மின்னல் – 2
உடைந்துபோன இதயத்தோடு தலையை கைகளால் தாங்கியபடி அமர்ந்திருந்தான் அதிரூபன்.
அது ஒரு மருத்துவமனை. பெங்களூர் நகரில் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் அதுவுமொன்று.
அவன் இருந்தது டாக்டர் அஷ்மிதாவின் பிரத்யேக அறை. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் என்று அவனுக்குமே தெரியாது. ஆனால் மனது வெறுமையாய் இருந்தது.
‘இப்படி இவளை பார்ப்பேன்னு நான் நினைக்கவே இல்லையே?’ அவனுள்ளம் அரற்றியது.
தன்னை அடையாளம் தெரியாத அளவிற்கு மயக்கநிலையில் அவளிருந்த கோலம் அவனை உயிரோடு வதைத்து சிதைத்தது.
“அதி…” என்ற அழைப்போடு அவனின் தலையை கோதியவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகளில் ஈரம் கசிந்திருக்க பதறிப்போனாள் அஷ்மிதா.
“டேய் என்னடா இது சின்னபிள்ளை மாதிரி கண்ணுல தண்ணி?…” அவனின் நிலை கண்டு கலங்கினாலும் வெளிக்காட்டாமல் அவனை அதட்ட,
“அஷ்மி அவ…”
“ப்ச் அவளுக்கு ஒண்ணுமே இல்லை. இப்போ தூங்கிட்டு தான் இருக்கா…” என்றவளை நம்பமுடியாமல் பார்க்க,
“நீ நினைக்கிறது புரியுது. அவளை அடிச்சு காயப்படுத்தி இருக்காங்க தான். ஆனா நாம நினைக்கிறது மாதிரி இது ரேப் அட்டெம்ப்ட் இல்லை. அதுக்கான எந்த அறிகுறியும் இல்லை…”
அஷ்மிதாவின் பேச்சில் உண்மை இருந்தாலும் ஏனோ அதிரூபனின் மனம் அதை நம்பமறுத்தது. அவன் நிலை உணர்ந்தவள்,
“ஹண்ட்ரட் பர்சென்ட் அவ நார்மலா தான் இருக்கா. நான் தான் சொல்றேனே, என்னை நம்பமாட்டியா?…” என்றும் குழப்பமே அவன் முகத்தில் விஞ்சி இருக்க,
“ஏன் அதி அப்படி இருந்தா நீ விட்டுடுவியா?…” என அஷ்மிதா கேட்ட நிமிடம் விருட்டென எழுந்தவனின் விழிகளில் அத்தனை நெருப்பு ஜுவாலைகள்.
“அஷ்மி…” அவனின் உறுமலில் மிரண்டாலும் கண்டுகொள்ளாமல்,
“டேய் என்ன சவுண்டு? நான் ஒரு டாக்டர். எல்லாமே கேட்கத்தான் செய்வேன்…” என்று சொல்லி,
“அதுவும் உன்னை கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணு நான். நான் கேட்காம வேற யார் கேட்பாங்க?…” மிதப்பாய் கேட்டவள்,
“நீ இங்க வரதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லையே அதி…” என்றும் கேட்க,
“ப்ச், ப்ரெண்ட் மேரேஜ், ஒரு மீட்டிங் அட்டென் பண்ணனும். அதோட உனக்கும் ஒரு சப்ரைஸ் குடுக்கலாமேன்னு தான்…”
“அவ்வளோ தானா?…” அவனின் முகம் பார்த்து கேட்க,
“நம்மோட வெடிங் இன்விடேஷன் குடுக்கவும் தான். உன்னையும் கூட்டிட்டு போகலாம்ன்னு…”
அமைதியாய் இரண்டு நிமிடம் அவனையே பார்த்தவள்,
“ஓகே, இப்போ இந்த விஷயத்துக்கு வருவோம். இன்னைக்கு நீ இங்க கிளம்பி வந்ததனால அவளை காப்பாத்த முடிஞ்சது. நீ அங்க அந்த ரிஸார்ட் போகாமலே இருந்திருந்தா?…”
திடுக்கிட்டு அவளை பார்த்தவனுக்கு வார்த்தையே வரவில்லை. உண்மையில் அப்படி நினைத்துப்பார்க்க கூட தோன்றவில்லை அதிரூபனுக்கு.
“ஏதோ ஒரு சக்தி அவளை காப்பாத்தி இருக்குன்னே வச்சுப்போம். அதான் நல்லபடியா வந்துட்டாளேன்னு விட்டுடுவியா?…” என்றவள் மேலும் விடாமல்,
“சப்போஸ் நீ பயந்த மாதிரி நடந்து இருந்தா அதுக்கு காரணமானவன விட்டுடுவியான்னு கேட்டேன். எதுக்கும் ஒரு தெளிவு வேணுமில்லையா?…” கூர்மையாய் அவனை பார்த்து கேட்க முதலில் யோசனையாய் பார்த்தவன்,
“வாட் யூ மீன்?…” என்க,
“நிச்சயம் அவ ரிசார்ட்ல தான் உன் கார்ல ஏறியிருக்கா. அங்க தான் அவளுக்கு இப்படி நடந்திருக்கு. அங்க இருந்து கிளம்பின நீ வேற எங்கயும் காரை நிறுத்தினயா?…” என்றதற்கு அவனின் இல்லை என்ற தலையசைப்பு பதிலாய் கிடைக்க,
“அவ இப்போ இந்த நிமிஷம் கன்னி பொண்ணு தான். ஆனாலும் ரொம்பவே காயப்பட்டிருக்கா மனதளவிலும் உடலளவிலும். காயம் ஏற்படுத்தியது யாரா இருந்தாலும், அவங்களுக்கு என்னதான் காரணமா இருந்தாலும் அவ பாதிக்கப்பட்டிருக்கா. நீ அவங்களை விட்டுடுவியான்னு கேட்டேன்…”
முகத்தில் கசப்பு பொங்க அவனிடம் கேட்டுவிட்டு தனது கோட்டை கழட்டிவிட்டு ப்ளாஸ்கில் இருந்த காபியை இரண்டு கோப்பைகளில் சரித்தபடி அவனை நோட்டமிட அவனுக்கு புத்தியில் எங்கோ பொறிதட்டியது.
“நோ…” என்றபடி மேஜையில் ஓங்கி குத்தியவன் முகம் மிக ஆக்ரோஷமாய் மாறியது.
இப்பொழுது அனைத்தும் விளங்கியது இது அனைத்தும் ஏன் எதற்கென்று. தன் முகத்தை துடைத்தவன்,
“நீ பேசினாயா அவக்கிட்ட?…” அதிரூபனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க,
“எனக்கு இப்பவே பார்க்கனும்…” என்றபடி எழ,
“ப்ச், அதி காம்டவுன். அவ அன்கான்ஷியஸ்ல இருக்கா. மயக்கத்திலேயே அவ உளறலை, அந்த பேர்களை வச்சுதான் எனக்கு தெரியவந்துச்சு. ரொம்பவும் பயந்திருக்கா…” என்றவள் கொஞ்சம் தயங்கி,
“உன்னை பார்த்தா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலையே. ஸோ…” என்று நிறுத்த,
“என்ன என்னை பார்த்து பயப்படுவான்னு சொல்றியா? இந்த நிலைல அவளை பார்த்தே என் உயிர் இன்னும் என்னைவிட்டு பிரியாம இருக்கு. என்னை பார்த்து அவ பயந்துட்டா மட்டும் செத்தா போய்டுவேன். என்னால மேனேஜ் பண்ணிக்க முடியும். நீ வரனும்னா வா, இல்லைனா இங்கயே இரு…”
அஷ்மிதாவை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென சென்றுவிட அவளும் அவனின் பின்னே ஓடினாள்.
இவர்கள் அறைக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த இரண்டு நர்ஸ்களை சத்தமின்றி வெளியேற்றி கதவை சாற்றி வைத்தாள்.
அங்கே படுக்கையில் முகத்தில் ரத்தபசையின்றி பொலிவிழந்து ஜடம் போல் படுத்திருந்தவளை உயிர் நொறுங்க பார்த்தவன் அவளருகே அமர்ந்து தன் கைகளுக்குள் அவளின் தளிர்கரத்தை எடுத்து பொத்திக்கொண்டவன்,
“துவா. துவாரகா…” என்றழைத்தான்.
கேட்பவளுக்கு சிறிதும் கூட வலித்துவிடகூடாது என்னும் அளவில் இருந்தது அவனின் குரல்.
மீண்டும் மீண்டும் அழைத்தும் அசைவின்றி கிடந்தவளை வேதனை பொங்க பார்த்தவன்,
“என்ன அஷ்மி கண்ணையே திறக்கலை?…” துவாரகாவின் முகத்தை விட்டு அகலாத பார்வையோடு பின்னால் நின்றிருந்த அஷ்மிதாவிடம் கேட்க,
“உனக்கே ஓவரா இல்லையாடா? அவளுக்கு வலி தெரியாமல் இருக்கவும், தூங்கவும் இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். நல்ல டீப் ஸ்லீப்ல இருக்கறவட்ட போய் எழுந்திரு அஞ்சலின்னா உடனே எழுந்துடுவாளா?…”
அஷ்மிதா கிண்டலடிக்க அவளை திரும்பி பார்த்து முறைத்தவன்,
“மேடம் இங்க இருந்து கிளம்பறீங்களா?…” என கடுப்பாய் கூற,
“அது சரி உன் இஷ்டத்துக்கு வான்னுவ, உன் இஷ்டத்துக்கு போன்னுவ. போடா டேய்…” என சொல்லி அங்கிருந்த சோபாவில் அமர்ந்துக்கொள்ள,
“ரவுண்ட்ஸ் போகல?…” அதிரூபன் கேட்க,
“போகலை. என் ட்யூட்டி எப்பவோ முடிஞ்சது. நீ கூப்பிட்டன்னு தான் திரும்ப நான் வந்தேன். என் ப்ரெண்ட்ன்னு சொல்லித்தான் அட்மிட் பண்ணியிருக்கேன். அவ எழுந்துக்க இன்னும் டைம் ஆகும். உனக்கு பேச்சுதுணைக்கு ஆள் வேண்டாமா?…”
சட்டமாய் சொல்லிவிட்டு பெரிதாய் ஒரு கொட்டாவியை வெளிவிட்டு சோபாவிலேயே காலை மடக்கி சாய்ந்துகொண்டாள்.
“நாளைக்கு ஹாஸ்பிடல் டீன்க்கு இன்விடேஷன் வச்சிடலாமா அதி. உன்னை கூப்பிடனும்னு நினைச்சிட்டே இருந்தேன். நீயே வந்துட்ட. நாளைக்கு ஈவ்னிங் அவர்ட்ட ஒரு அப்பாய்ன்மென்ட் வாங்கிடலாம்…”
அவனின் பதில் எதிர்பாராது பேசி பேசியே அவனை இலகுவாக்க முயன்றாள்.
அதிரூபனிடம் விளையாட்டாய் பேசினாலும் துவாரகா கண்விழித்ததும் அவனை கண்டு எப்படி நடந்துகொள்வாள் என்ற கவலை அஷ்மிதாவை ஆட்டிப்படைத்தது.
ஏற்கனவே அவளை இப்படி கண்டுவிட்டோமே என சிதறிக்கிடப்பவனை அவளும் வார்த்தையால் கொன்றுவிட்டால் அவனால் தாங்கமுடியுமா?
அப்படி ஒரு சூழலை கற்பனையில் கூட நினைக்கமுடியவில்லை. இதை அனைத்தையும் தாண்டி அவனின் தம்பிகள் மீதான கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது அஷ்மிதாவினுள்.
‘எத்தனை தைரியம் அவனுங்களுக்கு? ராஸ்கல், நேர்ல பேசிக்கறேன்டா’ என எண்ணி பல்லை கடித்தாள்.
இப்படி பலவாறான சிந்தனைகள் மனதினுள் ஓட சரக்கென எழுந்து அமர்ந்தவள்,
“அதி, நீ உன் தம்பியை அங்க பார்த்தயா? நான் சொன்னதை வச்சு நீ கெஸ் பண்ணியிருப்பன்னு நினைச்சேன். ஆனா உன்னோட சைலன்ட் எனக்கு டவுட்டா இருக்கு. நீ இவ்வளோ நேரம் ஆகியும் ஏன் ரியாக்ட் பண்ணலை?…”
அதிரூபனின் எதிர்புறம் வந்து தன் சந்தேகங்களை வரிசையிட்டு கேட்க அமைதியாய் தன் மொபைலை பார்த்துக்கொண்டிருந்தான்.
“யூ.. யூ.. இர்ரெஸ்பான்ஸிபில் ஃபெல்லோ. நான் கேட்டுட்டே இருக்கேன். மொபைல் தான் இப்போ முக்கியமோ?…” என அருகில் வந்து மொபைலை பறிக்க அவனே கொடுத்துவிட்டான்.
அதில் ப்ரனேஷ் அனுப்பியிருந்த வீடியோவை அப்போதுதான் பார்த்திருந்தான் அதிரூபன்.
அந்த க்ளிப்பிங்கில் விஷாலும் அர்னவும் துவாரகாவை கை கால்கள் கட்டப்பட்டு தூக்கி செல்வது தெளிவாய் தெரிய அவர்கள் பின்னால் சந்தோஷ் ஏதோ பேசிக்கொண்டே செல்வதும் தெரிந்தது.
“ப்ளடி ராஸ்கல்ஸ். ஒரு பப்ளிக் பிளேஸ்ல கொஞ்சமும் பயமில்லாம பொண்ணை தூக்கிட்டு போறாங்கன்னா எவ்வளவு திமிர் இவனுங்களுக்கு. யார் கேட்டுட முடியும்ன்ற அகம்பாவம் தானே…” என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தவள் உடனடியாக அதை தன் மொபைலுக்கு பார்வேட் செய்துவிட்டு,
“நீ என்ன நினைச்சாலும் பரவாயில்லை அதி. இவனுங்களை நான் உள்ள தள்ளாம விடமாட்டேன். எவ்வளவு துணிச்சல்? இப்பவே போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கறேன்…” என சொல்லி அவனின் மொபைலை அங்கே வைத்துவிட்டு கதவை நோக்கி செல்ல,
“அஷ்மி…” அழுத்தமான அழைப்பில் திரும்பியவள்,
“உன் பாசமலரை நீ தண்டிப்ப தான். ஆனா அது நாலு சுவத்துக்குள்ள. எனக்கு அது தேவை இல்லை. செஞ்ச தப்புக்கு ஊரறிய தண்டனை கொடுக்கனும். இவளுக்கு யாருமில்லைன்னு நினைச்சுட்டானா?…”