இந்த பத்துநாட்கள் என்னால் மறக்கமுடியாதவை. ஜென்மத்திற்கும் இது போதும்.
முடிவெடுத்த பின் எந்த சஞ்சலமும் இல்லை துவாரகாவிற்கு. இனி அதிரூபனை கூட சமாளித்துவிடலாம் என்கிற தைரியம் பிறக்க அவனை திரும்பி பார்க்க நினைத்தாள்.
தனக்குள் இருக்கும் தைரியத்தை, துணிச்சலை வெளிக்கொண்டுவந்தவன்.
இன்று அது அவனுக்கே பாதகமாக போகிறது. திரும்பி பார்க்க விரும்பியும் வேண்டாம் என முடிவெடுத்து தனது ஆசைகளுக்கு இன்றிலிருந்தே சமாதி எழுப்ப ஆரம்பித்தாள். போதும் அனைத்தும்.
இனி என்னை பார்த்து பார்த்து அவனின் குடும்பத்தை இழக்கவேண்டாம். எனக்காக போராடிவிட்டான். பேசிவிட்டான். மொத்தமாய் அனைவரையும் விட்டு வந்துவிட்டான்.
என் ஒருத்திக்காக. போதும். இனியும் இந்த பாழாய்ப்போன காதலுக்காக அவன் எதையும் செய்யவேண்டாம். யாரையும் இழக்க வேண்டாம். நான் குடும்பமே இல்லாது வளர்ந்தவள். இனியும் அப்படி இருப்பது கடினமல்ல.
ஆனால் அவன் பெரிய கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவன், இன்றில்லை என்றாலும் என்றேனும் தேடுவான். இழந்ததை நினைத்து வருந்துவான். வாக்குவாதம் பிறக்கும். அந்த நேரம் காதல் கசக்கும்.
எதுவுமே வேண்டாம். இனி என்னுடைய பழைய வாழ்க்கை. நான் என் அம்மா. மீண்டும் எங்களுக்கான ஓட்டம் ஆரம்பிக்கிறது. ஊர் ஊராய் சென்று வாழும் நாடோடி வாழ்க்கை காத்திருக்கிறது. பழகிய ஒன்றல்லவா.
கசப்பாய் நினைத்துக்கொண்டவளின் உள்ளம் ஒரே ஒருமுறை அவனின் தோள் சாய்ந்துகொள்ள, அவனின் இறுகிய அணைப்பிற்குள் இருந்து வர ஆவல் கொண்டு மனத்தினுள் போராடியது.
இல்லை. முடியாது. அவனை அத்தனை வருடம் பார்க்காமல் பார்க்க கூடாத நிலையில் பார்த்த பின்னும் அவன் கல்யாணம் என சொல்லவும் அனைத்தையும் மறந்து தலையாட்ட வைத்தது அவன் மீதான விருப்பம்.
இன்று அவனுடன் சரிபாதியாகி கூடி களித்து ஒன்றாய் உயிராய் வாழ்ந்துவிட்ட பின் இப்பொழுது வேண்டாமென முடிவு செய்தபின் மீண்டும் தொட்டால் தொடரத்தான் ஆசை பிறக்கும்.
அவனை மறக்கமுடியாமல் தவித்து அன்னைக்கு துரோகமிழைத்து என குறுகினாள். ஆம் துவாரகாவை பொறுத்தவரை தன் காதலை அடைந்துவிட்டாள்.
ஆனால் அகிலாவிற்கு துரோகம் தானே இழைத்துவிட்டாள். அப்படித்தான் என அவளின் மனம் ஆணித்தரமாய் எண்ணியது.
தானா இத்தனை யோசிக்கிறோம்? எப்பொழுதும் அகிலா அகிலா, அடுத்து அதிபன். இப்படி இன்னொருவரின் நிழலிலேயே பழக்கப்பட்டுவிட்டவள்.
தனக்கு யோசிக்க தெரியும் என்பதே அன்றுதான் உணர்ந்தாள். இந்த யோசனைகள் ஏன் தனக்கு முன்பிருந்தே இல்லாமல் போனது.
“துவா…” அவளின் எண்ணங்களை நிறுத்திய அதிரூபனின் குரலில் அதிர்ந்து திரும்பியவள்,
“ஹாங், என்ன?…” என கேட்டாலும் அவனின் உருவத்தை மனதிற்குள் மிச்சமில்லாமல் நிரப்பினாள்.
“ஹாஸ்பிட்டல் வந்தாச்சு. இறங்கு…” என்று சொல்ல அவன் பேச்சு புரியாதவளை போல அவள் விழிக்க அவளின் பார்வைக்கான அர்த்தம் விளங்காதவன் தான் இறங்கிவிட்டு மறுபுறம் வந்து அவள் பக்கமிருந்த கதவை திறக்க அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் இறங்கினாள்.
இனி எந்த ஜென்மத்திலும் இவன் எனக்கானவன் இல்லை. இந்த ஒரு ஜென்மமே போதும். இந்த நாட்களே போதும்.
‘அடுத்து எனக்கொரு பிறப்பை கொடுத்து தண்டித்துவிடதே கடவுளே’ என மனதிற்குள் மன்றாடி வேண்டிக்கொண்டாள்.
அதிரூபனுடன் அவள் இணைந்து நடக்க கால்கள் முன்னும் பின்னுமாய் முரண்டுபிடிக்க தளர்ந்தாள். அந்த நடையில் தெரிந்த தளர்வில்,
“துவா, டயர்டா இருந்தா கேண்டீன் போய் ஜுஸ் ஏதாவது சாப்பிடலாம்…” என அழைக்க வாயை திறக்காமல் வேண்டாம் என தலையசைப்பை மட்டும் பதிலாய் கொடுக்க துணுக்குற்றான்.
“துவா, நில்லு. என்ன நினைக்கிற இப்போ நீ? உன் முகம் என்னவோ எனக்கு தோணுது. அத்தையை நினைச்சு பயப்படறியா? நான் தான் உன் கூடவே இருக்கேன்ல?…” என சொல்லி அவளை ஆறுதலாய் அணைக்க போக வேகமாய் அவனிடமிருந்து விலகியவள் தள்ளி நின்றாள்.
“துவா…” சத்தியமாய் இதை எதிர்பார்க்கவில்லை அதிரூபன்.
‘திரும்பவும் முதலில் இருந்தா?’ என்றுதான் எண்ணினான்.
அவளிடம் விளக்கம் கேட்டு தெளிவுபடுத்த இது நேரமில்லை என நினைத்தவன்,
“ஓகே, லெட்ஸ் கோ…” என சொல்லி தனது கைகளை பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்துக்கொண்டு முன்னே நடக்க துவாரகாவின் முகம் அழுகையை எட்டியது.
கசிந்துவிட்ட கண்ணீரை அவனுக்கு காண்பிக்காமல் துடைத்துக்கொண்டவள் இதயமோ இணையப்போகும் தாய்க்கும், பிரியப்போகும் கணவனுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு கதறியது.
இனி மனதின் பேச்சை கேட்பதாய் இல்லை என நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் அதிபனுடன் நுழைந்தாள்.
அங்கே கட்டிலில் சாய்ந்தமர்ந்து பேப்பர் வாசித்துக்கொண்டிருக்கும் அன்னையிடம் ஓடத்துடித்த கால்களை இழுத்து நிறுத்தினாள்.
அகிலாவாக அழைக்காமல் தன்னை ஏற்றுகொள்ளாமல் அவரின் அருகில் செல்வதற்கு கூட பயமாய் இருந்தது.
ஹாஸ்பிட்டல் உடையில் தலை மொட்டையடிக்கப்பட்டு கட்டுபோடப்பட்டிருக்க கொஞ்சமும் அந்த கம்பீரமும் தன்னம்பிக்கையும் கண்களின் தீட்சண்யமும் குறைந்தபாடில்லை. இன்னும் எதுவோ ஒன்று அவரிடம்.
“மேடம் அவங்க வந்துட்டாங்க…” டாக்டர் சொல்ல இவர்கள் பக்கம் நிமிர்ந்துபார்த்தார் அகிலவேணி.
அதிரூபனுக்கும் துவாரகாவிற்கும் இதயம் பந்தையக்குதிரையின் வேகத்தையும் விஞ்சிக்கொண்டு பயந்தது.
என்ன சொல்ல போகிறார்? எப்படி தங்களை எதிர்க்கொள்ள போகிறார்? என பதட்டத்துடன் பார்க்க,
“தேங்க் யூ டாக்டர். நான் பேசிட்டு உங்களை பார்க்க வரேன்…” என்றதும் டாக்டரும், உடன் இருந்த நர்ஸும் அங்கிருந்து கிளம்பிவிட யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.
பதினைந்து நிமிடங்கள் கரைந்தது. டாக்டர் சென்றதும் இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தார். ஆனாலும் அகிலா பேசவில்லை. துவாரகா தலைகுனிந்து நின்றாள். இனியும் அவர் பேசுவார் என தோன்றாததால் ஒரு பெருமூச்சை வெளியிட்டு அதிரூபனே பேச்சை ஆரம்பிக்க,
“எப்படி இருக்கீங்க அத்தை?…” என்று கேட்க,
“தேங்க் யூ மிஸ்டர் அதிரூபன் ரத்தினசாமி. டாக்டர் சொன்னாங்க. எனக்கு கரெக்ட் டைம்ல ட்ரீட்மென்ட் குடுத்து காப்பாத்தினதா. எல்லாத்துக்குமே தேங்க்ஸ்…”
“அத்தை இது என்னோட…” என்றவனை பேசவே அனுமதிக்காமல் போதும் என்பதை போல கை நீட்டி நிறுத்தியவர்,
“நான் பேசி முடிச்சிடறேன் மிஸ்டர். என்னை பொறுத்தவரை எனக்கு உறவுகள்ன்னு யாருமே இல்லை. எந்த அடிப்படையில் நீங்க என்னை அத்தைன்னு கூப்பிடறீங்கன்னு புரியலை. இதைநான் விரும்பலை…”
“நீங்க சமயத்துக்கு என்னை இந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்து பணம் கட்டி என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க. இதுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். எப்போ வேணும்னாலும் அதுக்கு பிரதிபலனா நீங்க என்கிட்ட கேட்கலாம். என்னால முடிஞ்ச உதவியை நானும் பண்ணுவேன்…”
“இந்த இடத்துல பணம் ஒரு பெரிய விஷயமே இல்லை. என்னோட பேங்க் பேலன்ஸ் சொல்லிக்கும் படி தான் இருக்கு. ஆனாலும் தாகம் எடுக்கறப்ப கை நிறைய பணம் இருந்தாலும் ரெண்டு துளி தண்ணீர் கிடைக்குதே. அதுதானே பெருசு…”
“அது மாதிரி தான். பணம் என்கிட்ட இருந்தாலும் அதை எடுத்து கட்ட யாருமே இல்லாம போனது தான் என்னோட துரதிர்ஷ்டம்…”
“அத்தை ப்ளீஸ், துவா…”
“மிஸஸ் துவாரகா அதிரூபன். அதாவது மிஸ்டர் ரத்தினசாமி மருமகள் இவங்க தானே?…” என்றுவிட,
“அம்மா, என்னை மன்னிச்சுடுங்கம்மா…” என கதறிக்கொண்டு அவரின் காலை பிடித்தாள் துவாரகா.
துவாரகாவின் விரல் நுனி கூட தன் மீது பட்டுவிடாமல் அவளை விட்டு விலகி கீழே இறங்கி கட்டிலின் மறுபுறம் நின்றுகொள்ள,
“அம்மா…”
“ஸாரி மிஸ்டர் அதிரூபன் ரத்தினசாமி…” மீண்டும் மீண்டும் ரத்தினசாமியின் பெயரை சொல்லிக்கொண்டே இருந்தார்.
இது அதிரூபனை இந்த ராட்சசனின் மகன் தானே நீ என்று சுட்டிகாண்பிக்கவா இல்லை தனக்கே நினைவுருத்திக்கொள்ளவா என தெரியாமல் சொல்லிக்கொண்டே இருந்தார் அகிலா.
“நீங்க கிளம்புங்க. நான் ரெஸ்ட் எடுக்கனும்…” வெட்டிவிடுவதை போல பேச இருவருக்குமே அதிர்ச்சி தான்.
“நீங்க என்னை இங்க சேர்த்து பணம் குடுத்து எனக்கு நல்ல ட்ரீட்மென்ட் குடுத்து காப்பாத்தி இருக்கலாம். ஆனா அதுக்கு என்னால எல்லாத்தையும் அனுமதிக்க முடியாதில்லையா?…”
“இந்த நிமிஷமே உங்க பணத்தை என்னால திருப்பி கொடுத்துட முடியும். அது காலத்தில் செய்த உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆனா அதுக்குன்னு உங்க பணத்தை நான் அப்படியே வச்சுக்கவும் போறதில்லை. அது சேரவேண்டிய இடத்துக்கு கண்டிப்பா சேர்ந்திடும்…”
“எனக்கு இன்னொருத்தர் பொருளையும், பணத்தையும் வச்சுக்க என்னைக்குமே விருப்பம் இருந்ததில்லை…” இது வெறும் பணத்திற்கு மட்டமே சொன்னதாக தெரியவில்லை அதிரூபனுக்கு. துவாரகாவையும் தான் சொல்கிறார் என புரிந்துகொண்டான்.
“அத்தை ப்ளீஸ், நான் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பன்றேன். எனக்கொரு சான்ஸ் குடுங்க…”
“என்னால இதுக்கு மேல பேசமுடியாது…” என மெதுவாய் படுக்கையில் அமர,
“அம்மா, என்கூட பேசுங்கம்மா…” கண்ணீர் வழிய வழிய துவாரகா அழுகையுடன் கெஞ்ச,
“இப்ப என்ன தப்பு நடந்திருச்சுன்னு நீங்க இவ்வளவு பிடிவாதம் பன்றீங்க? உங்க பொண்ணு எத்தனை அழறான்னு பாருங்க…” அதிரூபன் கோபமாய் கேட்க,
“பொண்ணா? யார் யாருக்கு பொண்ணு? உயிரோட இருக்கிறவளை செத்ததா நினைச்சுக்கறேன்னு சொல்ல நான் விரும்பலை. ஆனா எனக்கு ஒரு பொண்ணே பொறக்கலைன்னு நான் நினைச்சுப்பேன். இதுக்கு மேல ஆர்க்யூமென்ட் பண்ணவேண்டாம்…”