மின்னல் அதனின் மகனோ – 12 (3)

கடைசி படிவரை அவனின் இழுப்பிற்கு ஒத்துழைத்து நடந்து வந்தவள் ரத்தினசாமி யாரிடமோ பேசிக்கொண்டிருக்க அவரின் குரல் கேட்டு அதிபனின் பின்னால் ஒடுங்கி நின்றாள்.

“வா துவா, சாப்பிட போகலாம்…” என அவளின் கையை பிடித்து இழுக்க அசையாமல் அவனின் முதுகில் தலையை வைத்து அழுத்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். உடல் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது.

இதை எல்லாவற்றையும் வருத்தத்தோடு பத்மினியும் அன்னபூரணியும் பார்த்தனர்.

வைத்தியநாதனோ மகளின் முகத்தை ஒருமுறையாவது நிறைவாக பார்த்துவிடமாட்டோமா என ஏக்கத்தோடு பார்த்தார்.

மொத்த குடும்பமும் அங்கே தான் கூடி இருந்தனர். சந்தியாவின் கணவர் மட்டும் கிளம்பிவிட சந்தியா அங்கே தான் இருந்தாள்.

“அண்ணே, அதிபன்…” சங்கரன் குனிந்து ரத்தினசாமியின் காதில் சொல்ல வேகமாய் திரும்பியவர் மகன் அவனின் மனைவியிடம் கெஞ்சிக்கொண்டிருக்க அதை பார்க்க சகிக்காமல் முகம் திருப்பிக்கொண்டார்.

‘என் மகன் யாரு, எப்பேர்ப்பட்டவன். இவட்ட எல்லாம் இறங்கி பேசறானே. இப்படி அவனை பேச வச்சிட்டாளே?’ என்று ஆத்திரங்கள் அத்தனையும் பெருக்கெடுத்தது  ரத்தினசாமிக்கு.

“துவா இப்ப நீயா நடந்து வரலை இங்க இருந்தும் டைனிங்ஹாலுக்கு தூக்கிட்டு தான் போவேன்…” என மிரட்ட பதறிக்கொண்டு அவனுக்கு பக்கவாட்டில் வந்தவள் அவனின் கையை இறுக்கமாய் கோர்த்துக்கொண்டாள்.

அவளின் நெருக்கத்தில் புன்னகைத்தவன்,

“பயத்துல தான் கிட்ட வர. ஆனாலும் இந்த நெருக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு துவா…” என கண்ணடிக்க அவளுக்கோ இன்னமும் பயம் தெளியவில்லை.

யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ?, தன்னை பார்த்துக்கொண்டு கோபத்தில் இருப்பார்களோ? இதற்காய் தன்னை என்ன செய்ய போகிறார்களோ? என நினைத்து நினைத்து அவளது தொண்டையில் நீர் வற்றிவிட்டது.

இருவரின் குரல்கள் கேட்கவில்லை என்றாலும் பத்மினிக்கும், அன்னபூரணிக்குமே அத்தனை நிறைவாய் இருந்தது அவர்களின் தோற்றமும், நெருக்கமும்.

துவாரகாவை அத்தனை அழகாய் அரவணைத்து அழைத்துசென்றவனை பார்த்த சந்தியா,

“செம ஜோடில. சுத்தி தான் போடனும். ஆனாலும் அண்ணியை அண்ணன் ரொம்பத்தான் மிரட்டறாங்க போல. அண்ணி பயந்துபோய் இருக்காங்க. ஆனாலும் அழகா இருக்காங்க. என்ன கொஞ்சம் ஹைட் கம்மி அண்ணிக்கு…” என்றாள்.

சந்தோஷிடம் சொன்னாலும் அர்னவிற்கும் விஷாலிற்கும் பொட்டில் அடித்தமாதிரி ஒன்று உரைத்தது.

‘அண்ணி. ஆமாம். இனி இவர் நமக்கு அண்ணி. அண்ணி அம்மாவிற்கு சமம்’

தன்னையே செருப்பால் அடித்ததை போன்று உணர்ந்தனர் அந்த நிமிடம். எத்தனை உரிமையாய் சந்தியா உறுத்தலின்றி அண்ணி என ஆழ்மனதிலிருந்து அன்போடு அழைக்கிறாள்.

தங்களால் அப்படி அழைத்து உரையாடிட முடியுமா என நினைக்கையிலேயே தலைசுற்றி போனது.

நேற்று திருமணம் ஆகயிலேயே துவாரகா தான் அண்ணனின் மனைவி என்பது பதிந்துவிட்டது.

ஆனால் அண்ணியாக நினைக்கவே இல்லை. இப்பொழுது இந்த நிமிடம் அங்கு அமரவே பிடிக்கவில்லை.

எப்படி துவாரகாவை எதிர்கொள்வது என்கிற நினைப்பே அவர்களை அங்கிருந்து ஓடிவிட எச்சரிக்க அப்படி செய்துவிடமுடியாமல் ரத்தினசாமி இருக்கிறாரே.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை என்றால் வைத்தியநாதனின் நிலையோ பரவச நிலை.

அதிபனின் முதுகிலிருந்து வெளியே வந்தது முழுநிலவொன்று மேகத்தின் மறைவிலிருந்து வெளிவருவதை போல இருந்தது.

“அகிலா” என உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிலிர்த்துப்போய் பார்த்தார்.

“பூரணிம்மா, அகிலா…” என மனைவியை அழைத்து காண்பிக்க,

“ஆமாங்க, அப்படியே அகிலாக்கா தான்…” என அவரும் பூரிப்பாய் ஆமோதித்தார்.

ஆம், அகிலவேணியின் அச்சு அசலாய் துவாரகா. அதே அழகு, அதே நிறம். அதே சுண்டியிழுக்கும் விழிகள். ஆனால் அவரிடம் இல்லாத ஒன்று துவாரகாவிடம் கொட்டிகிடப்பது பயம் மட்டுமே.

அகிலவேணி எதற்கும் பயம் கொள்ளாதவர். யாரிடமும் பணிந்து செல்லாதவர். எந்த இடத்திலும் தன்மானத்தை விட்டுகொடுக்காது நிமிர்ந்து நிற்பவர்.

தனக்கென்று ஒரு வரைமுறையை வைத்து அதன்வழி நடப்பவர். யார் என்ன சொன்னாலும் தான் எடுத்த முடிவிலிருந்து சற்றும் பின் வாங்காதவர்.

அது சரியோ, தவறோ. ஆனால் இறுதிவரை அதில் நிலையாய் நிற்பவர். இதுதான் அகிலவேணி.

“நான் என் பொண்ணை பார்த்துட்டேன் பூரணி…” என கலங்கிய குரலில் சொல்ல,

“நம்ம பொண்ணுன்னு சொல்லுங்க…” அதை அன்னபூரணி திருத்த ஸ்வேதாவிற்கு பார்க்க வெறுப்பாய் இருந்தது.

இதை அனைத்தையும் ரத்தினசாமி கேட்டுக்கொண்டு தான் இருந்தார். தங்கையை வைத்துக்கொண்டு மாப்பிள்ளையை முறைக்கமுடியாதே.

அதிரூபன் இதை கண்டும் காணாதவனாக பார்த்துக்கொண்டே துவாரகாவிற்கு பரிமாறி அவளை சாப்பிட சொல்ல தட்டில் இருந்த இட்லிகளை வெறித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

“சாப்பிடு துவா…” என சொல்ல ஏனோ கைகளை மேஜையின் மீது கூட வைக்காமல் நடுங்கியபடி தன் சுடிதாருக்குள் மறைத்தாள்.

அவளின் கண்களில் இருந்து துளிகள் திரண்டு உணவிருந்த தட்டில் விழ அவனுக்கு புரிந்துபோனது.

இதயத்தில் சுருக்கென தைக்க அந்த வலியோடு இட்லியை பிய்த்து சாம்பார் சட்னியில் தோய்த்து முதலில் தான் உண்டான்.

அதன்பின் அடுத்த வாய் அவளுக்கு ஊட்ட கைகளை நீட்ட தாங்க முடியாது முகத்தை மூடிக்கொண்டு கதறியவள் அவனின் தோள் சாய்ந்துகொள்ள தாங்கிக்கொண்டான் அவன்.

“ஒண்ணுமில்லடா, நான் இருக்கேன்னு சொல்லியிருக்கேன்ல. எப்பவும் உனக்கு ஒரு கஷ்டமும் வரவிடமாட்டேன். அப்படி வரதா இருந்தா எனக்குத்தான் முதல்ல வரும். இப்போ என்ன இதுல விஷம் எதுவும் இல்லைன்னு புரிஞ்சிடுச்சுல. நீ சாப்பிடு…”

அவளுக்கு சமாதானம் சொல்லி கண்ணீரை துடைத்தாலும் வெறுமையாய் ஹாலில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தான்.

வேகமாய் அங்கிருந்து ஓடிவந்த பத்மினியும், சந்தியாவும் துவாரகாவின் அருகில் நின்று அவளிற்கு ஆதரவாக இருக்க,

“இந்த கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்னு தான் நான் போறேன்னு சொல்றேன். ப்ளீஸ் மாமா. என்னை போகவிடுங்க. எனக்கு சத்தியமா நம்பிக்கை வரும்னு தோணலை. எனக்கு உங்கள மட்டும் தான் பிடிக்கும். ஆனா இங்க எதுவும் மாறாது. இந்த வீட்டுமேல என்னோட அபிப்ராயம் மாறவே மாறாது…”

“தாகமேன்னு ஒரு தண்ணி குடிக்கனும்னா கூட உடனே எடுத்து இயல்பா குடிச்சு தாகத்தை தீர்த்துக்க இந்த வீட்ல என்னால முடியாது. முடியாது மாமா…” என்று இன்னும் விசும்பி அழ பத்மினி வரும்வரை இருந்த கேவல் பயத்தில் விசும்பலாய் குறைந்துபோனது.

“நான் அழனும்னா கூட இங்க என்னால முடியாது மாமா. இவங்க எப்ப என்ன பண்ணுவாங்களோன்னு. வேண்டாம் மாமா. ஒவ்வொரு நிமிஷத்தையும் நரகமா கடக்க என்னால முடியாது. எங்கையாவது போய்டறேன். ஆனா இவங்க இந்த கல்யாண கோபத்துல அம்மாவை எதாச்சும் பண்ணிடுவாங்க மாமா…”

“ஏன்மா இப்படி எல்லாம் பேசற? நாங்க இருக்கோம்டா…”

அவளின் அழுகையில் கலங்கிப்போனார் பத்மினி. அன்னபூரணியால் தாங்கவே முடியவில்லை. ஆனாலும் அவர்களின் அருகில் வந்துவிடவும் முடியவில்லை. அதிபன் அதை விரும்பமாட்டான்.

“அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது. அவங்க என்னோட பாதுகாப்பில் தான் இருக்காங்க. இங்க யாராலையும் அவங்களை நெருங்க முடியாது. முதல்ல நீ தைரியமா இரு. சாப்பிடு…” என ஊட்ட வாயை திறக்காமல் பத்மினியை பார்த்தாள்.

சந்தியாவிற்கு இப்பொழுது தன் குடும்பத்தினர் மீது அத்தனை கோபம் எழுந்தது. எந்தளவிற்கு இவளை படுத்தி இருந்தால் இவ்வளவு பயந்துபோயிருப்பாள் என நினைக்கவே அச்சமாக இருந்தது.

“இப்போ என்னம்மா இதுல யாரும் எதுவும் கலந்திருப்பாங்கன்னு தான பயப்படற. இரு…” என்ற பத்மினி வேகமாய் இரண்டு ப்ளேட்களில் துவாரகாவிற்கு வைத்ததை போல வைத்து அவளருகிலேயே அமர்ந்தவர்கள் வேகமாய் சாப்பிட,

“வேண்டாம்ங்க. வேண்டாம்ங்க. நான் எதுவும் பேசலை. கோவப்படாதீங்க. பேசலை…” என வாயை பொத்திக்கொண்டு அழுகையை அடக்கி அதிபனின் தோளில் முகம் புதைக்க இன்னமும் மிரண்டு போயினர் அனைவரும்.

“இல்லம்மா துவா, நாங்க கோவப்பட்டு சாப்பிடலை. உன் மேல கோவமில்லை. இங்க பாரு. உனக்கு நம்பிக்கை இல்லைன்னு சொன்னியே. இதே சாப்பாட்டை நாங்களும் எடுத்து சாப்பிட்டிருக்கோம். எங்களுக்கு எதுவும் ஆகலை தானே?. அதுக்காக தான் சாப்பிட்டோம். துவா…”

மன்றாடும் குரலில் பத்மினி பேச சந்தியாவும் சமாதானம் சொல்ல அதிபன் முகம் இறுகிக்கொண்டே போனது.

“அன்னைக்கும் எங்களை பார்த்துட்டு கோவப்பட்டு அம்மாவை ஜெயில்ல போட்டாங்க. என்னை, நான் போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல. நைட் புல்லா. பயந்துட்டேன். போலீஸ் அவங்க, அங்க…”

கோர்வையில்லாமல் பயத்தில் விக்கி விக்கி பேச பேச அவளை கட்டிக்கொண்டான் அதிரூபன்.

“வேண்டாம்டா, அதெல்லாம் நீ பேசாதே. நாம போய்டலாம். போய்டுவோம். எனக்கும் இங்க வேண்டாம்…”

“அதிபா…” என வேகமாய் எழுந்து நின்றார் ரத்தினசாமி.

இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் அதிரூபனும் துவாரகாவும் இல்லை. அன்றைய நாளின் துயரத்தில் கண்ணீரில் கரைக்க முடியால் அவளும் அத்துயரத்தையே காற்றோடு கரைத்துவிட அவனும்.

இவர்களின் போராட்டத்தை செய்வதறியாமல் பார்த்து கலங்கியது அங்கிருக்கும் சில நெஞ்சங்கள்.

error: Content is protected !!