“டேய் லூஸு, ச்சீ என்ன இது அழுகை?…” என அவனின் கண்ணீரை சிந்தவிடாமல் துடைத்துவிட,
“ஒண்ணுமில்லடா…” என சுதாரித்தவன் முகத்தை துடைத்துக்கொண்டான் இரு கைகளாலும்.
“அதி, துவா பேசினது…”
“அவ என்ன தவறா பேசிட்டா அஷ்மி? கரெக்டா தான் பேசினா. எனக்கொண்ணும் அதுல வருத்தமில்லை. அவ இந்தளவுக்கு என் அப்பாவையே எதிர்த்து நின்னு கேள்வி கேட்டப்ப எனக்கு அது சந்தோஷமா தான் இருந்துச்சு…” என்றவன்,
“யூ நோ, அவர் எதுக்கு வந்திருப்பார்ன்னு என்னால கெஸ் பண்ண முடியுது. ஆபீஸ் வருவார்ன்னு நினைச்சேன். வீட்டுக்கே வருவார்ன்னு எதிர்பார்க்கலை…”
“புரியலைடா. எதுக்கு வந்தார்?…”
“ஹ்ம்ம் அவர் எனக்கு வாங்கியிருந்த என்னோட ஷேர்ஸ் மூலமா வர இன்கம் எல்லாம் ஆர்பனேஜ்க்கு போறமாதிரி டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணியிருந்தேன். அதோட காப்பி அவருக்கும் அனுப்பியிருந்தேன். அதை பத்தி பேசத்தான் வந்திருப்பார்…”
அசராமல் ஒரு குண்டை தூக்கி போட அஷ்மிதா மட்டுமல்ல வாசலில் நின்ற துவாரகாவும் அதிர்ந்துவிட்டாள்.
“அதி, என்ன காரியம் பண்ணியிருக்க? இதை ஏன் முதல்லையே என்கிட்ட சொல்லலை?…” அஷ்மிதா கோபப்பட,
“இதுல என்ன தப்பு இருக்கு? இப்படியாவது அவர் பண்ணின பாவங்களோட அளவு குறைஞ்சு இனி வரும் என்னோட சந்ததிகளாவது பாவத்தோட நிழல் இல்லாம வளரட்டும்…”
“அதுக்கு உனக்குன்னு வேண்டாமா?…”
“ஏன் இல்லாம? என் குடும்பத்தை நான் பார்த்துக்கனுமே…”
“அதத்தான் நானும் கேட்கறேன். இனி ஆபீஸ் போமாட்டியா?…” அஷ்மிதாவிற்கு படபடப்பாய் போனது.
“நான் போவேன். எனக்கான வேலையை செய்வேன். அதுக்கான சம்பளத்தை வாங்கிப்பேன். உரிமையா இல்லை. ஒரு வேலைக்காரனா…” என்றதும்,
“அதி…” என அஷ்மிதா அழுதேவிட,
“வேலைக்காரன்னா அவ்வளவு கேவலம் இல்லைடா. எந்த தொழிலுக்குமே தொழிலாளர்கள் தான் முக்கியம். வேலைக்கு யாருமே இல்லைனா அந்த நிறுவனம் எப்படி உயரும்? வேலைக்காரங்க, அதாவது தொழிலாளர்கள், உழைப்பாளர்கள்ன்னும் சொல்லலாம். இப்ப நானும் அதுல ஒருத்தன் தான்…”
“அதி, இதை துவாட்ட…”
“ம்ஹூம் வேண்டாம். அவளுக்கு தெரியவேண்டாம். இது இப்ப எடுத்த முடிவில்லை அஷ்மி. எப்பவோ எடுத்தது. உங்கப்பாக்கு கூட தெரியும்…”
“பாரேன் என்கிட்ட சொல்லவே இல்லை…” என அஷ்மி பொங்க,
“ஹா ஹா. அதுமட்டுமில்ல, இன்னொரு சீக்ரட் கூட இருக்கு…” என அதிரூபன் சிரிக்க,
“வாயை திறக்காத. என் டாடிட்ட கேட்டுப்பேன். அவர் தான் சொல்லனும் எனக்கு. இருக்கட்டும்…” என பொய் கோபம் கொள்ள அவளை கண்டு புன்னகைத்தான் அதிரூபன்.
“அவர் நான் சொல்லாம சொல்லமாட்டார்…” என்றும் சொல்ல அப்போதுதான் துவாரகா உள்ளே நுழைந்தாள்.
அவளை பார்த்ததும் ஒருநொடி அவன் முகம் கறுத்து பின் தெளிந்ததை நொடியில் கண்டுகொண்டாள் துவாரகா.
வந்து நின்றவள் அவனின் முகத்தையே பார்க்க அஷ்மிதாவிற்கு அங்கே இருக்கவே சங்கடமாய் போனது.
ஏற்கனவே ஏதேதோ நினைத்துக்கொண்டிருப்பவள் இன்று தானும் இப்படிவந்து அமர்ந்துவிட்டால் இதையும் நினைத்து குழப்பிக்கொள்வாள் என நினைத்தவன்,
“வா துவா. ஏன் நிக்கிற?…” என்று சொல்லி அவளின் கையில் இருந்த ட்ரேயை வாங்கி அஷ்மிதாவிற்கு ஒன்றை கொடுத்துவிட்டு தானும் எடுத்துகொண்டானே தவிர அதை அவனால் குடிக்கவே முடியவில்லை.
“மாமா…” என அவளாய் அழைக்க நிமிர்ந்துபார்த்தவன் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாற,
“டேய் குடிடா. இருந்திருந்து உன் வொய்ப் நல்லா ஜூஸ் போட்டிருக்கா. குடி…” என அதிரூபனை சொல்ல,
“டாக்டர் நான் மோர் தான் கொண்டுவந்தேன். ஜூஸ் இல்லை…” என துவாரகா பாவம் போல சொல்ல குடித்துக்கொண்டிருந்தவளுக்கு புரையேறிவிட தலையை தட்டிக்கொண்டு,
“ஏமா சொல்லக்கூடாதாம்மா? என்னம்மா நீங்க இப்படி பன்றீங்களேம்மா?…” என புலம்பிவிட வாய்விட்டு சிரித்தவன்,
“ஜூஸ்க்கும் மோர்க்கும் வித்தியாசம் தெரியாம குடிச்சது நீ. இதுல துவாவை கிண்டல் பன்றியா?…” என அவளின் தலையில் கொட்ட,
“வந்திடுவியே உடனே. காலையிலேயே இவ மோர் கொண்டுவந்து குடுப்பான்னு நான் என்ன கனவா கண்டேன். போடா நான் கிளம்பறேன். இவ வீட்டுக்குள்ளயே அடைஞ்சுகிடக்காளேன்னு வெளில போகலாம்னு கூட்டிட்டு போக வந்தா நீ இன்னும் பேசுவ…” என கோவம் போல பேச துவாரகா அதிரூபனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இப்ப என்ன கூட்டிட்டு போய்ட்டு வாயேன்…” என சொல்லி எழுந்துகொள்ள இன்னும் துவாரகா அப்படியே தான் இருந்தாள்.
“ஹ்ம்ம், இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு வேணும்னா வரேன். மூட் சரியில்ல…” என அவளும் எழுந்துகொள்ள,
“ஓகே நானும் ஆபீஸ் கிளம்பனும். ஈவ்னிங் வேணும்னா வந்து கூட்டிட்டு போ…” என அஷ்மியிடம் சொல்லியவன்,
“துவா நீயும் கிளம்பி ரெடியா இரு…” என்று சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் சென்றுவிட அவனின் கண்டுகொள்ளா தன்மையில் தவித்துதான் போனாள்.
அஷ்மிதாவும் இதை பார்த்துதான் இருந்தாள். இப்படி இருவரும் இருப்பதை கண்டுதான் அவள் கிளம்புவதாய் சொல்ல அதிபனும் இப்படி கிளம்பிவிடுவான் என்று எதிர்பார்க்கவில்லை.
“துவா…” என அழைத்ததும் வேகமாய் திரும்பியவள் தன்னுடைய தவிப்பை அவளிடம் காட்டாமல் இருக்க அரும்பாடுபட்டு போனாள்.
“கிளம்பிட்டீங்களா டாக்டர்? டிபன் சாப்பிட்டு போகலாமே?…” சாதாரணம் போல கேட்க அதற்கு மேல் எதையும் பேச விரும்பவில்லை அஷ்மிதா.
இனி இதை அவர்கள் இருவரும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் தான் செய்ய இதில் எதுவும் இல்லை என்றுணர்ந்து அவளிடம் விடைபெற்று கிளம்பினாள்.
துவாரகாவிற்கு இந்த நேரத்தில் தான் சொல்லும் ஆறுதல் கூட அவளை பலமிழக்க செய்துவிடும், உடைந்துவிடுவாள் என நினைத்தே மௌனமாக கிளம்பிவிட்டாள்.
அஷ்மிதா கிளம்பி சென்றதும் அங்கேயே அமர்ந்துவிட்டவள் அதிரூபன் வெளியில் வந்து கிளம்பும் வரையில் கூட எதுவும் பேசாமல் அவனின் பின்னே பார்வையை ஓடவிட்டாள்.
அவனும் தலையை துவட்டியபடி வந்தவன் முதலில் எதுவும் பேசாமல் தன் வேலைகளை பார்த்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானான். ஆனாலும் அவளின் பார்வையை உணர்ந்தே இருந்தான்.
கிளம்பும் வரை அவளாய் எதுவும் பேசுவாள் என பார்த்துவிட்டு இல்லையென்றானதும் அவனே வாய் திறந்தான்.
“துவா இன்னும் இங்கயே இருக்க? வா கீழே போகலாம். கிளம்பனுமே. டைம் ஆச்சு பாரு…” என்று சொல்லி பார்க்க மெதுவாய் எழுந்து அவனருகே வந்தவள்,
“என் மேல கோவமா மாமா?…” என ஆரம்பிக்க,
“கோவமா? எனக்கா? என்ன இது திடீர்னு சந்தேகம்? நான் என்னைக்கு உன் மேல கோவப்பட்டிருக்கேன்?…” அவள் முகம் பார்க்காமல் விளிக்க,
“என்னை பார்த்து சொல்லுங்க மாமா…” என இன்னும் முன்னால் வந்து அவள் நிற்க,
“எதுவும் இல்லைடா. நிஜமா…” என்றவன் வேகமாய் அறையை விட்டு வெளியேறினான்.
அவனை தடுத்து நிறுத்த துவாரகா அவனின் கையை பிடிக்க தீச்சுட்டதை போல தன் கையை விலக்கிக்கொண்டான் அதிரூபன்.