மின்னல் அதனின் மகனோ – 2 (2)

கோபம் குறையாமல் அஷ்மிதா பொறிய துவாரகாவை விட்டு எழுந்தவன் அவளருகில் வந்து,

“நான் பார்த்துப்பேன். நீ கொஞ்சம் அமைதியா இரு…”

“எதை பார்ப்ப? உன் கார்ல அவ எப்படி இருந்தான்னு பார்த்த தானே? இங்க எப்படி தூக்கிட்டு வந்தன்னு நானும் பார்த்தேன். ஆனா யார் காரணும்னு தெரிஞ்சும் என்ன பண்ணிட்டோம்?…” என்றவள் அங்கிருந்த கப்போர்டை திறந்து துவாரகாவின் உடைகளை எடுத்து வந்தாள்.

“இதை பாரு. இந்த ட்ரெஸ் எப்படி கிழிஞ்சு இருக்குன்னு பாரு. ஐ நோ. இது நிச்சயம் அந்த நோக்கத்தில் நடக்கலைன்னு எனக்கு தெரியும். ஆனா கண்மண் தெரியாத கோபத்துல இப்படி நடந்துக்கிட்டவங்க அதுக்கும் மேல போகமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?…”

“அப்படி என்ன பழிவாங்க வேண்டி இருக்கு? உங்க மூச்சுக்காத்து கூட படக்கூடாதுன்னு தானே எங்கயோ வாழ்ந்துட்டு இருக்காங்க. அப்படியே இருந்துட்டு போகட்டும்னு விடவேண்டியது தானே?…”

“நீ இப்படி என்னை தடுப்பன்னு தெரிஞ்சுதான் இந்த வீடியோவை என்னோட மொபைலுக்கு பார்வேட் பண்ணிட்டேன். எவிடன்ஸ் இருக்கறப்ப நான் ஏன் வேடிக்கை பார்க்கனும்? உங்கப்பா பெரிய மினிஸ்டர்னா அந்த செல்வாக்கை வச்சு நீ வெளில எடுத்துக்கோ. எனக்கும் இன்ப்ளுயன்ஸ் இருக்கு. ஒரு நாளாச்சும் அவனுங்களை நான் லாக்கப்ல வைக்காம விடமாட்டேன்…”

மூச்சிரைக்க பேசிக்கொண்டிருந்தவள் அதிரூபனின் சத்தம் கேட்காமல் திரும்பி பார்க்க அவனோ மடங்கி சரிந்து அமர்ந்து துவாரகாவின் உடையில் முகத்தை புதைத்திருந்தான்.

“அதி…” அவனின் தோள் மேல் கை வைக்கவும், எழுந்தவன் சோபாவில் வந்து அமர்ந்தான்.

கல்லிலும் கடினமான அவனின் முகத்திலிருந்து எதையும் அனுமானிக்கவே முடியவில்லை அஷ்மிதாவால்.

அவளுக்கு தெரியும் துவாரகாவின் மீதான அதிரூபனின் அபரிமிதமான அன்பும், பாசமும்.

இந்த உலகத்தில் அவளை தாண்டிதான் அவனுக்கு மற்றவை எல்லாம். ஏன் தான் கூட என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆனாலும் ஏன் அமைதி காக்கிறான் என்றுதான் புரியவில்லை. பொறுமை இழந்தவள்,

“அதி நீ என்னதான் நினைக்கிற? ப்ளீஸ் சொல்லு. எனக்கு முடியலைடா. எனக்கே இப்படி கொதிச்சுட்டு வருது. உனக்கு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். ஆனாலும் பாசம் உன்னை தேக்கி வைக்குதோன்னு தோணாமலும் இல்லை…”

மனதிலிருந்ததை வெளிப்படையாக கேட்டவளை தன் தோள் சாய்த்துக்கொண்டான்.

“அஷ்மி, இந்த விஷயம் யாருக்கும் எக்காரணம் கொண்டும் தெரியகூடாது. நான் சொல்றவரை. நமக்கு தெரிஞ்சது போலவும் காட்டிக்க கூடாது. முக்கியமா துவா இங்க இருக்கிறது யாருக்குமே தெரியக்கூடாது. புரியுதா?…”

“அதி…” கலக்கம் பொங்க பார்த்தவளின் தலையை ஆறுதலாய் வருடியவனின் அசாதாரண அமைதி அஷ்மிதாவை பெரிதும் பயம்கொள்ள செய்தது.

நேரம் செல்ல செல்ல உறக்கம் லேசாய் கண்களை படர்ந்தாலும் அவன் என்ன செய்கிறானோ என்ற எண்ணத்திலேயே வலுக்கட்டாயமாய் தூக்கத்தை விரட்டியடித்தாள்.

அவளின் முயற்சி புரிந்தவன் தான் சொன்னாலும் கேட்கமாட்டாள் என்பது புரிய அவனும் கண்டுகொள்ளவில்லை.

மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் ப்ரனேஷை அழைக்க அதற்காகவே காத்துக்கொண்டிருந்ததை போல ஒரு அழைப்பிலேயே எடுத்துவிட்டான்.

“அதி, என்னடா இது?…” என பதட்டம் நிரம்பிய குரலில் பேச,

“இது எப்படி நடந்ததுன்னு விசாரிச்சாயா?…” நேரடியாக விஷயத்துக்கு வர,

“ஹ்ம்ம் ஆமாம். என் தம்பி மூலமா தான் ரூம் புக் பண்ணியிருக்காங்க. அவனும் பார்ட்டிக்கு தான் வரதா நினைச்சுட்டான். அவனுக்கும் எதுவும் தெரியாது…”

“விஷால் கால் செஞ்சானா?…”

அடுத்து என்ன நடக்குமென சரியாய் கணித்து கேட்ட நண்பனை எண்ணி வியந்துகொண்டே,

“ஹ்ம்ம் சிசிடிவில ரெகார்ட் ஆகியிருந்தா டெலிட் செய்ய சொல்லி பணம் குடுத்திருக்கான் மேனேஜர்கிட்ட. டெலிட் ஆகிடுச்சான்னு கேட்க தான் கால் செஞ்சிருக்கான்…” 

“என்ன சொன்ன?…”

“ஹ்ம்ம் நீ தான் இங்க இருந்து கிளம்பும் போதே கால் பண்ணி சொல்லியிருந்தியே. விஷால் கூட வந்தவங்க யார்ன்னு பார்க்க சொல்லி. இப்படி ஒரு வீடியோ கிடைக்கும்னு நானுமே எதிர்பார்க்கலை. மேனேஜரும் உண்மையை சொல்லிட்டான். எதுக்கும் இருக்கட்டுமேன்னு டெலிட் பண்ணியாச்சுன்னு சொல்ல சொல்லிட்டேன்…”

ப்ரனேஷ் பயந்துகொண்டே தான் பேசினான். தன் தம்பி மீதும், தன் ரிசார்ட் மேனேஜர் மீதும் தவறிருக்கிறதே? எதையாவது மறைத்து பேசினால் அதிரூபனுக்கு பிடிக்கவும் செய்யாது.

நண்பனுக்கு நேர்மையாக இருக்கவே ப்ரனேஷ் விரும்பினான். அதையும் மீறி அதிரூபன் போன்ற ஒரு நண்பனை பகைத்துக்கொள்ள விருப்பமும் இல்லை அவனுக்கு.

“ப்ரனேஷ், இந்த விஷயம் எனக்கு தெரியும்னு விஷாலுக்கு தெரியக்கூடாது. அந்த புட்டேஜை நீ டெலிட் பண்ணிடு…” என்று சொல்ல,

“அதி, தம்பிங்கட்ட பொறுமையா பேசு. அவங்கட்ட…”

“தேங்க்ஸ் ப்ரனேஷ். கல்யாணத்தை வச்சிட்டு உனக்கு சிரமம் ரொம்ப கொடுத்துட்டேன். அதுக்கு…” ஒட்டாத தன்மையில் மன்னிப்பை கோரும் விதத்தில் பேச பதறிப்போனான் ப்ரனேஷ்.

“டேய் என்னடா நீ? இப்படியெல்லாம் தள்ளிவச்சு பேசாத மச்சி. கஷ்டபடுத்தாத. இந்த விஷயம் என்னை தாண்டி வெளில போகாது…”

உத்திரவாதம் கொடுப்பதை போன்ற நம்பிக்கையான பேச்சில் கொஞ்சம் நிம்மதியான அதிரூபன்,

“பை டா…” என விடைபெற,

“அதி நாளைக்கு மேரேஜ்க்கு…” என்று ஆரம்பித்தவன்,

“நத்திங்டா. நீ முதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடு. இன்னும் டூ டேய்ஸ் இங்க தானே ப்ரோக்ராம் உனக்கு. ப்ரீ ஆகிட்டு சொல்லு. மீட் பண்ணலாம். ஓகே…”

தன் மனதை புரிந்துகொண்ட நண்பனை மனதார மெச்சியவன் அவனுக்கு வாழ்த்தையும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து உள்ளே வர அங்கே சோபாவிலேயே உறங்கிப்போயிருந்தாள் அஷ்மிதா.

கதவை சாற்றிவிட்டு திரும்பிய சத்தத்தில் வேகமாய் விழித்தவள் அவனை பார்க்க,

“எதுக்கு இவ்வளோ பதறுற?…” அவனின் நிதானமும் இறுக்கமான முகமும் அடிவயிற்றை கலக்கியது.

‘என்னவோ ப்ளான் பண்ணிட்டான் போலவே?’ அவளின் மனது அச்சக்குரல் எழுப்ப அதை அவளின் முகமும் அப்படியே பிரதிபலிக்க அவளருகே வந்து அமர்ந்தவன்,

“எதுக்கு இவ்வளோ பயந்து என்னை பார்க்கிற?…” சாய்ந்து அமர்ந்தவன் துவாரகாவின் முகத்தில் தன் பார்வையை நிலைக்க விட அவனின் கையை சுரண்டியவள்,

“அதி உன் மனசுல என்ன தான் நினைக்கிற? சொல்லிடு ப்ளீஸ். ஏதாவது விபரீதமா?…”

அஷ்மிதா கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே துவாரகாவிடம் லேசாய் அசைவு ஏற்பட அதில் கவனத்தை அங்கே செலுத்தினாள்.

வேகமாய் எழுந்து செல்ல முயன்றவளை கைகளை பிடித்து நிறுத்தி அமர்த்தியவன் அசையாமல் துவாரகாவையே பார்த்திருந்தான்.

அவளின் விழி மலர் விரிய காத்திருந்தான். தன்னை பார்க்கும் நொடிக்காய் தவித்திருந்தான்.

தாமரை இதழென மூடிய இமைகளுக்குள் கருமணிகள் அங்குமிங்கும் சுழன்று இமைசிறகுகள் பிரிய அதிரூபனின் உள்ளம் தடதடக்க ஆரம்பித்தது.

விழிதிறந்து அந்த அறையை மெல்ல சுழற்றி ஓடவிட்டவள் இறுதியாய் அதிரூபனிடம் வந்து பார்வையை நிறுத்தினாள்.

அசைவில்லா பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துகிடந்தன.

அதை ஓரளவு புரிந்துகொண்டவனின் உள்ளமோ ஓலமிட்டு கதறியது. இல்லை என்று கத்தவேண்டும் போல உணர்வு உந்த அதற்குள் அஷ்மிதா அவனின் கையை உதறிவிட்டு எழுந்து வர அவளை கண்டவள் மீண்டும் கண்களை சொருகி மயங்கிப்போனாள்.

வேகமாய் துவாரகாவை நெருங்கியவள் அவளை பரிசோதித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுடன் நிமிர்ந்து பார்க்க அங்கே அதிரூபன் கனல் கக்கும் விழிகளோடு அவளை முறைத்துக்கொண்டிருந்தான்.

“அம்மாடியோவ்! ஏன்டா இப்படி காவு வாங்க போற கருப்பசாமி மாதிரி வந்து நிக்கிற? நெஞ்சே அடைச்சிருச்சு…” என திட்டிக்கொண்டே அவனை தாண்டி சென்று வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தாள்.

இல்லை, இல்லை குடிப்பது போல் பாவனை செய்தாள்.

‘தப்பிச்சேன். தூக்க கலக்கத்துல அந்த புள்ளை கண்ணு முழிச்சிருக்கு. திரும்ப தூங்கிருக்கு. அதுக்கு நான் என்னவோ கேப்புல கெடா வெட்டிட்டேன்ற ரேஞ்ச்ல என்னையை பார்த்து வைக்கிறான். எல்லாம் நேரக்கிரகம்’

மனதுக்குள் நினைப்பதாக மெலிதான குரலில் வாய்விட்டு புலம்பியபடி திரும்ப அவளுக்கு மிக அருகில் நின்றிருந்தான் அதிரூபன்.

முதலில் அதிர்ந்தவள் தான் உளறியதை கேட்டிருப்பானோ என்ற ஐயத்தில் அவனை பார்க்க அவனின் கைகட்டி அவளை பார்த்தபடி நின்ற தோற்றம் அப்படித்தான் என அடித்து கூறியது.

சமாளிப்போம் என அசடு வழிய சிரித்தவள்,

“காபி குடிப்போமா?…” என்று பேச்சை மாற்ற அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து சிரித்தவன் அவளின் தலையில் வலிக்காமல் கொட்டி,

“நானே போய் வாங்கிட்டு வரேன்…” என சொல்லி கிளம்பினான்.

செல்லும் அவனை இமைக்காமல் பார்த்தவளின் பார்வை அடுத்து துவாரகாவிடம் வந்து நின்றது.

error: Content is protected !!