மின்னல் – 18
அலுவலகத்திற்கு வந்த பின்னும் ஏனோ வேலையில் ஒன்றமுடியாமல் அதிரூபனின் மனம் அலைப்புறுதலுடன் தவித்தது.
‘சாக்கடை’ இந்த வார்த்தை அத்தனை ஆக்ரோஷமாய் அவனை தாக்கியது. அதிலும் வேறு யாரும் சொல்லியிருந்தால் நடப்பதே வேறு.
சொல்லியது துவாரகா. தன் மனைவியல்லவா? அவனால் பதிலுக்கு ஒன்றும் பேசமுடியாத நிலை.
பெற்றோர்களின் பாவ, புண்ணியம் மட்டும் பிள்ளைகளை சேராது. அவர்களை நோக்கி அடையாளம் காட்டப்படும் வார்த்தைகளும் கூட பிள்ளைகள் மேல் தான் பாயும் என்பதற்கு இன்று அதிரூபனே உதாரணம்.
ரத்தினசாமி செய்த பாவத்தின் பலன் மட்டுமல்ல அவருக்கு மகனாய் பிறந்ததற்காக அசிங்கம், சாக்கடை என்ற பெயரும் அதிரூபனை வந்தடைந்தது. எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள்?
அதுவும் துவாரகாவின் வாய்வார்த்தையாக கேட்ட நிமிடம் மனதளவில் சுருண்டுதான் போனான்.
அவர் செய்ததற்கு தானும் சேர்ந்து அந்த சொல்லை வாங்கியாகவேண்டிய நிலையை அறவே வெறுத்தான்.
அவனின் மனசாட்சியோ, ‘ரத்தினசாமி மூலமாக கிடைத்த அந்தஸ்தும், படிப்பும், புகழும், பணமும் மட்டும் வேண்டும். அவரின் பாவத்தின் நிழல் மட்டும் உன்னிடம் பரவகூடாதோ?’ என எக்காளமிட்டது.
‘அதற்கு தான் பிராயச்சித்தமாக சொத்துக்களின் வருமானத்தை கஷ்டபடுகிறவர்களுக்கு கொடுக்கிறேனே?’ என இவன் நினைக்க,
‘உன் கண்ணை பிடுங்கிக்கொள்கிறேன். அதன்பின் அதற்கு வைத்தியம் செய்கிறேன் என்கிறதை போல உள்ளது உன் எண்ணம். செய்வதெல்லாம் செய்வாராம் உன் தந்தை. அதற்கு நீ பரிகாரம் தேடுவாயோ?’ என கேலி பேசியது அவனின் மனசாட்சியே.
அதிலும் கிளம்பும்பொழுது துவாரகா அவனை பார்த்த பார்வை கொன்றுதான் போட்டது. வலியை கொடுத்தவளே மருந்தாய் வந்து நின்றாள்.
ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாமல் அதனை நிராகரித்து இன்னும் ஏதேனும் பேசிவிடுவாளோ என பயந்தே ஓடிவந்தான் இவன்.
இத்தனை வருடங்கள் அவளை மனதிற்குள் பூஜித்து என்னென்னவோ செய்து அவளை பாதுகாத்து, திருமணம் செய்து தன் மனைவியாய் அவளுடன் ஒன்றாய் வாழ்ந்து, இன்று உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை சாக்கடை என்ற பேச்சையும் வாங்கி இன்னுமா உயிருடன் இருக்கிறாய் என்றது இதயம்.
இனி எப்படி அவளை அணுகுவது? அவள் சொல்லிய வார்த்தையை மீறி அவளுடன் இனி தன்னால் இயல்பாய் ஒன்ற முடியுமா? யோசனைகள், யோசனைகள், யோசனைகள் தான் புத்தி மொத்தமும். அத்தனையும் அவனை சுற்றி வளைத்தது.
“என்னால் முடியலை துவா. நீ ஏன் அந்த வார்த்தையை சொன்னடா? இனி உன்னை பார்க்கிற பார்வையையும் நீ அசிங்கம், என்னோட தொடுகையை சாக்கடைன்னு தான் நினைப்பியோ? முடியலைடா?…” என வாய்விட்டே புலம்பினான்.
அப்போ எந்த விதத்திலும் தன்னோட காதல் அவளை அவளின் மனதை தீண்டவே இல்லையோ?அவள் கோபத்தில் தான் பேசினாள். தன் தந்தையை தான் பேசினாள். அதில் தானும் அடக்கம் தானே? இப்படி புலம்பியபடியே அவன் இருக்க,
“அண்ணா…” என்றபடி விஷால் அங்கே வந்து நிற்க தனது வருத்தத்தை அவனிடம் காண்பித்துக்கொள்ளாமல் முகத்தை மாற்றியவன்,
“ஹ்ம்ம் சொல்லு விஷால்…” என கேட்டுக்கொண்டே மேஜையில் இருந்த பைல் ஒன்றை திறந்து அதில் பார்வையை ஓட்டினான்.
“பெரியப்பா வீட்டுக்கு வந்துட்டார்…” ஒரு ஷணம் அசைவை நிறுத்திய அவனின் விழிகள் மீண்டும் பைலை திருப்பி பார்த்து அடுத்த பக்கங்களை ஆராய்ந்துகொண்டே,
“இந்த ஆடர் ரெடி பண்ணியாச்சான்னு பாரு விஷால். இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு தான். ஆனாலும் நாம முன்னமே முடிச்சாகனும். டெலிவரி பண்ணும் போது நமக்கு டென்ஷன் இருக்காது…”
விஷாலின் பேச்சை தவிர்த்தவனாக அலுவலக வேலையை முன்னிறுத்த அவனையே கூர்மையாக பார்த்த விஷால்,
“அண்ணா, அத்தை உங்க வீட்டுக்கு போறாங்க. இப்ப கிளம்பி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்…” என்று சொல்லிய நொடி வேகமாய் நிமிர்ந்தவன்,
“இப்ப எதுக்குடா அவங்க அங்க போறாங்க?…” என எரிந்து விழ,
“பெரியப்பா வந்ததும் ரூம்க்குள்ள போனவர் வெளிலையே வரலை. ரொம்ப நேரமா பார்த்துட்டு அத்தை தான் கதவை தட்டினாங்க. நாங்க யார் தட்டியும் பெரியப்பா கதவை திறக்கலை. அத்தை கூப்பிட்டதும் உடனே வந்துட்டார்…” என்றவன்,
“பத்மிம்மாவோட திரும்ப ரூம்க்கு போனவங்க என்ன பேசினாங்கன்னு தெரியலை. நானும் பத்மிம்மாவும் வேண்டாம்னு தான் சொன்னோம். ஆனாலும் கேட்கலை. போயே தீருவேன்னு பிடிவாதமா இருக்காங்க…”
நடந்தது அனைத்தும் தெரிந்திருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன் என்பதை போல அதிரூபனின் கையில் இருந்த கோப்பை தான் வாங்கிக்கொள்ள அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் கிளம்ப,
“நான் பார்த்துக்கறேன் அண்ணா. நீங்க வீட்ல பாருங்க…” என தானே முன்வந்து அவனை அனுப்ப விஷாலின் பேச்சு காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் வேகமாய் வெளியேறினான்.
அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பிய நிமிடம் அன்னபூரணி அவனின் வீட்டில் இருந்தார். உடன் பத்மினியும், ஸ்வேதாவும்.
அதிரூபன் கிளம்பி சென்றபோது எப்படி அமர்ந்திருந்தாளோ அதே இடத்தில் மாடிப்படியில் தலையை சாய்த்தபடி அமர்ந்திருந்தாள் துவாரகா. நிராதரவான தோற்றம்.
இவர்கள் உள்ளே வந்ததை கூட உணராமல் அவளின் பார்வை எங்கோ வெறித்தவண்ணம் இருக்க பார்த்த மூவருக்குமே கண்கள் கலங்கியது.
இப்படியே விட்டால் இவளையும் கஷ்டபடுத்தி அதிபனையும் நிம்மதியில்லாமல் செய்து தங்கள் வாழ்க்கைய பாழாக்கி கொள்வாள் என நினைத்தார் அன்னபூரணி. முகத்தில் இருந்த உணர்வுகளை துடைத்தவர்,
“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கூப்பிட கூடவா உங்க பிள்ளை வீட்ல யாரும்மில்லை அண்ணி?…”
சத்தமாக கேட்டுக்கொண்டே அன்னபூரணி ஹாலில் வந்து நிற்க அதில் தன்னிலை உணர்ந்தவள் இவர்களை பார்த்ததும் வேகமாய் எழுந்து நின்றாள்.
ஆனால் மாடிப்படியை விட்டு கீழே இறங்கிவர முற்படவே இல்லை. அசையாமல் தான் நின்றாள்.
இவர்களை வா என்றும் அழைக்கவில்லை. போ என்றும் விரட்டவில்லை. பார்வை மட்டும் ஒவ்வொருவரிடமும் இரண்டொரு நிமிடம் நிலைத்து நிலைத்து நின்றது.
அதிலும் ஸ்வேதாவிடம் சற்று அதிகமாகவே நிலைத்தது. தன்னை செத்துதொலை என்று சொன்னவள் இல்லையா? என பார்த்தாள்.
அவளின் பார்வையின் அர்த்தம் உணர்ந்த ஸ்வேதா பத்மினியின் கையை பிடித்துக்கொண்டு தலையை குனிந்துகொண்டாள்.
“கீழே வாம்மா துவாரகா…” என பத்மினிதான் அழைத்தார்.
அவளாக பேசுவாள் என எதிர்பார்த்திருக்க அவளோ வாயை திறப்பேனா என்பது போல நிற்க பத்மினியே பேச்சை ஆரம்பித்தார்.
“நாங்க வந்தது உனக்கு பிடிக்கலையா துவா?…” என பத்மினி கேட்டதற்கு துவாரகா அன்னபூரணியை தான் பார்த்தாள்.
பார்வையில் என்ன இருந்தது என்றே அன்னபூரணியால் கண்டுகொள்ள முடியவில்லை.
“கீழே வாம்மா…” என திரும்பவும் அழைத்து ஸ்வேதாவை பார்க்க அவளோ புரிந்ததை போல தலையசைத்து துவாரகாவை நோக்கி சென்றாள்.
“ஸாரி அண்ணி, அன்னைக்கு தெரியாம பேசிட்டேன். எனக்கு விவரம் எதுவும் அவ்வளவா தெரியாது. நீங்க கிளம்பின பின்னால தான் சந்தோஷ் அண்ணா தான் சொன்னாங்க. இனிமே அப்படி பேசமாட்டேன் அண்ணி. ப்ளீஸ்…”
துவாரகாவின் கையை பிடித்து மன்னிப்பை கேட்டுக்கொண்டே ஸ்வேதா அவளை கீழே கூட்டி வர துவாரகா பதில் பேசாமல் வந்து நின்றாள்.