத்தான்…” தலை குனிந்து சொல்ல,

“எதுக்கு?…” என கேட்டுக்கொண்டே தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேற செய்வதறியாமல் ஒரு நிமிடம் நின்றுவிட்டு அவனின் பின்னாலே ஓடினான் சந்தோஷ்.

அவன் வருவதை பொருட்படுத்தாதது போல வேக எட்டுக்களுடன் நடந்தவன் சந்தோஷ் பேசவே சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. விடுவிடுவென நடந்து காரில் ஏறிக்கொண்டவன் மறுபக்க கதவையும் திறந்துவிட்டான்.

அதிரூபனின் இந்த செயலை நம்ப முடியாமல் பார்த்த சந்தோஷை பார்த்து தலையசைத்தவன்,

“கெட்இன் சந்தோஷ்…” என்ற அழுத்தமான குரலில் அழைக்க வேகமாய் ஏறிக்கொண்டான்.

“ஐ கான்ட் பிலீவ் அத்தான்…” இன்னும் ஆச்சர்யம் விலகாத குரலில் சந்தோஷ் பேச அவனை முறைப்பாய் பார்த்தான் அதிரூபன்.

“நீங்க பேசவே மாட்டீங்கன்னு நினைச்சேன். ஆனா இப்ப உங்களோட என்னை கூட்டிட்டு போறீங்க. ரொம்ப சந்தோஷம் அதி அத்தான்…” தன்னுடைய உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவனிடம் பகிர்ந்துகொண்ட மலர்வு அவனின் முகத்தில் தெரிய,

“எங்க போறோம்னு கேட்க மாட்டியா சந்தோஷ்?…” அதிபன் கேட்க,

“தெரியலை அத்தான். உங்க கூட இவ்வளவு நடந்த பின்னாலையும் வரேனே. அதுவே போதும். எங்கனாலும் வருவேன்…” என சந்தோஷ் சொல்லியதும் அதிபனின் முகத்தில் கூட மிதமான புன்னகை.

“எங்கவேணா வருவேன்னு சொல்ற. ஆனா இத்தனை நாள் ஆபீஸ் வரலையே?…”

சாலையில் கவனமாய் இருந்துகொண்டே அதிபன் கேட்க சட்டென்ற மௌனம் சந்தோஷை சூழ்ந்தது.

“பேசு சந்தோஷ்…”

“இதுவரை நீங்க பட்ட கஷ்டம் போதும்னு நினைச்சேன். தினமும் உங்க முகத்தை பார்த்துட்டு இருக்கறது ரொம்ப கில்ட்டியா இருந்துச்சு. அதுதான்…”

“எப்ப இருந்து இந்த கில்டி கான்ஷியஸ்?…”

error: Content is protected !!