மின்னல் அதனின் மகனோ – 14 (1)

மின்னல் – 14

              துவாரகா கிட்சனுக்கு சென்று வெகுநேரம் சத்தமில்லாமல் போக இன்னும் என்னதான் செய்கிறாள் இவள் என பார்ப்பதற்கு அதிரூபன்.

‘ஒரு காபிக்கு எவ்வளவு நேரம் இந்த பொண்ணுக்கு?’ என்றபடி உள்ளே வர திகைத்துபோனான்.

அங்கே மூன்று பால் பாக்கெட்டுகள் பிரித்து கிடக்க காபி பவுடர் கீழே சிதறிக்கிடக்க வாயில் விரலை வைத்து கடித்தபடி யோசனையோடு அடுப்பில் இருந்த பாத்திரத்தை பார்த்தபடி நின்றாள்.

அவனின் ட்ராக் பேண்ட், டிஷர்ட் சகிதமாக கூந்தலை தூக்கி கொண்டையிட்டு அவள் நின்ற கோலம் உதடுகளில் கள்ளச்சிரிப்பை உண்டு பண்ணியது. அவளறியாமல் ரசித்தவண்ணம் நின்றான் சில நிமிடங்கள்.

“மை க்யூட்டி வைஃப்…” என சில்லாகித்தான்.

ஆகிற்று இரண்டு நாட்கள் இந்த வீட்டிற்கு வந்து. இது அதிரூபனின் பேரில் அவனே டிஸைன் செய்து கட்டி வைத்திருக்கும் வீடு. வீடு மொத்தமும் அவனின் ரசனைகள் கொட்டிக்கிடக்கும்.

இன்று தன் ஒட்டுமொத்த ரசனைகளின் நடுவே தன் மனதிற்கு பிடித்த மனைவி நின்றுகொண்டிருக்கையில் நெஞ்சாக்கூட்டிற்குள் சிலுசிலுவென சாரல் அடிப்பதை போல அத்தனை குளுமையாய் பார்க்க ரம்யமாய் இருந்தது.

வந்த முதல்நாள் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல், சொல்ல வருவது என்னவென்றும் கேட்காமல், இருப்பது வேறு வீடு என்பதை அறியாமல் அழுது கரைந்தவள் இரண்டாம் நாள் தான் கொஞ்சம் சுற்றிலும் பார்த்தாள்.

இருக்கும் இடத்தின் வித்தியாசம் ஆள் அரவமற்று தங்கள் பேச்சு சத்தங்கள் மட்டுமிங்கே என உணர்ந்த பின்புதான் ஓரிரண்டு வார்த்தைகள் அவனிடம் பேசி இன்று மொத்தமாய் முகம் தெளிந்து தைரியமாய் அவளாகவே எழுந்து கிட்சனுக்கு வந்திருக்கிறாள்.

இரண்டு நாட்கள் தவித்த தவிப்பு நீங்கி இன்று அவளே காபி போட வந்து இவ்வளவு நேரம் என்ன செய்கிறாளோ என பார்க்க வந்து அப்படியே நின்றவன் அவள் மீண்டும் ஒரு பாக்கெட்டை கட் செய்து பாத்திரத்தில் ஊற்ற,

‘இப்பத்தான் காபி போட ஆரம்பிக்கிறாளோ? இவ்வளவு நேரம் பாத்திரத்தையா சூடு பண்ணிட்டு இருந்தா? அப்ப கட் செஞ்சிருந்த பாக்கெட் பால் எல்லாம்?’ என குழம்பிப்போனவன்,

“துவா என்னடா பன்ற?…” என வேகமாய் உள்ளே வந்துவிட அவனின் திடீர் குரலில் பதறிப்போனவள் கண்ணை மூடிக்கொண்டு காதை பொத்தி அவனின் மார்பில் சாய்ந்து,

“மாமா, திட்டிடாதீங்க மாமா….” என தன் வழக்கமான ஜபத்தை ஆரம்பிக்க அவனிதழ்களில் புன்னகை பூத்தது.

“சமத்து. ஆரம்பிக்கிறதுக்கு முன்னவே சரண்டர். சரி, திட்டமாட்டேன். என்னன்னே தெரியாம ஏன் திட்டபோறேன்? நிமிர்ந்துக்கோ….” என சொல்லி நிமிர்த்தியவன்,

“என்ன பண்ணி வச்சிருக்க? எதுக்கு இத்தனை பால் பாக்கெட்? இவ்வளவு பெரிய பாத்திரம்? காபி பவுடர் வேற இப்படி கொட்டிக்கிடக்கு?…” அடுத்தடுத்து கேட்க பேந்த பேந்த விழித்தாள்.

பதில் சொல்வாளென பார்க்க அவளோ பாத்திரத்தை பார்த்தபடி நிற்க சமையல் மேடையில் இருந்த காலி பால் பாக்கெட்களை தூக்கி குப்பை தொட்டியில் போட்டவன் மேடையையும் சுத்தம் செய்துவிட்டு அவளை தூக்கி அதில் அமர்த்தினான்.

பார்த்திரத்தை எட்டி பார்க்க அதிலிருந்த காபி கலரே அத்தனை கர்ண கொடூரமாய் இருக்க வேகமாய் அடுப்பை அணைத்துவிட்டு அந்த பாத்திரத்தையும் தூக்கி சிங்க்கில் போட்டுவிட்டு கையை கழுவி முடித்து திரும்பியவன்,

“இப்ப சொல்லு. என்ன பண்ணின?…” சிரித்த முகமாகவே கேட்க அதில் தைரியம் வரப்பெற்றவள்,

“எனக்கு காபி போட தெரியாது மாமா…” தன் விரல்களை பிரித்தபடி மெதுவாய் சொல்ல,

“ஹ்ம்ம் தென்?…” அவனும் கன்னத்தில் கைவைத்து கையை மேடையில் ஊன்றிக்கொண்டு கதை கேட்க ஆரம்பித்தான்.

“அம்மா போடறதை பார்த்திருக்கேன். ஆனா அளவு தெரியாது. அம்மா என்னை கிட்சன்லையே விடமாட்டாங்க…”

“நான் அந்த கதையை கேட்கலை. இப்ப என்ன பண்ணுனீங்க முயல்க்குட்டி?…”

“முதல்ல பால் ஊத்தினேன். பொங்கினதும் காபி பவுடர் போட்டேன். அது கூடிடுச்சு. இன்னும் கொஞ்சம் பால் ஊத்தினேன். கரெக்டா வந்துச்சு. சுகர் போட்டேனா அது கூடிருச்சு. திரும்ப பால், திரும்ப காபி பவுடர், திரும்ப சுகர்…” என்று கணக்கு சொல்ல வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தவன்,

“போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது. சோ நாலு பாக்கெட் பால் காலி, சுகர் காலி, காபி பவுடரும் காலி. இல்லையா?…” என்று சிரிக்க துவாரகாவின் முகமே சுருங்கிவிட்டது.

“ஓகே ஓகே, முகத்தை தூக்கி வச்சுக்காத. காபி போடறது ஒன்னும் அவ்வளோ கஷ்டம் இல்லை. நான் சொல்லித்தரேன்…” என வேறு ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து ப்ரிட்ஜில் இருந்த இன்னொரு பாக்கெட்டை காய்ச்ச ஆரம்பித்தான்.

எத்தனை கப்பிற்கு எத்தனை ஸ்பூன் என காபிக்கும், சர்க்கரைக்கும் அளவை சொல்லியவன் தங்கள் இருவருக்கும் சேர்த்து காபி கலந்து அவளுக்கும் கொடுத்து தானும் குடிக்க ஆரம்பித்தான்.

“ஹ்ம்ம் நாட் பேட்…” என தனக்கு தானே சொல்லிக்கொள்ள,

“ஆமா, எங்கம்மா இதை விட சூப்பரா போடுவாங்க. இது சுமார் தான்…” என இயல்பாய் சொல்லி குடிக்க,

“அடிங் ராஸ்கல், போனா போகுதேன்னு போட்டு குடுத்தா கிண்டலா பன்ற?…” என அவளின் காதை பிடித்து திருக அவளின் கண்கள் கலங்கிப்போயிற்று.

“ப்ராமிஸா நான் உங்களை குறையா சொல்லலை மாமா. நம்புங்க. கோவப்படாதீங்க…” என குரலுடைந்து சொல்ல,

“அடடா, துவா நான் உன்னோட விளையாடத்தான் செஞ்சேன். நீ கிண்டலா பேசனும். அப்பப்ப சீண்டி விளையாடனும். எனக்கு அதுதான்டா இஷ்டம். கணவன் மனைவிக்குள்ள இது எல்லாமே சகஜமான ஒன்னு. நீ இதுக்கு போய் அழலாமா? இப்படி ஒன்னொன்னுத்துக்கும் பயந்துட்டா இருப்ப?…”

அவளின் கன்னம் தட்டி பொறுமையாக சொன்னவனின் கையை பிடித்துக்கொண்டு தலையாட்டியவள்,

“அப்ப நிஜமாவே நீங்க கோபப்படலையா?…”

“இல்லைடா…” காபியை கீழே வைத்துவிட்டு அவளின் கன்னம் பற்றி தலையில் முட்டியவன்,

“இப்போன்னு இல்லை எப்பவுமே துவா மேல எனக்கு கோவமே வராது. ப்ராமிஸ்…” என சொல்லி சிரிக்க அவனை கட்டிக்கொண்டாள் துவாரகா.

“இன்னும் மேடம் எவ்வளவு நேரம் இப்படியே இருப்பீங்க? ஹாலுக்கு போவோமா?…” என கேட்க அவனை விலகியவள் மேடையை விட்டு இறங்கிக்கொள்ள,

“காபியை குடிச்சு முடிச்சுட்டு போகலாம்…” என்று நிறுத்தி கப்பை அவளின் கையில் கொடுக்க,

“விடிஞ்சிடும். எனக்கு வேற வேலையில்லையா? காலாங்காத்தால எதையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்குது. சத்திய சோதனை அஷ்மி…” என கிட்சன் வாசலில் நின்று கண்ணை மூடிக்கொண்டு அஷ்மிதா கத்த,

“ஹைய் டாக்டர்…” என துவாரகா சந்தோஷிக்க,

“உன்னை யாரு கிட்சன் வரைக்கும் வர சொன்னா? ஆள் இல்லைனா ஹால்ல வெய்ட் பண்ணவேண்டியது தான?…” அதிபன் கேட்டுக்கொண்டே அஷ்மிதாவின் தலையில் குட்ட,

“ஏன்டா சொல்லமாட்ட? உன் பொண்டாட்டியை பாரு சின்னபிள்ளை மிட்டாயை பார்த்தா குதூகலிக்கிற மாதிரி என்னை பார்த்ததும் குதிக்கிறா. நீ சலிச்சுக்கற. இதுக்கு ஏன் என்னை வர சொன்ன?…”

“ஏன், என் துவா சின்னப்பிள்ளை தானே? உனக்கேன் இவ்வளோ காண்டு?. உன்னை பார்த்தா துவா கொஞ்சம் எனர்ஜியா இருக்கா. அதுக்கு தான் வர சொன்னேன்…” அதிபனும் கேட்க,

“பொழைச்சுப்ப. ஆனா எனக்கு தேவைதான்டா. குரங்கை காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டற மாதிரி அப்பப்ப இவளுக்கு என்னை காமிச்சு எனர்ஜி ஏத்தறயாக்கும்? இதை நான் என் ரசிக மக்கள்க்கிட்டையே நியாயத்தை கேட்கறேன்…” என சொல்லி ஜன்னலுக்கு வெளியே பார்த்து,

“அஷ்மியை அறிந்த மக்களே எனக்காக இவனிடம் நியாயம் கேளுங்கள். கேட்கும் கேள்வியில் தாரைதப்பட்டைகள் கிழிந்து தொங்கவேண்டாமா?…” என கூச்சல் போட,

“டாக்டர் என்னாச்சு உங்களுக்கு?…” எதுவும் புரியாமல் துவாரகா சந்தேகமாய் கேட்க நொந்துகொண்டாள் அஷ்மிதா.

error: Content is protected !!