அவனை நிமிர்ந்து பார்த்தவர் வேகமாய் எழுந்து நின்றார். துவாரகாவை திரும்பி பார்க்காமல்,
“துவாரகாவை பார்த்துகோப்பா. நாங்க கிளம்பறோம்…” என சொல்லி பத்மினியை பார்க்க அவர் துவாரகாவிடம் சொல்லிக்கொள்ள கூட பிரியப்படவில்லை. ஏனோ ஒருவித ஆற்றாமை அவருக்குள்.
மீண்டும் அதிரூபனிடம் திரும்பிய அன்னபூரணி,
“இங்க நடந்தது எதையும் வேற யார்க்கிட்டயும் சொல்லவேண்டாம் அதி. நாங்களும் சொல்லமாட்டோம்…” என கேட்க,
“அம்மா நான் கண்டிப்பா மாமாட்ட சொல்லுவேன்…”
அதற்கும் ஸ்வேதா பொங்கிக்கொண்டு நிற்க அவளை அன்னபூரணி பார்த்த பார்வயில் தலைகுனிந்தவள்,
“நானும் சொல்லமாட்டேன்ம்மா…” என தானாக சொல்லி வீட்டிலிருந்து கோபமாக வெளியேறி காரில் அமர்ந்துகொண்டாள்.
“கிளம்பறோம்ப்பா…” என்று அன்னபூரணி சென்றுவிட பத்மினி மகனிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுகொண்டார்.
அவர்கள் சென்றதும் துவாரகா வேகமாய் சமையலறைக்குள் சென்று தண்ணீரை அப்படி குடித்தாள். உடை நனைந்துபோகும் அளவிற்கு அத்தனை வேகம்.
மீண்டும் ஹாலிற்கு வர அதிரூபன் போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். முடிப்பான் என பார்த்து பார்த்து சலித்தவள் மாடிக்கு சென்று அமர்ந்துவிட அவள் செல்வதை பார்த்துகொண்டிருந்தவனுக்கு உள்ளுர பெருமூச்சொன்று கிளம்பியது.
‘இத்தனை வருஷமா எனக்கு நானே என்னோட ரூம்ல தனியா கேட்டுட்டிருந்தேன். இதை உங்கட்ட எல்லாம் கேட்க முடியாம இருந்தேன்’ என்று அவள் குமுறிய போது உள்ளுக்குள் வைத்துக்கொண்டு எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறாள் என்று வருந்தினான்.
இப்படியாவது இந்த வேதனைகளை வார்த்தைகளாய் கொட்டி தீர்த்த பின்னாவது அவள் மனம் அமைதியடைந்து ஒரு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினால் போதும் என்று இருந்தது அதிரூபனுக்கு.
மேலும் ஒருமணிநேரம் சோபாவிலேயே அமர்ந்திருந்தவன் போன் மூலம் விஷாலிடம் அலுவலக வேலைகளை கேட்டுகொண்டான்.
அதன்பின்னும் அவளை பார்க்காமல் இருக்கமுடியாமல் மேலே சென்றான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவளை பார்த்தும் அவளாய் பேசட்டும் என அவன் இருக்க, அவன் பேசுவானா என அவள் பார்க்க எதுவும் நடந்தபாடில்லை.
அரைமணிநேரம் பொறுத்தவள் அவளாகவே எழுந்துவந்து அவன் முன் நின்றாள். கட்டிலின் மறுபுறத்தில் யோசனையோடு அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து பார்க்க,
“கோவமா இருக்கீங்களா மாமா?…” என புருவத்தை சுழித்துக்கொண்டு அவள் கேட்டவிதம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க முகத்தில் காட்டவில்லை.
“என்கிட்ட உனக்கு வேற எதுவுமே கேட்க தோணாதா? இல்லை உன்னை நான் வேற மாதிரி பார்க்கறதே இல்லையா?…” என கேள்வி எழுப்ப,
“ஹா வேற மாதிரியா? நீங்க இப்ப உம்முன்னு தான இருக்கீங்க? அப்ப வேற எப்படி கேட்கவாம்?…” அதிமுக்கிய கேள்வியை அவளும் கேட்க,
“வேறமாதிரினா உன்னை ஒரு ஹஸ்பண்டா நான் பார்க்கறதே இல்லையான்னு கேட்டேன். அதாவது லவ் லுக். அது இல்லையா உன்னை பார்க்கறப்ப?…”
அது அவளுக்கு கேட்டானா இல்லை அவனுக்கே அவன் கேட்டானா என அந்த கடவுளுக்கே வெளிச்சம். ஆனாலும் தெரிந்துகொள்ள வேண்டுமென கேட்க,
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க கோவமா இருக்க போய்தானே என்கிட்ட பேசவே இல்லை. காலையிலையும் என் கையை தட்டிவிட்டுட்டீங்க. எனக்கு அவ்வளோ கஷ்டமா போச்சு…”
சிறுபிள்ளையென அவள் அவனையே குற்றவாளியாக்கி அவனிடமே புகார் பத்திரம் படிக்க அதிபனுக்கு சந்தேகமே வந்துவிட்டது.
காலையிலும், சற்றுமுன்பும் கீழே பெண் சிங்கமென எதிராளிகளை வாய் திறக்க முடியாதபடி கர்ஜித்ததென்ன? இங்கே தன்னிடம் பிள்ளையாய் கொஞ்சி நிற்பதென்ன? என வியப்பாய் பார்த்தான்.
‘ஆனாலும் கேப்புல கெடா வெட்டுறடா கேடி. இப்ப அவ கொஞ்சினா? அத நீ பார்த்த?.’ என உண்மைவிளிம்பி மனசாட்சி கொக்கரிக்க அதை அடக்க நெஞ்சை நீவியவன்,
“அதெல்லாம் இல்லைடா துவா…” என அவளை சமாதானம் செய்ய பார்த்தான்.
ஆனாலும் அவள் அப்படியே நிற்க இழுத்து தன்னருகே அமர்த்தி புன்னகையோடு அவளை பார்க்க,
“உங்களுக்கு நான் உங்கப்பாவை, அத்தையை பேசிட்டேன்னு கோவமா?. அதான் என் கூட பேசலையா?…” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராது,
“அவங்க பண்ணினதுக்கு நான் கேட்காம இருக்கவா? என்னால முடியாது. இப்ப நான் பேசலாம் தானே. அம்மா மாதிரி நீங்க பேசக்கூடாதுன்னு சொல்லமாட்டீங்க இல்லையா?. எனக்கு தெரியும்…” என அவனை பேசவிடாமல் கேள்வியும் அவளே பதிலும் அவளே ஆனாள்.
அதில் சிரிப்பு வர முகத்தில் மலர்ந்த முறுவலுடன் அவளையே அவன் பார்த்திருக்க,
“இப்பவும் ஒண்ணுமே சொல்லலை நீங்க. அவங்க ஏன் இங்க வந்தாங்க? இங்க வந்து வேலைக்கு ஆள் வைக்கிறேன் அது இதுன்னு. எனக்கு பிடிக்கலை…”
“எனக்கும் சேர்த்துதான் நீயே பேசறியே. இனி நான் என்ன பேச? அதுதான் சைலன்ட் ஆகிட்டேன்…” என பதில் சொல்ல அவனின் முகத்தை உற்று பார்த்தாள் அவள்.
“எனக்கு நம்பிக்கை இல்லை…” என உதட்டை பிதுக்க இன்னும் அவனின் புன்னகை விரிந்தது.
“நான் கோவமா பேசிட்டு இருக்கேன். சிரிக்கிறீங்க?…” என கேட்டு இடுப்பில் கைவைக்க,
“வேற என்ன பண்ணனும்? உண்மையில சொல்லனும்னா நான் இன்னும் ஷாக்ல இருந்து வெளியில வரலை. நீ பேசினது சந்தோஷம் தான். இவ்வளோ பேசுவியான்னு தோணிச்சு. உனக்கு இப்படி பேச தெரியுமான்னு இருந்துச்சு. ஆனாலும் இவ்வளோ பேசற அளவுக்கு உன் மனசுக்குள்ள அழுத்தம் இருந்திருக்குன்னா எத்தனை கஷ்டம் அனுபவிச்சிருப்ப. அதுதான்….” என்றதற்கு,
“அதனால தான் என் கையை தட்டிவிட்டுட்டு விலகி போனீங்களாக்கும்?…” என கேட்கும் பொழுதே அவளின் கண்கள் சட்டென கலங்கிவிட்டது.
“ப்ச், என்ன இது இப்பத்தான் நீ பேசினதை நினைச்சு சந்தோஷப்பட்டேன். இப்ப இப்படி அழற?…” சட்டென அவளை தோள் சாய்த்து அவளின் கன்னத்தை தட்ட,
“ஒன்னும் வேண்டாம். நீங்க இருப்பீங்கன்னு நம்பிக்கைல தான நான் பேசினேன்…”
“இப்பவும் நான் இருக்கேன்டா. எங்கயும் போகலை…”
“இல்லை, காலைல போய்ட்டீங்க…” என மூக்கை சுருக்கி அவனை குறை சொல்ல,
“அது வேற. அப்ப இருந்த அப்செட். அதனால தான்…”
“அப்போ அப்செட்டா இருந்தீங்கன்னு ஒத்துக்கறீங்க. அப்டித்தானே?…” என்றதற்கு என்ன பதில் சொல்வதென அவன் திருதிருக்க,
“அந்த அப்செட்ல தான் இவளை ஏன்டா கட்டிக்கிட்டோம்னு நினைச்சீங்களா?…”
“என்ன நானா? நான் எப்ப நினைச்சேன்?…” என அவன் அலற,
“அப்ப நீங்க போனதுக்கு என்ன அர்த்தம்?…” இப்படியெல்லாம் அவள் பேசுவாள், கேட்பாள் என எதிர்பாராதவன் கையெடுத்து கும்பிட்டேவிட்டான்.
“அம்மா தாயே, சத்தியமா அப்படி நினைக்கலை. நீயா ஏதாவது கற்பனை கரப்பாம்பூச்சியை பறக்கவிட்டுடாத…” பாவம் போல கூற,
“அப்ப இனிமே இந்த மாதிரி விலகி போவீங்களா?…” மிரட்டலாய் கேட்க,
“இனியும் போய்டுவேனா? மாட்டேன்…” அவனும் ஒப்புக்கொடுக்க,
“நான் தப்பே பண்ணியிருந்தாலும் நீங்க அப்பவே என்கிட்ட கேட்கனும். சண்டை போடனுமா போட்டுடனும். சமாதானமும் செஞ்சிடனும். பேசாம இருக்க கூடாது…”
துவாரகா சொல்ல சொல்ல அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான் அதிரூபன். அவனின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துகொண்டவள்,
“தப்புதான் நானும். நானும் இனி பேசாம இருக்கமாட்டேன். கண்டிப்பா சண்டை போடுவேன். அப்பறம் நீங்க சமாதானம் செஞ்சிடனும். ஓகே…”
“டீலா, டீலா. ஒரு விரலை நீட்டி இந்த ஒண்ணுல ஒண்ணை தொடுங்கன்னு சொல்ற மாதிரியே இருக்குடா துவா. மேடம் அகராதில நோ டீல்க்கு இடமே இல்லை போல. சண்டை நான் போட்டாலும், நீ போட்டாலும் நான் தான் சமாதானம் செய்யனுமா? ரொம்ப நல்லா இருக்குடா…”
அதிரூபன் பேசிய பாவனையில் துவாரகா அதுவரை இருந்த கிலேசங்கள், சஞ்சலங்கள் மறைந்து புன்னகைக்க அவளின் தலையை பிடித்து ஆட்டியவன்,
“வா சாப்பிடலாம்…” என்று அழைக்க,
“எனக்கு வேண்டாம். நான் மாட்டேன். உங்க அத்தை சமைச்சது. நீங்களே சாப்பிடுங்க…” மீண்டும் முறுக்கிக்கொள்ள,
“இது அத்தை சமைச்சது இல்லை. நான் ஆடர் செஞ்சது. அஷ்மி வீட்டு குக் செஞ்சு அனுப்பியிருக்காங்க…” என சொல்ல,
“இது எப்போ?…” வியப்பாய் அவள் கேட்க,
“மெசேஜ் பண்ணினேன். அனுப்பிட்டா. வா…” அவளை இழுத்துக்கொண்டு கீழே இறங்க,
“ரொம்ப படுத்தறேனா மாமா?…” அவனின் முகம் நோக்கி குனிந்து அவள் கேட்க அவன் தலையை மட்டும் மறுப்பாய் அசைக்க,
“இவ்வளோ பேசுவேன்னு தெரிஞ்சிருந்தா என்னை கல்யாணம் செஞ்சிருக்கவே மாட்டீங்கல்ல…”
காலையில் இருந்து அவளின் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வியை கேட்டதும் தான் சற்று நிம்மதியானது.
ஆனாலும் அவன் ஆமாம் என பதில் சொல்லிவிட கூடாதே என்ற பயத்தில் உடனடியாக அனைத்து தெய்வங்களையும் தனக்காய் உதவிக்கழைக்க அவளின் பதட்டம் கண்டவனின் கண்களில் குறும்பு கூத்தாடியது.