மின்னல் அதனின் மகனோ – 13 (4)

“ஸாரி அண்ணா. இது எங்களுக்கும் தெரியாது. இனி நாங்க பார்த்துப்போம்…” அர்னவ் சொல்ல விஷாலும் தலையாட்டினான்.

“அடேங்கப்பா, நேத்து வரை ஸார்ங்க இதே மாதிரி தானே இருந்தீங்க? இன்னைக்கு என்னவாம்?…” எள்ளலாய் அதிபன் கேட்க,

“நேத்து நேத்தோட முடிஞ்சு போச்சு அண்ணா. நாங்களும் ஒன்னும் கெட்டவங்க கிடையாது. அண்ணி விஷயத்துல தான் இப்படி. இனியும் அப்படி இருக்க மாட்டோம் அண்ணா. வேற யார்க்கிட்டயும் இப்படி நடந்துக்கிட்டதும் இல்லை. நம்ம குடும்பத்தில் எங்களை அப்படி வளர்க்கவும் இல்லை…” விஷால் சொல்ல வாய்விட்டு சிரித்த அதிபன் கைகளை தட்டிக்கொண்டே,

“வரேவாவ். இந்த வளர்ப்பு துவர்ப்பு உவர்ப்பு எல்லாம் பத்துநாளைக்கு முன்னால எங்க போச்சுங்க மிஸ்டர் ப்ரதர்ஸ்? யாருக்காச்சும் தானமா குடுத்துட்டீங்களா? இல்லை அன்னைக்கு மட்டும் உங்களை வேற யாராவது வளர்த்தாங்களா?…”

“அண்ணா?…” நடுங்கினான் விஷால்.

“அடி செருப்பால. ராஸ்கல். நான் கேட்கலைனா கேட்காமலே விட்டுடுவேன்னு நினைச்சியா? அகிலாத்தை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு என்ன பண்ணன்னு தெரியாம வேற வழி இல்லாம என்னை பார்க்க வந்த பொண்ணை குடிக்கிற தண்ணில எதையோ கலந்து குடுத்து இங்க இருந்து பெங்களூர் கடத்திட்டு போனதுக்கு பேர் இந்த குடும்பத்து வளர்ப்பா?…”

“அவளை அடிச்சு உதைச்சு காயப்படுத்தி தப்பான இடத்துல வித்துடுவோம்னு சொன்னது தான் உங்க வளர்ப்பா? சொல்லுங்கடா? அவளை எப்படி பார்த்தேன் தெரியுமாடா? என்னை பார்த்ததும் எவ்வளவு பயந்தா தெரியுமா? அடிக்காதீங்கன்னு போய்டறேன்னு சொல்லி சொல்லி அலறுனாடா…” என்றவன் பத்மினியிடம் திரும்பி மண்டியிட்டு அமர்ந்து,

“இவ நிம்மதியா தூங்க கூட இல்லைம்மா. தூக்கத்துல கூட விஷால், அர்னவ்ன்னு அலறி துடிச்சு எழுந்துடுவா. நானும் அஷ்மியும் இவளை காப்பாத்த எத்தனை போராடினோம் தெரியுமா?…” என்றவன் விஷாலிடம் திரும்பி,

“உன்கிட்ட ஏன் இத்தனை நாள் கேட்கலைன்னு நினைக்கிற இல்லையா? அதுவும் இவளுக்காக தான்டா. நான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கிட்டா இந்த விஷயம் இந்த பெரியமனுஷனுக்கு போகும். அதுவும் நான் தான் காப்பாத்தினேன்னு தெரிஞ்சா இவளை இந்நேரம் கொன்னு புதைச்சிருக்க மாட்டீங்க எல்லாரும் சேர்ந்து…”

“இல்லைண்ணா இவங்க மாமாவை பார்க்க வந்ததா தான் சொன்னாங்க. அதான்…” என சொல்லிய நொடி விஷாலின் டிஷர்ட்டை கொத்தாக பிடித்துவிட்டான்.

“சொன்னா? சொன்னா என்னடா தப்பு? அவ அப்பாவை பார்க்கனும்னு சொன்னா உடனே கடத்திடுவியோ? அவளோட அப்பாவை தான அப்பான்னு சொல்றா? இல்லைன்னு இந்த ஆள் சொல்லிடுவாரா? எங்க என் முன்னால சொல்ல சொல்லு பார்ப்போம்…”

“அதி…” வைத்தியநாதன் அலற,

“மூச். உங்களுக்கு துவா விஷயத்துல பேச தகுதியே இல்லை. இத்தனை நாள் நான் ஒன்னும் உங்களுக்கு மரியாதை குடுத்து அமைதியா போகலை. உங்கட்ட பேசி என் மரியாதையை குறைச்சிட கூடாதேன்னு தான் ஒதுங்கி போனேன். பேச வச்சிடாதீங்க என்னை…” என சொல்லி விஷாலை பார்த்தவன்,

“ஹ்ம்ம் சொல்லு, அப்ப அவ தேடி வந்தா இப்படித்தான் பண்ணுவ. இல்லையா?. இதுல ஒன்னு சந்தோஷம்டா. அடிச்சு காயப்படுத்தினதோட விட்டீங்க. இல்லைனா இந்நேரம் அவ உயிரை விட்டிருப்பா. என்னையும் நீங்க இழந்திருப்பீங்க…”

“அண்ணா நான் அப்படிப்பட்டவன் இல்லைண்ணா, ப்ளீஸ். அந்தம்மா மேல இருந்து கோபம். இவங்கட்ட மட்டும் தான் நான் இவ்வளவு மோசமா நடந்துட்டேன். மன்னிச்சிடுங்க அண்ணா…” என கதறிக்கொண்டு அதிபனின் காலில் வீழ்ந்துவிட்டான் விஷால்.

“பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் மொத்தமும் விஷம் தான்டா. ஒரு துளிதானேன்னு விழுந்த இடத்திலேயே அந்தவிஷம் பரவாம இருக்குமா? சொல்லு…”

“உனக்கொன்னு தெரியுமா? துவாவுக்கு ஏதாவது அவசரம்னா சமாளிக்க முடியாத விஷயம்னா என்ன உதவி வேணும்னாலும் என்னை தேடி வரனும்னு நான் தான் அவள்ட்ட சொல்லியிருந்தேன். என்னை பார்க்கத்தான் அவ வந்திருந்தா. என்னோட போன் நம்பரை மிஸ் பண்ணிட்டதால நான் வருவேன்னு வாசல்ல வெய்ட் பண்ணிட்டு இருந்தா. இப்டி பண்ணிட்டீங்களே?…”

மீண்டும் கீழே மண்டியிட்டு அமர்ந்தவன் துவாவையே அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அதி, இது எதுவுமே எங்களுக்கு தெரியாதுப்பா. தெரிஞ்சாலும் எங்களால என்ன பண்ணிட முடியும்? இவங்களுக்கு மத்தியில எத்தனை கஷ்டம் இவளுக்கு?…”

மருமகளின் தலையை தடவியபடி கண்ணீரோடு பத்மினி பேச சந்தியாவும் ஸ்வேதாவும் இருபுறமும் துவாரகாவையே பார்த்திருந்தனர்.

“இனி இவளை நல்லவிதமா பார்த்துக்கனும். அவ்வளோ தான். துவாவை மாடிக்கு தூக்கிட்டு போப்பா…” என சொல்ல இல்லை என மறுத்து தலையாட்டியவன்,

“நான் இருக்கிற மனநிலைல என்னால இங்க இருக்க முடியாதும்மா. இவளை வச்சிட்டு வேற இத்தனை விஷயங்களை பேசிட்டேன். பழசை கீறிவிட்ட மாதிரி ஆகிடுச்சு. எழுந்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியலை…”

“அதுக்கு என்னப்பா செய்யப்போற? அதுதான் பேசிட்டியே…”

“பேசினது நூத்துல ஒன்னு கூட இல்லைமா. இன்னும் பேசனும். பேசுவேன். இப்போவாவது பேசினேனே. இவளை நாள் முழுக்க ஸ்டேஷன்ல வச்ச அன்னைக்கு நான் இங்க இருந்திருந்தா இதைவிட ரொம்ப மோசமான அதிபனை பார்த்திருப்பாங்க…” என்றவன் துவாரகாவை கைளில் ஏந்திக்கொண்டான் சடுதியில்.

“நாங்க கிளம்பறோம்மா. ப்ளீஸ் தடுக்காதீங்க. எப்போ வருவேன்னும் கேட்காதீங்க. கிளம்பறோம்…” என சொல்லி மடமடவென வாசலுக்கு விரைந்து காரில் துவாரகாவை அமர்த்தி தானும் அமர்ந்து காரை விருட்டென கிளப்பிக்கொண்டு சென்றான்.

அவன் சென்று அரைமணிநேரம் ஆகியும் யாரும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. மெதுவாய் எழுந்த பத்மினி விஷாலின் முன் வந்து நின்றார்.

ரத்தினசாமியை திரும்பி பார்த்துவிட்டு விஷால் அர்னவ் இருவரின் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தவர் அழுதுகொண்டே பூஜை அறையில் தஞ்சம் அடைந்தார்.

அன்னபூரணி சந்தோஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு நடைபிணமென வைத்தியநாதனை மறந்து தன்னறைக்கு சென்றுவிட சந்தியா பத்மினியை சமாதானம் செய்ய போய்விட,

“நீயெல்லாம் அண்ணனாடா? என்கிட்ட பேசாத…” என ஸ்வேதா விஷால், அர்னவ், சந்தோஷ் மூவரையும் கை வலிக்கும் அளவுக்கு அடித்துவிட்டு அழுதுகொண்டே ஓடிவிட ரத்தினசாமி சிலையாய் அனைத்தையும் பார்த்தபடி இருந்தார்.

இத்தனை வருடங்கள் செய்த அராஜகங்கள் மொத்தமும் மறுவுருவெடுத்து தங்களின் பாவச்செயல்களை பட்டியலிட ஆரம்பித்துவிட்டதை உணர ஆரம்பித்தார்.

அகிலாவின் கண்ணீருக்கு உயிர் கிடைத்துவிட்டதென உணர ஆரம்பித்தார்.

ஆம், மருத்துவமனையில் அகிலாவின் உணர்வுகளுக்கும் உயிர் வந்துவிட்டது.  மூடியிருந்த இமைகளுக்குள் அவரின் கண்மணிகள் உருள துவங்கியது.

error: Content is protected !!