மின்னல் அதனின் மகனோ – 18 (3)

அகிலாவின் பேச்சு அஷ்மிதாவின் மூலம் அவர் அறிந்தது தான். ஆனாலும் தாயின் புறக்கணிப்பு இந்த பெண்ணை எந்தளவுக்கு புரட்டியிருக்கிறது என வேதனையோடு பார்த்தார்.

“துவா, நம்ம வீட்டுக்கு நம்மை தேடி வந்திருக்காங்க. போய் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா…”

அதிரூபன் சொல்ல அதுவரை நின்றிருந்தவள் அவனருகே அமர்ந்துகொண்டு,

“ஏன் நீங்களே எடுத்துட்டு வந்து ஊட்டிவிடுங்களேன். உங்கப்பாவுக்கு ஊட்டினமாதிரி…”

அவன் கிளம்பி சென்றபோது வடிந்திருந்த கோபம் மொத்தமும் மீண்டும் தலைக்கேறியது துவாரகாவிற்கு.

பத்மினிக்கு அதன்பின்னும் அங்கே இருக்க விருப்பமில்லை. என்னதான் தன் வீட்டினர் மீது தவறு என்றாலும் வந்த இடத்தில் அவமதிப்பதை போல துவாரகா நடந்துகொள்ள முள்மேல் அமர்வதை போல இருந்தது பத்மினிக்கு.

காயப்பட்டவள். அதற்கு காரணம் தன் கணவர். இருந்தாலும் கூசியது அவருக்கு. அவளுக்கே பிடிக்கவில்லை. இனி இங்கே எதற்கு என கிளம்புவதை போல அன்னபூரணியை பார்க்க அவரோ பார்வையாலேயே அமைதிப்படுத்தினார்.

“அதிபா, ஏன் வீட்ல யாரையுமே வேலைக்கு வைக்கலையா?…” என அன்னபூரணி ஆரம்பிக்க பதில் சொல்லவேண்டுமே என,

“இல்லை அத்தை. வருவாங்க. காலையிலேயே வந்து வேலையை முடிச்சுட்டு கிளம்பிடுவாங்க. இங்கயே இருக்கிற மாதிரி யாரையும் வைக்கலை…” என,

“ஓஹ்…” என்றவர் தன்னுடைய மொபைலை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி சென்றார். பேசிவிட்டு வந்தவர்,

“நம்பிக்கையான ஆள் ஒருத்தர ஏற்பாடு பண்ணியிருக்கேன். இன்னும் ஒரு மணிநேரத்துல வந்திருவாங்க. காலையில வந்துட்டு நைட் கிளம்பற மாதிரி பேசியிருக்கேன்…” என்று சொல்லிக்கொண்டே கிட்சனிற்குள் நுழைந்துகொண்டார்.

அதிரூபனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏற்கனவே அவன் நினைத்திருந்தது தான்.

ஆனால் இப்பொழுது மறுத்தாலும் அன்னபூரணி கேட்கமாட்டார் என்பது புரிந்து அமைதியானான்.

அவர் ஏதோ ஒரு முடிவுடன் தான் இங்கு வந்திருக்கிறார் என்று நன்றாகவே விளங்கியது.

அனைவருக்கும் அவரே காபியை கொண்டுவர ஸ்வேதா, பத்மினி எடுத்துக்கொள்ள அதிரூபனும் எடுத்தான்.

ஆனால் துவாரகா திரும்பக்கூட இல்லை. இவர் தன் அம்மாவின் வாழ்க்கையிலும் இவரே முடிவெடுத்தார்.

இன்று என் வாழ்க்கையிலும் இவரே முடிவெடுக்கிறார். பின் இங்கு தான் எதற்கு என உள்ளுக்குள் குமுறிகொண்டிருந்தாள்.

அவளின் முகத்திருப்பலை கண்டுகொள்ளாமல் அவளெதிரில் அமர்ந்தவர் காபியை குடித்துவிட்டு காலி கப்புகளை ஸ்வேதாவிடம் கொடுத்தனுப்பினார்.

அதன்பின் அவரே மதிய சமையலையும் செய்ய துவாரகா சாப்பிட கூட வரவில்லை. ஏனோ அழுகையாய் வந்தது. அடக்கினாள்.

அகிலவேணியை போல துணிந்து நிற்கவேண்டும் என நினைத்தாள். விழிகளில் இருந்து உருண்டு விழ தத்தளித்த கண்ணீர் துளிகளை மீண்டும் கண்களுக்குள் இழுத்து சிறைபிடித்தாள்.

வேலைக்கு வந்த பெண்மணிக்கு உத்தரவுகளை அவரே பிறப்பிக்க அனைத்தையும் பார்த்தவண்ணம் அப்படியே நின்றாள் துவாரகா. எப்பொழுதுவேண்டும் வெடித்துசிதறும் அபாயம் அவளின் முகத்தில் தெரிந்தது.

அவனும் என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்னும் நிலைக்கு வந்துவிட்டான். பேசாதே என்று சொன்னாலும் பேசுவாள். அதில் இன்னும் தன் மீதும் கோபம் அதிகமாகும். எதற்கு வம்பு? என விட்டுவிட்டான்.

அவனின் மனசாட்சி, ‘இப்படி பொண்டாட்டிக்கு பயப்பட ஆரம்பிச்சுட்டியே?’ என கேலி பேச ‘பொண்டாட்டிட்ட எவனாச்சும் கெத்து காமிப்பானா?’ என  அசால்ட்டாய் அதை ஒதுக்கினான்.

என்னதான் நடக்கிறது என பார்ப்போமே என்கிற சுவாரஸியம் கூட இப்போது தோன்றிவிட்டது அவனுக்குள்.

துவாரகாவோ பத்மினியின் பாவமான முகத்தை பார்த்து அமைதி காத்தாள். ஆனாலும் அன்னபூரணியை பார்க்கும் பொழுது, ‘என் பொறுமை போச்சு, இருக்கு’ என பார்த்தாள்.

மாலை ஆனதும் பூஜையறையை துடைத்து சுத்தம் செய்து விளக்கில் எண்ணை எல்லாம் ஊற்றி தயார் செய்தவர் துவாரகாவிடம் வந்தார்.

“வீட்டுக்கு வாழனும்னு வந்துட்டா மட்டும் பத்தாது. விளக்கேத்தி சாமி கும்பிட்டா தான் குடும்பம் செழிக்கும். வம்சம் தழைக்கும். எழுந்து வா…”

வந்ததிலிருந்து அவளிடம் நேரடியாக எதுவுமே பேசாமல் அனைத்தையும் தானே இழுத்துப்போட்டு செய்தவர் இப்பொழுது தான் நேரடியாக துவாரகாவிடம் பேசினார்.

அவளோ இது என்ன என்பதை போல பார்த்து அதிரூபனை பார்க்க அவனுக்கும் என்ன சொல்வதென தெரியவில்லை.

வந்து இரண்டு மூன்றுநாட்கள் மட்டுமே துவாரகா பூஜை செய்து விளக்கேற்றினாள். அதன் பின்பு தான் அனைத்தும் தலைகீழாய் போனதே.

அன்னபூரணி இன்னும் துவாரகாவையே பார்க்க அவளோ முறைத்துவிட்டு முகம் திருப்ப,

“எப்ப பார்த்தாலும் இன்னொருத்தர் முதுகுக்கு பின்னால ஒளிஞ்சுட்டே இருக்க கூடாது. இது உன் வீடு தானே? இந்த குடும்பத்தை நீ தானே பார்த்துக்கனும். அதுக்கு கடவுளோட அனுகிரகமும் வேண்டும் தானே?…” என்றவர் அவள் எதிர்பாராத நேரம் கையை பிடித்து இழுத்துக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்துவிட்டார்.

துவாரகாவின் முகம் இறுகிப்போய் இருந்தது. பத்மினியும் ஸ்வேதாவும் கூட அங்கே வந்து கை கூப்பி நிற்க அதிரூபனும் துவாரகா அருகில் வந்து நின்றான். தீப்பெட்டியை எடுத்து அவளின் கையில் திணித்தவர்,  

“புருஷனோட நூறு வருஷம் சேர்ந்து நல்லபடியா சந்தோஷமா வாழனும்னு மனசார வேண்டிக்கோ. நல்ல மனசோட வேண்டினா கேட்டது கண்டிப்பா நிறைவேறும். வாழ்க்கை நிம்மதியா இருக்கும்…” என சொல்ல அவரை தீர்க்கமாய் பார்த்தவள்,

“அப்போ எங்கம்மா கேட்டது மட்டும் ஏன் நிறைவேறலை? எங்கம்மாவும் அவங்க புருஷனோட நூறு வருஷம் சந்தோஷமா வாழனும்னு தானே இந்த கடவுளை கும்பிட்டாங்க. அவங்க வேண்டுதலை நிறைவேத்தலையே இந்த சாமி?…” என சொல்லி பெட்டியிலிருந்து ஒரு குச்சியை கொளுத்தியவள்,

“எங்கம்மா நல்ல மனசோட தான் வேண்டினாங்க. தன் புருஷன் குடும்பம்னு வாழனும்னு. அப்படிப்பட்டவங்க வேண்டுதலை நிறைவேத்தாம அடுத்தவ புருஷனோட சந்தோஷமா குடும்பம் குழந்தைன்னு வாழனும்னு ஆசைப்பட்ட உங்க வேண்டுதலை நிறைவேத்திருக்காருன்னா கடவுள் கூட பார்ஷியாலிட்டி பார்க்கிறாருன்னு தானே அர்த்தம். உங்களை விட எங்கம்மா எந்த விதத்துல குறைஞ்சுட்டாங்க? எனக்கு அது தான் புரியலை…”

எரிந்துகொண்டிருந்த தீக்குச்சியை கொண்டு குனிந்து குத்துவிளக்கை ஏற்றியவள் அன்னபூரணியை பார்த்தாள். அவளின் முகம் அந்த தீபச்சுடரின் வெப்பத்தை ஒத்திருந்தது.

துவாரகாவின் கேள்வியில் அன்னபூரணியின் கண்களில் மளுக்கென கண்ணீர் முட்ட அடக்கினார்.

ஸ்வேதாவை எதுவும் கேட்ககூடாது என அவளின் கை பற்றி தடுத்தவர் முகம் எந்த உணர்வையும் காட்டவில்லை.

பத்மினிக்கு அன்னபூரணியை பார்க்க பாவமாக இருந்தது. எத்தனை தடுத்து பார்த்தார்? எத்தனை புத்தி சொல்லினார்? ஆனால் எதையும் கேட்கும் நிலையில் அன்று அன்னபூரணி இல்லையே. இன்று வருந்தி என்ன செய்ய?

பாதிக்கப்பட்டவள் கேட்கிறாள். கேட்கத்தான் செய்வாள். அதிலும் அவளை தூண்டுவதை போல நேற்றும், இன்றும் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் கேட்காமல் என்ன செய்வாள்? இப்படியாக இருந்தது பத்மினியின் எண்ணங்கள்.

அதிரூபனுக்கு இதை கேட்டாலும் ஏனோ அன்னபூரணியை பார்த்து கொஞ்சமும் பரிதாபம் கொள்ளவில்லை.

அறியாத வயதாக இருந்தாலும் அவன் தான் அவரின் பிடிவாதத்தின் உட்சத்தை நேரில் கண்டிருக்கிறானே.

வினை விதைத்தவர் வினை அறுக்கத்தான் வேண்டும்.

உப்பை தின்றவர் தண்ணீர் அருந்தத்தான் வேண்டும்.

error: Content is protected !!