“செத்தவளை இன்னும் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு கட்டிக்கிட்டவளோட கமுக்கமா வாழற வாழ்க்கை என்னை பொறுத்தவரை ரொம்ப ரொம்ப…” என சொல்ல வந்தவன் உதட்டை கடித்துக்கொண்டு வார்த்தைகளை அடக்கினான்.
“இவ செத்தாலும் சரி, என்னை விட்டு பிரிஞ்சாலும் சரி. என் நினைப்புல இவ மட்டும் தான் என்னைக்கும் இருப்பா. நான் மட்டும் இல்லை. இவ கூடத்தான். இதை என்னால உறுதியா சொல்ல முடியும். பெத்தவங்க நீங்க சொல்றீங்கன்னு காதலிச்ச பொண்ணை நட்டாத்துல விட்டுட்டு வந்திருவேனா?…”
“இல்லை உயிருக்குயிரா காதலிச்சு கஷ்டப்பட்டு கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்தவளை அவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு போக விடுவேனா?. அந்தளவுக்கு இந்த அதிபன் ஈனா வானா கிடையாதுப்பா…”
“இதுவரைக்கும் நீங்க செஞ்சதுக்கெல்லாம் தண்டனை கிடைக்காம இருக்கலாம். ஆனா இனியும் அப்படி இருக்க முடியாது. இதுவரை நீங்க செஞ்ச பாவங்களை கண்டும் காணாம போனதுக்கு காரணம் வேற…”
“நீங்க செஞ்சதுக்கு எல்லாம் மறுப்பு தெரிவிக்காம போனது துவாரகா தான் காரணம். என் மனசுல துவாரகா இருக்கிறதை நீங்க தெரிஞ்சு அவளுக்கும்,அகிலா அத்தைக்கும் உங்களால ஆபத்து வந்திடுமோன்னு பயந்தேன். இவ என் மனைவியா என் வாழ்க்கைல வரனும். அதுக்காக தான் பொறுமையா போனேன்…”
“போனேன்னா உங்க பார்வைக்கு அப்படி போனேன். ஆனா நான் தலையெடுத்த பின்னால என்னாலான உதவியை செய்ய நினைச்சேன்…”
இவன் தனக்காக இத்தனை மெனக்கெட்டிருக்கிறானா என ஆச்சர்யப்பட்டுப்போய் துவாரகா பார்க்க மற்றவர்களோ எத்தனை தூரம் தங்களிடம் தன் மனம் வெளிப்பட்டுவிடாமல் இருக்க பாடுபட்டிருக்கிறான் என பார்த்தனர்.
“இப்படி இவங்க வாழறது பார்க்க பிடிக்காம தான் அத்தைக்கு தெரியாமலேயே அவங்களுக்கு ஆஸ்திரேலியால ஒரு ஜாப்க்கு ஏற்பாடு செஞ்சிருந்தேன். போகவிட்டீங்களா நீங்க?…” என கூர்மையாக கேட்க ரத்தினசாமிக்குள் எரிமலை குழம்பே வெடித்து சிதறியது.
“அதிபா?…” எழுந்தேவிட்டார்.
“எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களாப்பா? இந்தளவுக்கா நீங்க இறங்கி போவீங்க? உங்களை நினைச்சு வெட்கப்பட்ட நாள் அது. ஆனா என் துரதிஷ்டமோ உங்க அதிர்ஷ்டமோ இது எனக்கு அன்னைக்கே தெரியாம போச்சு…”
தங்களை ஆஸ்திரேலியா அனுப்ப ஏற்பாடு செய்தது அதிபனா என அழுகையுடன் பார்த்தாள் துவாரகா.
“ஏன் மாமா இப்படி பண்ணுனீங்க? நீங்க மட்டும் இந்த ஏற்பாட்டை பண்ணாம இருந்தா நாங்க, நான். அய்யோ…” என அவனின் சட்டையை கொத்தாக பற்றி கேள்வி கேட்டு அழ,
“அப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கலைடா துவா. ஸாரி. ஸாரிடா…” என எத்தனை சமாதானம் செய்தும் அவள் அவனை விடவே இல்லை.
“எப்படி பார்த்தாங்க தெரியுமா? என்னால அந்த இடத்தை விட்டு எழுந்துக்கவே முடியலை. அந்த இடமே ரத்தம். ராத்திரி முழுக்க எத்தனை கேவலமா இருந்ததுன்னு தெரியுமா?…” என வெடித்து சிதற இது விஷாலுக்குமே தெரியாத ஒன்று.
தன் பெரியப்பாவையும், துவாரகாவையும், அவளை ஆசுவாசப்படுத்த முயலும் அண்ணனையும் பார்த்தவனுக்கு துவாரகாவின் துடிப்பும், தவிப்பும் அத்தனை வலியாக இருந்தது.
சந்தோஷ் சொல்லியது போல ரத்தினசாமியின் எதிரியாக, அகிலாவின் மகளாக பார்த்தோமே தவிர அப்பாவி பெண்ணாக பார்க்காமல் போய்விட்டோமே? என வருந்தினான். அவளின் அழுகை ஓயும் போல தெரியவில்லை.
“துவா ப்ளீஸ். ஸ்டாப் இட்…” என அதட்ட வாயை கையால் மூடிகொண்டவள் கண்களில் அத்தனை ஏமாற்றமும் வலியும்.
“சொல்லுங்கப்பா. ஏன் அப்படி செஞ்சீங்க? உங்கட்ட இருந்து நிம்மதியா இந்த நாட்டை விட்டே போய்ருப்பாங்க. எதுக்காக அகிலா அத்தையை போலியா அரஸ்ட் பண்ண வச்சீங்க? லாக்கப்ல யாரையும் கான்டேக்ட் பண்ண விடாம சாப்பாடு தண்ணி குடுக்காம பெத்த பொண்ண அதுவும் வயசு வந்த பொண்ண பார்க்கவிடாம விரட்டியடிக்க வச்சீங்க?…”
“பொண்ணுக்கு என்னாச்சோன்னு தவிச்சு அவளை பார்க்கனும்னு சொன்னவங்களை பார்க்கவிடாம பண்ணினீங்க. பயத்துல எங்க போறதுன்னு தெரியாம உதவி கேட்டு இங்க இந்த வீட்டுக்கு உங்க தங்கச்சி புருஷனை பார்க்க வந்த பொண்ணை அடிச்சு மிரட்டி விரட்டியிருக்கீங்க…”
“உங்களுக்கு தெரியுமா? ராத்திரி பூரா ஸ்டேஷன் கதவு பக்கத்திலயே உட்கார்ந்திருந்த பொண்ணு மாதவிலக்காகி அதை யார்ட்ட சொல்லன்னு தெரியாம பயத்துல அப்படியே உறைஞ்சு போய் இருந்திருக்கா. இந்த நிலமைல அந்த இடத்துல நம்ம ஸ்வேதா இருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க ப்பா? நீங்கல்லாம் மனுஷனா? ச்சை. உங்களை அப்பான்னு சொல்லிக்க அன்னைக்கு அசிங்கப்பட்டேன். ஒரு தாயா அகிலா அத்தை எவ்வளவு வேதனையை அனுபவிச்சி இருப்பாங்க…”
அவன் சொல்ல சொல்ல அன்னபூரணிக்கு மயக்கமே வரும் போல ஆனது. தன் அண்ணனா இப்படி என்று பேச நா எழாமல் கல்லாய் சமைந்துபோனார்.
“ஐயோ என் பொண்ணு இப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறா? இது கூட எனக்கு தெரியாம போச்சே…” என வைத்தியநாதன் தலையில் அடித்துக்கொண்டு அழ,
“வாயை மூடுங்க மிஸ்டர். பொண்ணு மண்ணுன்னு ஏதாவது பேசினீங்க நான் மனுஷனா இருக்க மாட்டேன். காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்ட பொண்ணை நட்டாத்தில விட்டுட்டு வீட்ல உள்ளவங்க பேச்சை கேட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிட்ட உங்களுக்கெல்லாம் இவளை சொந்தம் கொண்டாடற அருகதை இல்லை…”
அதிபனின் ஆக்ரோஷத்தில் மௌனமாய் கண்ணீர் வடித்த வைத்தியநாதன் ரத்தினசாமியை கோபமாய் முறைத்தார்.
“அதிபா அது பயம் காட்டத்தான். அவ உன் மாமாவை பார்க்கத்தான் சென்னை வந்திருக்கான்னு நினைச்சு. மறுநாளே ரிலீஸ் பண்ண வச்சுட்டேன். ஆனாலும் ஸ்டேஷன்ல இந்த பொண்ணுக்கிட்ட, அவ அம்மாக்கிட்ட தப்பா நடந்துக்க கூடாதுன்னு சொல்லித்தான்…”
“அடச்சீ, நிறுத்துங்க. ஸ்டேஷன்ல தூக்கி வைப்பாராம். சொட்டு தண்ணி குடுக்கமாட்டாராம். உதவின்னு கேட்டு வந்த பொண்ணை உன் அம்மாவை கண்காணாத தேசத்துல வித்துடுவேன், கொன்னுடுவேன்னு சின்ன பொண்ணுட்ட மிரட்டுவாராம். ஆனாலும் பாதுகாப்பா வச்சிருந்தாராம்…”
“இதுக்கு அவங்களை அந்த நிமிஷமே கொன்னு போட்டிருக்கலாமே? இன்னைக்கு வரை இந்த நரகத்தை அனுபவிக்காம போய்ருப்பாங்களே. வயசு வந்த பொண்ணு தன்னோட பீரியட்ஸ் டைம்ல எப்படி இருக்கனும். அதுவும் ரொம்ப சின்ன பொண்ணு. பசில சாப்பிடாம தண்ணி கூட குடிக்காம எத்தனை நரகம் அது…”
“நீங்க அனுபவிப்பீங்களா அந்த சித்ரவதையை?…”
“இல்லை உங்க வீட்டு பொண்ணை அனுபவிக்க விடுவீங்களா? இந்த ஸ்வேதா லேசா தலைவலினாலே எப்படி துடிச்சு போய்டறீங்க? மறுநாள் லாக்கப்ல இருந்து பொண்ணை பார்க்க பதறி வர அம்மா கதவோரதுல உடம்பை குறுக்கி அந்த நேரத்து வலியில, அரைமயக்கத்துல தன் பொண்ணை தூக்கும் போது அவள் இருந்த இடம், அவளோட ட்ரெஸ் எல்லாம். ச்சே எத்தனை வலி?…”
தன் மகன் அழுது இதுநாள் வரை பார்த்திராத ரத்தினசாமி இன்று பார்த்தார். அதிபனின் கண்களில் கண்ணீர். குடும்பமே இதை கேட்டு ஸ்தம்பித்து நின்றது.
அதுவரை பேசிக்கொண்டிருந்தவன் தோளில் தொய்ந்து போய் மயங்கி விழுந்தாள் துவாரகா.
“துவா, துவா, இங்க பாருடா…” என பதறி அவளை எழுப்ப வேகமாய் அவளை மடிதாங்கிக்கொண்டனர் சந்தியாவும், பத்மினியும் அழுதபடி.
“சொல்லு ஸ்வேதா? இத்தனை அரக்கத்தனம் பண்ணினவங்க வீட்ல எப்படி என் மனைவி பயமில்லாம இயல்பா இருப்பான்னு சொல்ற? நீ இருப்பியாம்மா? நினைச்சுப்பாரு. உன்னை விட துவாக்கு பெருசா வயசு வித்தியாசம் இல்லை. ஆனா அவ வயசுக்கு எதையெல்லாம் அனுபவிக்க கூடாதோ அத்தனையையும் அனுபவிச்சுட்டா…”
“இதெல்லாம் ஏன்னு தெரியுமா? அப்பான்னு ஒருத்தர் சரியில்லாததால. பொண்ணுக்கு தகப்பனோட அரவணைப்பு, பாதுகாப்பு ரொம்பவே முக்கியம். அது துவாக்கு இல்லை. அதனால உண்டானது இதெல்லாம். சொல்லு ஸ்வேதா, நான் எது தப்பா கேட்டுட்டேனா?…” குரல் தழுதழுக்க கேட்க,
“என்னை மன்னிச்சிடுங்க அண்ணா. ஸாரி. ஸாரி. எனக்கு இது எதுவுமே தெரியாது. அண்ணியோட அம்மாவை தப்பா தான் கேள்விப்பட்டிருக்கேன் மாமா மூலமா. அந்த வெறுப்பு இவங்க மேலையும். ஸாரி அண்ணா….” என ஓடி வந்து அவன் தோளில் சாய்ந்து அழ அவளை ஆறுதல் படுத்தினான்.