அடுத்து தன் தம்பிகளின் புறம் திரும்ப துவாரகாவிற்கு தெரிந்தது இனி அவர்களை சொல்ல போகிறான் என்று.
“இவன், விஷால், அர்னவ், சந்தோஷ். என்னோட ப்ரதர்ஸ். எனக்காக என்னவேணும்னாலும் செய்வாங்க. அவ்வளோ பாசம்…” குத்தலாய் சொல்லி,
“விஷால், இவங்க யார்ன்னு சொல்லு…” அவனை நேரடியாக கேட்டுவிட்டான்.
தன் அண்ணன் தன்னிடம் நேருக்கு நேர் பேசிவிட்டாலும் அவன் கேட்டதை மனமுவந்து சொல்லிவிட கூசியவனாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தான் விஷால்.
“அர்னவ் நீ சொல்லு…” என்க,
“அண்ணா ப்ளீஸ்…” அவன் மன்னிப்பை வேண்டும் குரலில் கேட்க,
“இதுவரை எப்படின்னு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா இனியும் நீங்க அப்படி இருக்க நான் அனுமதிக்க முடியாது. உங்க அண்ணியை இனி பாதுக்காக்கவேண்டிய பொறுப்பை உங்கள்ட்டையே நான் ஒப்படைக்கிறேன். இனி அவ மேல ஒரு தூசி படக்கூடாது. ஏனா அவளோட உயிருக்கு பாதுகாப்பில்லை…”
“கண்டிப்பா இருப்போம் அண்ணா. துவாரகா அக்காவை நாங்க பார்த்துப்போம்…” சந்தோஷ் உடனடியாக தன் எண்ணத்தை சொல்லிவிட அவனை உட்கார சொல்லியவன்,
“சொல்லுங்க தம்பிகளே. உங்க அண்ணனுடைய மனைவியை, உங்க அண்ணியை, உங்க அம்மாவிற்கு சமமான இன்னொரு தாயை நீங்க பார்த்துப்பேங்களா? இல்லை நான் வேற செக்யூரிட்டி காட்ஸ் ஏற்பாடு செய்யனுமா?…”
அதிரூபன் இன்றைக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏதோ வைத்திருக்கிறான் என்று புரிந்து போனது.
“சொல்லு விஷால். நான் கேட்டதுக்கு கூட ஸார்க்கு பதில் சொல்ல கஷ்டமா இருக்கா? கேட்டிருக்க கூடாதோ?…” மேவாயை தடவியபடி கேட்க பதறி போனான் விஷால்.
“அப்படியெல்லாம் இல்லைங்க அண்ணா. கண்டிப்பா பார்த்துப்போம். எங்களை நீங்க நம்பலாம்…”
“யாரை பார்த்துப்பீங்க?…” அவனும் விடுவதாய் இல்லை.
சொல்ல தயங்கிய விஷால் துவாரகாவையும் பத்மினியையும் ஒரு பார்வை பார்த்தவன் கண்களை ஒருநொடி மூட துவாரகாவை அடித்து துன்புறுத்தியதும் அவளை கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு திட்டியதுமே கண்முன்னால் வர கண்ணீர் பெருக்கெடுத்தது.
“வாழ்க்கைல நம்பிக்கைன்றது ஒருத்தர் மேல ஒருதடவை தான் வரும். அந்த நம்பிக்கை பொய்யாய் போய்டுச்சுனா அடுத்து என்னைக்கும் அவங்களை நம்ப மனசு வராது. உங்க மேல வச்சிருந்த என்னோட நம்பிக்கையும் கொஞ்சநாள் முன்னாடி செத்துப்போச்சு…”
குரல் கம்ம யாரையும் பார்க்காமல் வெறுமையாக சொல்லியவனை காணவே அத்தனை வேதனையாய் போனது தம்பிகளுக்கு. பத்மினிக்கு எதுவும் புரியவில்லை.
ஆண்களுக்கு தெரிந்த விஷயம் அந்த வீட்டு பெண்களுக்கு இதுவரை தெரியாமலே இருந்தது.
துவாரகாவை கடத்தியது மட்டுமல்ல துவாரகா ஒரு நாள் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காத்திருந்ததும் தான்.
நொடியில் தன்னை சரிசெய்துகொண்ட அதிரூபன் மீண்டும் பேச தொடங்கினான்.
“நம்பவேண்டாம்னு ஒரு மனது சொன்னாலும் என் தம்பிங்கன்ற பாசம் திரும்பவும் உங்க மேல நம்பிக்கை வைக்க சொல்லுது. இந்த நம்பிக்கையாவது காப்பாற்றுவீங்களா? ஏனா இன்னொரு முறை உங்களோட பிரதாபங்களை கண்டும் காணாமல் கடந்து போக என்னால முடியாது…”
“அதி என்ன நடந்துச்சுன்னு சொல்லுப்பா. எங்களுக்கு ஒன்னுமே புரியலை. பசங்க என்ன பண்ணினாங்க நீ இவ்வளவு வேதனைப்பட்டு பேசற?…”
பத்மினி கேட்க சந்தியாவும் ஏதாவது சொல்வானா என பார்க்க சந்தோஷிற்கு படபடப்பாய்போனது அன்னபூரணியை நினைத்து.
மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம். ஆனாலும் அதை பற்றி இன்றளவும் அன்னபூரணியிடம் சொல்லவே இல்லை. அதுவே அவனின் இதயத்தை அறுத்துப்போட்டது.
“சொல்றேன்மா. முதல்ல நான் பேசி முடிச்சிடறேன். ப்ளீஸ்…” என்றவன் விஷாலை பார்க்க அவனோ இந்த நம்பிக்கையையாவது எப்படியும் உயிரை கொடுத்தேனும் காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தவனாக,
“கண்டிப்பா அண்ணா. எங்களோட அண்ணியை நாங்க பார்த்துப்போம். நீங்க எங்களை நம்பலாம்….”
இறுக்கமான குரலில் ரத்தினசாமியை பார்த்துக்கொண்டே ஸ்திரமாய் சொல்ல அவனின் குரலில் இருந்த இறுக்கம் துவாரகாவை இன்னும் பயப்படுத்தியது.
“மாமா அவங்க கோவப்பட்டுட்டாங்க. வாங்க போய்டலாம்…” சிறுபிள்ளை போல அஞ்சி நடுங்கியபடி சொல்லியது அங்கிருந்த அனைவரின் காதுகளிலும் விழுந்தது. இதற்கெல்லாம் தாங்கள் தானே காரணம் என நினைத்து,
“ஸாரி அண்ணி…” மனதிற்குள் மன்னிப்பை வேண்டிகொண்டனர் விஷாலும், அர்னவும்.
இந்தநிமிடம் முதல் துவாரகா அதிபனின் மனைவியாய் அவர்கள் மனதில் பதிந்தாள். இனி இவர் எங்களின் அண்ணி. அண்ணனின் மறுபாதி.
இத்தனை வருடம் வைத்து வளர்த்த பகைமையை திரும்ப கிடைக்காமல் போய்விடுமோ என்று ஏங்கிய அண்ணனின் அன்பும் நம்பிக்கையும் அடியோடு எரித்து சாம்பலாக்கியது.
“அர்னவ்…”
“விஷால் சொன்னது தான் அண்ணா. அண்ணி இனி எங்களோட பொறுப்பு. இந்த குடும்பத்தில ஒருத்தரா அவரை நீங்க மாத்தற முயற்சில எங்களால முடிஞ்சதை நாங்க செய்வோம்…” அவனும் கூற ரத்தினசாமியும் சங்கரனும் கோபமாய் பார்த்தனர்.
“பார்க்கலாம். பார்க்கத்தானே போறேன்…” என்றவன்,
“ஓகே அறிமுகப்படலம் முடிஞ்சது. இனி சில விளக்கங்கள் சொல்லலாம்னு இருக்கேன்….” என்றவன் பத்மினியை பார்த்து,
“அம்மா இங்க வாங்க…” என அழைத்து தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டான்.
“இவ்வளவு நேரம் நான் பேசினது துவாரகாவை என்னால பார்த்துக்க முடியாதுன்னு இல்லை. ஆனா எந்த நேரமும் நான் மட்டுமே அவளை பார்க்கமுடியாதில்லையா. ஐ மீன். நான் அவுட் ஆஃப் ஸ்டேஷன் போகலாம். அபிஷியல் ட்ரிப் போகலாம். அப்போ இந்த வீட்ல அவளோட பாதுகாப்பை நான் உறுதி செய்யனும் இல்லையா?…”
“எனக்கு தெரியும் துவாவை நான் மேரேஜ் பண்ணிக்கிட்டது இந்த வீட்ல இன்னும் சிலருக்கு பிடித்தம் இல்லைன்னு…”
“பழைய பகையை மனசுல வச்சு இவளை என்கிட்ட இருந்து பிரிச்சிடலாம். எனக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் செஞ்சி வச்சிடலாம்னு கனவு எதுவும் கண்டுட்டு இருந்தா நீங்களே கலைச்சிடறது பெட்டர்…” இது ரத்தினசாமிக்கும், சங்கரனுக்குமே.
“என்னை பொருத்தவரை ஒருத்தனுக்கு ஒருத்தி. எனக்கான ஒருத்தி இவ தான். என்னால எல்லாம் ரெண்டு பொண்டாட்டி ஆசாமியா வாழ முடியாது. அப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. காதலிச்சது ஒருத்திய, கல்யாணம் பண்ணிக்கறது வேற பெண்ணை. அதையும் எந்த உறுத்தலும் இல்லாம வாழ நான் ஆள் கிடையாது…”
அன்னபூரணிக்கு கண்ணீர் கரகரவென வழிய ஆரம்பித்தது. பேசுவான் என்று தெரியும். அனால் இப்படிப்பட்ட விஷம் தோய்ந்த அம்புகளை கொண்டு தாக்குவான் என எதிர்பாக்கவில்லை. வைத்தியநாதன் நிமிரவே இல்லை.
“அதிபா, என்ன பேச்சு பேசிட்டு இருக்க? யாரை என்ன பேசனும்னு தெரியாம பேசற. நல்லா இல்லை சொல்லிட்டேன். இவளால தான இப்படி குடும்பத்து மனுஷங்களை வாய்க்கு வந்தபடி பேசற. இவளே இல்லாம போய்ட்டா…”
“கண்டிப்பா செத்துற மாட்டேன்ப்பா…” கொஞ்சமும் சளைக்காமல் கூற,
“அதிபா…” என பத்மினியும் ரத்தினசாமியும் பதறினார்.
“சாக மாட்டேன்னு தானே சொன்னேன். சாவுன்ற வெறும் வார்த்தை, பெத்த பிள்ளைன்னதும் பதறுதோ? நான் வாழ்வேன். ஆனா இவளை தவிர என் வாழ்க்கைல இன்னொருத்தி வரவிடமாட்டேன். இவளை இல்லாம பண்ணினா அதுக்கு காரணமான உங்களையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன்…”