மின்னல் – 16
அதிரூபனுக்கு தன் காதுகளில் விழுந்த சொற்கள் உண்மையா என்பதை உணர்ந்து தன்னுணர்வு பெறவே நிமிடங்கள் பிடித்தது.
“துவா?…” என அதிராமல் அவளை அழைக்கவே முடியவில்லை.
“நான் தான் பூட்டி வச்சேன்…” திரும்பவும் ஸ்திரமாய் நிமிர்ந்து பதில் சொல்லியவளை முதன் முறையாக வியந்து பார்த்தான்.
“உண்மையாவா சொல்ற?…” அவனுக்கு ரத்தினசாமியை கவனிப்பதை விட துவாரகா தான் செய்ததாக சொல்லியது உண்மையா என அறிந்துகொள்வது முக்கியமாகப்பட்டது.
“நானே சொல்லியும் நம்பலைனா உங்க அப்பாட்டையே கேளுங்க…” என சொல்லிய அவளின் இதழ்களில் இகழ்ச்சி புன்னகை வந்தமர்ந்தது.
அதையும் கண்ட அதிரூபனுக்கு இதை எப்படி எதிர்கொள்வது என்பது புரியவே இல்லை.
தன் மனைவி தன்னுடைய அப்பாவை ஒரு பழைய அறையில் போட்டு அடைத்து வைத்திருக்கிறாள் என்றதும் அவனுக்கு கோபம் பெருக்கெடுத்திருக்க வேண்டாமா?
ஏன் இப்படி செய்தாய் என கேள்விகளால் அவளை துளைத்திருக்க வேண்டாமா? ஆனால் அப்படி செய்ய முடியவில்லை அதிரூபனுக்கு.
ரத்தினசாமி இங்கு தான் இல்லாத நேரம் வந்து எதுவும் பிரச்சனை செய்திருப்பாரோ? அதனால் பயந்துபோய் செய்வதறியாமல் துவாரகா அவரை அடைத்து வைத்திருப்பாளோ என்றுதான் என்ன தோன்றியது.
ஏனென்றால் ரத்தினசாமியும் அப்படித்தான். துவாரகாவும் இப்படித்தான் என்னும் பிம்பம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றே. அதனால் அவனால் வேறு எதுவும் சிந்திக்க முடியவில்லை.
ஆனால் சாது மிரண்டால் காடுகொள்ளாது என்பதை அந்த நிமிடம் அவன் உணராமல் போய்விட்டான்.
“நீங்க எதுக்குப்பா இங்க வந்தீங்க? இங்க வந்தும் பிரச்சனை செய்ய நினைச்சீங்கன்னா உங்களை என்னதான் செய்ய? இப்ப துவா என்னோட வொய்ப். அதையும் தாண்டி அவளுக்கு பிரச்சனையை உண்டு பண்ணி கஷ்டப்படுத்தனும்னு வரீங்களே?…”
“அதிபா, அப்பா சொல்றதை கேளுய்யா….” கெஞ்சலாய் அவர் குரல் ஒலிக்க முகம் அத்தனை சோர்வாய் இருந்தது.
“இன்னும் என்ன கேட்கனும்? துவாவுக்கு கஷ்டம்னா அது எனக்கும் கஷ்டம் தான்னு உங்களுக்கு ஏன்ப்பா புரியலை. பிடிக்கலைனா என்னைவிட்டு கூட நீங்க விலகிடுங்கப்பா…” என்றதும் கலக்கமாய் பார்த்தவர்,
“அதிபா, இல்லப்பா. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்னு நான் காரை கூட திருப்பி அனுப்பிட்டேன். இங்க வந்ததும் வேற யாருக்கும் தெரியாது. ட்ரைவர்ட்ட யார்ட்டையும் சொல்லகூடாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். உன்னை விட்டுட்டு…” என்றவருக்கு வார்த்தையே வரவில்லை. அவரின் தளர்வு எதுவோ செய்ய,
“நைட் சாப்ட்டீங்களாப்பா?…” என்றான் அவனாக.
“அவர் நேத்து மத்யானமே வந்துட்டார்…” இறுக்கமாய் பதில் வந்தது துவாரகாவிடமிருந்து.
“என்ன?…” என அவளை திரும்பி பார்த்தவனின் முகத்தில் ஏதேதோ உணர்வுகள்.
“துவா அவர் வயசென்ன? நேத்துல இருந்து சாப்பிடலை. டேப்லெட் வேற எடுத்துக்கறவர்…” என்றவன் வேகமாய் சமையலறைக்கு சென்று தட்டில் இரண்டு இட்லிகளையும் சாம்பாரையும் ஊற்றி எடுத்துவந்து ரத்தினசாமிக்கு ஊட்ட ஆரம்பித்தான்.
அவனின் பதட்டமும் பரபரப்பும் தந்தையின் உடலின் மீதான அக்கறையும் துவாரகாவின் மனதை ஆட்டியது. அவர்களையே வெறித்து பார்த்தபடி நின்றாள்.
அதிரூபனுக்கு அப்போதைக்கு ரத்தினசாமியின் பசியை போக்குவதும் சோர்வை நீக்குவதும் மட்டுமே கடமையாய் தோன்ற மகனாய் அவன் அவரை கவனித்தான்.
இயல்பிலேயே ஒருவரின் துன்பத்தில் இரக்கம் கொள்பவனாய் இருந்துவிட்டவன் இந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தாலும் அவரின் பசியை போக்கி இருப்பான் தான்.
ஆனாலும் தந்தை என்று வரும்போது கூடவே அக்கறையும் பாசமும் அதிகமாய் போனது.
கொண்டுவந்த உணவை அவரே எடுத்து சாப்பிட கூட முடியாத அளவுக்கு ஒருநாள் பசியில் துவண்டுபோய் இருந்தவரை பார்க்க கலங்கிப்போனது அதிபனுக்கு.
‘அனைத்தும் இவர் செய்த பாவத்தின் சம்பளம்’ என உள்மனம் எக்களித்தது.
செய்த பாவ செயல்களுக்கு எஜமானராகிய பின் அதற்கான பலனை அனுபவித்து தானே ஆகவேண்டும். ஆனாலும் அதை பார்க்கும் போது வலிக்கத்தான் செய்தது அதிபனுக்கு.
‘இது உங்களுக்கு தேவையாப்பா? அகிலாத்தைக்கும், துவாவுக்கும் நீங்க செஞ்ச பாவத்தோட பலன் தான் இன்னைக்கு பெற்ற மகன் வீட்டிலேயே பசிக்கு தவிச்சிருக்கீங்க.’ என மனதிற்குள் நினைத்தவன் முகம் உணர்வுகளை தொலைத்து இருந்தது.
ஊட்டி முடித்த பின்பு தான் அவரின் கையை பார்த்தான். எங்கோ நன்றாய் இடித்து அந்த இடம் லேசாய் வீங்கிப்போய் இருந்தது.
“உங்க அப்பாக்கு ஒன்னுன்னதும் பதறுதா மாமா?…” என துவாரகா கேட்டதும் வேகமாய் திரும்பி பார்த்தவன்,
“அடி பட்டிருக்கு துவா. பர்ஸ்ட்எய்ட் பாக்ஸ் எடுத்துட்டுவா…” என,
“சின்ன அடிதான் மாமா. சாகறதுக்குள்ள சரியாகிடும்…” என அசராமல் சொல்ல,
“துவா?….” என கத்திவிட்டான்.
“இது எங்களுக்கு என்னைக்கோ உங்க அப்பா சொன்னது தான் மாமா…” என இன்னும் அழுத்தமாய் சொல்ல,
“துவா எப்ப என்ன பேசிட்டு இருக்க? அவர் பண்ணினதை நான் நியாயப்படுத்தலையே. ஆனா இந்த நிலமைல அவரை பார்த்துட்டு அதுவும் நம்ம வீட்ல, நான் எப்படி விடமுடியும்?…” அவளுக்கு எப்படியாவது புரிய வைத்துவிடவேண்டும் என்கிற அவசரம் அவனுக்கு.
“ஆமாம். வயசானவர், பசி, படுக்க மெத்தை இல்லாம தூசி படிஞ்ச ரூம்ல போட்டு அடச்சுட்டேன். உண்மை தான். ஆனா இதெல்லாம் வரனும்னா பதவி இருக்கனும். பணம் இருக்கனும், அதிகாரம் இருக்கனும். என்னன்னு கேட்கிறதுக்கு சொந்தம்னு யாராவது இருக்கனும். இல்லையா மாமா?…”
“நாங்களும்தான் இருந்தோம். நாள் முழுக்க சாப்பிடாம, தூங்காம, பயத்தோட குடும்ப பொண்ணுங்க போகவே கூடாத போலீஸ் ஸ்டேஷன்ல. அம்மா வயசானவங்க தான். அவங்களும் அப்ப ஏதோ டேப்லெட் போட்டுட்டு தான் இருந்தாங்க…” அவளின் குரலில் அப்படி ஒரு இறுக்கம்.
“துவாம்மா…” என்றபடி அருகில் வர பார்க்க,
“அங்கேயே நில்லுங்க மாமா. நான் பேசனும்…” என அவனை விட்டு இன்னும் இரண்டடி பின்னால் சென்று நின்றாள்.
“எனக்கு பசின்னா என்னனே தெரியாத வயசு. எங்கம்மா என்னை ஸ்ட்ரிக்டா வளர்த்தாங்களே தவிர என்னை எதுக்கும் ஏங்கவிட்டது இல்லை. முக்கியமா பசி. நான் பசிச்சு என்னைக்குமே சாப்பிட்டது கிடையாது மாமா. அப்படி ஒண்ணை நான் பீல் பன்றதுக்குள்ள எனக்கு சாப்பிட குடுத்திருவாங்க. ஆனா அன்னைக்கு நான் காலைல சாப்பிட்டது தான்…”
“வேண்டாம்டா, மறந்திடு அதையெல்லாம்…” அவளை சமாதானப்படுத்தும் விதமாய் மீண்டும் நெருங்க முயற்சிக்க,
“கிட்ட வராதீங்கன்னு சொல்லிட்டேன்…” முடிவாய் துவாரகா சொல்ல அப்படியே நின்றான் அதிரூபன்.
துவாரகா குரலை உயர்த்தவில்லை. அழவில்லை. கத்தவில்லை. கண்களில் கலக்கம் கூட இல்லை.
அத்தனை வெறுமை. எந்த ஒரு உணர்வையுமே அவளின் குரல் வெளிப்படுத்தவில்லை.
அதுவே அதிரூபனுக்கு பயத்தை கொடுத்தது. ஏற்கனவே அவள் அவனிடம் பேசுவதே இல்லை.
இன்று திடீரென அதுவும் ரத்தினசாமியை அடைத்துவைத்துவிட்டு அதைப்பற்றி கொஞ்சமும் கவலையோ பயமோ கொள்ளாமல் இவள் இப்படி பேசுவது அவனுக்கு பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.
அகிலாவின் பேச்சும், விலகலும் துவாரகாவை மனதளவில் பாதித்துள்ளதோ? அந்த பாதிப்பின் வெளிப்பாடு தான் இந்த குமுறலோ? என பார்த்திருந்தான்.
ரத்தினசாமியை பார்த்தால் அவர் துவாரகாவை முறைத்தால் கூட மகன் எதுவும் நினைப்பானோ என அவனைத்தான் பார்த்தார்.