மின்னல் அதனின் மகனோ – 16 (2)

“நாங்க எங்காவது போய்ருப்போம்ல. அத்தனை பேர் முன்னால அம்மாவை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு போறாங்க. என்னை என்னவோன்னு பார்க்காங்க. அங்க அந்த ஆட்டோக்கார அங்கிள் தான் என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு. திரும்ப ஸ்டேஷன்க்கும் அவரே கொண்டுபோய் விட்டாரு…”

“அப்பவும் நான் சாப்பிடலை தான். ராத்திரி முழுக்க, மறுநாள் மத்யானம் வரை சாப்பிடலை தான். அன்னைக்கு எங்களுக்கு இதை கேட்க யாருமே இல்லை மாமா. அப்ப கூட எனக்கு அம்மா இருந்தாங்க. ஆனா இன்னைக்கு நான் அநாதை ஆகிட்டேன்ல…”

“துவா நான் இருக்கேன்லடா…” அவனின் குரலில் இருந்த வலி அவளை எட்டவே இல்லை.

“உங்களுக்கு புரியாது மாமா, ஒரு பொண்ணா அந்த ராத்திரி முழுக்க என்னை இவங்க எதுவும் பண்ணிடுவாங்களோ? இதோ பார்க்கறாங்க? ஐயோ கிட்ட வர மாதிரி இருக்கு? என்ன பேசுவாங்க? என்ன சொல்லுவாங்க இப்படி ராத்திரி முழுக்க பயந்து பயந்து நான் இருந்ததை நான் மட்டுமே உணர முடியும்…”

“என்னோட அம்மா, அம்மா தான் அவங்க. ஐயோ தன் பொண்ணு இப்படி இருக்காளேன்னு வேதனை படுவாங்க தான். அம்மா எனக்கு இப்படி ஆகிடுச்சு. நான் இப்படி பீல் பண்ணினேன்னு வார்த்தையால சொன்னா கூட அதை நினச்சு அத்தனை வருத்தபடுவாங்க, வேதனை படுவாங்க தான். ஆனா அதை முழுமையா வார்த்தைல கூட கொண்டுவரமுடியலை மாமா…”

“இதை நீங்களோ உங்க வீட்டு பொண்ணுங்களோ அனுபவிச்சிருந்தா அப்ப தெரிஞ்சிருக்கும். என்னோட வலி என்னன்னு. ம்ஹூம். அப்பவும் தெரியாது. ஏனா நீங்க ஏன் இந்த கஷ்டத்தை அனுபவிக்க போறீங்க? நீங்கலாம் ஆசிர்வதிக்கப்பட்டவங்க இல்லையா?…”

“நாங்க என்ன மாமா பாவம் பண்ணினோம்? எந்த வகையில உங்க குடும்பத்துக்கு தொந்தரவு கொடுத்தோம்? எதுவுமே பண்ணலையே?…”

“பொதுவா ரோட்ல ஒரு பொண்ணை எவனாவது தொடர்ந்து பார்த்தா கூட இவன் என்னை பார்க்கிறான், ஃபாலோ பன்றான்னு கம்ப்ளைன்ட் பண்ணினா உனக்கெப்படி தெரியும் அவன் பார்க்கிறான்னு? நீயும் பார்க்கிறதால அவன் பார்க்கிறான்னு சிலபேரும், நீ எதுக்கு அவனை கண்டுக்கற. நீ உன் வேலையை மட்டும் பார்த்துட்டு போகவேண்டியது தானேன்னு சிலபேரும் அட்வைஸ் தான் பன்றாங்க…”

“ஆனா யாரும் அவனை போய் எதுக்கு அந்த பொண்ணை டிஸ்டர்ப் பன்றன்னு கேட்டு கண்டிக்கிறதில்லை. அப்படிப்பட்ட உலகத்துல நாம வாழ்ந்துட்டு இருக்கோம்…”

“அப்படி இருக்கிறபட்சத்துல நாங்க போய் போலீஸ் ஸ்டேஷன்ல ஒருநாள் இருந்தோம்னு சொன்னா, இதுல உங்க பணத்திமிர் இருக்குன்னு நம்புவாங்களா? இல்லை இதுங்க எதோ பண்ணி மாட்டி இப்ப வெளில வந்திருக்குன்னு சொல்லுவாங்களா? சொல்லுங்க மாமா?…”

“துவா, இப்ப ஏன்?…” என அவன் கெஞ்ச, ரத்தினசாமி வாயே திறக்கவில்லை.

“இப்பவும் பேசலைனா எப்படி மாமா? இன்னைக்கு அம்மா இல்லாத பொண்ணா இருக்கேன். எங்கம்மாவுக்கு நான் உண்மையா இல்லையே. அவங்க நினைவு தப்பி இருந்த சூழ்நிலையை நான் பயன்படுத்தி உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தானே. அப்ப நான் என் அம்மாவுக்கு உண்மையா இல்லைன்னு தானே அர்த்தம்…”

“துவா அப்படி எல்லாம் இல்லைடா….”

“அப்படித்தான். நான் மட்டும் இல்லை. நீங்க கூடத்தான் மாமா. உங்க நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க. என் அம்மா மட்டும் நல்லா இருந்திருந்தா அவங்கட்ட பேசி என்னை முறையா பொண்ணு கேட்டு மேரேஜ் பண்ணியிருப்பீங்களா? சொல்லுங்க…”

அவளின் கேள்விகள் எதற்கும் அவனிடம் பதிலே இல்லை. அவள் இத்தனை பேசுவாள் என்றே இன்று தானே தெரியும்.

உண்மையை இப்படி சொல்லும் அவளிடம் எந்த சமாதானமும் எடுபடாது என்பது புரிந்து திருதிருத்தான்.

உண்மையில் அவன் அத்தனை வேகமாக செயல்பட்டதும் அதற்கு தான். அகிலாவின் நிலை.

துவா தன்னிடம் வந்து சேர்ந்த நேரம், தன்னுடைய திருமண ஏற்பாடு. அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்து நிற்கும்பொழுது அந்த சந்தர்ப்பத்தை அழகாய் பயன்படுத்திக்கொண்டான்.

அவனுக்குமே நிச்சயம் அகிலா இதற்கு ஒருகாலும் சம்மதிக்க மாட்டார் என்பது. அதனாலேயே தானே வந்த சந்தர்ப்பத்தை கெட்டியாய் பிடித்து துவாரகாவை மனைவியாக்கிக்கொண்டான்.

“சொல்லுங்க மாமா, அதை பேசாத. இதை மறந்திடுன்னு சொன்னீங்க. இப்ப நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. இப்போ எங்கம்மா நல்லாவே இருந்திருந்தாங்க. நீங்க எப்படி என்னை கல்யாணம் முடிச்சிருப்பீங்க?. எனக்கு உண்மையான பதில் வேணும்…” அவளுக்கு அந்தநொடி ரத்தினசாமி என்கிற ஒரு மனிதன் இருக்கிறான் என்ற எண்ணமே இல்லை.

“துவா…”

“எனக்கு தெரியனும் மாமா…” பிடிவாதமாய் சொல்ல,

“எப்படினாலும் உன்னை மேரேஜ் பண்ணியிருப்பேன். ஏனா உனக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியும். என்னால உன்னை கன்வின்ஸ் பண்ண முடியும்னு நம்பினேன்…” அவளை நேர்பார்வை பார்த்துக்கொண்டே சொல்லவும் இகழ்ச்சியாய் புன்னகைத்தவள்,

“இதுதான் மாமா இந்த பதில் தான் வரும்னு எனக்கும் தெரியும். ஏனா நான் ஸ்டெடி மைண்ட் இல்லை. அம்மாவோட கஷ்டத்தையும் தாண்டி நாங்க அனுபவிச்ச அத்தனை துயரத்தையும் தாண்டி என் மனசு உங்களை தேடியிருக்குன்னு உங்களுக்கே தெரியுது இல்லயா?…”

“இப்ப எதுக்குடா இதெல்லாம்?…”

“இப்ப இது தேவையில்லாம. வேற எப்ப? நேத்து இவர் வந்தார். வந்ததும் உண்மையா எனக்கு பயம் தான். நீங்க வீட்ல இல்லைன்னு சொல்லிட்டு நான் இங்கிருந்து ரூம்க்கு ஓடத்தான் பார்த்தேன். ஆனா அவர் என்ன சொன்னார் தெரியுமா?…” என்றவள் ரத்தினசாமியை நேருக்கு நேர் பார்க்க அவர் முகம் திருப்பிக்கொண்டார்.

“நான் பயந்த சுபாவம் கொண்டவ தான். உங்களை உங்க குடும்பத்தை பார்த்தாலே எனக்கு பயம் நடுக்கம் தான். ஆனா பேசத்தெரியாதவ கிடையாது. எனக்குள்ளயும் உங்கட்ட எதிர்த்து கேட்க ஆயிரம் கேள்விகள் இருக்கு. அது அத்தனையும் எனக்குள்ளையே போட்டு புதைச்சிட்டு தான் இருந்தேன்…”

“நேத்து என்ன சொன்னீங்க? உங்கம்மாவையும் மிஞ்சிட்ட. என் பையனையே வளைச்சுபோட்டுட்ட திமிர்ல என் முன்னாடி நிக்கிறியான்னு கேட்டீங்கள. இப்ப உங்க பையனே இருக்கார். கேளுங்க அவர்க்கிட்ட…” என்றதும்,

“அப்பா…” என அதிரூபன் கத்த,

“நான் பேசி முடிச்சிடறேன் மாமா. உங்க கோபம் கொந்தளிப்பை எல்லாம் அப்பறமா வச்சுக்கோங்க…” என அவனை அடக்கிவிட்டு முதல்நாள் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.

மதிய உணவிற்கு வரமாட்டேன் என்று அதிரூபன் சொல்லியதால் தனக்கு மட்டும் சமைக்க பிடிக்காமல் சப்பாத்தியை மட்டும் போட்டு காலையில் வைத்த குருமாவையே வைத்து சமாளித்துக்கொள்ளலாம் என்று தனக்கு மட்டும் சப்பாத்தியை தேய்க்க ஆரம்பித்தாள்.

திடீரென ரத்தினசாமி வந்து நிற்பார் என கனவிலும் காணாத துவாரகாவிற்கு நடுவீட்டில் யாருமற்ற நேரத்தில் அவர் முன்பு நிற்கவே அச்சமாக இருந்தது.

கையில் இருந்த பூரிக்கட்டையை பற்றுகோலாய் அவள் பிடித்திருக்க தன் நடுக்கம் அவருக்கு தெரிந்துவிடாதபடி எச்சிலை கூட்டி விழுங்கி நின்றாள்.

“அதிபன் எங்க?…” பெரும் முறைப்புடன் முகத்தை சுளித்து கேட்க,

“அவர் இல்லை…” என்று ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் செல்ல முயல,

“அம்மாவுக்கும், பொண்ணுக்கும் என் குடும்பத்து ஆம்பளைங்களை வளைச்சு போடறதுதான் பொழைப்பு போல. ச்சீ…” என கேவலமாய் பேச சென்றுகொண்டிருந்தவளின் கால்கள் செயலிழந்து போயின.

அசையாமல் அப்படியே நின்றவளுக்கு அழுகை வெடிக்கும் போல வந்தது. அதிலும் அகிலா தன்னை சொல்லிய ரத்தினசாமியின் மருமகள் என்னும் அடையாளம் இன்னமும் உள்ளுக்குள் குறுக செய்துகொண்டிருக்க ஏற்கனவே விரக்தியிலும் அகிலாவின் தவிர்ப்பிலும் புழுவாய் துடித்துக்கொண்டிருந்தவளுக்கு ரத்தினசாமியின் இந்த இளக்காரமான கேவலப்பேச்சு பேரும் பிரளயத்தை ஏற்படுத்தியதும்.

அழுகையை அடக்கிக்கொண்டு திரும்பினாள். ரத்தினசாமியை நேருக்கு நேராய் பார்க்க அவரின் வெறுப்பான பார்வை இவளுள் லேசான நடுக்கத்தை பிறப்பித்தது தான். ஆனால் அதையும் தாண்டிய கோபத்தில் சினந்து நின்றவள்,

“என்ன சொன்னீங்க?…” என அமைதியாய் கேட்க,

“ஏன் நான் சொன்னது அப்படியே தேன் பாய்ஞ்சது மாதிரியா இருந்துச்சு? இன்னொருக்க சொல்ல சொல்ற. எத்தனை தடவை வேணும்னாலும் சொல்லுவேன் நீயும் உன் அம்மாவும்…” என்று அவர் முடிக்கும் முன்னாலே கையில் இருந்த பூரிக்கட்டையை எறிந்திருந்தாள்.

error: Content is protected !!