மின்னல் அதனின் மகனோ – 18 (2)

“உன்னை பார்க்க தானம்மா வந்தோம். பேசமாட்டியா?…” என பத்மினி கேட்க,

“பார்க்க வந்தீங்களா? இல்லை சண்டை போட வந்தீங்களா?…”

சூடாக துவாரகா கேட்க பத்மினிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எப்படி துவாரகாவை சமாதானம் செய்வது என்றும் புரியவில்லை.

வீட்டில் ரத்தினசாமி அதிபனை பார்க்க போன இடத்தில் துவாரகா தன்னை அடைத்து வைத்து விட்டதாகவும் சாப்பிட எதுவும் தரவில்லை என்றும், தன்னிடம் மரியாதை குறைவாக பேசியதாகவும், அதற்கு அஷ்மிதா தூண்டுதல் என்றும் மட்டுமே சொல்லியிருக்க ஒருவராலும் நம்பமுடியவில்லை.

அதன்பின்னே அஷ்மிதாவிற்கு அழைத்து பத்மினி கேட்க நடந்த அனைத்தையும் அஷ்மிதா சொல்லிவிட அன்னபூரணிக்கும், பத்மினிக்கும் அத்தனை கோபம்.

இதில் மற்றவர்களுக்கு இவருக்கு இது தேவையா என்றுதான் தோன்றியது. என்றுமே அண்ணன் தான் சரி என முதலில் துள்ளும் சங்கரன் கூட அண்ணன் இப்படி செய்திருக்க கூடாது என்றுதான் நினைத்தார்.

தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதில் இன்னும் கோபத்தில் இருந்தார். தனக்காக பேச இந்த வீட்டில் இப்போது ஒருவரும் இல்லை என்ற எண்ணமே அவரை அதிகமாய் கொந்தளிக்க வைத்தது.

அன்னபூரணி தன்னிடம் நேரடியாக பேசாமல் பத்மினி மூலம் இத்தோடு இந்த மாதிரி நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு அவர்களை நல்லபடியாக வாழவிடுமாறு எச்சரிக்கையாய் வேறு சொல்லி சென்றுவிட,

“இதற்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் வைத்துக்கொள்கிறேன்? என் பிள்ளையையே என்னிடமிருந்து பிரித்து எனக்கெதிராய் திருப்பிவிட்டாளே? அவளை நிம்மதியாக இருக்கவிடுவதா?…” என சங்கரனிடம் துள்ள ஆரம்பிக்க,

“அண்ணே, போதும். நம்ம பிள்ளைங்க மட்டுமில்ல, தங்கச்சிக்கு கூட நீங்க செஞ்சது பிடித்தமில்ல. விட்டுடுங்க. நம்ம அதிபனோட சந்தோசம் தான நமக்கு முக்கியம். அது அந்த புள்ளையோடனா நாம குறுக்க நிக்க வேண்டாமண்ணே…”

“டேய் சங்கரா, நீயுமாடா? உனக்குத்தான் அந்த மூதேவியை கண்டாலே பிடிக்காது தானே?…” என ரத்தினசாமி தம்பியிடம் பாய,

“இப்பவும் பிடிக்காது தான் அண்ணே. ஆனா அது நம்ம பையன் வாழ்க்கையை தானே பாதிக்குது. கேட்டீங்கள, அன்னைக்கு நம்ம எல்லார் முன்னவும் தானே அதி அப்படி பேசிட்டு போனான். எனக்கு அவன் நிம்மதி தான் முக்கியம்ண்ணே…”

“அப்படி எல்லாம் எப்படிடா விடமுடியும்? ஒருவேளை அதிபனுக்கே பிடிக்காம போனா. அவ நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வரமாட்டாடா. நம்ம பூரணியை பாரு. இந்த கல்யாணம் நடந்த பின்னால அவ முகத்துல சுரத்தே இல்ல. என்னோட பேசறதே இல்லடா. இதுக்கு காரணம் அவ தானே. இதுக்காகவே அவளை நான் என்ன பன்றேன் பாரு. அவளை வீட்டை விட்டு துரத்தி நடு தெருவுல நிக்க வைக்கல…”

“யாரு சொன்னாண்ணே? நம்ம தங்கச்சிக்கு இப்பத்தான் அவ்வளோ சந்தோஷம். அன்னைக்கு ஆஸ்பத்திரில எப்புடி பேசுச்சு தெரியுமா? பூரணி பேசாம இருக்கறதுக்கு காரணம் என்னனு தெரிஞ்சும் இப்படி பேசாதீங்க…” என்றவர்,

“அண்ணே சொல்றேன்னு கோவிக்காதீங்க. இனி நீங்க அதிபனோட வாழ்க்கையில தலையிடாம இருக்கறது தான் நல்லது. விடுங்கண்ணே. நமக்கு பிடிக்கலேன்னா என்ன? அவனுக்கு பிடிச்சுருக்குல. நல்லா வாழ்ந்துட்டு போகட்டுமே…”

சங்கரன் அவர் பங்குக்கு ரத்தினசாமிக்கு அறிவுரை சொல்லி செல்ல எரிகிற தீயில் எண்ணையை வார்த்ததை போல ஆனது ரத்தினசாமிக்கு.

“எப்பவுமே சரிண்ணேன்னு சொல்றவனை கூட எனக்கு எதிரா திருப்பிட்டாளே அந்த ஊமைக்கொட்டான். அவளா ஊமை? என்ன பேச்சு பேசறா? என் தங்கச்சியை என்ன வார்த்தை சொல்லிட்டா? சும்மா விட்டா நான் அண்ணனா?…” என அவர் பாட்டுக்கு அறையில் கத்திக்கொண்டிருக்க சங்கரன் தான் நொந்துபோனார்.

இவர் என்றைக்கு புரிந்துகொள்ள போகிறாரோ என. அவர் மகள் சந்தியாவும் அவரிடம் எதுவுமே பேசுவதில்லை. கேட்டதற்கு மட்டுமே பதில் வரும் அவளிடம்.

இயல்பிலேயே மென்மையான இரக்க குணம் கொண்டவளால் இவர்களது அக்கிரமங்களை தன் அண்ணனின் வாயாலேயே கேட்ட பின்னும் தந்தையிடம் பேச அவள் விரும்பவே இல்லை.

உண்மை சுடும். அகிலா, துவாரகாவிற்கு தான் அநியாயம் செய்தபொழுது தவறு என்று சுடாத அனைத்தும் இன்று மகளின் முன்னால் குற்றவாளியாக நிற்கும் பொழுது, அவள் தன்னை விட்டு விலகும் பொழுது சுட்டது சங்கரனுக்கு.

வயதான பிறகு பிள்ளைகளை அன்றி வேறொரு சந்தோசம் என்ன இருக்கமுடியும் என நினைக்க ஆரம்பித்த நேரத்தில் தான் தன்னுடைய தவறுகள் தனக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பெரும் சுவரென எழும்பி நின்றது.

அதை தாண்டி செல்ல சங்கரன் முனைந்தாலும் சந்தியா விரும்பவில்லை. அப்பா என்ற கடமைக்கு மட்டுமே பேசி சென்றாள்.

வீட்டில் அனைவரும் துவாரகாவின் பக்கம் இப்பொழுது வந்து நிற்க அதுவும் அதிபனுக்காக மட்டும் தான். அவன் வாழவேண்டும் என்பதற்காகத்தான். இதில் சுயநலமே இதில் அதிகம்.

“உன்கிட்ட பேசலாம்னு வந்தோம். நீ இப்படி சண்டைக்கு வந்தவங்கட்ட பேசற மாதிரியே பேசினா என்ன அர்த்தம்? கொஞ்சம் அமைதியா இரும்மா…”

அப்போதும் பத்மினி தன்மையாகவே பேச அவரிடம் வார்த்தையாட விரும்பாமல் முகம் திருப்பி கொண்டவள் தன் கையை இன்னும் ஸ்வேதா பிடித்திருப்பதை பார்த்துவிட்டு உருவிக்கொண்டு தள்ளி போய் நின்றாள்.

“துவா, நீ தனியா இருப்பியேன்னு வந்தோம். நாங்களும் வரனும் வரனும்னு இருந்தோம். நேரமே கிடைக்கலை…” பத்மினியும் துவாரகாவை பேச்சில் இழுக்க பார்க்க,

“பிறந்ததுல இருந்து நானும் என் அம்மாவும் தனியா இருந்தே பழக்கப்பட்டவங்க தான். இது எனக்கொண்ணும் புதுசில்ல. எனக்கு தனியா இருக்கிறதுல பயமும் இல்லை. என்னோட பயம் எல்லாம் நீங்க தான். உங்க வீட்டாளுங்கன்னா தான் பயம்…”

உணர்வற்ற தன்மையில் துவாரகா யாரையும் பார்க்காமல் சொல்ல அதிரூபன் வந்துவிட்டான்.

“அம்மா…” என்றபடி அவன் உள்ளே வர,

“அதி…” என்றவர் துவாரகாவை பார்க்க அவள் வேகமாய் எழுந்துவந்து அதிபனின் கையை பிடித்துக்கொண்டு நின்றாள்.

அதை அதிபனும் விலக்கவில்லை. அவள் விரல்களை இன்னும் இறுக்கமாய் பற்றிகொண்டான்.

வரும் வழியெல்லாம் அவனின் யோசனைகள் மொத்தமும் அவளைகொண்டே இருந்தது.

இனி துவாரகா என்ன பேசினாலும், எப்படி தன்னிடம் நடந்துகொண்டாலும் அவளிடமிருந்து தான் தள்ளி நிற்க போவதில்லை என்ற ஸ்திரமான முடிவை எடுத்தான்.

இதுவரை அவள் அனுபவித்த துயரங்களுக்கு இந்த அளவிற்கு கூட அவளிடமிருந்து பிரதிபலிப்பு இல்லையென்றால் தான் தவறு.

அவளின் கோபமும் பேச்சும் நியாயம் தானே? இதில் தான் முறுக்கி கொள்வதில் என்ன இருக்கிறது?

எத்தனை கோபம் இருக்கட்டும். இனி என் காதலால் அவளுக்கு சந்தோஷத்தை மட்டுமே வழங்கவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டான்.

“உங்களை பார்க்கலாம்னு வந்தோம்ப்பா…” என பத்மினி என்ன பேசுவது என தெரியாமல் பார்க்க அதிபனை பார்த்ததும் அவனை கட்டிக்கொண்ட ஸ்வேதா,

“அண்ணா, அண்ணி எங்கட்ட பேசவே இல்லை. சண்டை போட வந்தீங்களான்னு கேட்காங்க. முகத்தை திருப்பறாங்க. நான் ஸாரி கூட கேட்டுட்டேன் அண்ணா. இதுக்குமேல நாங்க என்ன செய்ய?…” என அழவே ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வேதாவின் குணமே இதுதான். குறை சொல்கிறோம் என தெரியாமல் அதை குறையாக சொல்லிவிடுவாள். இது வீட்டில் அனைவருமே அறிந்த ஒன்றுதான்.

அவளுக்கு துவாரகாவிடம் தான் மன்னிப்பு கேட்டும் அவள் தன்னிடம் உடனே பேசவில்லையே என்கிற ஆதங்கம்.

அதிலும் தான் பிடித்திருந்த தன் கையை உருவிவிட்டு தன்னிடமிருந்து விலகி இருக்க எப்படியாவது தன்னிடம் அவளை பேசவைத்துவிட வேண்டும் என்கிற வேகம். தன் அண்ணன் சொன்னால் அவள் கேட்பாள் என அவனிடம் சொல்ல,

“இதைத்தான் சொன்னேன். வந்ததும் என்னை கம்ப்ளைன்ட் பன்றீங்க இல்ல. இதுக்கு தான் வந்தீங்களா? என்னை விரட்டிவிட்டா உடனே நான் போய்டனும். பேச வந்தா உடனே நானும் பேசிடனும். நான் என்ன மிஷினா நீங்க ஆன், ஆஃப்ன்னு ஸ்விட்ச் போட்டு போட்டு ஆஃப் பண்ண?…”

துவாரகா ஆரம்பித்துவிட ஸ்வேதா திருதிருவென விழிக்க அன்னபூரணிக்கு கோபம் அப்படி வந்தது. பத்மினிதான்,

“ஸ்வேதா, அதி இப்பத்தானே வந்திருக்கான். நீ வா இப்படி. உன்னை என்ன சொல்லி கூட்டிட்டு வந்தோம்…” என மெதுவாய் கடிந்துகொள்ள ஸ்வேதாவின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.

“ஸாரி அண்ணி, நான் வேணும்னு சொல்லலை. நீங்க என்கூட பேசலையே. அதுதான் அண்ணா சொன்னா கேட்பீங்கன்னு சொன்னேன்…” என அழுதுகொண்டே சொல்ல,

“ஓஹ், உங்க அண்ணன் ஆடர் போட்டா நான் உடனே கேட்டுடனுமோ? அப்ப நீங்க ஆடர் போட்டுட்டே இருப்பீங்க, நான் கேட்டுட்டே மட்டும் இருக்கனும், இல்லையா?…”

துவாரகாவிற்கு அப்படி ஒரு கோபம் வந்தது அன்னபூரணியை பார்த்ததும். நேரடியாய் காட்டமுடியவில்லை.

அதிலும் தான் இத்தனை பேசியும் அவரின் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதே இன்னும் கோபத்தை தூண்டியது.

அதிலும் காலையில் ரத்தினசாமியை பேசியதற்கு தான் இவர்கள் தன்னிடம் சண்டை போட வந்திருக்கிறார்கள் என நினைத்திருந்தாள்.

‘ஆரம்பிக்கட்டும், வச்சிக்கறேன்’ என முறைப்பாய் அன்னபூரணியை அவள் பார்த்திருக்க,

“உட்காருங்கம்மா…” என்றவன் அன்னபூரணியை பார்த்து,

“உட்காருங்கத்தை…” என உபசரிக்க துவாரகா சலனமின்றி பார்த்தாள் அவரை.

ஸ்வேதாவை சோபாவில் அமர்த்தியவன் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு லேசாய் புன்னகைத்து,

“அண்ணி கோபம் குறைஞ்சுட்டா கண்டிப்பா பேசுவா. இதுக்கு போய் அழுவாங்களா?…” என பேச,

“என் கோவம் எல்லாம் குறையாது. குறையுற மாதிரியா பண்ணியிருக்கீங்க நீங்க?…” வெட்டுவதை போல துவாரகா பேச அவளின் பேச்சில்  புருவம் உயர்த்தி பார்த்தார் பத்மினி.

error: Content is protected !!