மின்னல் அதனின் மகனோ – 19 (1)

மின்னல் – 19

              அன்னபூரணிக்கு அந்த இடத்திலேயே தன் உயிர் பறவை பறந்துவிடுமோ என்கிற அளவிற்கு வேதனை.

இந்த பேச்சிற்கே இப்படி வருந்துகிறோமே, எந்தளவிற்கு அகிலா வலியை அனுபவித்திருப்பார் என நினைத்து பார்த்தவருக்கு ஏனோ அந்த நிமிடம் கூட தான் தன் பிடிவாதத்தை அப்போது தவிர்த்திருக்களாமோ என தோன்றவே இல்லை.

தான் செய்தது தன்னளவில் சரியே. தானொன்றும் அகிலாவை விலக்கவில்லையே என்று தான்  நினைத்தார்.

“முடிஞ்சதா, நான் போகலாமா?…” துவாரகா கேட்டுக்கொண்டே பூஜை அறையிலிருந்து வெளியேறி நடக்க,

“நான் ஒன்னும் உன்னோட அம்மாவை அதாவது அகிலாக்காவை போக சொல்லலையே. உன் அம்மாவா தான் விலகினாங்க. அவங்களை நான் ஒன்னும் விட்டுக்கொடுக்க சொல்லலை. இதுக்கு நான் எப்படி பொறுப்பாகமுடியும்?…”

தாளமாட்டாமல் அன்னபூரணி கேட்டும் விட துவாரகா திரும்பி அவரை பார்த்த பார்வையில் அதிரூபன் தான் பயந்துபோனான்.

‘இவ இப்போலாம் ரொம்ப ரொம்ப சரியா பேசிட்டு இருக்கா. இத்தனை வாங்கியும் திரும்ப கொம்பு சீவுறாங்களே. இன்னும் அதிகமா பேச போறா’ என நினைக்கும் பொழுதே அவள் ஆரம்பித்திருந்தாள்.

“ஆமாமா நீங்க பொறுப்பில்லை தான். கண்டிப்பா உங்களை தப்பு சொல்லமுடியாது தான். ஆனா ஒண்ணை மறந்துட்டீங்க…” என்றவள்,

“நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல வளர்ப்போட வளர்ந்த எந்த ஒரு பொண்ணும் அந்த முடிவை தான் எடுப்பா. என்னோட அம்மாவும் அப்படித்தான். ஒருத்தனுக்கு ஒருத்தின்னு பார்த்து வளர்ந்தவங்க. இன்னொருத்தரோட பொருளுக்கே ஆசைப்படாதவங்க. நீங்க சொன்னதும் அவங்க உங்களோட வாழ்க்கையை பங்கு போட்டுக்கனும்னு எப்படி நினைச்சீங்க?. இதுல விட்டுகொடுக்கறது எங்க  இருந்து வந்தது? அவங்க போட்டது உங்களுக்கு பிச்சை…” என அன்னபூரணியை பார்த்து தன் இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு,

“மனசால ஒருத்தனோட வாழனும்னு நினைக்கிற எந்த பொண்ணுக்கும் தன் புருஷன் மனசும் அப்படி சுத்தமா இருக்கனும்னு தான் நினைப்பா. உங்களுக்கு புரியிற மாதிரி சொல்றேன். மானம், ஈனம் உள்ள யாருக்குமே எச்சில் இலையில சாப்பிட மனசு வராது. எங்கம்மா எல்லாத்தையும் விட உயர்ந்தவங்க…”

நேருக்கு நேராக சொல்லியவள் அங்கிருக்காமல் வேகமாய் மாடிக்கு சென்றுவிட சிலையாய் நின்றார் அன்னபூரணி.

அவளின் வார்த்தைகளில் தெறித்த கனல் அன்னபூரணியை பொசுக்காதது தான் குறை.

பத்மினிக்கு பதறியது. இத்தனை வருடங்கள் அன்னபூரணி வாழ்ந்த வாழ்க்கையை நேரில் பார்த்தவர். யாரும் அவரை விளையாட்டிற்கு கூட ஒரு சொல் சொல்லிவிடமுடியாது.

சந்தோஷத்தை தாண்டி வேறு எதையுமே அனுபவிக்காதவர். கடவுள் இப்படி மொத்த சந்தோஷத்தையும் கொட்டி கொடுத்தது ஒரு சிறுபெண்ணிடம் பேச்சு வாங்கத்தானோ? என வருத்தமாய் போனது பத்மினிக்கு.

எச்சில் இலை என்கிற வார்த்தை அன்னபூரணியை கூறுபோட அப்படியே வேரறுந்த மரம் போல சரிந்து தரையிலேயே அமர்ந்துவிட்டார்.

“அம்மா….” என அவரை தாங்கிய ஸ்வேதா,

“பார்த்தீங்களா அண்ணா, அண்ணி எப்படி எல்லாம் பேசிட்டாங்க. அவங்களுக்காக அம்மா மாமா கூட சண்டை போட்டு இங்க வந்தாங்க. இந்தளவுக்கு தரமில்லாம பேசிட்டாங்க. இனி நாங்க இங்க வரவே மாட்டோம்…” என்றவள்,

“வாங்கம்மா போகலாம். இங்க இனி வேண்டாம். இவங்க நமக்கு தேவையும் இல்லை. எழுந்திரிங்க…” என எழுப்ப அப்பவும் அசையாமல் இருந்தார் அன்னபூரணி.

“பூரணி, நான் தான் வேண்டாம்னு சொன்னேன்ல. வா போகலாம். அவ ஏற்கனவே கோவமா இருக்கா. இன்னும் கோவப்படுத்தற மாதிரி நாம தான் நடந்துக்கிட்டோம். தெரிஞ்சே தப்பு பண்ணிட்டோம். கிளம்பலாம்…” பத்மினி சொல்ல,

“என்ன பேசறீங்க பத்மிம்மா? கோவமா இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவாங்களா? அவங்க அம்மா மாதிரி தானே என் அம்மாவும். மரியாதை வேண்டாமா?…” என ஸ்வேதா வீடே அதிரும்படி கத்த,

“என் அம்மாவோட இணையா பேச இவங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு நீ இந்த குதி குதிக்கிற?…” என மாடியிலிருந்து துவாரகா மீண்டும் வர,

“ஸ்வேதா, பேசாம இருக்க மாட்ட. சின்ன பொண்ணு உனக்கு எதுவும் தெரியாது…” என அவளை அதட்டிய அதிபன்,

“அம்மா நீங்க அத்தையை கூட்டிட்டு கிளம்புங்க. இங்க இருக்க இருக்க பிரச்சனை தான் பெருசாகும்…” என சொல்லி அவர்களை கிளப்ப பார்க்க,

“என்ன சின்ன பொண்ணு? எனக்கும் எல்லாம் தெரியும். இவங்களை கஷ்டபடுத்தினாங்க தான். ஆனா இப்ப ஏத்துக்கிட்டாங்கல. அதுக்கு காரணமே என் அம்மா தான். அந்த நன்றி வேண்டாமா? அது தெரியாம அம்மாவையே பேசறாங்க…”

ஸ்வேதா இப்பொழுது கீழே வந்துவிட்ட துவாரகாவை முறைத்துக்கொண்டே சொல்ல பதறிவிட்டான் அதிரூபன்.

‘இவ முதலுக்கே மோசம் பண்ணிடுவா போல. ஏத்துக்கிட்டாங்கன்னு சொல்லி என் வாழ்க்கைக்கு வேட்டு வைக்கிறாளே?.’ என துவாரகாவை பார்க்க அவளோ நேராய் சமையலறைக்கு சென்று அங்கே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்த மாலதியை அழைத்து,

“நீங்க கிளம்புங்க…” என சொல்ல அவரோ அன்னபூரணியையே பார்த்து நின்றாள்.

“அங்க என்ன பார்வை? அவங்களுக்கு உடம்புக்கு முடியலை. ஹாஸ்பிட்டல் போறோம். இப்ப கிளம்ப போறீங்களா? இல்லை வேலையை விட்டே போறீங்களா?…” என மிரட்ட,

“அம்மாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு…”

“இது என்னோட வீடு. அவங்க உங்களை வேலைக்கு வச்சிட்டாங்களேன்னு தான் பேசாம இருக்கேன். இல்லைனா அப்பவே உங்களை வேண்டாம்னு சொல்லியிருப்பேன். இந்த நேரம் உங்களுக்கு இங்க எந்த வேலையும் இல்லை. நாளைக்கு வாங்க. எப்ப வரனும், என்ன வேலைன்னு நான் சொல்லுவேன். கிளம்புங்க…” என கோவமாகவே சொல்ல அடித்துபிடித்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டாள் மாலதி.

வேலைக்கார பெண்மணி சென்றதும் வேகமாக ஸ்வேதாவிடம் வந்தவள்,

“உனக்கு எல்லாம் அறிவுன்றதே இருக்காதா? நானும் தான் பேசினேன், ஏதாவது சின்ன சத்தம் இந்த இடத்தை தாண்டி போயிருக்குமா? இப்படி வீடே இடிஞ்சு விழற மாதிரி கத்தற. இப்ப தெரியுதா முழு நேரத்துக்கும் வேலைக்கு ஏன் வேண்டாம்னு சொன்னேன்னு. சொந்த வீடாவே இருந்தாலும் வேலைக்காரங்க முன்னாடி என்ன பேசனுமோ அதத்தான் பேசனும்…”

“ஹ இப்படி ஒன்னொண்ணுக்கும் யோசிச்சு யோசிச்சு பார்த்திட்டு இருந்தா யாரையும் வேலைக்கு வைக்க முடியாது. இதெல்லாம் எங்களமாதிரி பணக்காரங்க வீட்டுல சகஜம். உங்களுக்கு எங்க தெரியப்போகுது?. மாச சம்பளத்துல குடும்பத்தை இழுபறியோட நடத்தின நீங்க வேலைக்காரங்க வச்சிருந்தா தானே?…”

துவாரகாவை காயப்படுத்திவிடும் வேகம் ஸ்வேதாவிடம் ஆர்ப்பரிக்க தேவையில்லாமல் பேச ஆரம்பித்தாள். அவளை கண்டிக்க வந்த அதிரூபனை நிறுத்திய துவாரகா,

“கண்டிப்பா ஒத்துக்கறேன். மாச சம்பளம் தான் என் அம்மாவுக்கு. அதனால தான் இடம் பொருள் பார்த்து எதை எங்க பேசனும்னு எனக்கு தெரிஞ்சிருக்கு. எதை யார் கேட்கனும்னு இருக்கு. வசதி தான் உங்க வீட்ல. அதனால தான் உனக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லாம போச்சு…” என்றவள்,

“லுக், எனக்கு உன்னோட இவ்வளவு பேசனும்னே இல்லை. என்ன சொன்ன என் அம்மாவும் உன் அம்மாவும் ஒண்ணா? இன்னொரு தடவை சொல்லிப்பாரு…” என ஸ்வேதாவிடம் வேகமாக நெருங்க,

“துவா ப்ளீஸ், போதும்…” என்ற அதிரூபன்,

“ஸ்வேதா தேவையில்லாம பேசாதே. இதுதான் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னேன். பேச தெரியாம எதையாச்சும் பேசிட்டு இப்ப அழுதுட்டு இருக்கறது…” என அவளை கண்டித்தவன் அன்னபூரணியிடம் அமர்ந்து,

“அத்தை நீங்க கிளம்புங்க. பெரியவங்க நீங்க, உங்களுக்கு தெரியாதது இல்லை. எதுவுமே தானா நடக்கறதில்லை. முன்ன நாம என்ன பண்ணினோமோ அதுக்கான எதிர்வினை கண்டிப்பா நமக்கு திரும்பி வரும். நாம ஒரு விஷயத்தை செய்யும் போது ரொம்ப ஈஸியா எடுத்துக்கறோம். ஆனா அதுக்கான விளைவு வரும்போது அதையும் ஏத்துக்கற மனப்பக்குவம் நமக்கு வேணும்…” என்றான்.

error: Content is protected !!