அதற்குள் துவாரகாவும் கிளம்பி வர மூவருமாய் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு வீட்டிற்கே திரும்பி வர வந்த உடனே அஷ்மிதாவிற்கு அவசர செய்தி வர உடனடியாக ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பி ஓடினாள்.
மாலை ஐந்துமணி வரை நன்றாக தூங்கிய துவாரகாவை எழுப்பிய அதிரூபன் அவளை குளித்துவிட்டு கோவிலுக்கு கிளம்ப சொல்ல மறுபேச்சின்றி கிளம்பி வந்தாள்.
“துவா சுடிதார் வேண்டாம். உனக்கு சேரி கூட அஷ்மி எடுத்துட்டு வந்திருக்கா. அதுல ஒண்ணை எடுத்து கட்டிட்டு வா…” என்க,
“மாமா, இதுதான் கம்பர்டபிள். நான் இதுலையே வரேன். ப்ளீஸ்…” விழிகளை சுருக்கி கெஞ்சலாய் கேட்க கள்ளப்புன்னகை புரிந்தவன்,
“நோ நோ. கல்யாணத்துக்கு பின்னால நாம ரெண்டுபேரும் சேர்ந்து முதன் முதலா கோவிலுக்கு போறோம். கண்டிப்பா புடவை தான். சில்க் சேரியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்…” என்று சொல்லியவனின் விழிகளில் புதிதாய் ஒன்று.
நெஞ்சம் படபடக்க அவனிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்டவள் வார்த்தையாடாமல் வேகமாய் மேலே சென்றுவிட்டாள்.
“குட் கேர்ள், கண்ணை கொஞ்சம் பார்த்தே கண்டுபிடிச்சுட்டா…” என சிரித்துக்கொண்டான்.
“மாமா…” என்றபடி வந்தவளை பார்த்து அசந்துதான் நின்றான்.
மிதமான பிங்க் நிற சில்க் காட்டன் புடவையில் தங்க சரிகைகள் மின்ன வந்து நின்றவளின் கோலம் பச்சை குத்தியதை போல ஒட்டிக்கொள்ள,
“ஹ்ம்ம் என்ன சொல்ல?…” என அவளை சுற்றி வந்து பார்த்தவன்,
“சும்மா தாறுமாறா இருக்க…” என்றதும் சிரித்தவள்,
“கோவிலுக்கு…” என கேட்க,
“ஆமா, கோவிலுக்கு. போலாமே. வெய்ட் நானும் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…” என்று போய் அவள் சேரிக்கு மேட்ச்சாக ஷர்ட் ஒன்றை போட்டுக்கொண்டு வந்தவன் அவளின் கைகோர்த்து வெளியில் வந்தான்.
கோவிலுக்குள் நுழைகையிலேயே அத்தனை ஏகாந்த மனநிலை. இருவருக்குமே சொல்லமுடியாத ஒருவித உணர்வு.
இதைத்தான் பாஸிட்டிவ் வைப்ரேஷன்னு சொல்லுவாங்களோ? என நினைத்தனர்.
அர்ச்சனை செய்துவிட்டு பிரகாரத்தை சுற்றி வலம் வந்து ஒரு இடத்தில் அமர்ந்த இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை. புன்னகை முகமாக அங்கு வருவோர் போவோரை பார்த்தபடி இருந்தனர்.
“அதி…” என்ற அழைப்பில் அவர்களின் மோன நிலை அறுபட சட்டென நிமிர்ந்து பார்க்க அங்கே பத்மினியும், அன்னபூரணியும் நின்றுகொண்டிருந்தனர்.
“அதி, அம்மாட்ட பேசமாட்டியாப்பா? அம்மா என்னடா பண்ணினேன்? போன் பண்ணினா கூட எடுக்கலை நீ?…” என்று கேட்டவர் அழவே ஆரம்பித்துவிட பதறிப்போய் எழுந்தான்.
அவனோடு துவாரகாவும் பரிதாபமாய் வந்து நின்றவர்களை பார்த்து மிரண்டுபோய் பார்த்தாள்.
“நீ பயப்படாதம்மா. நான் இவனை கூட்டிட்டு போக வரலை. என்கிட்ட பேசலையே அதுதான் கேட்க வந்தேன். நான் என்னம்மா பாவம் பண்ணினேன்? நீயே சொல்லு…” என அவளிடம் முறையிட அதிபனின் முதுகின் பின் மறைந்தாள் துவாரகா. அதை கண்ட அதிரூபன்,
“அம்மா, பேசக்கூடாதுன்னு இல்லை. பேசற மூட்ல நான் இல்லை. இவளை பார்த்துக்கனுமே. அந்தளவுக்கு காயப்பட்டிருக்கா. இதுக்கு போய் அழலாமா?…”
அவரின் கண்ணீரை துடைத்தவன் துவாரகாவை தன் பின்னால் இருந்து முன்னுக்கு இழுத்து தனக்கு இடதுபுறம் நிறுத்தி தோளில் கைபோட்டுக்கொண்டு அவளை மீண்டும் பின்னால் போய்விடாதவாறு நிறுத்திக்கொண்டான்.
“ரொம்ப சந்தோஷம்ப்பா. எங்க என் குரலை கேட்டு எழுந்து போய்டுவியோன்னு பயந்துட்டே தான் வந்தேன்…” என சொல்லவும்,
“என்னம்மா நீங்க. நான் உங்ககிட்ட எதுக்கு அப்படி செய்யப்போறேன்…” என்றவன் அவரின் பின்னால் நின்றிருந்த அன்னபூரணியின் புறம் கண்களை கொண்டு செல்லவே இல்லை.
“அந்த வீட்டுக்கு கூப்பிடாத வரை எனக்கு நிம்மதி. என்னை இப்படியே நீங்க விட்டுடுங்க. உங்களுக்கு.., உங்களுக்கு மட்டும் எப்போ எங்களை பார்க்கனும்னு தோணினாலும் தாராளமா வீட்டுக்கு வாங்கம்மா…” என சொல்லியவன் மறந்தும் அன்னபூரணியை அழைக்கவே இல்லை.
ஆனால் இதை எதையும் அன்னபூரணி கண்டுகொள்ளவே இல்லை. துவாரகாவை பார்த்து கண்கள் கலங்க அவர் நின்றார். அத்தனை நிறைவாய் இருந்தது இருவரையும் காண.
“ஓகேம்மா, லேட் ஆகிடுச்சு. நாங்க கிளம்பறோம். துவா வா போகலாம்…” என அங்கிருந்து நகரப்போக பத்மினியை தாண்டிக்கொண்டு முன்னால் வந்தார் அன்னபூரணி.
கேள்வியாய் அவரை அவன் பார்க்க துவாரகாவின் விரல்களில் நடுக்கம் பிறந்தது அன்னபூரணியின் நெருக்கத்தில்.
அதை பார்த்தவர் இயல்பாய் அர்ச்சனை கூடையில் இருந்து பிரசாதத்தை எடுத்து ஒருவரின் நெற்றியிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் வைத்து,
“நூறு வருஷம் குழந்தை குட்டிகளோட சந்தோஷமா நிறைவான வாழ்க்கையை நீங்க வாழனும். அத்தனை செல்வங்களையும் பெற்று ஏகபோகமா வாழனும்…”
கலங்கிய விழிகளை கண்ணீர் நனைத்திருக்க துவாவின் கன்னம் தடவி அதிபனின் தலையில் கைவைத்து ஆசிர்வதிப்பதை போல செய்துவிட்டு விடுவிடுவென நடந்துவிட்டார் அன்னபூரணி.
இதை பத்மினி கூட எதிர்பார்க்கவில்லை. தான் கூட தன் பிள்ளைகளுக்கு இதை செய்யவில்லையே என எண்ணினார்.
அதிரூபனின் மனதை பிசைந்தது அன்னபூரணியின் செயல். அவனும் நல்லதுகெட்டதை அறிந்துகொள்ளும் வயது வரை அத்தை அத்தை என இருந்தவன் தானே.
“அதி…” பத்மினி அழைக்க,
“அம்மா நீங்க கிளம்புங்க. டைம் ஆகிடுச்சு பாருங்க. ரொம்ப லேட்டா எதுக்கு கோவிலுக்கு வரீங்க? செக்யூரிட்டீஸ் வேற இல்லை…” என கடிந்துகொள்ள,
“மப்டி போலீஸ் வந்திருக்காங்கப்பா. இன்னைக்கு என்னவோ லேட்டா தான் கிளம்பினோம். ட்ராபிக் வேற…” என சொல்லிக்கொண்டு அவரும் இருவருக்கும் பிரசாதத்தை வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
அதன்பின் இன்னும் ஒரு பத்துநிமிடம் போல அங்கேயே அமர்ந்துவிட்டு இருவரும் கிளம்பி வெளியே வந்தனர்.
வரும் வழியிலேயே உணவை முடித்துக்கொண்டு வர காரிலேயே உறங்கிவிட்டாள் துவாரகா.
அவளின் உறக்கம் கலையாதவாறு காரை வீட்டினுள் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டு வந்தவன் காரின் கதவை திறக்க துவாரகா விழித்திருந்தாள்.
“ஏன் மாமா என்னை கார்லயே வச்சு பூட்டிட்டு போனீங்க?. இன்னைக்கு நீங்க சரியில்லை…” என்றதும் புன்னகைத்தவன்,
“நத்திங்டா. வா உள்ள போகலாம்…” என்று கை குடுத்து எழுப்ப அவனோடு உள்ளே சென்றவள் நேராக தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.
அறைக்கதவை திறந்தவள் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட அவளின் பின்னோடு வந்தவன் அவளை தாண்டிக்கொண்டு பால்கனி சென்று நின்றுகொண்டான்.
எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ? மெதுவாய் பார்வையை சுழலவிட பால்கனியில் அவளையே பார்த்தவாறு அதிரூபன். முகத்தில் அத்தனை காதல். காதல் அந்த காதல் காட்டியது அவ்வளவு வர்ணஜாலம்.
மெதுவாய் அவனிடம் அவள் நடந்து செல்ல அவளுக்காகவே காத்திருந்தான்.
“துவா…” காதல் கரையுடைக்க அதிரூபனின் மொத்த உணர்வுகளும் நிரம்பிய குரலில் அவளது பெயர்தான். ஆனால் ஏதோ புரியாத பாஷை கேட்டது போல நிமிர்ந்து பார்த்தாள்.
ஒரு சின்னப்பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தையிலே
இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா
உயிரை சுண்டி இழுக்கும் அவனின் ராஜகுரலில் இரவின் இனிமையில் அவன் பாடியதில் அவளின் மனம் மயங்கி நின்றவள் நாண உடை போர்த்தி அவனின் நெஞ்சத்தில் முகம் புதைக்க காதலால் அவளை அணைத்துக்கொண்டான் அதிரூபன் முகம்கொள்ளா புன்னகையோடு.