“நீ ஒருத்தி இருக்கறதையே மறந்துட்டேன்மா செல்லக்குட்டி…” என கூற துவாரகா அஷ்மிதாவின் கையை பிடித்துக்கொண்டு,
“வெளில ரோட்ல யாருமே இல்லை. திடீர்ன்னு வெளில கூப்ட்டு பேசினா பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? என்கிட்ட சொல்லுங்க. நான் மாமாட்ட கேட்கறேன்…” என்றதும் அஷ்மிதாவின் முகம் போன போக்கில் உருண்டுபுரண்டு சிரிக்க ஆரம்பித்தான் அதிபன்.
“அவங்க அப்படித்தான், நீங்க சொல்லுங்க டாக்டர். சொல்லுங்க, சொல்லுங்க…” என அவள் கையை பிடித்து உலுக்கினாள் துவாரகா. அவள் அஷ்மிதாவை விடுவதாய் இல்லை.
“ஹைய்யோ கை கழண்டுருச்சு. எனக்கு பேக்ரவுண்ட்ல ஏந்திரி அஞ்சலி ஏந்திரி அஞ்சலின்னு வாய்ஸ் கேட்குதுடா அதி…” என பரிதாபமாய் சொல்லி,
“துவாக்குட்டி, என்னத்த சொல்ல சொல்ற? இதை உனக்கு நான் விளக்கி அதை நீ தெரிஞ்சு அதுக்கப்பறம் இவன்கிட்ட நியாயம் கேட்டு தாரதப்பட்டை கிழியாது. நான் தான் திரும்ப தைக்க முடியாத அளவுக்கு கிழிஞ்சுடுவேன்…” என்றதற்கு,
“சரி, நான் எதுவும் கேட்கலை. நீங்க சொல்ல பிரியப்படலை…” என முகம் வாடி நிற்க,
“நீதான் தைரியமான ஆளாச்சே. சொல்லேன். சொல்லிப்பாரேன்…” என அதிபனும் அஷ்மியிடம் கேலி பேச அவனை முறைத்தவள்,
“அப்படி இல்லடா செல்லக்குட்டி. உன் மாமா அளவுக்கு நான் தெளிவா சொல்லமுடியாது பாரு. அதனால நான் கிளம்பினதும் அவன்கிட்டயே கேளு. ஸார் வரைபடத்தோட விளக்குவார்…”
அதிபனை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்து அவனை போட்டுவிட அதற்கும் சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தான் அவன்.
“ஏன்டா இதுக்கப்பறமுமா உனக்கு சிரிப்பு வருது?…” என்றதற்கு,
“நீ இன்னும் ஞானம் பெறவேண்டும் மகளே. உனக்கு இது புரியாது…” என சொல்லி இன்னும் சிரிக்க,
“சிரிக்கிறானே சிரிக்கிறானே, அஷ்மி உடனே கவுன்ட்டர் குடுடா…” என கடுப்பாகி சோபாவில் இருந்த பில்லோவை எடுத்து அவனை மொத்த அப்படி ஒரு சிரிப்பு அதிபனின் முகத்தில்.
துவாரகாவும் இதை பார்த்து கலகலவென சிரிக்க அதை கண்டு மகிழ்ந்தவள்,
“என்னடா கண்ணுல பல்ப் எரியுது?…” என்று கேட்க,
“நீ முதல்ல நான் கேட்டதை கொண்டு வந்தியா? அதை விட்டுட்டு வழவழன்னு பேசிட்டு இருக்க?…”
“எல்லாம் கொண்டு வந்துட்டேன். அதோ அந்த ட்ராலில இருக்கு…” என சொல்லி அதை உருட்டிக்கொண்டு வர,
“ஓகே நான் போய் இதை ரூம்ல வச்சிட்டு வரேன்…” என தூக்கிக்கொண்டு மாடி ஏறினான்.
“டாக்டர் என்ன அது?…” துவாரகா கேட்க,
“தனியா இந்த வீட்டுக்கு வந்து ரெண்டுநாள் ஆகிடுச்சு. அவனோட ட்ராக் பேண்ட், டிஷர்ட்லையே மேடம் சுத்திட்டு இருக்கீங்க. வேற ட்ரெஸ் வேண்டாமா? அதுதான்…” அஷ்மிதா கேலியாக சொல்ல துவாரகாவின் முகம் சிவந்துவிட்டது.
“அப்பப்பா, இவ்வளவு நேரம் இல்லாத வெட்கம் இப்ப மட்டும் என்னவாம்?…” என சொல்ல,
“துவா…” என்றபடி வந்த அதிபன்,
“போய் குளிச்சுட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. நாம மூணுபேரும் லஞ்ச்க்கு வெளில போகலாம்…” என்றதும் தலையாட்டி வேகமாய் குளிக்க சென்றாள் துவாரகா. அவள் தலை மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அதிபன்.
“ம்க்கும்…” என அஷ்மிதா இரும வேகமாய் திரும்பியவன் அவள் கண்களில் தெரிந்த விஷமத்தில் அசடு வழிந்தான்.
“ஐயோ, போதும்டா. சத்தியமா கண்கொண்டு பார்க்க முடியலை உன் வெட்கத்த. இந்தா துடை. டன் கணக்குல வழியுது…” என கைக்குட்டையை நீட்ட அவளின் தலையில் கொட்டினான் அதிபன்.
“உனக்கு இது மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்டா என்னை எப்போ பாரு தலையில கொட்டிட்டே இருக்கறது. ஆனா அங்க செம்ம ரிவீட் போல. பத்மினி ஆன்ட்டி கால் பண்ணினாங்க எனக்கு…” என்றதுமே அன்றைய நாள் ஞாபகத்தில் இறுகிவிட அதை கண்ட அஷ்மிதா,
“அதை மறந்திட்டு சந்தோஷமா இரு அதி. உன் மனசுல இருக்கிறதை கேட்டுட்டல. இனி ப்ரீயா பீல் பண்ணு…”
“இல்ல அஷ்மி, நான் கேட்கவேண்டியது இன்னும் இருக்கு. அம்மா முகத்துக்காகவும், துவாவுக்காகவும் தான் இப்பவும் சும்மா விட்டேன். இனியும் அவங்க துவாவை துன்பப்படுத்த நினைக்க கூடாது. திரும்ப சீண்டினாங்க…” என கொந்தளிக்க,
“சரி, சரி. அதை விடு. ஆனாலும் கேடிடா நீ. தனிக்குடித்தனம் வரனும்னா உள்ளதை சொல்லிட்டு வரவேண்டியது தான. ஏகப்பட்ட ஸ்டன்ட் செஞ்சு பிச்சுக்கோன்னு தலைதெறிக்க மயக்கத்தில இருந்தவளை அள்ளிக்கிட்டு ஓடிவந்திருக்க…”
அஷ்மிதா சொல்லி சிரிக்கவும் மீண்டும் முகம் மென்மையானது அவனுக்கு. அவளின் சமயோசிதத்தை நினைத்து சிரித்தான்.
“ஆனாலும் ஒரு காபிக்கே இவ்வளவு அக்கபோரா இருக்கேடா? நம்ம நாக்கு வேற நீளம். திரும்பவும் சொல்றேன். சத்திய சோதனைடா. பத்மினி ஆன்ட்டியே சரணம்னு கட்சி மாறிடவேண்டியது தான்…”
சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல பக்கென்று சிரித்துவிட்டான் அதிரூபன்.
“அது, முகத்துல சிரிப்பில்லைனா சுத்தமா நல்லா இல்லடா நீ. இதுவரைக்கும் நடந்ததை விடு. இனிமே நீ சந்தோஷமா இருக்கனும். அதுதான் எனக்கு வேணும். நீ ஹேப்பியா இருந்தா தான் துவாவும் ஹேப்பியா இருப்பா. புரியுதா?…”
“ஹ்ம்ம். ஆனா அகிலா அத்தையை நினைச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு. அவங்க நினைவு வந்து என்ன செய்வாங்களோன்னு?…”
“என்ன செய்ய போறாங்க? நீ துவாவை, அகிலா ஆன்ட்டியை இக்கட்டான சூழ்நிலைல காப்பாத்தி இருக்க. இனியும் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம இருக்க என்னவெல்லாம் செய்யனுமோ எல்லாமே செஞ்சிருக்க. கண்டிப்பா அவங்க புரிஞ்சுப்பாங்க அதி…”
“ம்ஹூம் எனக்கு அந்த நம்பிக்கை இல்லை…”
“சரி இந்த மேரேஜை அவங்க ஏத்துக்கலைனா என்ன செய்யறதா இருக்க?…” என அஷ்மிதா கேட்டதும் பதில் சொல்லமுடியாமல் திணறினான்.
“சொல்லு அதி?…”
“இல்லை. என்ன செய்யபோறேன்னு எனக்கு தெரியலை. ஆனா என்னால துவாவை விட்டுக்கொடுக்க முடியாது…” இதை அத்தனை ஸ்திரமாய் அவன் சொல்ல,
“இந்த டயலாக் எல்லாம் இருக்கட்டும். இப்ப அவங்களை பத்தி யோசிக்காம முதல்ல உன் வாழ்க்கையை நீ பாரு. அவங்க எப்ப எழுந்துக்கறாங்களோ அன்னைக்கு மத்த பிரச்சனையை பத்தில் யோசிக்கலாம்…” என்றதற்கு அதி தலையசைக்க அதை குறும்பாய் பார்த்தவள்,
“இதை இப்பவே நினைச்சு நினைச்சு இருக்கிற மூளையும் சூடாகி காத்துல கரைஞ்சிடாமா. அப்பறம் அஷ்மின்னு என்னைத்தான் உயிரை வாங்குவ. அஷ்மி ஷெட்யூல் ரொம்ப பிஸியாகிடுச்சு. இங்க உள்ள ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணிட்டேன்…” அவள் சொல்லவும் அதிபன் சிரித்தபடி,
“அவ்வளவு சீக்கிரம் நீ என்னை விட்டுடுவ பாரு. பிஸியாம்?…”
“போதும் அதி. நீ உனக்குள்ளேயே நடத்தின போராட்டம். இத்தோட முடியட்டும். இனியாவது நீ நிம்மதியா இருக்கனும்டா. இன்னைக்கு துவா முகத்திலையும் ஒரு தெளிச்சி தெரியுது…” என்றதற்கு ஆமோதிப்பாய் அவன் தலையசைக்க,
“பேசாம நீ இங்கயே இருந்திரு அதி. அதுதான் உனக்கும் துவாவுக்கும் நல்லது. நிம்மதியா சந்தோஷமா இருப்பீங்க. ஒருவேளை அகிலா ஆன்ட்டி வந்தா கூட அவங்களோட இல்லாம நீங்க தனியா இருக்கிறதா பார்த்து கொஞ்சம் மனசு மாறலாம் இல்லையா?…” என்றதற்கு யோசனையாக அவன் பார்க்க,
“ரொம்பத்தான் யோசிக்கிறடா நீ. அந்த வீட்ல புத்தனும், சித்தனுமா இருக்காங்க. அந்த பெரிய தியாகிங்களை விட்டுட்டு வர இவ்வளவு யோசிக்கிற. இது எல்லாம் சரிப்படாது. அந்தம்மா வந்து உன்னை லெப்ட் அன்ட் ரைட் வாங்கனும். அப்பத்தான் அடங்கி இந்த வீட்ல உட்காருவ…”
அஷ்மிதாவிற்கு மீண்டும் அதிபன் துவாரகாவுடன் அந்த வீட்டிற்கு செல்வதில் துளியும் விருப்பமில்லை.
அதேநேரம் அதிபனை இப்படியே அவன் வீட்டினர் விட்டுவிடுவார்கள் என்று நம்பிக்கை இல்லை.
எதுவோ ஒன்று, இங்கிருக்கும் வரை அவர்களின் தலையீடு இன்றி வாழ்க்கையை தொடங்க வேண்டும் இவர்கள் என நினைத்தாள்.
“ஸாரிடா அஷ்மி. அன்னைக்கே நீ இங்க வரேன்னு சொன்ன. நான் தான்…”
“பார்ரா குடும்ப இஸ்திரி ஆனதும் ஸார் பார்மாலிட்டீஸ் பத்தி எல்லாம் பேசறார். போடா, போடா. எனக்கு புரியாதா உன்னை. ஸாரி பூரின்ன பார்த்துக்கோ…”
“நேத்துவரை துவா ரொம்ப அப்செட். அவளா தெளிந்து வரனும்னு தான் உன்னை வரவேண்டாம்னு சொன்னேன். நீ எதுவும் நினைக்கலைல…” மீண்டும் பாடிய பாட்டையே திருப்பி பாட,
“அட ராமா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா சாமி…” என அஷ்மி கத்த,
“என்ன இது கொசுத்தொல்லை, அது இதுன்னு?…” அதிபன் கேட்க,
“நம்ம குரு ஒருத்தவங்க இந்த டயலாக்கை தான் அடிக்கடி சொல்லுவாங்க தம்பி. அதுதான் நாமளும் ட்ரை பண்ணலாம்னு…”
“அது யாரு உன் குரு?…” என்க,
“முடிஞ்சா கண்டுபிடி பார்க்கலாம்…” என கண்ணடித்து சொல்ல தலையில் அடித்துக்கொண்டான்.