மின்னல் அதனின் மகனோ – 13 (1)

மின்னல் – 13

                 வைத்தியநாதனின் உள்ளத்தில் ரத்தம் தான் வடிந்தது. தன் ஆதரவின்றி தன் மனைவி, மகள் எத்தனை துன்பங்களை கடந்துவந்திருக்கின்றார்கள் என நினைத்து கலங்கிப்போய் பார்த்தார்.

சந்தியாவும் பத்மினியும் துவாரகாவை சமாதானம் செய்ய, அன்னபூரணி அழ, விஷால், சந்தோஷ், அர்னவ் கவலையாக அவர்களை பார்த்துக்கொண்டிருக்க, ரத்தினசாமியும், சங்கரனும் மௌனமாய் அமர்ந்திருக்க இப்படி குடும்பம் மொத்தமும் அமைதியில் கிடந்தது.

இதையெல்லாம் கண்டு எரிச்சலடைந்த ஸ்வேதா இப்படியே விடக்கூடாது என நினைத்து,

“இது எல்லாம் ஓவர் ஸீன். யாரும் நம்பி மயங்கிடமாட்டாங்க. இப்படி கண்ணீர் விட்டா உடனே ஏத்துக்கனுமா?…” என பேச,

“ஷட் அப் ஸ்வேதா…” என்றுமே கோபமாக பேசியிறாத அர்னவ் திட்டிவிட இதை எதிர்பார்க்காதவள்,

“போறேன்னு சொல்றவளை எதுக்கு நிப்பாட்டனும்? அப்படி இந்த வீட்ல பயமிருந்தா அப்படி ஏன் வாழனும்? செத்தா சாகட்டுமே…” என சொல்லிய நொடி அவளை அறைந்திருந்தார் அன்னபூரணி.

“அம்மா…” என கத்த,

“இன்னொரு வார்த்தை பேசின பெத்த பொண்ணுன்னு கூட பார்க்கமாட்டேன். ராஸ்கல் கொன்னே போட்டுடுவேன். அவளை சாக சொல்ல நீ யாருடி?. இது அவளோட வீடு. அவ இங்க தான் இருப்பா. இஷ்டம் இல்லைனா நீ போயேன்…”

அன்னபூரணி பேசியதை கண்டு சந்தோஷிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அர்னவ் அவளை முறைத்துவிட்டு வேறு புறம் திரும்பிக்கொள்ள ரத்தினசாமி தனக்கு ஆதரவுக்கு வருவாரா என பார்க்க அவரோ தலையில் கை வைத்து அமர்ந்தது அமர்ந்தபடி தான் இருந்தார்.

“எல்லாரும் பார்த்துட்டே இருக்கீங்க? எவளோ ஒருத்திக்காக என்னை அடிச்சுட்டீங்க இல்ல?…” என்ற அழுதுகொண்டே கேட்க,

“திரும்ப திரும்ப அவ இவன்னு மரியாதை இல்லாம பேசின பல்லை தட்டி கைல குடுத்திருவேன். நீன்னு இல்லை, இந்த வீட்ல யாராக இருந்தாலும் அவளுக்கான மரியாதைய குடுத்து தான் ஆகனும்…”

மீண்டும் அனைவரையும் பொதுவாய் பார்த்துக்கொண்டே சொல்ல அது அனைவருக்கும் தான் என்பது நன்றாகவே புரிந்தது. அவமானப்பட்டு இனியும் அங்கிருக்க முடியாமல் ஸ்வேதா கிளம்ப,

“எங்க போற? அதி எல்லார்ட்டையும் தான் பேசனும்னு சொல்லியிருக்கான். போய் உட்கார்…” என அவளை அரட்டிய அன்னபூரணி வைத்தியநாதன் அருகில் இருந்த சேரில் அமர்ந்துகொண்டார்.

ஸ்வேதாவை அடித்ததை பார்த்ததுமே மிரண்டுவிட்ட துவாரகா அதிபனை இறைஞ்சும் பார்வை பார்க்க,

“நத்திங்டா. சாப்பிடேன். வேண்டாம்னா சொல்லு நானே வேற ப்ரிப்பேர் பண்ணி தரேன். உனக்கு ஓகே வா?…” அவளிடம் மன்றாடவே ஆரம்பிக்க,

“பசிக்கலை. எனக்கு வேண்டாம். அம்மாவை பார்க்க கூட்டிட்டு போங்க மாமா. ப்ளீஸ். அதுக்கப்றம் நீங்க என்ன சொன்னாலும் கேட்பேன்…” அவனுக்குமேல் அவள் கெஞ்சினாள்.

சிலநொடிகள் அவளின் முகத்தையே பார்த்திருந்தவன் கையிலிருந்த இட்லியை கீழே போட்டுவிட்டு அதிலேயே கை கழுவ,

“அச்சோ நீங்க ஏன் சாப்பிடலை? நீங்க சாப்பிடுங்க…” பதறிப்போய் அவனிடம் சொல்ல,

“நீயும் தான் நேத்து மதியத்திலிருந்து சாப்பிடவே இல்லை. நீயே வேண்டாம்னு சொல்லும் போது எனக்கு மட்டும் என்ன? வா…” என அவளை அழைக்க,

“இல்ல நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் நான்…”

“நீயும் சாப்பிடுன்னு உன்னை கம்பல் பண்ண கூட என்னால முடியலை துவா…”

“நான் சாப்பிட்டா நீங்களும் சாப்பிடுவீங்க தானே. எனக்கு ம்ம்ம்…” அப்போதும் மேஜையில் இருந்த உணவுகளை பயத்துடன் பார்த்தபடியே தலையசைத்து  சொல்ல,

“நான் சாப்ட்டு பார்த்துட்டே உனக்கு ஊட்டறேன். பயப்படாதே…”

அவன் சொல்லியவாறு இட்லியை தான் ஒரு வாய் உண்டு அதன் பின் அவளுக்கு கொடுக்க இரண்டு இட்லிகள் கூட முழுதாய் அவள் உண்ணவில்லை.

ஏனோ உண்ட உணவு தொண்டையில் முள்மாதிரி துறுத்திக்கொண்டு நிற்க அவஸ்தையில் தவித்தாள்.

அவனோடு சாப்பிட்டு எழுந்தவளுக்கு ஹாலை கடந்துதான் எங்கு வேண்டுமானாலும் செல்லமுடியும் என்கிற நினைப்பே நெஞ்சை தடதடக்க செய்ய,

“இங்க கொஞ்சம் பேசனும் துவா. பேசிட்டு போய்டலாம்…” என நடக்க வேகமாய் அவனோடு ஒட்டிக்கொண்டவள்,

“இல்லை, நான் மாட்டேன். போலாம். அம்மா பார்க்க. மாமா ப்ளீஸ்…” அவனின் கையை சுரண்டிக்கொண்டே சொல்ல அதை கேட்டாலும் அவனின் இழுப்புக்கு அவளை நகர்த்தினான்.

அவன் வந்ததும் சந்தோஷ் எழுந்துகொண்டு சோபாவில் அமர சொல்ல அதை மறுத்த அதிபன் அனைவரையும் பார்க்கும் விதமாய் அவர்களின் எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு துவாரகாவையும் அமர்த்தினான்.

யாரையும் ஏறிட்டு பார்க்காமல் அவள் அமர்ந்திருக்க வைத்தியநாதன் அவளையே ஆசையாக பார்ப்பதை கண்ட அதிபனுக்கு உள்ளுக்குள் கடுகடுத்துக்கொண்டு வந்தது.

ஆனாலும் பேசவேண்டுமே. கோபத்தை வெறுப்பை காண்பிக்க இது நேரமல்ல என உணர்ந்து தொண்டையை செருமிக்கொண்டவன்,

“இவங்க என் மனைவி துவாரகா. துவாரகா அகிலவேணி. இன்னைக்கு மிசஸ் துவாரகா அதிரூபன். உங்க எல்லோருக்கும் அறிமுகப்படுத்தவும், சில விஷயங்களை தெளிவுபடுத்தவும் தான் உங்க எல்லோரையும் பேச கூப்பிட்டேன்…” என்றவன்,

“துவா, இவர் என்னோட அப்பா உனக்கு மாமா. இவர் சித்தப்பா…” என ஒவ்வொருத்தரையும் உறவுமுறை சொல்லி அறிமுகப்படுத்த குனிந்த தலை நிமிராமல் யாரையும் பார்க்க பிடிக்காமல் அமர்ந்திருக்க,

“துவா என் மனைவியா நீ எப்படி இருந்தாலும் நான் ஏத்துப்பேன். ஆனா…” என சொல்லி அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“இந்த வீட்ல என் மனைவியா மட்டுமில்லை. அகிலவேணி மகளாவும் தான் இருக்கனும். முதல்ல முகத்துக்கு நேர நிமிர்ந்து நின்னு பாரு…” என சொல்ல,

“அம்மா இப்படியெல்லாம் சொன்னதில்லை மாமா. இவங்க எதிரே வந்தா கூட கண்டுக்காம போய்டனும்னு சொல்லிடுவாங்க…” சின்னகுரலில் அவனிடம் விளக்க,

“அது நீ அகிலவேணி பொண்ணா இருந்தப்ப. இப்ப இந்த வீட்ல உனக்கான உரிமையை மரியாதையை நீ விட்டுத்தர கூடாது. ஏன் உன் அம்மாவே இதை விரும்ப மாட்டாங்க. நிமிர்ந்து பார் துவா. இங்க யாரும் உன்னை எதுவும் பண்ணிட முடியாது…” என்றவன் அன்னபூரணியை பார்த்தான்.

அவரும் அவனை மிக திடமாகவே எதிர்கொண்டார். என்ன சொன்னாலும் தாங்கிக்கொள்ள வேணும்.

என் அண்ணன் மகன். என் மகள். என் பிள்ளைகள் இவர்கள் என்ற எண்ணம் வந்தமர்ந்துக்கொள்ள அவனை புன்னகை முகமாகவே ஏறிட்டார்.

“துவா இந்த வீட்ல முக்கியமான ஒருத்தரை இன்டர்டியூஸ் பன்றேன். இவங்க என் அப்பாவோட தங்கச்சி. அவங்க கணவர். அதாவது எனக்கு அத்தை, மாமா. உனக்கு…” என்றவன்,

“சித்தி, சித்தப்பா. அப்படித்தான் கூப்பிடனும்…” என சொல்ல இதை எதிர்பார்த்தேன் என்பதை போல முகம் மாறாமல் அன்னபூரணி இருக்க இன்று அப்படி இத்தோடு அதிபன் விடப்போவதில்லை என்பதை அறியாமல் போனார்.

வைத்தியநாதனின் முகத்தை மெதுவாய் நிமிர்ந்து பார்த்த துவாரகா, ‘நான் உனக்கு வெறும் சித்தப்பா தானா?’ என ஏக்கம் மிகுந்த விழிகளோடு கேட்பதை போல தோன்ற,

“மாமா…” என அதிபனை பார்க்க,

“மாமா இல்லைடா. சித்தப்பா. எனக்குத்தான் அவர் மாமா. நீ அப்படித்தான் கூப்பிடனும்…” அதில் கட்டளை நிரம்பி இருக்க துவாரகாவிற்கும் பெரிதாய் அவரை அப்பா என கூப்பிட மனமில்லை தான். அமைதியாகிப்போனாள்.

error: Content is protected !!