கொஞ்சம் சுதாரிக்கா விட்டால் ரத்தினசாமியின் நெற்றியை கண்டிப்பாய் அது வெகுவாய் பதம் பார்த்திருக்கும். அத்தனை ஆக்ரோஷமாய் எறிந்தாள் துவாரகா.
“ஏய் சனியனே, உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலையே கை நீட்டுவ? இரு இன்னைக்கு உன்னையும், உன் அம்மாவையும் மொத்தமா சோலியை முடிச்சு மேல அனுப்பிவைக்கிறேன்…”
துவாரகா எறிந்ததில் அவரின் ஈகோ சீண்டப்பட அதிரூபனை மறந்தார். அவள் தனது மருமகள் என்பதை மறந்தார். இருப்பது மகனின் வீடு என்பதையும் மறந்தார்.
அந்தநிமிடம் துவாரகாவை ஏதாவது செய்துவிடவேண்டும் என்கிற கோபம் மட்டுமே பிரதானமாய் அவருக்கு.
தன்னுடைய மொபைலை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுக்க முயன்றுகொண்டே,
“ஆத்தாளுக்கும் மவளுக்கும் துளிர் விட்டுப்போச்சுல. போனா போகுதேன்னு உசுரோட விட்டா என்னையே எதிர்ப்பியோ நீ. என் முன்னால நிக்ககூட அருகதை இல்லாத நாய் நீ…” என்று யாருக்கோ அழைக்க அங்கிருந்த பூஜாடியை தூக்கி மீண்டும் எறிந்துவிட்டாள் துவாரகா.
தன்னை வேண்டாம் என்று சொன்னாலும் இனியாவது தன் அம்மா நிம்மதியாக இருக்கட்டும் என நினைத்துக்கொண்டிருக்க அதற்கும் ரத்தினசாமி முடிவுக்கட்ட நினைத்ததால் மொத்த கோபமும் ஆங்காரமாய் உருவெடுத்து தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவரை கீழே தள்ளிவிட்டாள்.
தூரமாய் போய் அவர் விழ அவரின் மொபைல் கீழே விழுந்துவிட ஆக்ரோஷம் கொண்டு அருகில் கிடந்த பூரிக்கட்டையால் அத்தனை முறை ஆத்திரம் தீருமட்டும் அடித்து நொறுக்கினாள்.
“ஏய் லூசு என்ன பன்ற?…” என இன்னும் சிலவார்தைகளால் திட்ட அதே பூரிக்கட்டையை ஓங்கிக்கொண்டு அவரை பார்த்தாள்.
“என்ன, என்ன சொன்ன? எங்கம்மாவை இனி ஏதாவது ஒரு வார்த்தை பேசின, உன் மண்டையை பிளந்திருவேன். நாங்க என்னய்யா தப்பு பண்ணினோம் உனக்கு? எங்கம்மாவை பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?. இத்தனை பேசற நீ உன் புள்ளை முன்னால என்னை பேசிடுவியா? ஆம்பளைன்னா அப்ப பேசுய்யா…”
துவாரகா முன்னே செல்ல செல்ல ரத்தினசாமி பயந்துதான் போனார் இவளுக்கு எதுவோ ஆகிவிட்டது என.
இங்கிருந்து முதலில் கிளம்பினால் போதும் என்று நினைத்து வாசலை பார்க்க அதற்கு வழியில்லாமல் துவாரகா தான் அவரை ஸ்டோர் ரூம் வரை கொண்டு வந்திருந்தாளே.
“இன்னைக்கு உன்னை ஒரு அடியாச்சும் அடிக்கலை நான் அகிலவேணி பொண்ணு இல்லடா…” என அடிக்க போக சட்டென அவளிடமிருந்து தப்பிக்க அந்த அறைக்குள் புகுந்துகொண்டார் ரத்தினசாமி.
உள்ளே அவர் சென்றதுமே வெளியில் பூட்டி சாவியை வைத்துக்கொண்டாள். அதிரூபன் வந்த பின்னால் அவனிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று.
அவ்வப்போது கதவை தட்டுவதும் கத்துவதுமாக அவர் இருக்க இருக்க அன்று தன் அம்மாவை காப்பாற்ற அவர் வீட்டு வாசலில் தான் நின்றதும் போலீஸ் ஸ்டேஷனின் இருந்ததும் கண்முன் வந்து அவளின் காதை செவிடாக்கியது.
அவளுக்கு தெரியும் அந்த அறையில் படுக்க கூட எதுவும் இல்லை என.
குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வாஷ்பேஷன் மட்டுமே இருந்தது. அதுவும் குட்டியாய் ஒரு பாத்ரூமோடு. அனைத்தும் தெரிந்தே கல்போல இருந்தாள்.
அவள் சொல்ல சொல்ல ஆத்திரமாத்திரமாய் வந்தது அதிரூபனுக்கு ரத்தினசாமியின் மேல்.
“நான் அன்னைக்கு அவ்வளவு சொல்லியும் நீங்க துவாவை என் மனைவியை இப்படி பேச உங்களுக்கு என்ன தைரியம் இருக்கனும்? அப்போ நீங்க செய்யறதை செய்வீங்க. நான் பேசாம இருப்பேன்னு நினைச்சுட்டீங்கள?…” அதிரூபன் கேட்டதும் பதறியவர்,
“அதிபா…” என்று வர,
“இவர் முன்னாடி பேசனும்னு தான் நான் வெய்ட் பண்ணேன். எத்தனையோ நாள் எங்கம்மாட்ட கூட கேட்காம இது எனக்குள்ள நானே பலதடவை கேட்டுக்கிட்டே ஒரு விஷயம் தான்…” என்ற துவாரகா,
“வளைச்சுப்போட்டோம்னு சொன்னீங்களே யார் யாரை வளைச்சு போட்டது? உங்க தங்கச்சி புருஷனை எங்கம்மா வளைச்சு போட்டாங்களா? இல்லை முறையா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி குடும்பம் குழந்தைன்னு ஆனா பின்னால இவரைத்தான் கட்டிப்பேன்னு பிடிவாதமா நின்னு எங்கம்மாவோட புருஷனை உங்க தங்கச்சி வளைச்சு போட்டாங்களா?…” என கேட்டேவிட,
“ஏய்…” என அடிக்க கை ஓங்கிவிட்டார் ரத்தினசாமி. அதிரூபனே ஆடிப்போனான் துவாரகாவின் பேச்சில்.
“எங்கம்மா பயந்து ஒன்னும் உங்களை விட்டு விலகி நிக்கலை. உங்களை எல்லாம் அசிங்கம்னு, சாக்கடைன்னு நினச்சி தான் விலகி போனாங்க. இது உங்களுக்கு பெருமையா?…”
“நானும் பயந்தேன் தான். எங்க உங்களால எங்கம்மாவுக்கு எதுவும் பிரச்சனை வந்திருமோன்னு, அவங்க உயிருக்கு ஆபத்து வந்திடுமோன்னு. ஆனா இன்னைக்கு இந்த சாக்கடை குடும்பத்தில நானும் வந்து விழுந்துட்டதால என்னையே வேண்டாம்னு போய்ட்டாங்க என்னோட அம்மா…”
சுருக்கென தைத்த முள்ளின் வேதனை உயிரில் பரவ அத்தனை வலியையும் கண்களில் தேக்கி அவளை பார்த்தான் அதிரூபன்.
“என்ன பண்ணிடுவீங்க? யாரை கேட்டாலும் நீங்க பண்ணின அசிங்கத்தை தான் காறி துப்புவாங்க. நான் ஒன்னும் தப்பா பேசலையே. உண்மையில் தப்பு பண்ணினது உங்க தங்கச்சி. இன்னொருத்தி புருஷன் மேல ஆசைப்பட்டது அவங்க தப்பு. அதை கேட்க உங்களுக்கு துப்பில்ல…”
“இங்க பாரும்மா என் தங்கச்சியை பேச உனக்கு எந்த உரிமையும் இல்ல…” என ரத்தினசாமி குதிக்க,
“அப்படித்தான் சொல்லுவேன். எங்கம்மா வாழ்க்கையை தட்டிபறிச்சவங்க உங்க தங்கச்சி…”
“இன்னைக்கு நான் உங்க பையன் மேல வச்ச அன்பை உங்க பையன் அவருக்கு சாதகமா பயன்படுத்தி என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டார். நானும் தான் சம்மதிச்சேன் இல்லைன்னு சொல்லலை. ஆனா நினைச்சதை அடைஞ்சுட்டார் இல்லையா? இப்போ இழந்துட்டு நிக்கிறது நான் தானே. அம்மாவை இழந்துட்டேன்…”
“அன்னைக்கு உங்க தங்கச்சி, இன்னைக்கு உங்க பிள்ளை. இதுல நாங்க எங்கிருந்து வந்தோம்? என்னை மருமகன்னு சொல்லிக்க உங்களுக்கு அசிங்கமா இருக்கா? இன்னொருத்தரோட புருஷனை தட்டிப்பறிச்சு ஊர் மெச்ச கல்யாணம் வேற செஞ்சுவச்சு குடித்தனம் வச்ச உங்களை என் புருஷனுக்கு அப்பான்னு சொல்ல நான் தான் அசிங்கப்படனும்…”
“திரும்பவும் என் தங்கச்சியை இழுக்காத. சொல்லிட்டேன். உன்னாலதான் இன்னைக்கு என்கிட்ட ஒருவார்த்தை கூட பேசாம இருக்கா. அதிபா…” என மகனை துணைக்கிழுக்க பார்க்க அவன் ஏற்கனவே வேரோடு சாய்ந்திருந்தான் துவாரகாவின் சாக்கடைக்குள் விழுந்துவிட்டேன் என்கிற உவமையில்.
“ஏன் இல்லாம? எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. சொல்லப்போனா எனக்குத்தான் இப்ப அதிக உரிமை. இல்லைன்னு உங்க பிள்ளையை சொல்ல சொல்லுங்க…” என துவாரகா சொல்ல,
“அப்படி சொல்லுடி என் தங்கக்குட்டி…” என கைதட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அஷ்மிதா.
“உன்னை இப்படி பார்க்கனும்னு தான் நான் ஆசைப்பட்டேன். ஏன் உன் புருஷனும் தான் ஆசைப்பட்டான். நீ கேட்கிறதுல எந்த தப்பும் இல்லை…” என துவாரகாவை அஷ்மிதா அணைத்துக்கொள்ள அமைதியாய் பார்த்திருந்தான் அதிரூபன்.
“டாக்டர், என்னால முடியலை. இன்னும் எத்தனை நாள் தவறே செய்யாம நாங்க ஓடிட்டே இருக்கிறது?…”
“கேட்கனும். இங்க எதுவுமே கேட்டா தான் கிடைக்கும். கேட்க இத்தனை நாள் இவங்க விடலை. இனி உனக்கு காவலா உன் புருஷன் இருப்பான். அவனை மீறி உன்னை யாரும் எதுவும் பண்ணிடமுடியாது…” அஷ்மிதா சொல்ல அதிரூபனை பார்த்தாள் துவாரகா.
“உண்மைதான் டாக்டர். இனி எனக்கு யாரை நினைச்சும் பயமில்லை. பயந்து பயந்து நாங்க ஒதுங்கினது போதும். எனக்கு மாமா இருக்காங்க. பார்த்துப்பாங்க…” என்றவள்,
“ஆனா அம்மா எனக்கு எப்பவும் இல்லைன்னு ஆகிட்டாங்கல்ல?…” என ஏக்கத்தோடு அவள் கேட்க அஷ்மிதா ஆறுதலாய் பார்க்க,
“இதை எப்பவோ கேட்டிருக்கனும் டாக்டர். எத்தனை நாள் என்னோட ரூம்க்குள்ள பைத்தியக்காரி மாதிரி எனக்கு நானே பேசிக்குவேன் எங்கம்மாவுக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கைன்னு? அவங்க என்ன தப்பு பண்ணினாங்க?. யார்ட்டையும் ஏன் என் அம்மாட்டையுமே கேட்க முடியாது…”
“நாங்க இருந்த ஊர்கள்ல கொஞ்சம் நாள் நல்லா பேச ட்ரை பண்ணுவாங்க. ஆனா அம்மா அதுக்கு அவ்வளவா இடம் குடுக்க மாட்டாங்க. அதையே எத்தனை தப்பா பேசுவாங்க தெரியுமா? அப்பா யாருன்னு என்கிட்ட கேட்டா கூட தெரிஞ்சும் நான் அவர் பேரை சொன்னதில்லை. எத்தனை கொடுமை?…”
“இதை நான் முன்னமே கேட்டிருந்தா, எங்கம்மா எனக்கும் எல்லாம் சொல்லிகொடுத்து வளர்த்திருந்தா எத்தனை கஷ்டத்திலும் இவங்களை தேடி வந்திருக்க மாட்டேன். இவங்க என்ன என்னை விரட்டறது? நான் இவங்களை விரட்டியிருப்பேன். இது எதுவுமே தெரியாம தானே இன்னைக்கு இந்த இடத்தில நின்னுட்டு இருக்கேன்…”
துவாரகா இத்தனை பேசியும் அவளின் விழிகள் சிறிதும் கலங்கவில்லை. முகம் அக்னி ஜுவாலையாய் தகித்தது.
அவளின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ரத்தினசாமியை சுட்டதோ இல்லையோ அதிரூபனை சுட்டது.
அவளின் வேதனைகள் ஒவ்வொன்றையும் இத்தனை நாள் அனுபவித்த வலியின் வெளிப்பாடு ஒவ்வொன்றையும் அவளின் மனக்குமுறல்களை கொட்டிக்கொண்டிருந்தாள் தான்.
ஆனால் அந்த நொடி அதிரூபன் என்ற ஒருவனை மறந்தே போனாள். தன் மீது காதலாகி குடும்பத்தை எதிர்த்து தன்னை நேசித்து தனக்காக அவர்களை விட்டு விலகி வந்தது என அனைத்தையும் மறந்தே போனாள்.
அவளின் கண்முன் ரத்தினசாமி மட்டுமே. அவரை சாகும்படி கேட்கவேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே அவளுக்கு. ஆனால் அதிரூபன்?
‘உன்னால் என் தாயிடம் பேசி அவரின் சம்மதத்துடன் என்னை திருமணம் செய்திருக்க முடியுமா என்கிற சவாலும், என் சூழ்நிலையை நீ பயன்படுத்திக்கொண்டாய்’ என்கிற குற்றசாட்டும் வெகுவாய் அவனை தாக்கியிருந்தது.
தொய்ந்துபோய் சோபாவில் அவன் முகம் மூடி அமர்ந்துவிட ரத்தினசாமி பதறி போனார்.
“அதிபா?…” என்று தோளில் கை வைக்க,
“நீங்க கிளம்புங்க…” என்று ஒற்றை சொல்லோடு எழுந்துகொண்டவன்,
“சுரேஷ்…” என உச்சஸ்தானியில் கத்தி ட்ரைவரை அழைத்து,
“அப்பாவை வீட்ல பத்திரமா கொண்டுபோய் விட்ருங்க…” என சொல்லிவிட்டு யாரையும் பார்க்காமல் வேகமாய் மாடி ஏறிவிட்டான்.