அவனின் இந்த விலகளில் தரையில் விழுந்த கண்ணாடி பொருளை போல மொத்தமாய் உடைந்து சிதறினாள் துவாரகா.
“மாமா…” என நா தளுதளுக்க அவள் அழைக்க கண்களை மூடி தன்னை கட்டுப்படுத்தினான்.
“ப்ளீஸ் துவா, என்னால முடியலை. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் ஈவ்னிங் வரேன்டா…” என அவளை பார்க்காமல் சொல்லி செல்ல இன்னும் உள்ளடங்கினாள் அவளுள்.
அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அவன் விடுவிடுவென கிளம்பிவிட தன் வாழ்க்கையின் ஆதாரமான மொத்த நம்பிக்கையும் அவனோடே செல்வதை போன்ற பிரம்மை தோன்ற வலுவிழந்து அப்படியே மாடிப்படிகளில் அமர்ந்துவிட்டாள் துவாரகா.
இனி அவன் பார்த்துக்கொள்வான் என தான் இருக்க தன்னை கூட பார்க்காமல் இப்படி தனித்துவிட்டுவிட்டு சென்றுவிட்டானே என தனக்குள் இறுகிப்போனாள் துவாரகா.
‘நீ மட்டும் இத்தனை நாள் அவனை விலக்கித்தானே வைத்திருந்தாய் உன் தாயிற்காக. அதுமட்டும் தவறில்லையா?’ என மனசாட்சி எடுத்துரைக்க புரிந்தும் அமைதியாகவே இருந்தாள்.
தான் விலகியபோது தெரியாத அவனின் தவிப்பு இப்பொழுது அவனின் விலகளில் அதிகமாய் உணர்ந்தாள். அவன் வரும்வரை அப்படியே அமர்ந்திருந்தாள் படிகளிலேயே.
ஆனால் வந்தது அவனல்ல. அன்னபூரணி.
———————————————————————-
ரத்தினசாமி வீட்டினுள் நுழையும் பொழுதே அத்தனை பேரும் பதட்டமாய் ஒன்று கூடிவிட்டனர்.
“என்னாச்சு பெரியப்பா? நேத்து எங்க போய்ட்டீங்க? செக்யூரிட்டி யாரையும் கூட நீங்க கூப்பிட்டுக்கலை…” என விஷால் கேட்க,
“பெரியப்பா ஏன் உங்க ட்ரெஸ் இப்படி இருக்கு. முகமே சரியில்லையே?…” என சந்தியாவும் பேச இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க யாருக்கும் பதில் பேசவில்லை ரத்தினசாமி.
எப்படி சொல்லுவார் இந்த அவமானத்தை? அதிலும் மகன் தன்னை போ என்று சொல்லியதை அனைவரிடமும் வாய்விட்டு சொல்லிவிடமுடியுமா அவரால்.
குரல் எழும்பவே இல்லை. தொண்டை அடைத்துக்கொள்வதை போல தோன்ற வேகமாய் எழுந்து தனது அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொண்டார் ரத்தினசாமி.
ஒன்றும் புரியாமல் திகைத்து அனைவரும் இருக்க விஷால் வேகமாய் வெளியே சென்று அதிரூபனின் ட்ரைவரை அழைத்தான்.
அவன் அப்பொழுது தான் சக ட்ரைவரிடம் பேசிவிட்டு கிளம்பிக்கொண்டிருக்க இவன் அழைத்ததும் வந்துநின்றான்.
“ஸார்…” என நிற்க,
“எங்க இருந்து பெரியப்பாவை கூட்டிட்டு வந்த சுரேஷ்? எங்க பார்த்த?…” என விஷால் கோபமாய் கேட்க,
“ஸார், நம்ம அதிபன் ஸார் வீட்ல தான் இருந்தார். ஸார் தான் வீட்ல கூட்டிட்டு போய் விட சொல்லி சொன்னார். எனக்கு வேற எதுவும் தெரியாதுங்க…” என என்னவோ ஏதோவென பயந்துபோய் சொன்னான்.
ரத்தினசாமியின் கோலத்தை பார்த்ததும் அவனுமே அதிர்ச்சியாகிவிட்டான் தானே. இவர் ஏன் இப்படி இருக்கிறார் என எண்ணி.
அரசியல்வாதி. அமைச்சர். இப்படி ஒரு கோலத்தில் இருந்தால் எதுவும் பெரிய பிரச்சனையோ என்றுதான் நினைத்தான்.
“என்ன சொன்ன? அதி அண்ணா வீட்லையா? நிஜமாவா?…” என நம்பமுடியாமல் விஷால் கேட்க,
“உண்மையா தான் ஸார். அதிபன் ஸார்ட்ட கூட கேட்டுக்கோங்க…” என விட்டாள் போதும் என்பதை போல அவன் பார்க்க,
“ஓகே நீ கிளம்பு…” என அனுப்பிவிட்டு திரும்ப அங்க அன்னபூரணியும், பத்மினியும் நின்றிருந்தனர்.
“பத்மிம்மா…” என விஷால் வர அவனிடம் பேசாதவர் அன்னபூரணியை பார்க்க,
“என்னன்னு பொறுமையா கேட்போம் அண்ணி…” என அன்னபூரணி சமாதானம் செய்தார்.
அறைக்குள் சென்ற ரத்தினசாமி இன்னும் வெளியில் வரவே இல்லை. அறை வாசலை மாற்றி மாற்றி அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க,
“நான் போய் அதிபன்ட்ட என்னனு கேட்டுட்டு வரேன். அண்ணனை இப்படி அனுப்பியிருக்கேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலை. ஏன் இப்படி இருக்கார்ன்னும் சொல்லலை. என நடந்ததுன்னு நமக்கும் தெரியனும்ல…”
சங்கரன் பொங்கு பொங்கு என பொங்கிக்கொண்டிருக்க மற்றவர்களுக்கு குழப்பமே என்றாலும் அதிபனிடம் அவனே சொல்லாமல் கேட்க யாருக்கும் துணிவில்லை.
அவ்வப்போது ரத்தினசாமி இப்படி யாரிடமும் சொல்லாமல் சில நேரங்களில் செல்வதுதான். ஏதுனும் முக்கியப்பட்டதாக இருந்தால் இப்படித்தான் சென்றுவிடுவார்.
ஆனால் இரவு வெகு நேரம் ஆனாலும் வீடு வந்துவிடுவார். இல்லையென்றால் தகவலாவது சொல்லிவிடுவார்.
நள்ளிரவை கடந்த பின்பு தான் அவர் இன்னும் வரவில்லை என்பது அனைவருக்கும் புரிந்தது.
என்னவோ ஏதோ என்று பதைபதைத்து போய் பதறி அவரின் ட்ரைவரை தேட அவன்,
“ஐயா வந்துடுவாங்கம்மா. எங்க போனாங்க, என்ன விஷயம்னு இப்போதைக்கு யார்ட்டையுமே சொல்லகூடாதுன்னு சொல்லியிருக்காங்க. நீங்க கவலைப்படாம இருங்க…” என அவன் சொல்லவும் தான் கொஞ்சம் அமைதியாகினர்.
அவன் கழுத்தை அறுத்தாலும் ரத்தினசாமி கிழித்த கோட்டை தாண்டமாட்டான். அப்படி ஒரு விசுவாசி.
அதன் நம்பிக்கையில் இவர்களும் கொஞ்சமே நிம்மதியாக ரத்தினசாமியோ இப்படி வந்து நிற்க இன்னும் பயந்துதான் போயினர்.
“அப்பா, நீங்க பேசாம இருங்க. எதுனாலும் பெரியப்பாவே வந்து சொல்லட்டும். நீங்க உங்க கோவத்தை குறைங்க…” அர்னவ் சத்தமிட,
“எப்படிடா சும்மா இருக்கமுடியும்? அண்ணாவ பார்த்தல…” சங்கரன் இன்னும் குதிக்க,
“அண்ணி இவரை பேசாம இருக்க சொல்லுங்க. இப்ப எதுக்கு அங்க போய் பிரச்சனை செய்யனும்னு குதிக்கிறார்? ரூம்க்குள்ள போனவரு வரட்டும். என்னன்னு சொல்லட்டும். அதுக்கு அப்பறமா இதுவரைக்கும் காப்பாத்தின நியாயம் தர்மம் எல்லாம் காப்பாத்தலாம்….”
அன்னபூரணி பேசவும் கப்சிப்பென அடங்கி அமர்ந்தார் சங்கரன். பத்மினியும் கவலையோடு பார்க்க,
“வரட்டும் பேசிப்போம் அண்ணி. யாருக்கு தெரியும்? அவர் கூட அங்க பிரச்சனை பண்ண போயிருந்திருக்கலாம். நாமளா முடிவுக்கு வரவேண்டாம்….” என சொல்லவும் அமைதியாய் இருந்தனர் அனைவரும்.
அறைக்குள் ரத்தினசாமி கூண்டுக்குள் அடைபட்ட மிருகமென குறுக்கும் நெடுக்குமாய் நடமாடிக்கொண்டிருந்தார்.
“என் அம்மாவை மாதிரி புருஷனை விட்டுகொடுத்துட்டு வாழ மாட்டேன். இந்த ஜென்மத்துல உங்க பையனுக்கு நான் தான். எனக்கு அவர் தான்…” என்ற துவாரகாவின் குரலே அந்த அறைக்குள் எதிரொலிக்க தாங்கமுடியாமல் காதை மூடிக்கொண்டார்.