மின்னல் அதனின் மகனோ – 15 (1)

மின்னல் – 15

          ஹாஸ்பிட்டலில் அழைப்பு வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறாள் துவாரகா. முகமே ரத்தமின்றி வெளிறி கிடந்தது. அவளின் மனம் ஏனோ சமன் படவே இல்லை.

அதிபனின் முகம் காணக்கூட பயந்தவளாய் அவனை தன் பார்வை வட்டத்தில் இருந்து விலக்கி நிறுத்தினாள்.

“அம்மா வேண்டாம்மா? இனிமே அவங்களை பார்த்தா பேசவே மாட்டேன். மாமா சொல்லவே மாட்டேன். சத்தியம், சத்தியம். நம்புங்கம்மா. இப்படி பண்ணிக்காதீங்க. ப்ளீஸ் அம்மா. அம்மா…”

என்கிற கதறலும் அதை சற்றும் பொருட்படுத்தாது தன் காலில் தனக்கு தானே சூடு வைத்து அந்த வலியை கொஞ்சமும் பிரதிபலிக்காத அகிலாவின் முகமுமே அவளின் ரத்தத்தை உறைய வைத்தது.

தாய் அறியாதா சூலா? அது போலத்தான் துவாரகாவிற்கு அதிரூபனின் மீதான ஈர்ப்பை வெகு எளிதாக கண்டுகொண்டார்.

மனதில் இருப்பதை மறைத்து பழக்கமில்லாத துவாரகாவின் மலர்ந்த முகத்தை வெகு எளிதாய் படம்பிடித்துக்கொண்டவர் அதிரூபன் அவளிடம் பழகுவதையும் கண்டுகொண்டார்.

அனைத்தையும் தாண்டி வந்தவர். காதல் மட்டுமல்லாமல் காதலையும் கடந்து அத்தனை துன்பத்தையும் விஷமென விழுங்கி உயிர்வாழ்பவர்.

இன்னொரு அகிலாவா? இல்லவே இல்லை. அதிலும் அந்த குடும்பத்தில். ஏற்கனவே மரத்துவிட்ட உணர்வுகள் தான் ஆனாலும் மகளுக்காய் துடிதுடித்தது. அந்த நேரத்திலும் அவர் தன்னை தண்டித்து மகளுக்கு புரியவைக்க நினைத்தார்.

எவரிடமும் காணாத உணர்வும், அதிரூபனின் பார்வையும், அவன் காட்டிய உரிமையும் எத்தனை எத்தனை உணர்வுகளை கொடுத்தது என துவாரகா மட்டுமே அறிந்த ஒன்று.

முதல் ஈர்ப்பு. முதல் ஆசை. முதல் காதல். அத்தனையையும் கொடுத்து நேசம் தாங்கி ஒருவன் வந்து நின்று பெண்ணவளின் மனதை சத்தமில்லாமல் கொள்ளை கொண்டுவிட்டான்.

வரும்முன் காப்பதை தாண்டி வந்துவிட்ட காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் அகிலா.

காதலில் விழுந்து வாழ்க்கை அவருக்கு புகட்டிய பாடம் மகளுக்கு வேண்டாம் என நினைக்க தாய்க்காகவே அதிரூபனை விட்டு விலக நினைத்தாலும் விதி அவளை அவனோடு இணைத்தது.

காதலென வந்துவிட்ட பிறகு தான் நினைத்தோமா தன் பெற்றோரை? தன் மகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது புரியாமல் போனது அகிலாவிற்கு.

சொல்லுவதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை. அப்படித்தான் வளர்ந்தாள். அகிலா சொல்வதை அப்படியே பின்பற்றும் கிளிப்பிள்ளை. பேசு என்றால் பேசுவாள். நிறுத்து என்றால் அங்கிருந்து நகர்ந்தேவிடுவாள்.

இப்படி அனைத்திலும் தன் கைக்குள் வைத்து தான் சொல்லியதற்கு அவளை பழக்கப்படுத்திய அகிலா பாதுகாக்கிறேன் என்ற பொருட்டு துவாரகாவிடம் தோழமை பாராட்ட தவறிவிட்டார்.

உடன் படிக்கும் தோழிகள் கூட அத்தனை நெருக்கமாய் பழகியதில்லை. அகிலாவின் வளர்ப்பு அப்படி. யாரிடமும் அண்டவிடாமல் தன் கைக்குள்ளேயே அவளை வளர்த்தார்.

துவராகவிற்கு அதிபனை பிடித்தது. முதன் முதலில் தன்னிடம் எந்த எல்லையுமின்றி அளந்து பேசாமல் உரிமையுடன் தன்னை நோக்கிவந்த அதிபனின் சொந்தம் பிடித்தது. அவன் உணர்த்திய உணர்வை பிடித்தது.

அதையும் அவனிடமோ, அகிலாவிடமோ சொல்லாமல் தனக்குள் ஒளித்துக்கொண்டாள். காதலென்று உணராதவளுக்குள் காதல் புகுந்த தடத்தின் வெளிப்பாடே கள்ளம் புகுந்தது.

அதிலும் அகிலா தான் அதிபனிடம் பேசிய அன்று செய்ததில் மொத்தமாய் மனதை பாதாளத்தில் பூட்டி உள்ளுக்குள் மட்டுமே பூஜிக்க ஆரம்பித்தாள்.

அது அவளின் மௌனமான காதலின் சக்தியா? இல்லை அவளால் தான் அகிலாவின் போராட்டங்களுக்கான விடிவை தேடிக்கொடுக்க கடவுளின் திருவிளையாடலா?

எதுவோ ஒன்று விலகிப்போன அகிலாவும், விரட்டியடித்த ரத்தினசாமியும் இனி விலகமுடியா பிணைப்பை ஏற்படுத்திவிட்ட இறுமாப்பில் அந்த இறைவன் இருக்க அகிலா அதை ஏற்றுகொள்வாரா?

கண்களிலேயே பட்டுவிடக்கூடாது என்று நினைக்கும் அகிலாவின் மருவுருவே அவரின் குடும்பத்தில் அழுத்தமாய் கால் ஊன்றிவிட இன்னும் எத்தனை எத்தனை பார்க்க இருக்கிறாரோ ரத்தினசாமி?

“துவா, ப்ளீஸ் இப்படி இருக்காத. இங்க பாரு. அதான் அத்தை நல்லா இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாங்கன்னு சொன்னேன்ல. இங்க பாரு…”

கார் ஓட்டிக்கொண்டே அவளின் கவனத்தை தன் புறம் திருப்ப எத்தனையோ முயன்றான் அதிரூபன். அவனின் கெஞ்சல், கொஞ்சல் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.

“உனக்கு பயத்தை விட பிடிவாதமும் அழுத்தமும் தான் அதிகமா இருக்கு துவா. நாம வீட்ல இருந்து கிளம்பி அரைமணிநேரம் ஆகுது. ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வர வரை நல்லா தானே இருந்த. அதுக்குள்ள என்ன ஆகிடுச்சு?…”

“உன் அம்மா இப்ப கம்ப்ளீட்டா க்யூர். ரொம்ப ரொம்ப நல்லா இருக்காங்க. நல்லா பேசறாங்கலாம். இனி பயப்பட எதுவுமே இல்லைன்னு டாக்டர் சொல்லியாச்சு. அஷ்மி கூட அங்க இருக்கா. சந்தோஷப்பட வேண்டிய விஷயத்துக்கு இப்படி முகத்தை தூக்கி வச்சிட்டா என்ன பண்ண?…”

திரும்புவேனா என்பதை போல சாலையிலேயே கவனமாய் இருக்க அதிரூபனின் பேச்சுக்கள் எதையும் காதிலேயே ஏற்றிக்கொள்ளவில்லை அவள்.

துவாரகா குற்றவுணர்வில் தவித்துக்கொண்டு இருந்தாள். அதிரூபனின் மீதான அன்பை அதை காதல் என்று கூட அவளால் வரையறுக்க முடியாது. ஆம் அன்பு.

அவன் மீதான ஒருவித உணர்வு. அவன் அவளிடம் தோற்றுவித்த உரிமையுணர்வு. அதை கூட அகிலாவின் மீதான பயத்திலும், பாசத்திலும் விட்டுவிட்டாள்.

ஆனால் எந்த வகையிலும் தன் தாயிற்கு தான் உண்மையாக இல்லை என்கிற உணர்வு அவளை ஆட்டிப்படைத்தது.

அத்தனை முறை அகிலா சொல்லிய எதுவும் அவள் அடிமனதில் ஏற்றிக்கொள்ளாமல் இருந்ததால் தானே அதிரூபனுடன் திருமணம் என்றதும் அனைத்தையும் மறந்து சம்மதிக்க முடிந்தது.

அதிலும் அகிலா இருந்த நிலையிலும் அதிரூபனுடன் தன்னுடைய வாழ்வினை தொடங்கிவிட்டதை எண்ணி அத்தனை கீழாக தன்னையே நினைத்தாள்.

‘இதற்காகவே காத்திருந்ததை போல உன் காதலை நிறைவேற்றி கொண்டாயே? நீ என்ன பெண்?’ என அவளின் மனசாட்சி காறி உமிழ நினைவு சுழல்கள் மொத்தமாய் வாட்டி வதைக்க ஆரம்பித்தது.

ஒருவேளை இதைத்தான் என் உள்மனம் விரும்பியதோ? அகிலாவின் கஷ்டங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு கிடைத்த வாய்ப்பில் தன் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட தன் காதல் கருமம் பிடித்த காதல் அந்தளவுக்கு என்ன உயர்ந்துவிட்டது?

இதுவரை தான் வாழ்ந்தது என்ன? அப்படியென்ன அவனிடம் பேசிவிட்டாய்? பழகிவிட்டாய்?. வார்த்தைகளில் கூட இந்த நிமிடம் வரை மனதை பரிமாறிக்கொள்ளவில்லை.

ஒருவேளை அகிலா தன்னை சுற்றத்தாருடன் பழக விட்டிருந்தால் எதையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளுமளவிற்கு தனக்கும் புத்தி இருந்திருக்குமோ?

இப்படி தனக்குள்ளேயே வாதி பிரதிவாதியாக வாதாடிக்கொண்டாலும் எதுவுமே தனக்கு சாதகமாக தோன்றவில்லை. அனைத்தும் சொல்லியது நீ கெட்ட பெண். உன் அம்மாவிற்கு உண்மையாக, நேர்மையாக இல்லை என.

இருந்திருந்தால் அதிரூபன் தன்னிடம் பேசும்பொழுதே அவனை முகத்திலடித்தார்போன்று பேசி விலக்கிவிட்டிருக்க முடியும்.

தைரியம்? இன்று அதிரூபனின் குடும்பத்தினர் முன் அவனுடன் கை கோர்த்து நிற்க முடிந்த தன்னால் அன்று ஏன் நிற்க முடியவில்லை.

என்னை ஏன் கோழை போல வளர்த்தார்கள்? இல்லை எதையும் தைரியமாக எதிர்கொள்ளமுடியாமல் எனக்கு நானே போட்டுக்கொண்ட முகம் இந்த கோழைத்தனமா?

நினைக்க நினைக்க தலை வலிக்க ஆரம்பித்தது. எத்தனை பெரிய சுயநலவாதி?. அழுகை பொங்கியது.

ஆனாலும் அழவில்லை. தானே இத்தனை யோசிக்கும் பொழுது தன் அன்னை எத்தனை யோசிப்பார்? ஒரு வேளை ஒருவேளை அதிபனை விட்டு தன்னுடன் வந்துவிடு என சொல்லிவிட்டால்?

அப்படி சொல்லி அழைத்துக்கொண்டால் அகிலாவிடம் முழுமனதாய் தன்னால் சென்றுவிட்ட முடியுமா? அப்போ அதிரூபன்?

ரத்தஓட்டம் மொத்தமும் சட்டென இதயத்திற்குள் பாய்ந்து அவளின் துடிப்பிற்கு தடைசெய்வது போல தோன்ற நெஞ்சை இறுக்கமாய் பற்றிக்கொண்டாள்.

அவளின் முகத்தில் தெரிந்த பாவனைகளில் குழம்பியபடியே காரை செலுத்தினான் அதிரூபன்.

‘என்னதான் யோசிக்கிறா இவ?’ என நினைத்தவனுக்கு அன்றுவரை அகிலா எழுந்தால் எப்படி எதிர்கொள்வது என இருந்த தவிப்பு இன்று சுத்தமாய் இல்லை.

“அம்மா…” என வாய்விட்டு சொல்ல அவள் குரலில் இருந்த சஞ்சலத்தில் காரை நிறுத்தியேவிட்டான்.

“இப்ப என்னை நிம்மதியா ட்ரைவ் பண்ண விடறியா இல்லையா? நானும் கிளம்பினதுல இருந்து பார்த்துட்டு இருக்கேன். பேசமாட்டேன்ற. என்னை பார்க்க மாட்டேன்ற. டென்ஷன் பன்ற…”

அத்தனை கடுப்பையும் மொத்தமாய் முகத்தில் காட்டி அவளிடம் கோபப்பட மெதுவாய் அவன் புறம் திரும்பி பார்த்தாள்.

இதுவரை பார்த்திராத ஏதோ ஒரு உணர்வு அவள் முகத்தில் உணர்வு என்று கூட வரையறைக்குள் வந்துவிடாது. ஆனால் அது அதிரூபனுக்குள் ஒருவித கிலியை லேசாய் தோற்றுவித்தது.

“துவா?…” என மெதுவாய் கூப்பிட சிலநொடிகள் மட்டுமே அவனை அப்படி பார்த்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

‘என்ன நினைச்சான்னே தெரியலையே? இவ அம்மாவை கூட சமாளிச்சிடலாம். இவக்கிட்ட நாம தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கோ? பயந்த சுபாவம்னு மட்டும் தானே நினைச்சோம். அதிபா’ என புலம்பியபடி மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தான்.

துவாரகா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். இதுவரை தான் அகிலாவிற்கு உண்மையாக இருக்கவில்லை. இனி அவரின் விருப்பப்படி தான் தன் வாழ்க்கை.

போதும், இத்தனை நாள் அதிபனோடு வாழ்ந்த வாழ்க்கை. இனி காலம் முழுவதும் அவன் நினைவுகளுடன் நகர்த்தி இறுதியில் அதற்குள்ளேயே தொலைந்துவிடுவேன். அது போதும். போதும்.

error: Content is protected !!