“யாரோட வாழ்க்கையையும் நான் தடை போட விரும்பலை. அதேநேரம் எனக்கு இந்த உறவுகள் ஒத்துவராது. எப்பவோ போயிருக்கவேண்டிய உயிர்…”
“ஏதோ காரணத்திற்காக நான் வாழனும்னு இருக்கு. வாழ்வேன். எதுக்காகவும் எதையும் நினைச்சு என் பயணத்தை நான் நிறுத்த முடியாது. அவங்கவங்க வாழ்க்கையை அவங்கவங்க தான் வாழனும். எதுவும் யாருக்காகவும் நிற்க போறதுமில்லை. நடக்க போறதும் இல்லை…”
“அகிலாத்தை துவாவை நினைச்சு பாருங்க. அழறா அவ. உங்களுக்கு கவலை இல்லையா உங்க பொண்ணை நினைச்சு?…” என்றவனை உணர்வின்றி பார்த்தவர்,
“நான் யாரை நினைச்சும் கவலைப்படபோவதில்லை. கவலைப்படுமளவிற்கு எனக்கு யாருமில்லை…” பற்றற்ற குரலில் கூறியவரை கண்டு கதறி அழ ஆரம்பித்தாள் துவாரகா.
அவளின் அழுகுரல் கூட அகிலாவின் இரும்பு மனதை மாற்றவே இல்லை.
“எனக்கு யாரும் அழறது பிடிக்காது. அழுகை கோழைத்தனம். ஒருவரின் இரக்கத்தை சம்பாதிக்க நினைக்கும் ஆயுதம். என்னைக்குமே அதை நான் விரும்ப மாட்டேன். இந்த கண்ணீரில் நான் இளகிவிடுவேன்னு நினைச்சா அதை விட முட்டாள்தனம் எதுவுமில்லை. புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்…”
“முதல்ல இங்கிருந்து கிளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு…” என சொல்லி அங்கிருந்து நகர்ந்து பாத்ரூமினுள் சென்றவரை கசந்த விழிகளோடு பார்த்தவன் துவாரகாவை அணைத்து தனக்குள் இறுக்கிக்கொண்டான்.
ஆனால் அவள் அவளுக்குள் இருகிப்போனாள். தனக்கொரு பொண்ணே பிறக்கலைன்னு நினைக்கிற அளவுக்கு நீ நடந்துட்ட. இனியும் உனக்கு உன் காதல் பெரிதா? என தனக்குள் கேட்டுக்கொண்டவள் கண்ணீர் கூட வற்றிவிட்டது.
என் அம்மாவிற்கு நான் வேண்டாமா? என்னை பெறவே இல்லையாமே? இது அனைத்திற்கும் காரணம் முதலில் நான், நான் அதிபனிடம் கொண்ட காதல், ரத்தினசாமி, அவன் குடும்பம் என்ற எண்ணம் வலுப்பெற்றது துவாரகாவிடம்.
தான் மட்டும் அம்மாவோடு அவர் சொல்லியதை கேட்டிருந்தால் இன்று தாயில்லா பிள்ளையாக தவித்திருக்க வேண்டியதில்லையே. என்னால் தான் என் அம்மாவிற்கு இந்த கஷ்டம். என்னால் மட்டும் தான்.
இருவரும் அங்கிருந்து வெளியேற வெளியே அஷ்மி நின்றிருந்தாள். துவாரகாவை பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது அஷ்மிதாவிற்கு.
“அஷ்மி…”
“ஹ்ம்ம் கேட்டேன்டா. நீ ஒன்னும் சொல்லவேண்டாம். டாக்டர்க்கிட்ட எல்லாமே நான் பேசிட்டேன். கிளம்பலாம். போற வழியில சொல்றேன்…”
அதிரூபனிடம் துவாரகாவை காட்டி அங்கிருந்து முதலில் கிளம்புமாறு சைகை காண்பிக்க அவளை அழைத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றினான்.
“நானும் உன்னோடவே வரேன் அதி. ப்ரெண்ட்ஸ் கூட இங்க வந்தேன். ஒரு டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ண. அப்படியே அகிலா ஆன்ட்டியை பார்க்க போனப்போ உன்னை பார்க்கனும்னு சொல்லி அவங்க வர சொன்னத கேட்டு நானும் வேலையை முடிச்சுட்டு வெய்ட் பண்ணேன்…”
“வாட்? பார்க்கனும்னு வர சொன்னாங்களா?…” என கேட்க,
“முதல்ல ரெண்டு பேரும் பின்னாடி உட்காருங்க. நான் ட்ரைவ் பன்றேன்…” என கார் சாவியை அவனிடமிருந்து பறித்து ட்ரைவிங் ஸீட்டில் தான் ஏறிக்கொள்ள துவாரகாவிடம் அசைவே இல்லை. அதிரூபன் பின்னே வந்து அமர சொல்லி அழைத்தும் அவள் இறங்கவில்லை.
“ஓகேடா. அவளை ப்ரீயா விடு. கெட் இன் அதி…” என காரை கிளப்ப ஏனோ மனம் அலைபாய்ந்துகொண்டே இருந்தது அதிபனுக்கு.
ஹாஸ்பிட்டல் வளாகத்தை விட்டு கார் மெயின்ரோட்டில் மிதக்க ஆரம்பித்தது.
“அதி, ஒரு விஷயம்…” என அஷ்மி ஆரம்பிக்க,
“ஹ்ம்ம் சொல்லுடா…” பின் ஸீட்டில் நன்றாய் தலை சாய்ந்து கண்களை மூடியபடி கேட்க,
“அகிலா ஆன்ட்டிக்கு த்ரீ டேய்ஸ் முன்னாடியே நினைவு திரும்பி இருக்கு…” என்றதும் திடுக்கென எழுந்து அமர்ந்தான் அதிரூபன்.
“வாட்?…” என கேட்க,
“பதறாதடா ராஸ்கல். நான் பயந்துட்டேன்…” என கடிந்தவள்,
“கொஞ்சம் அமைதியா கேளு. பதறியும் கதறியும் நோ யூஸ்…” என சொல்லி,
“ஆன்ட்டி கண் முழிச்சு துவாவைத்தான் தேடியிருக்காங்க. டாக்டர்ஸ் அவங்களை செக் பண்ணிட்டு உனக்கு இன்பார்ம் பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க. ஆனா நீ பிக்கப் பண்ணலை போல…”
“எஸ், அன்னைக்கு ஆபீஸ்ல ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங். நான் மொபைல் சைலன்ட்ல வச்சிருந்தேன். ஆனா திரும்ப கூப்பிட்டப்ப அசைவு தான் இருக்கு. அதை சொல்லத்தான் கூப்பிட்டதா சொன்னாங்களே?…” என சொல்ல,
“அங்க தான் ராஜா ட்விஸ்ட்டே. ஆன்ட்டி இது என்ன ஹாஸ்பிட்டல் அது இதுன்னு டீட்டய்ல்ஸ் கேட்க அவங்களும் உங்க மருமகன்தான்னு உன்னோட ஜாதகத்தை விளக்கி உங்க கல்யாணத்தை வீடியோ இல்லாம டெலிகாஸ்ட் பண்ணி உன்னை பத்தி அருமை பெருமையா பேசியிருக்காங்க…”
“அதை கேட்ட ஆன்ட்டி தான் கண் முழிச்சுட்டதா உடனே சொல்லி அவங்களை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம். சின்ன பிள்ளைங்க. ரெண்டு மூணுநாள் ஆகட்டும்னு சொல்லி ப்ராமிஸ் வாங்கிட்டாங்களாம். சத்தியத்துக்கு கட்டுப்பட்ட பேர்லயே சத்தியத்தை வச்சிருக்கிற டாக்டர் சத்தியபாமாவும் உடனே ப்ளாட்…”
“அந்த டாக்டரை?…” என மொபைலை எடுக்கபோக,
“என்ன பண்ண போற? இல்ல என்னதான் பண்ண முடியும்? இன்னைக்கு வாங்கின சாட்டையடி அன்னைக்கே கிடைச்சிருக்கும். அவ்வளவு தான். ஆன்ட்டி வாங்கின ப்ராமிஸ் உங்களை அவாய்ட் பன்றதுக்காகவோ, உங்கட்ட என்ன பேசனும்னு யோசிக்கிறதுக்காகவோ இல்லை…”
“பின்ன?…” அதிபன் கேட்டதற்கு அஷ்மிதாவின் பதில் என்னவாக இருக்கும் என துவாரகா எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.
“துவாவுக்கு உன்னோட நடந்த கல்யாணத்தை டயஜிஸ்ட் பண்ணிக்கறதுக்காக. அதுக்காக மட்டுமே தான் இந்த கால அவகாசம்…” என்ற அஷ்மிதா,
“ஐம் ஸாரி டூ சே திஸ்…” என சொல்லி இருவரையும் பார்த்தவள்,
“அவங்க பேசினதுல என்ன தப்பு இருக்கு? நீயே யோசிச்சு பாரு. தப்புன்னு சொல்லிடமுடியுமா உன்னால?. ஏன் துவா நீ சொல்லுவியா உன் அம்மா எடுத்த முடிவு தப்புன்னு?…” என்றதற்கு பதிலே பேசாமல் முகத்தை மூடிக்கொண்டாள்.
அஷ்மிதா புருவம் சுருக்கி துவாரகாவை பார்த்தாள். அவளிடம் ஏதோ ஒன்று வித்தியாசமாய் தெரிந்தது.
அனைத்திற்கும் பயந்து நடுங்கி அழுகையில் கரைப்பவள் இன்று தன் தாய் தன்னை வேண்டாம் என்றதற்கு பிறகு ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லையே என யோசனையாய் பார்த்தாள்.
பின் ஒன்றும் பேசாமல் காரை வீட்டிற்கு திருப்பினாள். சிறிதுநேரம் இருந்துவிட்டு கிளம்பும் நேரம் ராஜாங்கத்திற்கு அழைக்க அவரும் வந்துவிட்டு அதிபனுடன் பேசிவிட்டு எதுவானாலும் தன்னிடம் கேட்டுக்கொள்ளும்படி துவாரகாவிற்கும் அழுத்தமாய் சொல்லி சென்றார்.
அவர் சொல்லியது அவளுக்கு உரைத்தால் தானே. அவர்கள் பேசியதை மௌனமாய் கேட்டு தலையாட்டி அவர்கள் கிளம்பியதும் தனிமையில் சென்று அமர்ந்துகொண்டாள்.
அதிரூபன் வந்து பேச்சுக்கொடுத்து அவளின் மனதை திசைதிருப்ப முயல முடியவே இல்லை அவனால். ஏற்கனவே அஷ்மிதாவும் சொல்லி சென்றிருந்தாள் துவாரகாவை கவனமாய் பார்த்துக்கொள்ளுமாறு.
அவனும் அவளை தாங்கித்தான் பார்த்தான். அவளோ அவனிடம் இருந்து விலகுவதிலேயே குறியாய் இருக்க இப்போதைக்கு அவளின் போக்கிலேயே விட்டுபிடிக்க முடிவு செய்தான்.
ஏனோதானோவென இருந்தது அவளின் செயல்பாடுகள். ஏதோ சாப்பிட்டோம், கொஞ்சமாய் தூங்கினோம், அவன் கேட்டதற்கு ஓரிரு வார்த்தையில் பதில் என்றே இருக்க அதிரூபனுக்கு தான் தலைசுற்றியது.
இப்படியே ஒரு வாரம் சென்றுவிட்டது. அன்று முதல்நாள் இரவு வெகுநேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தவன் வந்ததும் படுத்து உறங்கிவிட்டான். எழுந்து பார்க்கும் பொழுது அருகில் துவாரகா இல்லை.
‘இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி பட்டும்படாமலும் இருப்பாளோ?’ என நினைத்துக்கொண்டே முகம் கழுவி ப்ரெஷ் ஆகிவிட்டு கீழே வந்தான்.
“துவா, காபி கொண்டுவா…” என்று கேட்டுவிட்டு சோபாவில் அமர்ந்து பேப்பரை படிக்க துவங்கினான். ஓரளவிற்கு காபிபோட, சமைக்க என கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுகொண்டிருந்தாள் துவாரகா.
அவன் கேட்டு முடித்த அடுத்த நிமிடமே கீழே பின்னால் இருந்த ஒரு அறை கதவு படபடவென தட்டப்பட்டது. பதறி எழுந்தவன் வேகமாய் சென்று பார்க்க உள்ளே யாரோ முனகும் குரல் கேட்க வேகமாய் கதவை திறந்தான்.
கலைந்த தலை, கசங்கிய உடை ஆளுக்கு படிந்து என பார்க்கவே அலங்கோலமாய் நின்றிருந்தார் ரத்தினசாமி.
“அப்பா…” என அதிர்ச்சியில் உறைந்து நிற்க,
“அதிபா?…” என தொய்ந்து போய் நிற்கமுடியாமல் நின்றார் ரத்தினசாமி.
அவரை தாங்கிப்பிடித்தவன் சோபாவிற்கு நடத்தி வந்து அமர்த்த,
“தண்ணீ, தண்ணீ…” என்று கேட்கவும் வேகமாய் சென்று குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து குடிக்கவைத்து,
“நீங்க எப்படிப்பா இங்க? அதுவும் அந்த ரூம்ல?…” என கேட்க,
“நான் தான் உள்ள வச்சு பூட்டினேன்…” என்றபடி காபி கப்போடு வந்து நின்றாள் துவாரகா.
“என்ன?…” என அதிரூபனின் கண்கள் உட்சபட்ச அதிர்வில் விரிந்தது.