மின்னல் – 17
அதிரூபன் அங்கிருந்து மாடிக்கு சென்றதும் ரத்தினசாமியின் முகமே மாறிவிட்டது.
தன்னையே தன் மகன் வெளியே போக சொல்லிவிட்டானா என உடைந்துபோய் நின்றார்.
அவரையே வெறித்தபடி நின்ற துவாரகாவையும், இகழ்ச்சியாய் பார்த்து நின்ற அஷ்மிதாவையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“ஸார் நான் வெளில வெய்ட் பன்றேன்…” என சொல்லி ட்ரைவர் வெளியேறிவிட ரத்தினசாமியும் குனிந்த தலை நிமிராமல் நகர,
“ஒரு நிமிஷம்…” என அவரை நிறுத்திய துவாரகா,
“இனி உங்க குள்ளநரி வேலை எல்லாம் இத்தோட நிப்பாட்டிடுங்க. எங்கம்மாவை அவர்க்கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி என்னை உங்க பிள்ளைக்கிட்ட இருந்து பிரிக்கனும்னு முயற்சி பண்ணாதீங்க. அது உங்களால முடியவும் முடியாது…”
துவாரகா சொல்லவும் திரும்பி அவளை பார்த்தவர் முகம் பயங்கரமாய் மாறியது. அதை கண்டுகொள்ளாதவள்,
“என் அம்மாவை மாதிரி புருஷனை விட்டுகொடுத்துட்டு வாழ மாட்டேன். இந்த ஜென்மத்துல உங்க பையனுக்கு நான் தான். எனக்கு அவர் தான். மீறி ஏதாவது செய்யனும்னு நினைச்சீங்க அன்னைக்கு தெரியும் இந்த துவாரகா யாருன்னு. உங்க பாவத்தோட மொத்த உருவமா என்னை மாற வச்சிடாதீங்க. தாங்கமாட்டீங்க…”
கண்களை உருட்டி அத்தனை மிரட்டலாய் அவள் சொல்ல இன்னும் அவளின் பேச்சை நம்பமுடியாமல் பார்த்தார் ரத்தினசாமி.
“இப்ப நீங்க கிளம்பலாம்…” என வாசலை பார்த்து கை நீட்ட,
“அட அட அட. இத பார்க்க என்னோட ரெண்டு கண்ணு பத்தலடி செல்லக்குட்டி. உனக்கு சுத்திதான் போடனும் போ. செம்ம மிரட்டு மிரட்டிட்ட. இனியும் வாலாட்ட மயில்சாமி என்ன மக்குமூட்டையா? அதெல்லாம் அரசியலுக்கு புரிஞ்சிருக்கும்…”
அஷ்மிதா இன்னும் கிண்டலாய் பேச அவ்விடத்தில் நிற்கமுடியாமல் ரத்தினசாமி கிளம்பிவிட துவாரகாவை கட்டிக்கொண்டு சுற்றினாள் அஷ்மிதா.
“என்னால நம்பவே முடியலை துவா. ஆனா ஹேப்பியா இருக்குடா…”
உண்மையாய் உள் மனதிலிருந்து சொல்லியதை கேட்ட துவாரகா அத்தனை நேரம் இருந்த மொத்த தைரியமும் வடிய அஷ்மிதாவை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள்.
“துவா, ப்ச், இங்க பாரு. எதுக்கு அழற?…” என அவளின் அழுகையை நிறுத்த முற்பட சுத்தமாய் முடியவில்லை. அவளாய் சிறிதுநேரத்தில் அழுகையை நிறுத்த,
“போதுமா? அழுது முடிச்சாச்சா? இப்பதான் குட் கேர்ள், ப்ரேவ் கேர்ள்ன்னு நினச்சேன். அதுக்குள்ள அழுமூஞ்சியா போய்ட்டியே? ப்ச்…” என அஷ்மிதா உதடு பிதுக்க,
“இனி நான் அழப்போறதில்லை டாக்டர். அழமாட்டேன். ஆனா அம்மா என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்களே…” என மீண்டும் கண் கலங்க,
“அடடா, விடேன் லவ் மேரேஜ்னா இதெல்லாம் சகஜம் தானே? எந்த பேரன்ட்ஸ் உடனே வாம்மா ராஜாத்தின்னு உடனே அதை அக்சப்ட் பண்ணிக்கறாங்க? இதுல இந்த லடாய் கூட இல்லைனா லைப் போர் அடிச்சுடுமே…”
அஷ்மிதா இலகுவாய் அவளிடம் நிதர்சனத்தை எடுத்துரைக்க லேசாய் புன்னகைத்த துவாரகா,
“ஹ்ம்ம் சரிதான். உங்க மேரேஜ் டாக்டர்?. நீங்களும் லவ் பண்ணித்தான் மேரேஜ் பண்ணுவீங்களா?…” என ஆர்வமாக,
“அட போம்மா, நான் லவ் பன்றேன்னு சொன்னா உடனே அவனை கூட்டிட்டு வந்து கட்டி வைக்க எங்கப்பா ரெடி தான். ஆனா அதுல என்ன சால்ட் & பெப்பர் இருக்கும்? சொல்லு…”
“பின்ன என்னதான் வேணும் உங்களுக்கு?…”
“அப்படி கேளு. லவ் பண்ணனும். கண்டிப்பா எங்கப்பா ஓகே தான். ஆனா மாப்பிள்ளை வீட்ல ஒத்துக்க கூடாது. பிரச்சனை பண்ணனும். சும்மா பைட்டிங், ரன்னிங், சேசிங், கன் ஷூட்டிங்க்னு அதிரிபுதிரியா இருக்கனும். அவங்க வீட்டு சைட் எல்லாருமே கரடுமுரடா இருக்கனும். அவங்களை எல்லாம் நான் சமாளிக்கனும். அப்பத்தான் இந்த அஷ்மிக்கு கெத்தா இருக்கும்…”
அஷ்மிதா சில பல ஆச்க்ஷன்களோடு துவாரகாவிடம் படம் போட்டு காண்பிப்பதை போல விவரிக்க அவளின் நாயகனும் காத்திருந்தான் அவளின் கனவை நனவாக்க. ஆனால் அவள் நினைத்தது போன்றா அவர்கள் திருமணம்?
“நீங்க மாஸ்டர் பீஸ் டாக்டர். ஆனா துப்பாக்கி சூடு எல்லாம் தீவிரவாதிங்களுக்கு தானே? இதுதான் கொஞ்சம் இடிக்குது…” துவாரகா சொல்ல,
“பார்த்தியா எவ்வளவு நக்கல் உனக்கு? ஏன் நான் காதல் தீவிரவாதியா இருந்துட்டு போறேனே?…” என கண்ணடிக்க,
“ஆமா ஆமா…” என தலையை வேகமாய் ஆட்ட அதை பிடித்து தானும் உருட்டியவள்,
“என்னவாம் உன் ஆளுக்கு? அப்பாவை போ சொல்லிட்டு உன் முன்னால அழ பயந்து ரூம்க்குள்ள போய் கதறிட்டு இருக்கானோ?…” என கலாய்க்க அப்போது தான் துவாரகாவிற்கும் உரைத்தது.
தான் பேசியது அவனை எத்தனை நோகடித்திருக்கும் என நினைத்து பார்த்தவளின் முகத்தில் சஞ்சலம் ததும்பியது.
“ஓய் முயல்க்குட்டி, என்ன திடீர்ன்னு ட்ரீம்ஸ்? இந்த லவ்வர்சே இப்படித்தான்ப்பா…” என அலுத்துக்கொள்ள,
“இல்ல, டாக்டர், நான் மாமாவையும் பேசிட்டேன். மாமா பீல் பண்ணுவாங்கள?…” கவலையோடு துவாரகா பார்க்க,
“நீ எதுவும் சொல்லவேண்டாம். அவன் மயில்சாமிக்கு ஊட்டும் போதே நான் வந்துட்டேன். எல்லாம் சரியா தான் பேசின. இன்னும் சொல்லனும்னா ரொம்ப சரியா உண்மையை தான் சொல்லியிருக்க. உண்மை கசக்கத்தான் செய்யும்னு சொல்லுவாங்க. நல்லது தானே?…” என சொல்லியும் துவாரகாவின் முகம் தெளியாமல் கலக்கமாய் இருக்க,
“இப்பத்தான சொன்னேன் எதுக்கும் கலங்க கூடாதுன்னு. உன் மாமா இல்லை யாரா இருந்தாலும் இப்ப நீ தைரியமா இருக்கனும். யார் செஞ்சாலும் தப்புனா தப்புதான். கேட்கத்தான் வேணும். புரியுதா?…”
அதற்கும் வேகமாய் துவாரகா தலையாட்ட,
“மாமா பீலிங், மாவுடப்பா காலிங்னு எதாச்சும் வசனம் பேசிட்டு இருந்த நானே உன்னை டைவர்ஸ் பண்ணிடுவேன்…” என்று கை நீட்டி எச்சரிக்க அதை கேட்டு கடகடவென சிரித்துவிட்டாள் துவாரகா.
“ஹ்ம்ம் குட். இப்ப பார்க்க எப்படி இருக்கு? இப்போ போய் ப்ரிட்ஜ்ல ஜுஸ் இருந்தா ஊத்தி எடுத்துட்டு மேல வா. நான் போய் அவனை பார்க்கறேன். எத்தனை பெட்ஷீட்டை கண்ணீரால நனைச்சு வச்சிருக்கானோ?. பெட்ஷீட் விக்கிற விலையில…” என சொல்லிக்கொண்டே மாடி ஏற,
“டாக்டர் நானே ப்ரெஷ் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரேன்…”
துவாரகா சொல்லிய நிமிடம் மீண்டும் குடுகுடுவென கீழே இறங்கி இருந்தாள் அஷ்மிதா.
“தெய்வமே, போதும் தெய்வமே. நீங்க மயில்சாமிக்கு கட்டின காட்டே போதும். போறபோக்குல எனக்கும் காட்டிடாதீங்க. இருக்கறதை நல்லபிள்ளையா எடுத்துட்டு வா…” என கை எடுத்து கும்பிட்டு கேட்க, துவாரகா முறைத்தாள்.
“பாவம்ல உன் டாக்டர். நீ எனக்காக ஸ்பெஷலா எதாச்சும் பண்ணி நான் படுத்துட்டா உன் புருஷனை யார் சமாதானம் செய்யறதாம்? சொல்லு, சொல்லு…”
“அதான் நான் இருக்கேன்ல. நான் பண்ணிப்பேன். நீங்க மேல போங்க வரேன்…” என அவளை அனுப்பிவிட்டு துவாரகா கிட்சனுக்குள் செல்ல அதை பார்த்து புன்னகைத்த அஷ்மிதா மேலே சென்றாள்.
அங்கே அதிரூபன் சோபாவில் தலைசாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தான்.ஏனோ அவனின் அந்த நிலை அஷ்மிதாவின் மனதை அறுக்கத்தான் செய்தது.
“அதி?…” என அழைத்ததும் கண்களை திறந்து பார்த்தவன் வா என்பதை போல தலையசைக்க வேகமாய் வந்து அவனருகே அமர்ந்து கைகளை பிடித்துக்கொண்டாள்.
துவாரகாவிற்கு அத்தனை சமாதானம் சொல்லி தேற்றினாலும் அதிபனை அப்படி பார்த்ததும் உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனாள் அஷ்மிதா.
“அதி…” அவளின் குரல் அவனுக்கு என்ன உணர்த்தியதோ சட்டென கண்ணீர் ததும்பிவிட்டது அதிரூபனுக்கு.